வெள்ளி, ஜூலை 13, 2012

வலி உள்ள ஓவியம்

ஒரு சிறிய செம்மண் மேடு
வரிசையாக சில மரங்கள்
ஒரே ஒரு மரத்தின் நிழல் மட்டும்
கருமையாகவும் அடர்த்தியாகவும்
அங்கே ஒரு பழைய தகரப்பீப்பாய்
அதனுள் ஆணிகள் அடிக்கப்பட்டு
சிமெண்ட்'யில் நனைந்து காய்ந்துப்போன ஒரு கட்டை
அருகில் பழுதான டையர்
நிழலில் சிதறிக்கிடக்கின்ற சருகுகள்
காற்றில் அவை நகர்கின்றன
எனக்குள் எட்டிப்பார்க்கும்
எதோ ஒரு பழைய நினவு
இதுவரைதான் ஓவியம்
என் வலி அதில் இல்லை..

%%%%%%%

உனக்காக...

அதிகமான வரிகளை எழுதி

அதை பல மாதிரியாகச் சுருக்கி
இன்னும் இன்னும் குறைத்து
அங்கும் இங்கும் வெட்டி
மீண்டும் எழுதிப் பார்த்து 
ஆறை நான்காக்கி 
நாலில் இருந்து 
நாலும் தெரிய எழுதிய போது..
குழப்பம் தீர்ந்தபாடில்லை - 
உனக்கு பிடிக்காமல் போய்விட்டால்..!!?

 
 

வியாழன், ஜூலை 12, 2012

சித்தப்பா

காலையில் வேலைக்கு வந்தவுடன், ஒரு அழைப்பு.

``சிஸ்டர், நான் கோபால், உங்களைப் பார்த்துள்ளேன்..’’

`` அப்படிங்களா, சந்தோசம் பிரதர், சரி, என்ன விஷயம்?’’

`` 46’’ இஞ்ச் டீவி ஒண்ணு வாங்கணும், வெளியே விசாரித்தேன், விலை அதிகமா இருக்கு.! நீங்க அங்கே வேலை செய்வதால், கொஞ்சம் உதவி செய்து, உங்களின் விலைக்கு வாங்கித்தருகிறீர்களா?’’

``வெளியேவே வாங்கலாமே. விலையில் ஒண்ணும் பெரிய மாற்றங்கள் இருக்காதே பிரதர்..!’’

`` இல்லை சிஸ், நான் அன்று ஒரு நாள் உங்களைச் சந்தித்து, ஸ்டாஃவ் பிரைஸ் என்ன என்பதை தெரிந்துகொண்டு, அதன் பிறகு வெளியே உங்களின் டீலர்களிடம் விசாரித்தேன், விலையின் அதிக மாற்றம் இருக்குங்க..’’

``ஓ, இப்படி வேறு செய்கிறீர்களா? இது போன்ற தகவல்கள் நாங்கள் உங்களிடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோமென்று இங்கே உள்ள தலைகளுக்குத் தெரிந்ததென்று வையுங்கள்..!?அவ்வளவுதான், கதை கந்தல். மேலும் டீலருக்கு பொருட்களை அனுப்பி விட்டு, இங்கே நாங்களும் வியாபாரம் செய்தால், டீலரின் பிஸ்னஸ் பாதிக்கும். சூ பண்ணுவார்கள், பிரச்சனையாகும். இப்படி ஒரு தகவலை உங்களிடம் நான் எப்படி உலறினேன்!?’’

`` அப்படிங்களா சிஸ்..! அன்னிக்கு நான் வந்து உங்களைப்பார்த்தபோது நீங்களும் இதையே தான் சொன்னீங்க, நான் தான் கெஞ்சி கெஞ்சி அந்த விவரத்தை வாங்கிக்கொண்டேன், ஆனால் உங்களின் ஸ்டாஃவ் பிரைஸ் பற்றிய விவகாரத்தை நான் மூச்சே விடல சிஸ், கவலை வேண்டாம்.’’

``ஸ்டாஃவ் பிரைஸ், இங்கே வேலை செய்யும் ஸ்டாஃவ்’களுக்கு மட்டுமே, வேறு யாரும் வாங்க முடியாது, மேலும் என் பெயரில் அடிக்கடி பொருட்கள் வாங்கினால், மேலிடத்தில் புகார் போகும், என்னமோ நான் கடை திறந்து, திருட்டுத்தனமாக பொருட்களை வாங்கிக்கொண்டு போய் விற்கிறேன் என்று... இப்போ கெடுபிடிகள் ஜாஸ்தி, அதனால் முடியாதுங்க..!”

``என்ன சிஸ் இப்படிச் சொல்றீங்க? எனக்கு இரண்டு மகன்கள். இருவருமே ஊனம்.  ஒருவனுக்கு கைகால்கள் வராது, ஒருவன் ஊமை. எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டேன், இப்போதான் நல்லா இருக்கேன், ரிட்டயர் ஆகிட்டேன். கொஞ்சம் பணம் இருக்கு, நிம்மதியா இருக்கலாம்’னா.. எனக்கு பெரிய டீவி வாங்கிக்கொடுப்பா, நான் ஜாலியா உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து பந்து விளையாட்டு பார்ப்பேன் என்கிறான்...’’ தொடர்ந்தார், சரிப்பட்டு வராது காலையிலேயே சோகக்கதை என்பதால், ``சரிங்க வாங்க, வாங்கித்தருகிறேன்.’’ என அழைப்பைத்துண்டித்தேன்.

மதிய உணவிற்குப்பிறகு வந்தார், ஏற்கனவே பார்த்தது போல்தான் இருந்தது. அவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே, எங்களின் ஆடர் டிப்பார்ட்மெண்டிற்கு   தொலைபேசியில் அழைத்து அப்பொருள் ஸ்டாக் இருக்கின்றதா என உறுதிப்படுத்திக்கொண்டேன். உடனே மறுமுனையில், ``ஏன் வாங்கப் போகிறாயா?, அவ்வளவு பெரிய டீவி!? உன்னிடம் தான் ஏற்கனவே இதைவிட பெரிய டீவி உள்ளதே!?’’ நல்லா கேட்பாளுங்க இதுபோன்ற கேள்விகளை வக்கனையா. ``அடியேய், எனக்கு இல்லை, என் அங்கிளுக்கு.!’’ உடனே அஃப்ரூவல் கிடைத்தது, காரணம் நானும் கடந்த ஆறு மாதங்களாக என்னுடைய ஸ்டாஃவ் பர்ச்சேஸ்’ஐ பயன்படுத்தாமல் இருந்ததால், உடனே எனது ஆடரைப் பதிவு செய்துகொண்டு, ஆடர் கோட் எண்களைக்கொடுத்தாள் ஆடர் டிப்பார்மெண்ட் கிளார்க்.

பதிவு எண்களைப்பெற்றுக்கொண்டு, பணத்தை வாங்கி அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்டில்  செலுத்திவிட்டு இறங்கினேன். நன்றி உணர்வோடு என்னை நோக்கினார் பிரதர்.

``நன்றியெல்லாம் இருக்கட்டுங்க, நான் உங்களை என் பெரியப்பா என்று சொல்லித்தான் வாங்கித்தருகிறேன். வேளியே யாரிடமும் சொல்லவேண்டாம். சர்வீஸ் செண்டரில் இரு்ந்து, சில மாதங்கள் கழித்து பொருட்கள் எப்படி? தரம் எப்படி? என்பதனைத் தெரிந்து கொள்வதற்காக தொலைபேசி அழைப்பு விடுப்பார்கள். பெரியப்பா என்றே சொல்லுங்கள்.. அப்படி ஒருகால் கேட்டால், ஒகே’ங்களா. !’’ என்று கூறி அவரை வே’ஹவுஸுக்கு அனுப்பினேன், பொருளைப் பெற்றுக்கொள்ள...!

``எஃக்ஸ்கியூஸ் மீ சிஸ்.. பெரியப்பா வேண்டாம், சித்தப்பா ஓகேங்களா!?’’

``சரி பிரதர்’’ ம்ம்ம்..பெரிசா வித்தியாசம் ஒண்ணுமில்லையே.. டவுட்டு.!!   

தவிடுபொடி

எனக்கும் கொஞ்சம்
உலக ஞானமிருக்கு.!

எனக்கும் கொஞ்சம்
விஷய ஞானமிருக்கு.!

எனக்கும் கொஞ்சம்
இலக்கிய ஞானமிருக்கு.!

நானும் தெளிந்த நீரோடைதான்..

இருப்பினும்
உன் `கடலை’ போடும்
கவிதைகள் எல்லாம்
எனக்கே என
நம்புகிறேன்..!

புதன், ஜூலை 11, 2012

வெட்டிவேலை


நாய்

நீ வீசுகிற
எலும்புகளுக்கெல்லாம்
வால் ஆட்டவேண்டுமென்றால்
என்னை நாயாக அல்லவா
படைத்திருப்பார்
அந்த இறைவன்.

%%%%%

ஏக்கம்

சட்டியில் பிரட்டிய
சட்டிச்சோற்றின்
இறுதி பருக்கை
கையில் தொட்டு
நாக்கில் வைக்கும் போது
நன்றி சொல்கிறேன்
அம்மாவின் சமையலுக்கு

%%%%%%

அவசரம்

`கிளம்புங்க.. கிளம்புங்க
என்று கணவனை
ஓட்டும் பெண்கள்
அவன் கிளம்பிய பிறகும்
கிளம்பாமல்
பல வருடங்களாக...

%%%%%%

இழக்கமனமில்லை

பேச்சில் சுவாரிஸ்யமில்லை
இடையிடையே
உப்பு எனவும்,
ஜாங்கிரி எனவும்
மாங்காய் எனவும்
காரம் எனவும்
கற்றாலை எனவும்
வலுக்கட்டாயமாக
சேர்த்துக்கொண்டிருக்கிறேன்
உன்னையும் இழக்க மனமில்லாமல்.....

%%%%%%%

மனப்பதிவுகள்

பதிவிடும் தருணங்களில்
தோன்றித்தோன்றி
மறைகின்றன
காகிதத்தின் வென்மைக் கோடுகளாய்
மனப்பதிவுகள்
கண்கள் சிமிட்டப் படும்போது
கருத்துக்களும் இல்லாமல்
காகிதங்களும் இல்லாமல்..
வெரித்துக் கொண்டிருக்கிறேன் 
வெறுமையை

%%%%%%

அமைதியாய்.

நீ என்னைப் பின் தொடரும் தருணங்களில்
உன்னால் பொறுக்கப் படும் கற்களை 
நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். 
நமது இடவெளி நீளும் போது
நீ எறிகின்ற கற்களால் 
எனக்குச் சேதம் வராமல் 
என்னை நான் தற்காத்துக் கொள்ள 
கவசம் தேடிக் கொள்கிறேன்.. 
மௌனப் புன்னகையில்...

%%%%%%


பால்யதோழி

நீண்ட நாள் சந்திக்காத
என் ஒத்த வயது பள்ளித்தோழி
ஒரு திடீர் சந்திப்பில்
அப்படியே பார்த்த மாதிரியே இருவரும்..
கையில் குழந்தையோடு..
உன் குழந்தையா?இல்லை, பேரக்குழந்தை..
விடைபெறும் போது
`
பாட்டிக்கு டாட்டா சொல்லுஎன்னையும் பாட்டியாக்கினாள்
பதினைந்து வயதிலே அம்மாவான அவள்....

%%%%%%

சின்னச் சின்ன
சீண்டல்களையும்
ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்
என்னோடு உனக்கென்ன 
வெட்டி வேலை ?

இணைய முத்தம்

உணர்வே இல்லாத
உன் `உம்ம்மா’ விற்காக
நிஜமாக துடிக்கத்தான் செய்கிறது
என் இதயம்

செவ்வாய், ஜூலை 10, 2012

உண்மையே உன் விலை?

ஒரு விஷயத்தையொட்டிய எதிர்ப்புக்கடிதம் பத்திரிகையில் வந்திருந்தால், அதைப் படித்து விட்டு, கருத்துகளைத்திரட்டி பதில் மடல் எழுதவேண்டும்; இல்லையேல், பிரச்சனை என்ன என்பதனை சீர்த்தூக்கிப்பார்த்து அதைக் களைவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். அதை விடுத்து எழுதியவரின் கைப்பேசி எண்களை எடுத்து, அதை யாரிடமாவது கொடுத்து, இரவு பகல் பாராமல் கண்ட கண்ட குறுந்தகவல்களை எல்லாம் அனுப்பி வெறுப்பேற்றுவது எந்த விதத்தில் நியாயம்?

பாதிக்கப்பட்டவருக்கு கருத்து சொல்வதற்கு சரக்கு ஏதுவும் இல்லாதபட்சத்தில் இப்படிக் குறுக்குவழியில், எழுதியவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீமை விளைவித்து குளிர்காய்ந்து குள்ளநரி வேடம் தரிக்கும் கோழைகளை என்ன செய்வது?

ஒரு சாதரண உலக நியதி வழக்கத்தில் உள்ளதுதான், அதாவது உன்னைப்பற்றி ஒருவர் விமர்சனம் செய்துவிட்டால், அதற்கு நீ அதிக முக்கியத்துவம் கொடுத்து படப்படப்பாகிறாய் என்றால், சொல்லப்பட்ட விஷயம் அப்பட்டமான உண்மை என்றும் அதை நீ முழுமனதுடன் ஏற்றுக்கொண்டாய் என்றுதானே அர்த்தம்.! இது கூட தெரியாமல்,  எல்லா எதிர்ப்புகளுக்கும் கதவடைக்கிறேன் பேர்வழி என, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு பிச்சை எடுக்கும் பாணியில் தொலைபேசி அழைப்பு விடுத்து அழுது வடிவது மிக மிகக் கேவலமான செய்கை இல்லையா!.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இது போன்ற மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால் என்ன செய்வார்கள்? அதிகார துஷ்பிரயோகம் தானே..

கடந்த ஞாயிறு அன்று நான் எழுதிய, `வானொலி நாடகங்களும், நடக்கும் கூத்துகளும்’ என்கிற கட்டுரை, எனது புகைப்படத்தோடு என் சொந்த பெயரோடு மிக சிறப்பாக வந்திருந்தது பத்திரிகையில்.  இவ்வேளையில் தினக்குரல் ஞாயிறு பொறுப்பாசிரியர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி உரித்தாகுக-.

ஒரு வாசகரோ அல்லது எழுத்தாளரோ தைரியமாக தமது கருத்துகளை முன் வைக்க பத்திரிகையும் அதற்குத்தகுந்தாட்போல ஆதரவு வழங்கினால், உழல்கள் அவ்வளவு தைரியமாக செய்யப்படமாட்டாது.  ஊழலை ஒழிக்கமுடியாதுதான் ஆனால் ஓரளவு குறைக்கப்பார்க்கலாம். இப்படி நமது ஆதங்கத்தைச் சொல்ல  நமக்கு இருக்கும் ஒரே ஆதரவு பத்திரிகைத்துறையே. அவர்களும் சில வேளைகளில் நமது படைப்புகளுக்கும் கருத்துகளுக்கு பாரமுகமாகவே இருந்து விடுகின்றார்கள் என்பதுதான் வேதனை.! நமக்கு எதற்கு இந்த வீன் வம்பு என.!

எதிர்வினையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு உடன்படவில்லை என்றால், கருத்து மோதல்களுக்குத் தயாராக வேண்டுமேயொழிய அற்பத்தனமாக அறைகூவல் அடக்கத்தின் மறுவுருவை பறைச்சாற்றிவிடும். எல்லோருக்கும் இன்னொரு முகம் இருக்குமல்லவா.!

அந்த எதிர்வினைக் கட்டுரை, பத்திரிகையில் வெளிவந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகின்றன, ஆனாலும் எனக்கு வரும் அநாமதைய அழைப்புகளும் அசிங்கமான குறுந்தகவல்களும் எனக்கு தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

என்ன மாதிரியான வளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்டிருந்தால், இதுபோன்ற அருவருக்கத்தக்க குறுந்தகவல்களை அனுப்ப எததனிப்பார்கள்.!?

குறுந்தகவல் 1 - நான் உனக்கு சாப்பாடு வாங்கித்தந்தேன், அதற்கு இதுதான் நீ செய்யும் நன்றியா?

குறுந்தகவல் 2 - அறவே நடிக்கத்தெரியாத உனக்கு, நான் பணம் கொடுத்து நடிக்கவைத்தேனே, அறிவிருக்கா?

குறுந்தகவல் 3 - முட்டாள் உனக்கு எழுதவே தெரியாது. நீ எழுதி கிழிக்கிறாயா?

குறுந்தகவல் 4 - வேட்டிக்குள் அடங்கி இருக்கவே மாட்டாயா? (மற்றது வேண்டாம்)

குறுந்தகவல் 5 - அறிவுகெட்ட முண்டம், யார்கிட்ட மோதற!?

குறுந்தகவல் 6 - ஏற்கனவே நிறைய மூக்கு உடை பட்டாய், போதாதா? இன்னும் உடைபடுவாய், நான் கைத்தட்டிச் சிரிப்பேன்..ஹஹஹ

குறுந்தகவல் 7 - யாரோ ஒரு பிரபலமான நாடக நடிகர் உன் நடிப்பைப் பார்த்துக் காறித் துப்பினாராம்.! அதோடு உனக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டதாம், அதனால் தான் நீ இப்படியெல்லாம் எழுதி உன் வயிறெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறாயாம்.! ஹஹஹ

குறுந்தகவல் 8- உன் படத்தைப்போட்டு பல்லைக்காட்டிக்கொண்டு போஸ் கொடுக்கற கட்டுரையில், பெரிய அழகின்னு நினைப்பு.

குறுந்தகவல் 9 - நேற்று நாங்கள், தலைநகர் பிரிக்ஃபீல்டில் ஒரு ரெஸ்டரண்டில் சாப்பிடச்சென்றோம், அப்போது எல்லோரும் உன் லட்சணத்தைப் பற்றித்தான் பேசினார்கள். நாடறிந்த ஒன்று உன் நாற்றமெடுத்த கதை.

ஒரு இருபது அழைப்புகள் - 181 குறுந்தகவல்கள். எந்த அழைப்பையும் எடுக்காமல் எந்த குறுந்தகவலுக்கும் பதில் போடாமல் - கால் ஆட்டிக்கொண்டு ப்ளாக் எழுதறேன்..

எவ்வளவு மோசமாக இருக்கின்றது பார்த்தீர்களா நமது இலக்கிய உலகம்? பத்திரிகையில் இவற்றையெல்லாம் சொன்னால், இப்போது ஒன்றும் வேண்டாம், அவர்கள் என்னமோ சொல்ல வருகிறார்கள், அவற்றை இந்த வாரம் போட்டு விட்டு, அடுத்த வாரம் நீங்கள் உங்களின் கருத்தை தெரிவிக்கலாம் அம்மா.. என்றார் தலைமையாசிரியர்.

அதுசரி, அதுவரைக்கும் இந்த உட்சபட்ச ஆக்ரோஷ நிலை நம்முடனேயே இருக்கவேண்டுமே எழுதுவதற்கு! மௌனம் காப்பதால், பல விஷயங்கள் அப்படியே ஆறிப்போகும். ஆறிப்போனால், சொல்ல வந்ததை சொல்ல இலயாமலும் போகும். நாளை நான் இல்லாமலும் போகலாம், நாளைய நிலைமையும் மாறிப்போகலாம்.! ஆனால் அநீதி ஜெயிக்கக்கூடாது. அராஜகம் செய்து அடுத்தவரை வீழ்த்தி வாழ நினைப்பவர்களை வாழ விடவே கூடாது. அவர்களுக்கு எல்லா இன்னல்களையும் கொடுத்து விரட்டியடிக்கவேண்டும்.

இதில் ஒரு கூத்து என்ன தெரியுங்களா? சாட்சியை வைத்துக்கொண்டு குற்றச்செயலில் ஈடுபடுவது. அதாவது, இப்படி குறுந்தகவல்களை அனுப்பினால், அங்கே சம்பந்தப்பட்டவரின் நம்பர் வரும் தானே.!?
`சைபர் கிரைம்’ அதிகரித்து வருவதால், அரசாங்கமே எல்லோருடைய கைப்பேசி எண்களையும் அதனதன் நிறுவனங்களின் பதிவு செய்து கொள்ளவேண்டுமென்கிற கட்டாய நிபந்தனையை அமலுக்குக்கொண்டு வந்தது. அதனால் எல்லோருடைய தொலைப்பேசி எண்களும் பதிவாகியே வைக்கப்பட்டிருக்கும். ஒரு எண்ணிலிருந்து, இதுபோன்ற அசிங்கமான குறுந்தகவல்கள் வந்தால், தகுந்த இடத்தில் புகார் கொடுத்தோமென்றால், ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவார்கள்.  காவல்துறையில் அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்கிற பச்சை சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும், வீடு புகுந்து இழுத்துவருவார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் ஏற்கனவே எம்மாதிரியான குற்றச்செயல்களில் இந்த தொலைப்பேசி எண்களைக்கொண்டு ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதனையும்  வெட்டவெளிச்சமாக தெரிவித்தும் விடுவார்கள். இது போன்ற நவீன தொழில் நுற்ப சூழலில் நாம் இருக்கின்றோமென்கிற புரிதல் கூட இல்லாத அப்பாவிக் குற்றவாளியாக இருக்கின்றார்கள் என்பதுதான் மற்றொரு வேதனைக்குரிய விஷயம்.  என்ன செய்வது, மலேசிய சூழலில் நாம் தான் இப்படி, மற்ற இனத்தவர்கள் எங்கேயோ போய்விட்டார்கள்.

உண்மையே உன் விலை என்ன?

   

திங்கள், ஜூலை 09, 2012

விசிலடிச்சான் குஞ்சுகள்

ஒத்திகை

கனவிற்கு ஒத்திகை
பார்த்த பின்
விரைவாகவே வருகிறது
உன் நினைவோடு கூடிய
உறக்கம்

%%%%%%%

விசிலடிச்சான் குஞ்சுகள்

மரத்திலிருக்கும் குருவிகளை
`ஈவ் டீசிங் சட்டத்தில்
சிறையில் போடுங்கள்
கிளைகளில் மறைந்துகொண்டு
தினமும் விசில் அடிக்கிறன
என்னைப்பார்த்து...

%%%%%%%

நன்றியாய்..

அதிக உஷ்ணத்தில்
அசைகின்ற என் செடிகள்
நான் ஊற்றிய நீருக்கு
நன்றியாய் தென்றலை வீசிக்கொண்டு...


%%%%%%%

தவிப்புகள்

தவணை முறையில்
வராதே...
தவிப்புகள் கூட 
காலாவதியாகிறது

%%%%%%%

லவ்

ஐ லவ் யூ
சொன்ன அடுத்த வினாடி
அவனே உலகமகா
மன்மதனாகிறான்
அவளின் பார்வையில்..

%%%%%%%%

பின்நவீனத்துவம்

உன் காதலிக்காக
நீ வரைந்த ஓவியத்தை
நானும் காண்கிறேன்
நவீன ஓவியமாக

%%%%%%%%

பதிலுக்காக

எதற்குமே விடைகொடுக்காமல்
கேள்வியாகவே இருக்கின்றாய்
உன்னை நான் தொடர்கிறேன்
என்பதற்காக!!

%%%%%%%%%

கவிக்கரு

உன்
கருவை சுமக்கிறேன்
பிரவத்திற்காக அல்ல
பிறக்கப்போகும் படைப்பிற்காக..!

%%%%%%%%

நான்

என்னை நீ
எனக்காகவே
ஏற்றுக்கொள்ளும்போது
நான்
நானாகவே
பரிணமிக்கிறேன்

%%%%%%%%

எப்படிச்சொல்வேன்

என்ன சொல்ல
எப்படிச் சொல்ல
நீ இல்லாத பொழுது
நல்ல பொழுதாய் அமைய
இறைவனிடம் வேண்டியும்
புரோஜனமில்லாமல்

%%%%%%%

திணறல்

நீரில் மூழ்க மூழ்க
உயிரின் முட்டைகள்
மேலெழுவதைப்போன்ற ஓசையில்
உன்னை அழைக்கிறேன்
பிரிவின் வலியை
நெஞ்சில் அமுக்கிக்கொண்டு

%%%%%%%%

பூக்கின்ற

சொல்வதை ஏற்கிறேன்
பயிற்சியில் போதனைகள்
இலக்கனத்தோடு யாப்போடு..
எளிதல்லவே
உனது பாணி எனக்கு வருவது..!
நீ சிகரம் தான்,
இமயம் தான்
எனக்கு மாலைகள் வேண்டாம்
என் மனதில்
உன் நினைவில் பூக்கும்
ஒரு மலர் வேண்டியே
உன் பின்னே நான்..

%%%%%%%%