செவ்வாய், ஏப்ரல் 02, 2013

காலை சூரியன் (மாமிகதை)


மாமிகதை..

தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்தியம் செய்தும் ஒன்றும் சரியாகவில்லை. ஒரு நாள் விட்டு மறுநாள் அதே போல் ரணமாகிறது.. தாங்கமுடியாத அரிப்புவேறு பரிதாபம்தான். என்ன செய்ய? சக்கரைவியாதி இருந்தால் தோல் அரிப்பு வருமாம். புண் ஆறுவது கொஞ்சம் கஷ்டமே. மருத்துவரும் சொன்னார்.

ஏற்கனவே தன் தாத்தாவை கவனித்துக்கொண்ட என் தோழி ஒரு ஐடியா கொடுத்தாள்.. காலை சூரியன் தோலில் படும்படி, பத்து அல்லது இருபது நிமிடங்கள் வெயிலில் அமரவைத்துப்பார். கொஞ்சம் நிவாரணம் கிடைக்கலாம் என்றார்.

என் வீட்டு பணிப்பெண்ணிடம், இன்று வேலைக்குக் கிளம்பும்போது, பாட்டியை வெயிலில் கொஞ்சநேரம் அமர வை. என்றேன்.

நான் அலுவலகம் சென்று சேர்வதற்குள் தொலைப்பேசியில் அழைத்தாள்.. அக்கா வெளியே உட்காரவைக்கவா..? என்று.

சாப்பாடு கொடுத்துவிட்டு பிறகு செய், இல்லையேல் மயக்கம் வந்துவிடப்போகிறது, என்று கூறி அழைப்பைத்துண்டித்தேன்.

வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தவுடன் ...
புகார் செய்தார் மாமி...

யம்மா, மொட்டை வெயிலில் என்னை உட்காரவைத்து வாட்டி எடுத்து விட்டாள். அவளைப் போகச்சொல். நான் போறேன்..

என்னடி ஆச்சு? என்ன பிரச்சனை? ஏன் பாட்டி இவ்வளவு கோபமா..!!! பணிப்பெண்னிடம் கேட்டேன்.

மதியம் சாப்பிட்ட பிறகு , பாட்டியை வெயிலில் உட்காரவைத்தேன்.

உச்சிவெயிலில்...

அடிப்பாவி.. மூட்டாளா நீ? யாராவது மொட்டை வெயிலில் உட்காரவைப்பார்களா?

நீதானே சொன்னாய்.. சாப்பிட்டபிறகு உட்காரவை என்று. அதான் அதேபோல் செய்தேன்.

அடக்கடவுளே....!!!!!

கொழுத்துகிற வெயிலின் கீழ் கிழவியை அமரவைத்து, முகமெல்லாம் கருத்துப்போய் சோர்ந்துதான் போயிருந்தார்.. பாவம்.

நீ இனி ஒண்ணும் செய்யவேண்டாம் தாயி.. எல்லாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என கும்பிடுபோட்டேன்.

வேலை சொல்வதைவிட, எருமை மேய்க்கலாம் போலிருக்கு.

வெள்ளி, மார்ச் 29, 2013

கண்ணீர் விட்டேன்.

சென்ற செவ்வாய்க்கிழமை சித்தப்பா இறந்துவிட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று யாரும் சொல்லவேண்டாம். அனுதாபம்தான் இருப்பினும் கொடுத்துவைத்தவர், வாழ்வை அனுபவித்து, குழந்தைகளையெல்லாம் திருமணம் செய்துவைத்து விட்டு, அப்பா இல்லாத எங்களுக்கும், எல்லா நல்லது கெட்டதிலும் தூணாக துணையாக நின்று, குடும்பங்களின் ஒற்றுமையில் முழுபங்கேற்று, பொறுப்புள்ள ஒரு சித்தப்பாவாகவே (அப்பா - அப்படித்தான் அழைப்போம்)  திகழ்ந்தவர் அப்பா.

சந்தோசமாக வாழ்ந்து, நடமாடிக்கொண்டிருக்கும்போதே நோய் கொண்டுவிட்டது. தம் வலிக்கு தாமே கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையை அடைந்து, மருத்துவமனை வாசலிலேயே மயக்கமுற்று மரணமடைந்துள்ளார். 

நோயிற்கு நன்றி.! ஏன் நோயிற்கு நன்றி..!? 

சிலர்  படுத்தப்படுக்கையாகி நரகவேதனையில், மலம் மூத்திரம் போவதுகூட தெரியாமல், ருசி பசி அறியாமல், இரவு எது? பகல் எது என்பது கூட தெரியாமல், பலருக்குப் பாரமாகி இழுத்துக்கோ பறிச்சிக்கோ என்றிருப்பார்கள். வாழ்வதற்காக கோவில் சென்ற காலங்கடந்து, சாவிற்காக வேண்டிக்கொள்கிற  இக்கட்டான நிலைக்குக்கொண்டு வந்து விடுவார்கள்.

என் தோழி ஒருவளிடம், என் மாமி படும் நரகவேதனைகளைப் பற்றிப் பகிந்துகொள்வேன். (மாமிக்கு எண்பத்தைந்து வயது, என்னோடுதான் இருக்கின்றார் - வேலைக்காரி வைத்து பார்த்துக்கொள்கிறோம்.)  அவள் கொடுத்த ஒரு ஆலோசனையை நினைத்து, இரண்டு நாட்கள் சிரித்தேன்.

கடையில் விற்பனை செய்யும் கோத்தா பால் (milk in box), அதனின் ப்ரண்ட் பெயரோடு சொன்னாள். அப்பாலை வாங்கி மாரியம்மன் கோவிலில் கொடுத்து, சம்பந்தப்பட்ட முதியவரின் பெயரைச்சொல்லி ஆத்தாவிற்கு அபிஷேகம் செய்தால், வயதானவர்களுக்கு விரைவிலேயே விடுதலை வந்துவிடுமாம். அவர்களின் பாட்டிக்கு அப்படித்தான் செய்தார்களாம். மறுநாளே இறப்பு வந்துவிட்டதாம். (நகைச்சுவைதானே..!)

சித்தப்பாவின் மரணம் துயரம்தான். என் அம்மாவிற்கு பதினாறு வயது இருக்கும்போது, ஆலமரம் போன்ற பெரிய குடும்பத்தில் முதல் மருமகளாக வாழ்க்கைப்பட்டார்.  தாயிற்குப்பின் என் அம்மாதான் குடும்ப விளக்கு அங்கே. சித்தப்பா அத்தைகளோடு குழந்தைகளான நாங்களும் வளர்ந்தோம் அவ்வீட்டில். கூட்டுக்குடும்பமாக பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம்.

என் அப்பா சொல்வார், விவரம் தெரியும் வரை, அப்பாவை அண்ணன் என்றும், அம்மாவை அண்ணி என்றும், சித்தப்பா அத்தைமார்களை பெயர் சொல்லியும் அழைத்துவந்துள்ளோம் என்று.

இதனால் அப்பா குடும்பம் என்றால் மிக நெருக்கம். அவர்களுக்கு எதாவதென்றால் மனம் பதறும். தானாகவே நிகழும் நிகழ்வாக மனதிற்குள்ளேயே மாறியிருக்கும் நிலை அது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும், குடும்ப சிக்கல்கள் வந்தாலும், பின்னால் `நீ ச்சீ.. நான் ச்சீ..’ என்று துப்பிக்கொண்டாலும், எதாவதொன்று என்றால் கண்களில் நீர் பொலபொல வென வந்துவிடும்.

மேலும் இறந்துபோன இந்தச் சித்தப்பா என்பவர், எல்லா உறவுகளுக்குள்ளும் கொஞ்சம் நெருக்கமாய் இருப்பவர். திருமணமா? அவர்தான் வேட்டி ஜிப்பாவோடு, முதல் ஆள். மரணமா.? அவர்தான் காரியம் நடத்துவதற்கு, அதை எடு, இதை எடு, அடுத்தக்கட்ட வேலைகள் என்ன.! என்பதற்கு வழிகாட்டியாக இருப்பவர். (எழுதும்போதே நினைவுகள் கண்களைக் குளமாக்குகின்றன.)

காமாலை நோய். வயிறு பெரிதாகிக்கொண்டே வந்தது. உடல் மெளிந்துகொண்டே போனது. பற்கள் மஞ்சள், கண்கள் மஞ்சளைப்பூசிக்கொண்டது போறதொரு மஞ்சள். அப்படிப்பட்ட மஞ்சள். அந்த நோவுகளையெல்லாம் பொருட்படுத்தாமல், விருந்து விஷேசங்களுக்கு மக்கர் செய்து தாமதமாக வந்தாலும், ஆஜராகிவிடுவார் அப்பா.

எல்லா உறவுகளின் விஷேசங்களிலும் இருப்பார். மனதில் வைத்து பழிவாங்குதல் போன்ற அற்ப எண்ணங்கள் இல்லாதவர். மொத்தத்தில் மிக நல்ல மனிதர். இறப்பிற்கு வந்தவர்கள் கொடுத்த நற்சான்றிதழ் இது.

மருத்துவமனையும் மருந்தும் கையுமாக அலைந்துகொண்டிருந்தார். தொலைப்பேசியில் பேசிக்கொள்வோம். “உனக்காம்மா அழைத்தேன், தவறுதலாக அழைத்துவிட்டேன் போலிருக்கு. சரி அதுகிடக்கட்டும் கழுதை, அப்பாவ வந்து பார்க்கலையா? பணம் கிணம் இருந்தா கொடு. மருமகனுக்கு தெரியவேண்டாம்.. என்பார். மெனக்கட்டு பணம் எல்லாம் அனுப்பியதில்லை. பார்க்கும்போது அஞ்சோ பத்தோ கையில் கொடுப்போம். அவ்வளவுதான். இறந்துவிட்டார் என்பதற்காக அள்ளியள்ளி கொடுத்தோம் என்றெல்லாம் கதை விடுவது தேவையற்றது.

மருத்துவமனையில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்கிற செய்தி வந்தவுடன், அப்பாவின் கைப்பேசிக்கு அழைத்தேன். அம்மாதான் எடுத்தார். அழுதுக்கொண்டே பேசினார்.  `உ..ங்...க....ப்ப்பா.. உங்...கப்பா... ந...ம்...ம..ல விட்டுட்டுட்டூ.. போயிடுவார்...ர்ர்..ர்ர்..ன்னு ப..ப..ய..ம்ம்மா இருக்கும்ம்ம்மா..’ என்றார். ஆறுதல் சொன்னேன். எனக்கு அழுகையே வரவில்லை. `இரவு ஆஸ்பித்திரிக்கு வரேன்ம்மா.’ என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தேன்.

பிறகு இரண்டு மணிநேரங்கழித்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு தொடர் அழைப்பு.. உறவுகளுக்கு மத்தியில் தீப்போல் பரவியது செய்தி.
அன்றிரவே உறவுகளின் படையெடுப்பு. அந்த சிறிய விடே நிறைந்துவிட்டது.

அப்பாவின் வீடு ப்ளாட் வீடு. வீடு ஐந்தாவது மாடியில் உள்ளது. படியேறித்தான் போகவேண்டும். லிஃப்ட் இல்லை. செய்தி கேட்ட மறு நொடியில் பலர் அங்கே குவிந்துவிட்டனர். எனக்கு முன், என் தம்பி தங்கைகள் எல்லோரும் மிக விரைவாக சென்றுவிட்டார்கள். காரில் செல்லும்போதே, கண்ணீரோடுதான் சென்றேன். நம்மைப் பார்த்தவுடன் என்ன ரகளையாகுமோ என்கிற சிந்தனையில்..

நம்மவர்கள் உறவுகளோடு பின்னிப்பிணைபவர்கள். இதுபோன்ற துக்க நிக்ழ்வில், மிக நெருக்கமானவர்களோடு, நடந்தவற்றைச் சொல்லி அழுது மற்றவர்களையும் அழவைத்து விடுவார்கள்.

காரைவிட்டு இறங்கியவுடன், அப்பாவின் முகத்தைக் கண்டு கண்ணீர் விட வேகவேகமாக படியேறினேன். நான்காவது மாடியிலேயே கண்ணைக்கட்டியது. மூச்சு வாங்கியது. நிற்க மனமில்லை, தொடர்ந்தேன் வேக வேகமாக.. வீட்டு வாசலையடைந்தேன். என்னைப் பார்த்தவுடன், சின்னம்மா.. 

“வா விஜயா, நீ போன் பேசும் போது அப்பாவின் உயிர்போச்சு, ஆனால் டாக்டர்கள் அந்தச் செய்தியை என்னிடம் சொல்லவில்லை, எனக்குத்தெரிஞ்சு போச்சு.” என கதற ஆரம்பித்தார். நான் என்ன செய்வேன்.! எனக்குத்தான் மூச்சு வாங்குதே. புஸ் புஸ் புஸ்.. என மூச்சு விட்டேன். அழுகையே வரவில்லை. முகத்தை மூடிக்கொண்டு சமையலறை பக்கம் சென்று கொஞ்சம் நீர் பருகிவிட்டு வந்தேன். சுமாராக இருந்தது. அழுகை சுத்தமாக நின்றுபோனது. அமைதியாக வந்து தலைமாட்டில் அமர்ந்துகொண்டேன்.

அதன் பிறகு என் அம்மா வந்தார், என் அம்மாவைப்பார்த்தவுடன் கூட்டத்தில் சலசலப்பு.. `அக்கா வரார், அக்கா வரார்..’ என. அம்மா நுழைந்தவுடனும் அதே போல்தான்.  “அக்கா, பாருங்கக்கா உங்கள் செல்லக்கொழுந்தனை..” என்று கதறினார் சின்னம்மா. அம்மானாலும் அழ முடியவில்லை. விடுகிற மூச்சு, குறட்டையொலி போல் கேட்க ஆரம்பித்தது. திணறினார். கண்களில் நீரே வரவில்லை. அடுத்தடுத்து வருகிற அனைத்து உறவினர்களுக்கும் இதே நிலைதான். படியேறிய களைப்பில், மூச்சுத்திணறல் வந்து, கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என கேட்க ஆரம்பித்து விட்டனர். யாராலும் அழமுடியவில்லை.

முதலில் சந்திக்கின்ற தருணம், அழுகை வரவில்லை என்றால், அதன் பிறகும் வராது. சுதாகரித்துக்கொண்டு, மூச்சுவாங்குதல் நின்றவுடன் சாவகாசமாக அழலாம் என்றால், அதில் ஒரு வித நடிப்பு கலந்து விடும். ஆக, ஏறிய களைப்பில் நீர் பருகிவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தனர் எல்லோரும். யாரும் அழவில்லை.

என் மற்றொரு சித்தப்பா மனைவி வந்தார். அவர் நன்றாக அழுகிறவர். அவர் அழுதால் எல்லோரும் அழுதுவிடுவார்கள். எல்லோரையும் அழவைத்துவிடுவார். மேலும், இறந்த இந்த சித்தப்பாவும் அவரும் உற்ற நண்பர்கள். அடித்து அடித்து விளையாடிக்கொள்வார்கள். அந்த சின்னம்மா வந்தால் இன்னும் ரகளையாகுமே என நாங்களும் காத்திருந்தோம். வந்தார். வந்தவர், நேராக சமையற்கட்டு பக்கம் சென்று என்னை அழைத்து, பெருவிரலை வாயின் பக்கம் வைத்து, சமிக்ஞையில் தண்ணீர் கேட்டார். 

தண்ணீர் குடித்து அமர்ந்த அவரிடம். “ம்மா ஒகே வா?” என்றேன்.

“ஒகேதான் புள்ள, என்னன்னமோ கற்பனை செய்து வந்தால், வாங்கின மூச்சில், கண்ணீரே வத்திப்போச்சு. மூச்சு எரைக்கிது, கால் கையெல்லாம் உதறுது.. எதுவுமே யோசிக்கமுடியல..” என்றார். ஆஸ்த்மா வியாதிக்காரர்களுக்கு வரும் மூச்சு போல், புஸ் புஸ் புஸ் என்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவருக்கு.

அப்போது நான் கண்ணீர் விட்டேன். சோகத்தில் அல்ல, துப்பட்டாவால் வாயை மூடிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக சிரித்ததால் வந்த கண்ணீர் அது. ஒரே மாதிரியான அனுபவம் 

எழவு வீட்டில் என்ன சிரிப்புன்னு யாரும் கேட்டுவிடக்கூடாது பாருங்க...!!

ஒரு அற்புதத் தத்துவம் மின்னியது- நம் உடம்பு சோர்வாக இருக்கும்போது, நம்மால், பிறருக்காக அழ முடியாது.


   

ஞாயிறு, மார்ச் 24, 2013

குழந்தை மனசு

பாலர் பள்ளி மாணவி ஒருவளிடம், அவளின் ஆசிரியர், happy family என்கிற தலைப்பைக்கொடுத்து படம் வரைந்து கொண்டுவரச் சொல்லியிருக்கின்றார். 

மாணவி வீட்டிற்கு வந்து, படம் வரைகிறார். கலர் அடிக்கிறார். குடும்பத்தில் அப்பா,அம்மா, அண்ணன் இவள் என நான்கு பேர்தான். ஆனால் அவள் ஐந்து பேரை வரைந்து கலர் அடிக்கின்றாள். 

அவளின் அம்மா வேலை முடிந்து வீடு திரும்பியவுடன், மகளின் புத்தகத்தை வாங்கி பரிசோதிப்பார். இந்த happy family படத்தைப்பார்த்தவுடன் ஒரே அதிர்ச்சி.

“என்ன நீ, நாம் நான்குபேர் கொண்ட குடும்பத்தில், ஐந்து பேரை வரைந்திருக்கின்றாய்?” என்று சொல்லி, ஐந்து பேரில் ஒருவரை அழித்துள்ளார்.

குழந்தை ஹிஸ்தீரியா வந்ததுபோல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அழ ஆரம்பிக்கிறது. புத்தகத்தையெல்லாம் விட்டு வீசுகிறது, நான் இனி பள்ளிக்குப் போகமாட்டேன். நீ ஏன் அந்த ஐந்தாவது நபரை அழித்தாய். வரை வரை மீண்டும் வரை என ஒரே கூச்சல்.

தாயிற்குக் குழப்பம்.! என்னாச்சு இவளுக்கு? யார் அந்த ஐந்தாவது நபர் என்று கேட்டதற்கு..

காக்கா, அவளும் நம் குடும்பம், அவர்தான் எனக்கு சோறு ஊட்டுகிறார். அவரையும் சேர்க்கவேண்டும் என அடம் பிடித்து, பழையபடி வரைந்து கொடுத்தவுடன்தான், குழந்தை அமைதியானாளாம்.

காக்கா - இந்தோனிசிய பணிப்பெண். (உண்மைக்கதை)

சனி, மார்ச் 23, 2013

மார்பகப்புற்று


நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாய சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

வேலைக்குச் செல்லும் அனைத்து ஊழியர்களுக்கும், ஆண் பெண் பேதமின்றி இந்த சலுகையை எங்களின் அரசாங்கம் இலவசமாக வழங்கியுள்ளது. வவுச்சர் வடிவில். ஐநூறு ரிங்கிட் பெருமானமுள்ள வவுச்சர் அது.

இன்று நான் சென்று வந்தேன். ப்பெஸ்மியர், மெமொஃக்ரம், இரத்தப்பரிசோதனை என அரை நாள் அதிலேயே கழிந்தது என் பொழுது.

பெயரில்லாமல் வந்த அந்த வவுச்சரை யாருக்காவது கொடுத்து விடலாம் என்றிருந்தேன், காரணம், நம் உடலை நம்மால் படிக்கமுடிந்தால், நோய் குறித்த அச்சம் தேவையில்லை என்றே தோன்றியது.. என் உடல் ஆரோக்கியம் குறித்த அபார நம்பிக்கையில் நான் எப்போதும்.

அந்த வவுச்சரை கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் பையிலேயே வைத்திருந்தேன். யாருக்குக்கொடுக்கலாம் என்கிற யோசனையில்..!!

இரண்டு நாட்களுக்கு முன், என் சக ஊழியரின் தாய் இறந்து விட்டார். தெரியும் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று, இருப்பினும் நோய் என்ன என்பது பற்றித்தெரியாது. எதோ கேஸ்ட்ர்க் வலியின் முற்றிய நிலை என்றார் தோழி. நிலைமை படு மோசமாகவே, அரசாங்க மருத்துவமனைக்குக் அழைத்துச்சென்றுள்ளார்கள். அங்கே கண்டுபிடிக்கப்பட்டது பிரச்சனை என்னவென்று.!

இறப்பிற்குச்சென்றேன்.. பிரச்சனை என்னவென்றால் மார்பகப்புற்றுநோய். நோய்க்கிருமிகள் மூளைக்குப்பரவி விட்டது. மோசமான நிலையில் உள்ளார் நோயாளி என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள்.

நோயாளி, பல கிளினிக் வாசல்கள் ஏறி இறங்கிய நிலையில், இதை ஏன் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கமுடியவில்லை?

சாதாரண சுகாதாரப் பரிசோதனையால் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்கமுடியாது. முறையான பரிசோதனைக்குச்செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, இடித்துபோய் விட்டார் தோழியின் அப்பா. மரணமடைந்த மாதுவின் கணவர். தப்பு பண்ணிவிட்டேனே என வேதனையடைந்தார். கதறினார். (குடும்ப நண்பர்தான்)

இந்த செய்தி என்னை உறுத்தவே, கையில் உள்ள வவுச்சரை எடுத்துக்கொண்டு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டேன்.

தோழிகளே, ஒரு முறையாவது MAMMOGRAM பரிசோதனைக்குச்செல்லுங்கள். தோழிகளின் கணவன்மார்களே, மனைவிமார்களை அழைத்துச்சென்று முறையான பரிசோதனை செய்ய ஆவன செய்யுங்கள்.

ஆரோக்கியமே வளம்.

புதன், மார்ச் 20, 2013

மஹடி

“ விஜி, மஹடி செத்துப்போயிட்டானாம்.! உனக்குத் தகவல் எதும் வந்ததா?”

“மஹடி? யாரு அது?”

“என்னடா இது, உன் கிட்டத்தானே வந்து பேசிக்கிட்டு இருப்பான் எப்போதும்..”

“நான் கம்பனியின் Front Desk Manager, என்னிடம் பலர் பேசுவது, நான் அவர்களிடம் பேசுவது எல்லாம் சகஜம், மஹடி யாரு’லா?”

“ஐயோ எப்படிச்சொல்வேன்!! ம்ம்ம்ம் சுபாங்ப்ரெட் ப்ரோமொட்டர்.”

“ஓ..ப்ரோமொட்டர்..!? சுத்தம் போ.. அறவே தெரியாது, மீட்டிங்ன்னு சொல்லிக்கிட்டு வந்து, துபுதுபுன்னு நுழையுவானுங்க, மீட்டிங் முடிஞ்சவுடன்  ‘ஹை, பை’ சொல்லிட்டு கிளம்பிடுவானுங்க, எங்கே ஞாபகத்தில் இருக்கும்.!?”

“யா அல்லாஹ், அவன் நல்லா பேசுவான் உன்கிட்ட, பலமுறை பார்த்திருக்கேன்.. சரி சரி தெரியலன்னா விடு..” இடத்தைக் காலி செய்தான் ஷுல்.

இப்படி என்னைக் குழப்பிவிட்டுச் சென்றால் எப்படி..!? யாராக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தமுடியாமல், போவோர் வருவோரிடமெல்லாம் இதுபற்றிக்கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘ஆமாம் மஹடி செத்துட்டான்..! அடிக்கடி வருவான்... ! ஓ அவனா, ப்ரொமொட்டர்..! ம்ம் மீன் பிடிக்கப்போய் மூழ்கிட்டானாம்..! ஈப்போவிலேயே அடக்கம் பண்ணிட்டாங்களாம்..! அது நடந்து மூணு நாள் ஆச்சே, இப்போதான் தெரியுமா.? நல்ல பையன்.. இப்பதான் நிச்சயதார்த்தம் நடந்தது..! அவனுடைய அம்மா இறந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகலையே.. ! அழகா இருப்பான்... ! நல்ல எடுப்பான மூக்கு, மலாய்க்காரன் போலவே இருக்க மாட்டான்... ! மூக்கும் முழியுமா மாம்மா’க்காரன் போலவே இருப்பான்..!’ என, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறிமுகத்தை வழங்கியபோதும், எனக்கு மட்டும் அவன் யாரென்றே தெரியவில்லை.

என்னிடமுள்ள பிரச்சனை இதுதான். போகிற போக்கில் ஒருவர் நட்பானால், அவரைப்பற்றிய விவரங்களைக் கேட்க மாட்டேன். பேசுவேன், அவர் யாரைப்பார்க்க வேண்டுகிறாரோ, அவரை வரவழைப்பேன். அந்த இடைவேளையின் போது, அன்று பத்திரிகையில் வந்துள்ள சில செய்திகளைப் பற்றியோ, பரபரப்பாகப் பேசப்படும் சில விவரங்களைப் பற்றியோ உரையாடுவோம்.. கொஞ்ச நேரம்.

சிலரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்ப்பவர்களுக்கு அது நீண்ட நாள் பழகிய நட்புபோல் தோன்றலாம். ஆனால், நான் அந்நபரை அப்போதுதான் சந்தித்திருப்பேன். பெயர் சொல்லியிருப்பான்/ள், கேட்ட மறுநொடியில் மறந்தேபோவேன். என்னுடைய பலவீனம் இது.

மீண்டும் சந்திக்கின்ற சந்தர்ப்பம் வாய்க்கின்றபோது, அவர் எந்த நபரை சந்திக்கவிருக்கிறார் என்பதனை அறிந்து வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவரை நேராகச் சென்று சந்திக்க அனுமதி வழங்கிவிடுவேன். அவ்வளவுதான் என்னுடைய உறவு சிலரிடம் இங்கே.. வழிப்போக்கன் போல்.

ஆனால் மஹடி..!?  ஒரு ப்ரொமொட்டர், ப்ரொமொட்டர் என்றால் எங்களின் கம்பனி பணியாளர்தான் ஆனால் அவர்களுக்கு இங்கே கம்பனியில் வேலையில்லை. ஒரு குழுவாக தனியாகப்பிரிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட்டு, எந்தெந்த பேரங்காடிகளில் எங்களின் நிறுவனப் பொருட்கள் விற்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அவர்கள் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள். அவர்கள், அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் பொருட்களைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்து, அவர்களிடம் அப்பொருட்களை அறிமுகம் செய்து விற்பனை செய்யவேண்டும். மாதச்சம்பளம் அலவன்ஸ் என்று ஒருபுறமிருந்தாலும், சுதந்திரமான வேலைச்சூழல், கூடுதல் கமிஷன், குறைந்தவிலையில் மின்சாரப்பொருட்கள் வாங்குவது, கஸ்டமர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்குச்சென்று குழந்தைகளை பள்ளியில் விடுவது, மீண்டும் பள்ளியில் இருந்து அழைத்துவருவது, மின்சார நீர் தொலைப்பேசி நெட் கட்டனம் போன்றவைகளை செலுத்துவது என..., வேலைகளுக்கிடையே சொந்த வேலைகளையும் செய்துகொள்கிற வசதிகளெல்லாம் இருப்பதால், இந்த ப்ரொமொட்டர் வேலை என்பது அவர்களுக்கு மிகவும் ஜாலியான வேலையாக அமைந்துவிடுகிறது.

கம்பனிக்கு மாதம் ஒருமுறைதான் வருவார்கள். சேல்ஸ் மீட்டிங்கில் கலந்துகொள்வதற்காகவும், மாதச்சம்பள ஸ்லீப் பெற்றுக்கொள்வதற்காகவும்.

அப்படிக்குழுவாக வரும் கூட்டத்தில் யாரைக்கண்டேன் நான்.!? வரும் அனைவரும் என்னிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பழகுவார்கள்/பேசுவார்கள்.  ‘அக்கா, அக்கா’ என்றும், ‘விஜி, விஜி’ என்றும்..

சிலவேளைகளில் ஜோக் எல்லாம் சொல்வார்கள், இடிஇடியென சிரிப்புச்சத்தம் கட்டடத்தையே உலுக்கும். நானும் சிரிப்பேன், வேறுவழி.!?

இதையெல்லாம் காண்பவர்கள், நான் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். இருப்பினும்,  எனக்கும் அவர்களுக்குமான தொடர்பு, தாமரை இலையின் தண்ணீர்தான்.

இப்படியெல்லாம் இருந்தபோதிலும், நம்மிடம் சிரித்து சிரித்துப் பேசிப்பழகிய ஒருவர், இறந்துவிட்டார் என்கிறபோது, அவர் யாராக இருக்குமென்று தெரிந்துகொள்கிற ஆர்வம் மண்டையைக் குடைந்தவண்ணமாகவே இருந்தது.

ஒருவர் உயிருடன் இருக்கும்வரை, அவர் நமது நெருங்கிய நட்பாக இல்லாதபட்சத்தில், அவர் யார்? எவர்? என்று அறிந்துகொள்கிற ஆர்வம் எனக்கு எப்போதுமே வராது. பேசினால் பேசுவேன். ‘ஹலோ.. ஹை.. பை’.. அவ்வளவுதான்.

வேலையிடத்தில் அதிகமானோர்களை தினமும் சந்திக்கின்ற நிர்பந்தம். என் வேலை அப்படி. என்ன செய்ய.!? சிலர் நம்மை மறவாமல், பல வருடங்கள் கழித்தும்,  ‘ஹாய் விஜி, இன்னும் இங்கேதான் இருக்கீங்களா.!?’ என்று உரிமையோடு பெயர் சொல்லி அழைத்து, நலம் விசாரிப்பார்கள். நமக்கு எத்தனைப்பிள்ளைகள், என்ன படிக்கின்றார்கள், கணவர் எங்கே வேலை செய்கிறார், போன்ற விவரங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு அக்கறையோடு விசாரிப்பார்கள். 

எனக்கு அவமானமாக இருக்கும். என் பெயரையும் சுற்றத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு, இவ்வளவு உரிமையோடு இவர்கள் நம்மை அழைக்கின்ற போது, நாம் மட்டும் ஏன் அவர்களின் பெயர்களையும் இதர நிகழ்வுகளையும்  நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. !?

‘ஹாய்.. ஊய்.. ஓய்.. ’ என அவர்களின் தொனிக்கு ஈடுகொடுத்து, உரிமையோடு கைக்குலுக்கி, ‘உங்களின் முகம் மனதில் அப்படியே பதிந்திருக்கு, மன்னிக்கவும், உங்கள் பெயர்?’ என அசடுவழிய கேட்பேன்.. இதுதான் என் நிலை. முகம் நினைவில் இருக்கும். பெயர் கொஞ்சங்கூட நினைவிலேயே இருக்காது.

இந்த இக்கட்டுச்சூழல்தான் மஹடி செத்துப்போயிட்டான் என்கிற விவரத்திலும்.

யார் இந்த மஹடி? எப்படி இருப்பான்? இவனா இருக்குமா.!? அவனா இருக்குமா..!?, என்னிடம் பேசுவானா? என்ன பேசுவான்? குரல் எப்படி இருக்கும்? கூட்டமாக வருவார்கள், நுழைந்தவுடன் கூச்சல் போடுவார்கள், சட்டாம்பிள்ளை, மாணவர்களை மிரட்டுவதைப்போல், மிரட்டுவேன். கைகளைக்கொண்டு வாய்களைப்பொத்திக்கொண்டு, சரி டீச்சர் என்று நக்கல் அடிப்பார்கள்.

அதில் யார் மஹடி? மாம்மா’க்காரன் (தமிழ் முஸ்லீம்களை அப்படித்தான் அழைப்பார்கள் இங்கே..) போல் யார் இருப்பா? குழப்பிக்கொண்டு எப்படிஎப்படியோ யோசிக்கின்றேன், யார் என்றே தெரியவேயில்லை. 

தெரியாமலேயே போகட்டுமே. தெரிந்தால், கூடுதல் கவலை வரும். அவன் என்னிடம் பேசியதெல்லாம் நினைத்துப்பார்த்து வருத்தம் கொள்வேன்.
யாராவது அவனின் புகைப்படத்தைக் காண்பித்தாலொழிய தெரிய வாய்ப்பு ஏற்படப்போவதில்லை. இதை அப்படியே விட்டுவிட வேண்டியதுதான்.

வருத்தப்படுவது தள்ளிப்போடப்பட்டாலும், என்றாவது ஒரு நாள் தெரியவரும்.. அப்போது என் மனம்..

“ஆ..அவனா..!” என்று துடிக்கலாம்.
“ஓ.. இவனா.!” என்று லேசான ஆச்சிரியதோடும் நிறுத்திக்கொள்ளலாம். பார்ப்போம்.!!
      

செவ்வாய், மார்ச் 19, 2013

குட் பை

நீ ஏன் வரவில்லை?
நீ வந்திருக்கலாமே.!
நீ ஏன் அழைக்கவில்லை?
நீ அழைத்திருக்கலாமே.!
நீ ஏன் பேசவில்லை?
நீயாவது தொடங்கியிருக்கலாமே.!
ஏன் குறுந்தகவல் கொடுக்கவில்லை?
அதை நீ செய்திருக்கலாமே செல்லம்.!
உனக்கு அன்பில்லை என்மேல்.!
அங்கே மட்டும் என்ன வாழுதாம்.!?
பை..
குட் பை..!!

ஞாயிறு, மார்ச் 17, 2013

பரதேசி

பாலாவின் பரதேசி திரைப்பட விமர்சனத்தை பலர் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.

யார் பக்கமும் நான் செல்லவில்லை, அவ்விமர்சனங்களை வாசிக்கவும் இல்லை. காரணம் சிலரின் விமர்சனம் நமது மூளையைச் சலவை செய்து, படம் பார்க்காமலேயே அப்படத்தின் மீது வெறுப்பை உமிழ்கிற தன்மையை நம்மிடம் விட்டுச்சென்று விடும்.

ஆக, படம் எப்படி இருக்கிறது என்பதனை நாமே  பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளலாம் என, நேற்று திரையரங்கிற்குச் சென்று பரதேசியைப் பார்த்துவிட்டு வந்தேன்.

வந்தேன் என்பதை விட, மனச்சுமையோடு வீடு திரும்பினேன் என்று சொல்லலாம். குளமாகும் கண்ணீரைத்துடைக்காமல் திரையரங்கை விட்டு வெளியேற முடியவில்லை. கண்கள் பனித்தவண்ணமாகவே இருந்தன. யாராவது பார்த்தால் என்னாவது..! என்கிற சிந்தனையில், விளக்கு எரிய ஆரம்பித்தவுடன் கண்களில் வழியும் நீரை மிகவிரைவாகத் துடைத்துக்கொண்டேன். இருப்பினும் அரங்கிலிருந்து வெளியேறும் அனைத்து ரசிகர்களும் மூக்கைச் சிந்தியபடிதான் வெளியேறினார்கள். ஒரு பெண், தேம்பித்தேம்பியே அழுதார். கணவர்/காதலன் அவரை அப்படியே அணைத்தபடி அரங்கை விட்டு வெளியே அழைத்து வந்தார்.

பாலாவின் படம் என்றாலே அது என்னை அதிகம் கவரும் (அவன் இவன் - படத்தைத்தவிர). சேது, இன்னமும் என்னைக் கவர்ந்த திரைப்படங்களில் முதல் நிலையிலேயே உள்ள ஓர் படம். அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால், நான் தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு நகரமாட்டேன்.

‘நான் கடவுள்’ என்கிற படத்தை பலர் மோசமாக விமர்சனம் செய்திருந்தார்கள்.  அவ்விமர்சனங்களைப் படித்துவிட்டு, திரையரங்கிற்குச் செல்லவில்லை, படத்தை நிராகரித்தேன். அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, மனவேதனை அடைந்தேன். இதுபோன்ற நல்ல படங்களை திரையரங்குகளில் கண்டுகளிக்காமல் தவறவிட்டிட்டோமே என.!?

எங்களின் தாத்தா உயிருடன் இருக்கும்போது, அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து, குளித்து முடித்து, சாப்பிட்ட பிறகு இரவில் நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “தாத்தா, தாத்தா ஜப்பான்கார காலத்துக் கதைகளைச் சொல்லுங்கள்..” என்று அவரைத்துன்புறுத்துவோம். தாத்தா அருமையாகக் கதைகளைச் சொல்பவர். ஒரு கதையை எங்கு ஆரம்பித்து எப்படி கொண்டுவந்து எங்கு முடிக்கவேண்டுமென்று நன்கு அறிந்துவைத்திருப்பவர் தாத்தா. இடையிடையே நகைச்சுவையைக் கலந்தும் சொல்வார். பாடல்களைப் பாடுவார். வாயால் இசைக்கருவிகளை வாசிப்பார். கைகளைத்தட்டுவார். எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நாங்களெல்லாம் அப்படிச்சிரிப்போம். குதூகலிப்போம்.

பள்ளிப்பருவம் அது, அன்றைய காலகட்டத்தில் கதைகளை நகைச்சுவைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் கேட்டபோதிலும், அக்கதைகள் அனைத்தும் எங்களின் மூதாதையர்கள் ரத்தத்தை வேர்வையாகச் சிந்திய உண்மைச் சரித்திர சம்பவங்கள் என்பதனை உணர்ந்துகொள்கிற பருவம் வந்தபோது, மனம் பட்ட வேதனைகள் சொல்லிமாளாது.

காடுகளை அழித்தார்கள். தண்டவாளங்களைப் போட்டார்கள். சாலைகளைக் கட்டினார்கள். கல் உடைத்தார்கள். விடிய விடிய பால்மரம் சீவினார்கள். கட்டட வேலைகள் செய்தார்கள். துரைமார்களின் கக்கூஸ் கழுவினார்கள். அவர்களின் வீட்டுவேலைகளைச் செய்தார்கள். கைக்கட்டி கூலிக்காக மணிக்கணக்காக காத்துநின்றார்கள். போரில் மாண்டார்கள். போராட்டத்தில் மாட்டார்கள். அடி வாங்கினார்கள். மலேரியா வந்தது, மாண்டார்கள். காலரா வந்தது மாண்டார்கள். பசியால் மாண்டார்கள் என பல கதைகள் சொல்வார் தாத்தா. அதை அப்படியே பரதேசி திரைப்படத்தில் பார்த்தேன். மனம் கணத்தது.

பரதேசி ஒரு உண்மைக் கதை என்பதை, படம் ஆரம்பிக்கும்போது அலட்சியம் செய்ததை, படம் முடிகிறபோது மனபாரத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

பாலாவின் நடிகர்களின் தேர்வு அற்புதம்.

அதர்வா நடித்தாரா? இப்படி அழவைக்கின்றார்.! சிறந்த நடிகர் விருது அடுத்து உங்களுக்குத்தான். அப்பாதான் இல்லை பார்ப்பதற்கு.

அழகுப்பதுமை வேதிகாவிடம் இவ்வளவு திறமையா? எல்லாப் புகழும் பாலாவிற்கே.

கிராமம், செட் போடப்பட்டதுபோல் இருந்தாலும், அற்புத சூழலைக் கொடுத்தது.

ஏழ்மைச்சூழலிலும் மேலோர் கீழோர் என்கிற பாகுபாடுதான் நம் இனம் இந்த அளவிற்கு கொடுமைப் படுத்தலுக்கு ஆளாகியிருக்கின்ற அவலம். கொடுமை.

சிரிக்கச்சிரிக்கப்பேசி வளையில் விழவைக்கின்ற கபட நாடகத்தின் போது, நம் மக்களின் அப்பாவித்தனம் மனதைப்பிழிகிறது.

பணத்தை இப்படிக் காட்டிக்காட்டியே ஏமாற்றினால்தான் இவர்களை எப்போதும் நம் பக்கமே வைத்திருக்க முடியும் என்கிற போது, படம் பழிவாங்கும் படலமாக முடியவேண்டுமென்று மனம் ஏங்குகிறது.

கூலியைக் கொடுக்காமல், அதற்கு, இதற்கு, தாயத்து கட்டியதற்கு , மருத்துவச்செலவிற்கு, வாடகை, மளிகைசாமன் என பிடித்துக்கொண்டு துரத்துகிறபோது, ‘அடப்பாவிகளா’ என நம் மனமும் குமுறுகிறது. ‘ஏய், எவ்வளவு பேர் இருக்கிறீர்கள், ஒன்று சேர்ந்து அடித்து நொறுக்குங்கள்,’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது.

கால்களை விந்திவிந்தி நடக்கின்ற சில வேலையாட்களைப் பார்த்தபோது, ஏன் ஊனமாக இருப்பவர்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கின்றார்கள்.? என்று யோசிக்க, அது அங்கே நடந்த கொடுமையால் வந்தது என்று கதை பின்னால் வருகின்ற போது. ஆண்டவா, இது மட்டும் கற்பனையாக இருக்கவேண்டும் என்று மனம் துடிக்கின்றது.

மருத்துவம் பார்க்க வந்தவர்களும், ஆடிப்பாடி களித்து மதமாற்று வேலைகள் செய்கிறார்கள். நம்மவர்களின் நிலை..!!

இடைவேளை காட்சி வருகிற போது, அதற்குள் பாதி படம் வந்துவிட்டதா? இன்னும் என்னென்ன கஷ்டங்கள் வருமோ..! என்கிற பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை.

இடைவேளை காட்சியின் போது காட்டப்படும் தவிக்கும்/துடிக்கும் கை ஒன்று ரசிகர்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறன.

குழந்தையின் விரல், தேயிலையை கிள்ளி ரத்தங்கட்டி இருப்பதைக் காட்டியபோது ஆரம்பித்த என் கண்ணீர்துளி இறுதிவரை கட்டுப்படுத்த முடியாமலேயே போனது.

இறுதிக்காட்சியின் அழுகை... நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது.

படம் அவார்ட்டுகளைக் குவிக்கும் நிச்சயமாக. சேது’விற்குப்பிறகு.

இதற்குமேல் நான் என்ன சொல்ல ..!!  பார்க்கவேண்டிய படம். தொடர்ந்து வந்த திரைப்படங்கள் நம்மை ஏமாற்றியபோது, பாலாவின் இந்தப்படம் அற்புதம் அற்புதம் அற்புதம்.

ஒரே ஒரு குறை - இளையராஜாவின் இசை இல்லை. பாலா படம் என்றால் இளையராஜாதானே இசை.. என்னாச்சு!??

இனி ப்ளாக்கில் வந்துள்ள விமர்சனங்களைப் படிப்பேன்.