சனி, ஏப்ரல் 05, 2014

கையில் கிடைத்த கவிதைப் புத்தகங்கள்..

கவிதைகள்..

ஏன் பிடிக்கிறது.?
எந்த மாதிரியான கவிதைகளை மனம் விரும்பி வாசிக்கத்துவங்குகிறது.?
கவிதை என்ன மாதிரியான உணர்வுகளை நமக்குள் விட்டுச்செல்கிறது? 
அதிகமான கவிஞர்கள் நம்மில் உருவாகுகிறபோது, மனம் எதைக் கவிதை என்று ஏற்றுக்கொள்கிறது.?
ஏன் கவிதை எழுதவேண்டும்.?
ஏன் கவிதை வாசிக்கவேண்டும்.?
கவிதை மூலமாக எழுதித்தான் சொல்லவேண்டுமா.?
இங்கேயும் அங்கேயும் வரிகளைப் பிய்த்து பிய்த்து அடுக்கிவிட்டால், அது கவிதையா?
முகநூல் வந்ததிலிருந்து – திபுதிபுவென கவிஞர்கள் கூட்டம். அனைவரும் கவிஞராகலாம் என்கிற நிலை புற்றீசல்போல் பரவி வருவது கண்கூடு, இது ஆரோக்கியமா.!?
யாருக்கும் புரியக்கூடாது என்கிற சிந்தனையில், ஒன்றுமே இல்லாத விஷயத்தை, சுற்றிவளைத்து, வார்த்தை ஜாலம் செய்வதுதான் கவிதையா?
கட்டுரையை ஒவ்வொருவரிகளாகச் சொல்லி, ஒரு சிறிய திருப்பத்துடன் முடிவடைகிற கவிதைகளை சிலர் படைத்துவருகிறார்கள். அதற்கு அவர்கள் கட்டுரையே எழுதிவிடலாமே.!?
உவமைகளைச் சொல்லி, ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மறைமுகமாகச் சொல்வதால், கவிதை வாசிப்பில் என்ன திருப்தி வந்துவிடப்போகிறது. அதற்கு நாம், நமது முன்னோர்களின் பழமொழிகளைப் படித்துவிட்டுப்போகலாமே...!
மூன்று வரி, ஹைக்கூ என்கிறார்கள். அதற்கும் மரபு இருக்கின்றது. அந்த மரபோடு எத்தனை பேர் ஹைக்கூ படைக்கின்றார்கள்.?
உரைவீச்சு கவிதையல்ல என்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான கவிதைகள் என் பார்வையில் உரைவீச்சே.!
கவிதைக்கு யாப் இலக்கணம் தேவை என்கிறார்கள். யாப் இலக்கணம் என்பது என்னவென்று தெரியாத பலர், கவிஞர்களாகி விட்டார்களே.? 
டி.ராஜேந்தர் பாணியில் சொல்வது கவிதையல்ல என்கிறார்கள். இருப்பினும் அதுமாதிரி எழுதுவது சுலபம். அதுதான் கவிதை என்றும் சொல்கிறார்கள்.?
சில, கவிதைகள் என்கிற பெயரில் தத்துவங்களைச் சொல்லிச்செல்கின்றன.!
சில, கவிதைகள் என்கிற பெயரில் அறிவுறுத்துகிறது.!
சில, கவிதைகள் என்கிற பெயரில் அலோசனைகளை வாரி வாரி வழங்குகிறது.! 
சில, மிரட்டுகிறது.!
சில கவிதைகள், கேள்விக்கணைகள்.!
சில, விடுகதைகளை விட்டுச்செல்கிறன..
சிலர் மரத்தின் கீழ் வானத்தையே அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு, அங்கே நிகழ்கின்ற அனைத்தையும் கவிதைகளாக வடித்திருப்பார்கள்..!
சிலருக்கு மழை வந்தால் போதும்.. ஜுரம் வருகிறதோ இல்லையோ, கவிதை வந்துவிடும். தூரல், சாரல், நீர், வெள்ளம், இயற்கைத்தாயே, தந்தையே, சித்தியே என்று அவர்களின் கற்பனைக்குதிரைக்கு தீனி கிடைத்துவிடும்.
சிலரின் கவிதைகளில் காதல் மட்டுமே இருக்கும்.. அதை அழகாகச் சொல்லியிருப்பார்கள்.
எப்படிச்சொன்னாலும், இவைகள் எல்லாம் கவிதைகளே அல்ல, என்று, நாம் போற்றிக்கொண்டிருக்கும் சில கவிதைகளை, மெத்தப்படித்த கல்வியாளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். 
சங்ககாலத்தில் புனையப்பட்ட கவிதைகளைக் கரைத்துக்குடித்து உள்வாங்கியவர்களுக்கு, நாம் சாதாரணமாகச் சொல்கிற எதனையும் கவிதை என்று அங்கீகரிக்க மாட்டார்கள். கோபப்படுவார்கள். (அனுபவித்துள்ளேன்)..
எழுத்தாளர் சாரு சொல்வார், பெண்களுக்கு கவிதையே எழுத்ததெரியவில்லை.! (இன்னும் அசிங்கமாகச் சொல்வார்)  
ஜெயமோகன் சொல்கிறார், கவிதைகளில் சாதாரண விஷயங்களைத் தொட்டு எழுதுகிறீர்களா? தேவையில்லை. எனக்கு அதுவேண்டாம். நானும் அப்படி யோசிப்பேன்.
மனுஷயப்புத்திரனின் கவிதைகள் அனைத்தும் கவிதைகளே அல்ல என்று ஆதராத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டதையும் நான் வாசித்துள்ளேன்.
பல பிரபல எழுத்தாளர்கள், சினிமா பாடல்களைக் கவிதை என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இருந்தபோதிலும் நம்மில் பெருபாலானோர், சினிமா பாணியிலான கவிதைகளைத்தான் எழுதிவருகிறோம்.!
வனிக நோக்கத்துடன் சினிமாவிற்கு பாட்டெழுதும் கவிஞர்கள், உள்ளபடி கவிஞர்களே அல்ல; என்று வாதிடும் கூட்டமும் இங்கே உள்ளனர்.!
மரபில் சேராத கவிதைகளைக் கட்டி அழுபவர்களை நாங்கள் கவிஞர்கள் என்று ஏற்றுக்கொள்ளமாட்டோம், என்கிறது ஒரு கூட்டம்.!
நாம் கவிதை எழுதுவோமென்று வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரிய நேர்ந்தால், நம்மிடம் சாதாரணமாகப் பேசுகிற போதுகூட, கவிதை நடையிலேயே பேசி கழுத்தை அறுப்பவர்களும் உண்டு..!?   

இப்படிப்பலவாறாக கவிதைகளைப் பற்றிய கருத்துகள், வினாக்கள், விமர்சனங்கள், எதிர்ப்புகள், வம்புகள், சிக்கல்கள் என கவிஞர்களைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கின்ற வேளையிலும், தினம் ஒரு கவிஞர் முளைத்து, கவிதைகளை எழுதி, நூல் வெளியீடு செய்து, தமது தமது உள்ளக்கிடங்கை கவிதை நயத்துடன் வெளிக்கொணர்ந்து கவித்திறனைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்ற சில தைரியசாலிகளை நாம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

அப்படி எழுதப்பட்டு வெளியீடு கண்ட சில கவிதைப் புத்தகங்கள் என்னை வந்து சேர்ந்தன.

1.       1. கே. பாலமுருகனின் – தூக்கிலிடப்பட்டவர்கள் நாக்குகள்
2.       2. ம.நவீன் - வெறி நாய்களுடன் விளையாடுதல்
3.       3. R.K குரு (லஷ்மிகாந்தன்) – தமிழுக்கு ஆட்கள் தேவை
4.       4. ப.ராமு – சிணுங்கும் சிறகுகள்.  

இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் எனது வாசிப்பு அனுபவங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இது விமர்சனமல்ல.

கே.பாலமுருகனின் தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள். 

இந்த நூலைத்தான் முதல் முதலில் வாசிக்கத்துவங்கினேன். ம.நவீனின் சிறப்பான முன்னுரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கவிதைப் புத்தகம், வாசிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொடுக்க்க்கூடிய அற்புத கவிதை நூல் என்று சொன்னால் அது மிகையல்ல. `எதிர் அறம்’ என்று தலைப்பிட்ட அந்த முன்னுரையின் முக்கிய பகுதியாக நான் கருதுவது; அதிகாரத்தோடு ஒத்துப்போவது, அதிகாரத்திடம் சமரசம் செய்துகொள்வது, அதிகாரத்தின் முன் மௌனம் சாதிப்பது, அதிகாரம் வீசும் எச்சில் இலைக்காக வாலாட்டி நிற்பது எனத் தமிழ்ச்சூழலில் வளைந்த முதுகெலும்புகளுக்கு மத்தியில் படைப்பிலக்கியம் மூலம் பாலமுருகன் தனது எதிர்க்குரலை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதே அவரின் படைப்புகள்.
கலை என்பது எதனுடனும் ஒத்துபோகுதல் அல்ல. ஏற்கனவே சொல்லப்பட்ட விடயங்களை மீண்டும் மீண்டும் எழுதி உலகுக்குக் காட்டுவதால் எதை நிரூபிக்கப் போராடுகின்றார்கள் என்கிற சிந்தனையுடன் முடிவடைகிற ஓர் சிறிய முன்னுரைதான் அது.     

கவிதை மாலை நிகழ்ச்சியின் போது, ஜெயமோகன் பேசுகையில், கவிதை என்பது, ஒன்று, பூ வாக இருக்கவேண்டும். இல்லையேல் இரத்தமாக இருக்கவேண்டும் அதுவும் இல்லையேல் நெருப்பாக இருக்கவேண்டும், என்கிற மூன்று பிரிவினைக்குள் கவிதைகள் இருக்கவேண்டுமென்று தரம்பிரித்தார். இதற்கு அர்த்தம் சொல்லி விளக்கத்தேவையில்லை. காரணம் கவிதை வாசிப்பில் நமக்கு ஏற்படுகிற அனுபவங்களை வைத்து, அது ரத்தமா, நெருப்பா அல்லது பூ’வா? என்பதை நாமே உணர்ந்துகொள்ளலாம். அப்படிப்பார்க்கையில் பாலமுருகனின் கவிதைகள் அனைத்தையும் நெருப்பு என்கிற பிரிவினைக்குள் தாரளமாகக் கொண்டுவரலாம். வாசிப்பு அனுவபத்தில், மனதில் தீயை விதைத்து விட்டுச் செல்பவை அனைத்தும். 

வாசகனின் பார்வையில், பல வடிவங்களின் பல கோணங்களில் மாறுபடுகிற பின்நவீனத்துவ கவிதைகள்தான் பாலமுருகனின் அனைத்து கவிதைகளும். ஒரு தமிழ் சொல் அங்கே பலவிதமான அர்த்தங்களை விட்டுச்செல்கிற சூட்சமத்தை இவரின் கவிதைகளில் வாசிக்கலாம். குறிப்பிட்டு சொல்வதற்கு `செத்த இறைச்சி’. இக்கவிதையில், இறைச்சி என்கிற வாசகம் வாசகனின் நாசியில் கவுச்சி வாடையை விட்டுச்செல்கிறது. 

`முதலாளி எவனென்று தெரியாமல், 
போவோர் வருவோரெல்லாம் 
காறி உமிழும் துப்புகெட்ட 
இறைச்சியாய் தொங்குவதும், 
இதற்கு முன் தான் எதுவாக இருந்து 
பிறகு இறைச்சியானோம் எனக்கூடத் தெரியாத 
முட்டாள் இறைச்சியாக்கப்படுவதும் 
பழகிப்போனதாயின..

இயலாமையின் வெளிப்பாடுகளை, செத்து தொங்குகிற இறைச்சியின் மூலமாக உருவகப்படுத்தி சமுதாயத்திற்கு சாட்டையடி கொடுக்கின்றார். 

அடுத்து, உனதும் எனதுமான மூத்திரம் என்கிற தலைப்பில் சொல்லப்பட்ட கவிதை. நடுத்தரவர்கத்துப்பிள்ளைகள் படும் அவஸ்தைகளைச் சித்தரிக்கின்ற கவிதை இது. முன்பெல்லாம், அவனின் மூத்திரம் குடி, அப்போதான் உனக்கு புத்திவரும், என்கிற வார்த்தைகளைக் கேட்காத நடுத்தரவர்கத்துப் பிள்ளைகள் இருக்கமுடியாது என்றே சொல்லலாம். அடுத்தவீட்டுப்பிள்ளைகளிடம் எந்தனை ஓட்டைகள் எத்தனை அவலங்கள் மலிந்து கிடந்தாலும், அவற்றையெல்லாம் அவன் வாங்கிய நல்ல தேர்வு முடிவுகள் தவிடுபொடியாக்கிவிடும். 

குழந்தைகளை ஒப்பிட்டு `அவனின் காலைக்கழுவிக் குடி, மூத்திரம் குடி’ என்கிற சொல்லால், பெற்றோர்கள், உறவினர்கள் என எப்படியெல்லாம் காயப்படுத்துவார்கள் என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். 

எனது எல்லா நடவடிக்கைகளும் 
சாதனைகளும் அடைவுகளும் 
பக்கத்து வீட்டுப் பையனின் முத்திரத்தில் 
ஊறவைக்கப்பட்டன.. 

என்று தொடர்ந்து, அதன் பிறகு அந்தப் பையன் எப்படியெல்லாம் குடும்ப உறுப்பினர்களால் சீண்டப்படுகிறான் என்று சொல்லி, இறுதியாக ஒரு திருப்பம், 

பக்கத்துவீட்டுப் பையனின் 
கையிலும் துருப்பிடித்த 
ஒரு குவளை இருந்தது, 
யாரோ இன்னொரு பையனின் 
மூத்திரத்தை வாங்குவதற்காக.! 
என்று முடிவடைந்து வாசகனுக்கு வேலை வைக்கின்றான் கவிஞன்.

அனைத்து கவிதைகளையும் உள்வாங்கி ரசித்தேன். உணர்ந்தேன். அதில் அடுத்ததாக, அவசியம் சொல்லக்கூடிய ஓர் கவிதை 
`ஒரு துண்டு சிகரெட்’ புகைப்பவனின் அவலத்தை, ஒரு சிகரெட் துண்டு படும் அவஸ்தையின் மூலமாக சித்தரிக்கின்றார். அற்புதமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த கவிதை இது. இந்தக் கவிதையில் வரும் வரிகள் அனைத்தும், ஹைக்கூ கவிதைகளை வாசிக்கின்ற அனுபவத்தைக்கொடுத்தது. 

கடைசியாகத் தன்னை உறிஞ்சியவனைப் 
பற்றி சொல்வதற்குள் 
இறந்துவிடும் துண்டு 
சிகரெட்டின் முணுமுணுப்பு.

இந்த வரிகளுக்குள், ஒரு ஹைக்கூ அல்ல, பல ஹைக்கூக்கள் ஒளிந்து இருக்கின்றன.

உறிஞ்சியவன் நினைப்பதற்குள்
இறந்துவிடுகிறது
சிகரெட் துண்டு.

இறந்து விழுந்த
சிகரெட் துண்டு
உறிஞ்சியவனையும் வஞ்சிக்கிறது

சிகரெட் துண்டு இறக்கிறது
உறிஞ்சியவனை
துணைக்கு அழைத்துக்கொண்டு 

எனக்கு ஹைக்கூ கவிதைகள் அதிகம் பிடிக்கும். இருந்தபோதிலும் எழுதவராது. மேலே உள்ள மூன்று கவிதைகளும் பாலமுருகனின் வரிகளில் இருந்து, நான் முயன்றது.


விலங்கிட்ட வாழ்வு – நெகிழவைத்த கவிதை. 

அவர்கள் விளையாடுவது - நம் ஆசைகளைத் தின்று செரிக்க முடியாமல்போன நம் வீட்டுக்குழந்தைகளுடன். 
நாம் கக்கிய கசப்புகளைத் தின்று வளர்ந்த நம் வீட்டுக் குழந்தைகளுடன். இது ஒரு fun fare நினைவலைகள்.

உங்களை நான் மன்னிக்கிறேன் என்று முடிவடைகிற கவிதையில், சாபமிட்டவர்களை சபிக்கப்படும் கவிதையாக நம்மை மிரட்டிச்செல்கிறது.

இரகசியங்களை ஒளிக்கத்தெரியாதவர்கள் என்கிற கவிதையில் ஆன்மிக வாடை வீசியதை என்னால் உணரமுடிந்தது. ஞனப்பார்வை என்பது ஆன்மிக அனுபவத்தின் மூலமாக நிகழ்வது. நான் கண்களை உற்று நோக்குகிறபோது, என் கைகளில் சாவிக்கொத்துகளைத் தேடி களைக்கின்றனர், என்கிற வரியில் ஒளிந்திருக்கும் ஆன்மிகத்தின் தெளிவு நிலை, நம்மையும் கலவரமடையச்செய்கிறது.

பாலமுருகனின் ஒவ்வொரு கவிதைக்கும் நாம் நமது பாணியில் விளக்கம் சொல்லிக்கொண்டே போகலாம். அது நிச்சயம், படைப்பாளியான பாலமுருகனுக்கே வியப்பாகவும் இருக்கலாம். நாம் யோசிக்காததையெல்லாம் வாசகன் யோசிக்கின்றானே.? என்கிற சிந்தனை உதிக்கின்ற தருணத்தில், அவருக்கான அடுத்த கவிதை நூல் தயாராகி விடும் என்பதில் சந்தேகமில்லை. 

முகநூலில் அவரைத் தொடரும் ஒரு வாசகியான நான், அவரின் படைப்புகளைக் கூர்ந்து கவனித்து வாசிப்பேன். சிலவேளைகளில், கிண்டல் கேலி செய்து, திட்டு வாங்கிக்கொண்டதும் உண்டு. அப்போது இருவருக்கும் கோபம் வந்தது. இப்போது நினைக்கையில், படைப்பாளியின் மனமாகப்பட்டது, நாம் நினைக்கின்ற கோணத்தில் நமது சிந்தனைக்கு ஒப்ப அமைவது கிடையாது. அது வேறொரு உலகில் சஞ்சரிப்பவை என்பதை உணர்ந்துகொண்டேன்.

தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் என்கிற இந்தக் கவிதைப்புத்தகம் எனக்கு நல்ல பரிசு. வாழ்த்துகள். 


2. வெறிநாய்களுடன் விளையாடுதல். கவிஞன் ம.நவீன். 

இந்த நூலுக்கு கே.பாலமுருகன் முன்னுரை வழங்கியிருந்தார். நீண்ட விரிவான முன்னுரைக்கு `சொற்கலைக்கொல்லும் கலையானது’ என்று தலைப்பிட்டு, அற்புதமாக, மிக விரிவாக எழுதி அறிமுகப்படுத்தியிருந்தார். கோபப்படுபவன் மட்டுமே கவிஞனாகலாம் என்கிற சூழலில் இன்றைக்கான கவிதை இலக்கியம் செயல்பட்டு வருவது கவிஞர்களுக்கான கற்பனை வறட்சியைக் காட்டுகிறது, என்று, தீப்பொறி பறக்க தமது கருத்துகளை முன்னுரையின் மூலமாகப் பகிர்ந்திருந்தார். 

கவிதை என்கிற பெயரில் மனித வாக்குமூலங்களைப் பிரசுரிக்கின்ற பத்திரிகைகளின் போக்கு குறித்தும் இங்கே சாடியுள்ளார்.   

பகுதி பகுதியாகப் பிரித்து அழகான தமிழ்ச்சொற்களைக் கொண்டு மிகவும் அருமையாகச்சொல்லப்பட்ட முன்னுரை இது. இதற்காகவே இந்நூலை வாங்கவேண்டும் என்கிற கோரிக்கையையும் இங்கே முன்வைக்கிறேன். 

நூலின் தலைப்பே வெறி பிடித்த்துபோல் இருப்பினும், இந்தக் கவிதை நூலை நான், பூ’விற்கு சம்மாகத்தான் ஒப்பிட்டுச்செல்வேன். இவரின் கவிதைகளின் வாசிப்பு அனுபவத்தின் இறுதியில், அனைத்தும் மெல்லிய புன்னகையை நம்மிடம் விட்டுச்செல்கிறது. அது நகைச்சுவை உணர்வாகவும் இருக்கலாம். நையாண்டியாகவும் இருக்கலாம். சின்னச்சின்ன `twist’ மனதின் இறுக்கத்தைக் குறைத்துவிட்டுச் செல்வதாகவும் இருக்கலாம். காதல் துளிர்விடுவதைப்போலவும் இருக்கலாம். கோபத்தின் நேரடி வெளிப்பாடாகவும் இருக்கலாம். விடுகதைக்கு விடை கிடைத்த திருப்தியில் உதிக்கின்ற புன்னகையாகவும் அது இருக்கலாம்.! இப்படிப் பல கோணங்களில் புன்னகையை மட்டும் நம்மிடம் விட்டுச்செல்கிற கவிதைகளை, பூ என்கிற பிரிவினைக்குள் கொண்டுவருவது கவிஞனுக்கு கோபத்தை வரவழைக்காது என்று நம்புகிறேன்.

உதாரணத்திற்கு
, புத்தகத்தின் முதல் கவிதை.. 

மிக இயல்பான
 
ஒரு காலைப்பொழுதில் 
சோற்றுப் பருக்கைகளை 
கொத்தித்தின்னும்
மைனாக்களின் கண்களில்
பட்டுவிடும்
மீந்திருக்கும் எலும்புத்துண்டுகள்
ஒரு தரம் குதித்து
பின்னோக்கி ஓட வைக்கும்

இந்தக் கவிதையின் உள்ளர்த்தம் புரிந்தால், இதில் உள்ள எள்ளல் நல்ல நகைச்சுவை. 

நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வின் கூத்துகளை, நவீன், மாயா என்கிற சிறுகுழந்தையின் இருத்தலின் மூலமாக வெளிக்கொணர்கிறார். அறியாத சிறுகுழந்தையின் உணர்வுகளில், வளர்ந்த குழந்தைகளுக்கு `மெசெஜ்’ சொல்வதைப்போல் சில கவிதைகள் வந்திருப்பது ரசனைக்குரியது.   

நான் வாசித்த தடித்த நூலொன்றைப்பற்றி நண்பர்களிடம் சிலாகித்தேன். மாயாவும் தாம் வாசித்த எ,பி.சி,டி புத்தகத்தைப்பற்றி பெரிதாகப்பேசிக்கொண்டிருந்தது. இதிலும் லேசான நையாண்டி, நமக்குள் புன்னகையை விட்டுச்செல்கிறது. 

பூச்சாண்டி என்கிற கவிதை கொஞ்சம் நெருடலைத் தந்தது. இப்படி நேரடியாகச்சாடுவதை விடுத்து கொஞ்சம் வேறுமாதிரியாகச் சொல்லியிருக்கலாம் என்கிற சிந்தனை வாசிப்பு அனுபவத்தில் கிடைத்தது. 

பயம்கலந்த கனவுக்கவிதையிலும் லேசான புன்னகை எட்டிப்பார்த்த்து.

மரணம் குறித்த கற்பனையில்.. என்கிற கவிதைவரிகள்தான் நேரடி அர்த்தத்தைக் கொடுத்துவிட்டுச்சென்றது. தனிமையின் வெறுமை கொடுக்கின்ற சூழல் விதைத்துச்சென்ற கவிதை இது. இப்படியெல்லாம் நானும் சிறுபிராயத்தில் யோசித்துள்ளேன். மரணபயம் குடைவதைப்போன்ற திணறலில், நாமே முதன்முதலில் உலகத்தை விட்டுச் சென்றுவிடவேண்டும். அம்மா அப்பா சகோதரர்களின் மரணத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது, என்கிற சிந்தனையில், கைகளைக் கூப்பி, நமது இறைவனை வணங்குவதைவிடுத்து, ஓ ஜீஸஸ் என்கிற முனகலில், கையை, நேற்றி, இடது வலது என தொட்டு பின்பு உதட்டில் வைத்து முத்தமிடுவதைப்போன்று செய்துகொள்வேன்.. நிறைய கடவுள்கள் வந்து அவர்களைக் காக்கவேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனம் அது. 

33 கவிதையைப்படித்தபின்பு, demo செய்தேன். காற்றாடியைச் சுழலவிட்டு. 

கறை என்கிற கவிதை வாசிக்க வாசிக்க பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தது, அது என்ன என்பதைத்தான் நான் இந்தத் தருணம்வரை யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

இன்றிரவு நான் தூங்கப்போகிறேன் என்கிற கவிதையில் தூங்காமல் விழித்திருக்கும் கண்களின் கொலைவெறி வக்கிரமும் எனக்கு புன்னகையை வரவழைத்துவிட்டுச்சென்றது. 

சராசரி கவிதை - சராசரியல்ல.

சுதந்திரமற்ற வாழ்வைச்சொல்லும் கவிதையில், சுயநல வாடை வீசுகையிலும், நான் அதிகம் ரசித்த கவிதை அது - அற்புதம் அற்புதம்.. 

அந்தக் கவிதை இதோ...

சட்டென சந்திக்கும் பெண்ணிடம்
எழும் காமத்தை..
காதல் தீர்ந்துவிட்ட கணத்தின்
கசப்பை ..
உன் நட்பு இனி தேவையில்லை
என்ற வெறுப்பை..
இதற்காகத்தான் பழகினேன்
என்ற உண்மையை..
நான்தான் குற்றவாளி
என்ற வாக்குமூலத்தை..
எனக்கு யாருமே தேவையில்லை
என்ற இறுமாப்பை..
நான் மரணத்தை மட்டுமே விரும்புபவன்
என்ற மௌனத்தை
சத்தமிட்டுச் சொல்லமுடியாதவரை
இந்த வாழ்க்கை
சுதந்திரமற்றதுதான்...

நவீனின் எல்லாக் கவிதைகளிலும் சீற்றம் இருப்பினும், அது வாசகனுக்கு அற்புத அனுபவத்தையே விட்டுச்செல்கிறது. இது கவிஞனின் வெற்றியோ அல்லது வாசகனின் புரிதல் வெற்றியோ என்பது பற்றியெல்லாம் எனக்குத்தெரியவில்லை. இதுபோன்ற சிந்தனைச்சிதறல்கள் கவிதைகளாக இன்னும் நிறைய வரவேண்டும் என்பதுதான் ஒரு வாசகியாகிய எனது வின்னப்பம். 

3 தமிழுக்கு ஆட்கள் தேவை. RK குருவின் கவிதை நூல். 

குரு எனது முகநூல் நண்பர். நான் முகநூலில் சேர்ந்த காலகட்டத்தில் இருந்து எனக்கு நண்பராய் இருக்கின்றார். பொறி பறக்கும் பகிர்வுகளைப் பதிவேற்றி பின்னூட்டங்களின் மூலமாக கடுமையான கண்டனங்களைச் சம்பாதித்தவர். முகநூல் பிரபலம் என்றும் சொல்லலாம். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இவர்போன்ற நண்பர்கள்தான் எனக்கு ரோல்மாடல். என்னாலும் முகநூலில் நீண்ட காலம் தாக்குபிடிக்கமுடிகிறது என்றால், அதற்கு குரு போன்றோர்களின் தைரியமும் உற்சாகப் பதிவுகளும், தொடர் பங்கேற்புமே முக்கியக் காரணம். 

ஒருமுறை அவரின் பதிவின் கீழ் நானும் கோபமாக பின்னூட்டம் இட்டு எழுத்துப்போர் செய்கிறபோதுதான் நாங்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகம் ஆனோம். என்னை விட வயதில் ரொம்ப சிறியவர். அறிவு முதிர்ச்சி என்னை விட அதிகம். நிறைய படித்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்,ஏ பட்டப்படிப்பு முடித்தவர். பேசுகையில், ஆங்கிலம் கலக்காமல் அழகான தமிழில் பேசுவார். மரியாதையான நண்பர்.

நூல் வெளியீடு செய்கிறேன் விஜி, இதுதான் நான் எழுதிய கவிதைகள், என்று, தாம் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் தொலைபேசியின் வழி என்னோடு பகிர்ந்து கொண்டவர் குரு. புத்தகம் வெளியீடு கண்டவுடன், அந்த மகிழ்வான நிகழ்வை என்னோடு மனதார பகிர்ந்து பூரித்துக்கொண்டார். தபால் வழி நூலையும் அனுப்பிவைத்தார். தோழி தோழி என்று அன்பு ததும்ப அழைப்பவர். 

எப்படி அன்பு ததும்ப அழைத்து நலம் பேணி நட்பு பாராட்டினாலும். இலக்கியம் என்று வருகையில் நான் உண்மையை மட்டும்தான் சொல்வேன். இதில் `நோ செண்டிமெண்டல்.

குருவின் கவிதை நூலிலும் எனக்குப்பிடித்த அம்சம் அந்த முன்னுரையே. தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியர் அ.குமரேசன் (குமரேசன் அசக்) அவர்களால் சிறப்பாக எழுதப்பட்ட முன்னுரை அது.

எளிமையான தமிழில் மிகப்பெரிய விஷயங்களை அழகாகச் சொல்லியிருக்கின்றார் குமரேசன் ஐயா அவர்கள். எல்லா மனித மனங்களும் கவிதையின் பால் ஈர்ப்பு கொண்டதுதான். படிப்பறிவே இல்லாத ஒரு பெண் தன் குழந்தை தொட்டிலில் தூங்கி விழிக்கின்றபோது, பாரு எம்புள்ள எப்படி பூ மாதிரி கண்ணைத்தொறக்குது, என்று சொல்கிறபோது அங்கே கவிதை மனம்தான் செயல்படுகிறது என்று ஆரம்பிக்கின்றார் தமது முன்னுரையை. 
உலகப்புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வெர்ட்ஸ்வொர்த், கவிதையைப் பற்றிச்சொன்ன ஒரு விஷயத்தை உதாரணமாகக் காட்டிவிட்டு, தொடர்ந்து RK குருவின் கவிதைக்குள் நுழைந்து, அங்குள்ள ஏற்ற இறக்கங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

குருவின் கவிதைகள் அனைத்திலும் இந்த(து) சமுதாயத்தின் மேல் அவர்கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடாகவே உதிர்க்கின்றது. சில இடங்களில் `பொத்திக்கொண்டு போ’ என்பதை, கவிதையில் கவிதைக்குத்தோதாக எழுதியிருப்பினும், அதனின் ஆழத்தை உணர்ந்து வாசித்தோமானால், அங்கே சமுதாயத்தின் மேல் அவர் கொண்டுள்ள சீற்றம் வெளிப்படுகிறது. 

எனக்கும் பசி
என்புள்ளைக்கும் பசி
பாலில்லா என் மார்பில் 
ரத்தமாவது கசியாதா
பசியாறட்டும் என்புள்ள..

இந்த ஒரு கவிதை போதும் குருவின் கவிதைகள் அனைத்தும் எதைப்பற்றிப் பேசுகிறதென்று. அரசியல், வன்முறைக் கலாச்சாரம், நாட்டின் வறுமை. தமிழ்மீது பற்றற்ற நிலை. பஞ்சம் பசியின் கொடுமை. பெண்ணடிமை, இனம், மதம்,சமயம் என்று எல்லாம் கலந்த கலவையாக தமது கவிதைகளைப் படைத்திருக்கின்றார்.

ஒரே மூச்சில் எல்லாக் கவிதைகளையும் வாசித்துமுடித்தேன். நீண்ட நெடிய சிந்தனையில் மீள்வாசிப்புச் செய்து புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் உள்ள கவிதைகள் அல்ல அவை அனைத்தும். மிக எளிமையாக திருப்பங்களற்று சொல்லப்பட்ட கவிதைகள்தாம். கவிதைகள் என்பதைவிட.. நிமிடக்கதைகள்தான் அதில் அதிகம். கவிதைக்கு வேறொரு வடிவம் கொடுத்திருக்கின்றார் குரு. வாழ்த்துகள். முயற்சி மேலும் தொடர்க.

4. சிணுங்கும் சிறகுகள். ப.ராமுவின் கவிதை நூல். 

ப.ராமுவின் கவிதைகள் அற்புதமாக இருக்கும் என்பதை ஏற்கனவே நான் அறிந்துவைத்திருப்பதால், நானே நேரில் சென்று பணம் கொடுத்து அப்புத்தகத்தைப் பெற்றுக்கொண்டேன். ஆனால் இந்தக்கவிதை புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்து கவிதைகளிலும், பழைய ப.ராமுவின் சாயல் கொஞ்சம் கூட இல்லை என்பதை நான் பகிரங்கப்படுத்தினால், கவிஞர் கோபித்துக்கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். நான்கு வாசகங்களை எழுதி, அதை மேலிருந்து கீழாக நான்கு வரிகளில் அழகாக அடுக்கி, அதற்குத் துளி’ப்பா என்று பெயரிட்டு, அற்புதமான படங்களைக்கொண்டு பக்கங்களை வடிவமைத்து,  அழகிய கவிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். 

சில, கட்டளை வாசகங்கள். சில, காதல் வாசகங்கள். சில, இயற்கையைப் பற்றி, சில தத்துவங்கள், சில அறிவுறுத்தல்கள், சில நினைவலைகள்.... வீடு, தெரு, நிலா, வானம், பூமி, பூ, கடல், அலை, தென்றல் என நகர்கிறது. இதையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். .

உதாரணத்திற்கு :- 

நிற்காதே
நட..
அருகில் 
வரும்பார்
வாய்ப்பு

சுட்டெரிக்கும்
வெயில்
அவள் வந்தாள்
மனசெல்லாம்
மழை

தூரப்பயணம்
வழியெல்லாம் 
விக்கல்
அவளின் 
நினைவு

நீயும் மருத்துவரா?
புரியவேயில்லை
கையெழுத்து
மின்னல்

பார்த்தேன்
ரசித்தேன்
இதயத்தில்
நுழைந்தாய்
கவிதையாக..


கவிஞர் ப.ராமு அவர்கள் நோயில் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக, அவரே சொல்லக் கேட்டேன். நலம் பெற பிரார்த்தனைகள்.     

வியாழன், ஏப்ரல் 03, 2014

தோற்றம் கற்றல்..


 மனசுதான் அழகு.?
இந்த நம்பிக்கையில்
அவநம்பிக்கையே மிஞ்சுகிறது.!

எங்கும்
முகலட்சணமே
முதல் தேடல்..

நேர்முக தேர்விற்கு
அக அழகு ஓரங்கட்டப்படலாம்
ஒரே நாளில் தெரிவதில்லையாதலால்..

அழகற்றவள் தூற்றப்படுகிறாள்
காதலிப்பதற்கு தகுதியற்றவள்
நகைச்சுவையாக திணிக்கப்படுகிறது
சினிமாவிலும்...

ஆள் பாதி ஆடை மீதி
ஆளை மறைத்தும் மறைக்காத
ஆடைகளில் மின்னும் அழகு,
மின்மினிப்பூச்சி

பணியிடம்
அலங்காரமற்ற முகம்
கலையிழந்த சூழல்

முதல் ஈர்ப்பு
பலகோணங்களில்
பலரின் கோணங்களில்
வெளித்தோற்றம் புதுப்பிக்கப்படுகிறது
வெளித்தோற்றம்
முதல் ஈர்ப்பு

வேலைக்குச் செல்லும்
பெண்ணானவளுக்கு
மூடி மறைக்கின்ற
முகப்பூச்சுகளை
அப்பிக்கொண்டு மிஞ்ச எண்ணுவதுதான்
தொடர் கற்றல் பயிற்சியாக
மிஞ்சி நிற்கிறது..

புதன், மார்ச் 26, 2014

வியாழன், மார்ச் 20, 2014

அவசர எண்..

அலுவலகத்தில், அவசர அழைப்பு எண்களை அனைத்து floor யிலும் வைத்திருப்பார்கள். கீழே நான் அமர்கின்ற இடத்தின் பின்புறமும் அந்த லிஸ்ட் இருக்கும்.. சுவரில் ஒட்டி வைத்திருப்பார்கள்.

இன்று ஒரு பிரச்சனை. `எடு, பிடி, ஓடு, காவலாளிக்கிட்ட சொல்லு, கேட் மூடு, முன் பக்கம் சாத்து.. விடாதே, கார் நம்பர் நோட் பண்ணு, பிடி பிடி, போலிஸ் கூப்பிடு..’ என, தடதடவென இருவர் என் இடத்திற்கு ஓடி வந்தார்கள். 

நான் செய்வதறியாமல் `பே’ன்னு நின்று கொண்டு இருந்தேன்.
இங்கிருந்து அந்தப்பக்கம்.. அங்கிருந்து இந்தப்பக்கம்.. கீழே இருந்து மேலே.. மேலே உள்ளவர்கள் கீழே... ஓடு ஓடுன்னு ஓடி... ஒரே அமளி.

போலிஸ் கூப்பிடு.. போலிஸ் கூப்பிடு.. என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டான்.

போலிஸ் கூப்பிட்டு..?? என்னன்னு சொல்ல? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

மீண்டும் இன்னும் கூடுதல் ஐந்தாறு பேருடன் வந்து.. போலிஸ் கூப்பிட்டியா? என்றான்.

டேய் கஸ்மாலங்களா.. என்ன பிரச்சனைன்னு சொல்லாம, போலிஸ கூப்பிட்டு..!?

ஓடினான்.. கார்ட் ஹவுஸுக்கு.. மீண்டும் உள்ளே வந்தான்.. மூச்சு வாங்க..

என்ன நம்பரு? என்னா நம்பரு..? என் முன்னே நின்றுகொண்டு அவசரப்படுத்தினான்.. எனக்கு லேசா கிறுகிறுப்பு வந்துவிட்டது.

யார் நம்பர்.? பதில் சொல்லல...

அதற்குள் மனிதவள அதிகாரி கீழே இறங்கிவந்தார், இன்னும் சில அதிகாரிகளுடன், படபடப்பாய் இருந்த இந்த மெனெஜரை அழைத்துக்கொண்டு கீழே உள்ள ஒரு மீட்டிங் ரூம்’மிற்குள் நுழைந்தார்கள்.

கார்ட் வந்து சொன்னான்.. நீ கேட்’ஐ மூடு என்று சொல்வதற்கு முன்னமே, அந்த மஞ்சள் கார், சர்ர்ர் என்று சென்றுவிட்டது. விடு, இது நம் பிரச்சனை அல்ல. என்று சொல்லி விட்டுச் சென்றான்.

அவர்களுக்குள் என்ன பேச்சு நடந்ததென்று தெரியவில்லை. மீட்டிங் முடிந்து வெளியே வந்தவுடன்... போலிஸ் இன்னும் வரலயா.. ? கேட்டான்.

நான் கூப்பிடவே இல்லையே.. என்றேன்.
முறைத்தான்...

எங்கள் அதிகாரி, என்னிடம் வந்து, “எது நடந்தாலும், என்ன நடந்தாலும், என்னிடம் அனுமதி கேட்காமல், போலிஸுக்கு அழைக்கக்கூடாது..” என்றார்.

முருகா....

புதன், மார்ச் 19, 2014

எப்போதும்போல்

தினமும் ஒலிக்கின்ற சினிமா பாடல்கள்
தினமும் பேசுகிற தொலைபேசி அழைப்புகள்
தினமும் வருகிற மின்னஞல்கள்
தினமும் வருகிற வட்ஸாஃப் பொம்மைகள்
தினமும் எழுதப்படுகிற நாட்டுநடப்புகள்
தினமும் ஒலிபரப்படும் செய்திகள்
தினமும் கேட்கிற முதாட்டியின் புலம்பல்கள்
தினமும் திறக்கின்ற முகநூல் பக்கங்கள்
தினமும் திங்கிற சோறும் குழம்பும்
தினமும் பருகுகிற நீரும் பீரும் போல்
சாதாரணமாகவே இருக்கிறது
உனது கவிதைகளும்...

திங்கள், மார்ச் 17, 2014

புத்தகச்சிறகுகள் ஏற்பாட்டில் - கவிதை மாலை.. (16/3/2014)

புத்தகச்சிறகுகள் ஏற்பாட்டில் வல்லின பதிப்பகம் எடுத்து நடத்திய ’கவிதை மாலை’ என்கிற நிகழ்வு (16/3/2014) தலைநகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. வல்லின ஏற்பாட்டில் நடைபெறுகிற நிகவுகள் என்றால், நாட்டின்  ` ஊடக, எழுத்தாள, இலக்கியப் `பிரபலங்களின்’ ஒத்துழைப்பு என்பது சிஞ்சிற்றும் இருக்காது. பேச்சு வழி, முகநூல் வழி, குறுந்தகவல் வழி ஒருவர் மற்றவர்களை அன்புடன் அழைத்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இது என்பதால், அதிகமான இலக்கிய ஆர்வலர்களை எதிர்ப்பார்க்க முடியாது என்கிற அவநம்பிக்கையுடன் சென்ற நான், ஏமார்ந்துதான் போனேன். நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் வருகை புரிந்து, அந்த சிறிய அரங்கமே நிரம்பி இருந்தது, நிகழ்ச்சிக்கு வெற்றியே.

மேலும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற மிகமுக்கிய பிரச்சனைகளின் ஒன்றான, MH370 விமானம்  காணாமல் போன சம்பவம் குறித்த தொடர் திருப்பங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சமயத்தில், இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளின்பால் ஆர்வம் குறைந்து, மனது சதா நடந்துவிட்ட விபரீதங்களிலேயே மூழ்கியிருக்கின்ற பட்சத்தில், இலக்கியமாவது மண்ணாவது என்கிற உள் உணர்வையையும் மீறி, இந்நிகழ்விற்கு வருகை புரிந்து நிகழ்வு சிறக்க உதவிய அனைவருக்கும் புத்தகச்சிறகுகள் மற்றும் வல்லினம் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.

நிகழ்ச்சியின் தலைப்பு `கவிதை மாலை’. சிறப்பு வருகையாளர் தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதி எழுத்தாளர் ஜெயமோகன். 
ம.நவீனின் `வெறி நாய்களுடன் விளையாடுதல்’ என்கிற நூலும், கே. பாலமுருகனின் `தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ என்கிற கவிதை நூலும் வெளியீடு கண்டன. இந்த நிகழ்வோடு `பறை’ என்கிற கால் ஆண்டு இதழும், அதன் ஆசிரிய குழுமங்களின் விளக்க உரைகளோடு அரங்கத்திற்குள் நுழைந்தது. எளிய தேநீர் விருந்து. புத்தகச்சிறகுகளின் புத்தக விற்பனை ஒருபுறம், என, நிகழ்வுகளை அழகாகவே கோர்த்திருந்தார்கள்.

சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் ஜெயமோகன் வரவிருந்த விமானம் சற்று தாமதமாக வந்திறங்கியதால், அவர் வருவதற்குக் கூடுதல் அரைமணிநேரம் ஏடுத்துக்கொண்டு நிகழ்வை ஆரம்பித்த போதிலும், காத்திருக்கின்ற சோர்வே இல்லாமல் அமைதியாகவே நகர்ந்தது `கவிதை மாலை’ நிகழ்வு. 

நிகழ்வின் தலைப்பில் மாலை இருப்பினும், யாருக்கும் மாலை பொ(ப)ன்னாடை என்று அணிவித்து, வருகையாளர்களின் நேரத்தைக் கொள்ளையடிக்காமல், சொத்தப்பல் பேச்சுகளால் இலக்கிய ஆர்வலர்களின் கழுத்தில் `கத்தி’ போடாமல், நிகழ்வின் நோக்கம் மட்டுமே அரங்கேறியது, வல்லினம் முழுக்க முழுக்க இளஞர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது புலப்பட்டது.

மேடையில் நூல் குறித்த விமர்சனத்தில் அ.பாண்டியன், தினா, விஜயா, யோகி, பூங்குழலி போன்றோர்கள் ரத்தினச்சுறுக்கமாக புத்தகத்தில் தாம் ரசித்த விடயத்தைத் தொட்டு உரையாற்றினார்கள். எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தினைக் கொண்டிராமல், தத்தம் பார்வையில் வெவ்வேறு கோணத்தில் புத்தகத்தைப்பற்றி பேசியது சிறப்பாகவே இருந்தது. குழலி இன்னும் கொஞ்சநேரம் பேசியிருக்கலாம் என்கிற ஏக்கத்தை உண்டு பண்ணியது அவரின் தெளிவான பேச்சு. நல்ல பேச்சாளராவதற்கான தகுதி அனைத்தும் அமையப்பெற்ற பெண் அவர்.

கே.பாலமுருகன்

புத்தகம் குறித்து, அதனின் நூலாசிரியர்கள் பேசுகிறபோது, கே. பாலமுருகன் தமது உரையினை நகைச்சுவை ததும்ப வழங்கியிருந்தார். நகைச்சுவை பேச்சுதான் என்றாலும் அவரின் உரை சிந்தனையைத்தூண்டியது. 

யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்கிற சூழல் இப்போது புற்றீசல் போல் பரவி வருவது கண்கூடு என்றார். கவிஞராக இருப்பது எவ்வளவு சிரம்ம் என்பதனையும் ரசிக்கும்படி சொல்லியிருந்தார். போட்டோவிற்கு போஸ் கொடுக்கின்ற போதுகூட கேமராவை நேராகப் பார்க்கக்கூடாது என்கிற கொள்கை உள்ள கவிஞர்களின் நிலைமையினை மிக வருத்தத்துடன் தெரிவிக்கின்றபோது, அவரின் உடல்மொழி நல்ல நகைச்சுவை. 

கவிதை எழுதுவதற்கு எதாவது ஒரு நிகழ்வு கவிஞர்களுக்குத் தேவைப்படுகிறது. பௌர்ணமி என்றால், கவிதை. தீபாவளி என்றால், கவிதை. விநாயகர் சதூர்த்தி என்றால் கவிதை. நாட்டில் எதாவது நிகழ்ந்தால், கவிதை. பசியில் வாடினால் கவிதை. காதல் வந்தால் கவிதை, தெய்வ சிந்தனை தோன்றினால், கவிதை., என பத்திரிகைகள் அதனின் தரம் காணாமல் கவிதைகள் என்கிற பெயரில் படைக்கப்படுகிற அத்தனை எழுத்துகளையும் வதவதவென்று பிரசுரித்து, அப்படி எழுதுகிறவர்களையும் ஊக்கமூட்டிவருகிறார்கள். இது தவறு. இதனால் எந்த நன்மையும் சமுதாயத்திற்கு வந்து விடப்போவதில்லை, என்கிற ஆதங்கத்தை பகீரங்கமாக வெளிப்படுத்தினார்.

மேலும் தமது எழுத்து குறித்து சொல்கையில், தாம் ஒரு ஆசிரியர் என்பதால், அச்சூழலின் செயல்பாடுகளை, குறிப்பாக, குழந்தைகளை எந்த ஒரு வெளிநடவடிக்கைகளிலும் ஆர்வம் கொள்ளவைக்காமல் படி, படி, படி என்று பாடபுத்தகங்களை மட்டுமே கட்டி ஆள்கிற துயரங்களைப் பொறுக்க முடியாமல், அவ்வாதகங்கத்தை தாம் கவிதைகளின் வழி மட்டுமே வெளிக்கொணர இயலும் என்று தமது உரையில் வெளிப்படுத்தி முற்றுப்புள்ளிவைத்தார். 

ம.நவீன்

மலேசிய இலக்கியச்சூழலில் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் ம.நவீன் மேடையேறினார். அவரின் உரையை நன்கு ரசித்தேன். கொஞ்சம் `சீரியஸா’கவே தமது உரையினை வழங்கினார். அவரும் கவிதை நூல் வெளியிட்டிருப்பினும் (வெறிநாய்களுடன் விளையாடுதல்), கவிதை குறித்த அறிமுகத்தை சுறுக்கமாக முடித்துக்கொண்டு, தாம் வாசித்து நெகிழ்ந்த இலக்கியச் சிதறல்களை அரங்கில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொண்டார். 

இலக்கியம் எல்லாக் கட்டமைப்புகளையும் உடைத்தெறிகிற பணியினைச் செய்வதுதான். ஏற்கனவே புனிதம் என்கிற போர்வையில் செல்லரித்து துருப்பிடித்த விடயங்களைப் பூசிமெழுகிற வேலைகளை இன்னமும் எழுத்துலகம் செய்துகொண்டிருப்பது இலக்கிய உலகின் அவலம். ஏன் இலக்கியம் படி(டை)க்கவேண்டும்? இலக்கியம் நம்மை என்ன செய்யும்.? ஏன் நல்ல படைப்பாளிகள் உருவாக வேண்டும்.? எது நல்ல இலக்கியம்.? இலக்கியம் என்பது.... !? என்று ஆரம்பித்து, சில நல்ல சிறுகதைகளை உதாரணமாகக் காட்டி, தமது பேச்சுதனை சுவாரஸ்யமாக நகர்த்திச்சென்றார். 

அதில் ஜெயமோகனின் யானைக்கதையும் வந்தது. புழுக்களைக் கண்டு அருவருக்கின்ற நாம், புழுக்களும் எதோ ஒரு ஜந்துவின் குழந்தைகளே, என்பதனை என்றாவது உணர்ந்துள்ளோமா.!? குழந்தைகளில் கூட, நன்கு அழகாக மொழுமொழு என்று பொம்மைக் குட்டியைப் போன்று இருக்கின்ற குழந்தைகளைத்தான் நாம் கொஞ்சி மகிழ்கின்றோம். என்றாவது கருப்பாக அசிங்கமாக இருக்கின்ற குழந்தைகளை நாம் நமது கணினியிலோ அல்லது கைப்பேசி ஸ்கிரீனிலோ ரசிப்பதற்காக வைத்திருக்கின்றோமா? குழந்தைகளைக் கொஞ்சுவதாக இருந்தால் எல்லாம் குழந்தைகள்தானே, ஏன், கொஞ்சுவதில் நாம் பாகுபாடு காட்டுகிறோம்.! புழுக்களும் ஒரு பூச்சியின் குழந்தைகள்தானே. ஏன் அருவருக்கின்றோம்.? என்கிற கேள்விக்கணைகள், என்னை என்னவோ செய்தது. யோசித்துப்பார்க்காத ஒரு கரு. யானைக் கதையில் வருகிற ஒரு பகுதியைக் குறிப்பிட்டு, இக்கருத்தை மேற்கோள் காட்டி பகிர்ந்துகொண்டார் நவீன்.

அடுத்ததாக சு.வேணுகோபாலின் ஒரு சிறுகதை. (தலைப்பு சொல்லவில்லை). அக்கதையினை அவர் சொல்லிமுடிக்கின்றபோது, எனது உரோமங்கள் சிலிர்த்தன. புனிதம் என்று கட்டமைக்கப்பட்ட கோட்பாட்டை, திரைமறைவில் யாருக்கும் தெரியாமல் சுயநலனுக்காக எப்படிவேண்டுமானாலும் உடைத்தெறியலாம் என்கிற நியதியில் முடிவடைகிற சிறுகதை அது. இது எங்கோ யாரோ செய்கிற காரியம்தான். ஆனால், அதைப் படைப்பாளியாகப்பட்டவன் எழுத்தின் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிற வேலையினை மட்டும் செய்துவிடக்கூடாது. வாசகன் கெட்டுவிடுவான். குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும். இதுதான் நம்நாட்டு இலக்கியச்சூழலில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கட்டபஞ்சாயத்து நியாயம்.! 

சு.வேணுகோபால் நம் நாட்டு படைப்பாளியா அல்லது தமிழ்நாட்டுப் படைப்பாளியா? என்பது தெரியவில்லை. இங்கே இதுபோன்ற கதைகள் வந்தால், புத்தகத்தை நெருப்பில் போட்டுவிடுவார்கள். ஆக, இதுபோன்ற கதைகள் வந்துள்ளது என்றால், நிச்சயம் அவர் தமிழ்நாட்டு படைப்பாளியாகத்தான் இருக்கவேண்டும். நன்றி, நல்ல எழுத்தாளரையும் இவ்வேளையில் அறிமுகம் செய்துவைத்தமைக்கு.!

நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்த்து ஜெயமோகனின் உரை.

கவிதை மாலை நிகழ்விற்கு, கவிதை குறித்த அவரின் உரையினை, திருவிளையாடல் புரணத்தில் நக்கீரன் தருமி விவகாரத்தில் ஆரம்பித்து, திருவள்ளுவர், பாரதி, பிரமிள் என்று தொடர்ந்தார். மிக ஆழமான பொருள் பதிந்த உரையாகவே அது எனக்குப்பட்டது. அவ்வுரையை நான் எனது கைப்பேசியில் recording செய்தும், கரகரப்பு ஓசையுடன் சரியாகப் பதிவாகாதது எனது துர்ப்பாக்கியம். ஆழமாக பேசப்பட்ட உரையினை, எனது பாணியில் சொல்வதற்கு முயல்கிறேன். காப்பி பேஸ்ட் வசனமும் எனக்கு வராது என்பதும் எனது `பாக்கியம்’.!

வள்ளுவரின் வரிகள் அனைத்தும் கவிதைகளே. அவர் சொல்லிச்சென்ற இருவரிகள் இன்னமும் பலகோணத்தில் பாடம் போதித்தவண்ணமாகத்தான் உள்ளது. 

நாலுவரி கவிதையினை எழுதிவிட்டு செத்துப்போங்கள் பரவாயில்லை. அதை யாராவது என்றாவது பேசுவார்கள்.! 

கவிதைகளில் வாழ்க்கை, தத்துவம், போதனை, காதல், அறிவுரை, வாக்குமூலம் என எல்லாம் சொல்கிறீர்களா? என்னாலும் அப்படியெல்லாம் யோசிக்கமுடியும். எனக்கு அது வேண்டாம். 

தமிழில் உங்களுக்கு அனைத்து எழுத்துக்களும் தெரியும். முனைவர் பட்டமெல்லாம் வாங்கியிருக்கலாம். ஆயிரம் ஆய்வுகள் செய்திருக்கலாம். பாண்டித்துவம் மிக்கவராகவும் நீங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கவிதை உங்களுக்குப்புரிந்துவிடுமா என்றால் அது சந்தேகம்தான். காரணம் கவிதைக்கென்று இன்னொரு மொழிவடிவம் உள்ளது. அதன் உணர்வு என்பது வேறு. அதன் உலகமும் வேறு. 

எல்லாக் காலகட்டத்திலும் கவிதை என்றாலும் கவிஞர்கள் என்றாலும் சாமானிய மக்களின் மத்தியில் ஒரு பயம் இருந்துவருவது கண்கூடு. எல்லா இடங்களிலும் கவிதை குறித்த பேச்சுவார்தைகள் மிக எளிதாகவே நடைபெறும், டீக்கடை பார் என, ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி கண்டு மோதலில் முடிவடைவதைத்தான் நாம் பார்க்கமுடியும். காரணம் கவிதை குறித்த புரிதலில் ஒத்துப்போகுதல் என்பது சாத்தியமில்லாதது... இங்கே பிரமிள் கவிதகளை உதாரணமாகக் காட்டினார். எனக்கு பிரமிள் கவிதைகள் என்றாலே உதறல் வந்துவிடும். எழுத்து வடிவில் இருப்பதை விழுந்து விழுந்து வாசிக்கின்ற போதே புரியாது. ஜெயமோகன் அவற்றை மனனம் செய்து ஒப்பிக்கின்றபோது.. சுத்தம்.!

முடிவில், இவரின் இந்த உரை குறித்து கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கலாம், என்றதிற்கு, “கேள்விகள் வேண்டாம். இங்கே நான் சொன்ன அனைத்தும், உடனே புரியுமா என்றால், அது சந்தேகம்தான்.! அதைப்பற்றி நிதானமாக யோசிக்கின்றபோதுதான், வினா எழலாம். ஆக, உடனே கேள்விகள் கேட்டு பதில் கொடுப்பதென்பது, சரிப்பட்டு வராது.” என்று சொல்லி நிராகரித்தார். நிஜம்தாம். நம்மைப் புரிந்துவைத்திருக்கின்ற ஓர் படைப்பாளி அவர்.

ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களை விட, அவரின் ப்ளாக்’ஐ அடிக்கடி சென்று வாசிப்பேன். சிறந்த எழுத்தாளர். எழுத்தில் அவரின் பாணியை யாராலும் பின்பற்ற முடியாது. வாசகியான நான் தினமும் அவரின் ப்ளாக் பக்கம் எட்டி எட்டிப் பார்க்கின்ற பட்சத்தில், தொடர்ந்து அவரின் படைப்புகளை எல்லாம் விடாமல் முழுமையான வாசித்து முடிக்கமுடியாமல் திணறி திண்டாடுவேன். ஒரு நாள் விட்டு மறு நாள் சென்றால், வாசிக்காமல் விட்ட விடயங்கள் மலிந்து விடும் அங்கே. அப்பேர்பட்ட படைப்பாளி அவர். நிமிடத்திற்கு ஒரு பதிவு. அவரின் எழுத்துதானா அல்லது அவரின் பேச்சுகளை அவரின் உதவியாளர்கள் கடகடவென தட்டச்சு செய்து ப்ளாக்கில் பதிவேற்றி விடுகிறார்களா.? என்பது தெரியவில்லை. அவ்வளவு பதிவுகள் அங்கே. எல்லாமும் எளிமையான முறையில் சுலபமாக புரியும்படியே இருக்கும். அப்பேர்பட்ட எழுத்தாளரை, சிந்தனையாளரை, சினிமா பிரபலத்தை மிக அருகில் அவரின் பக்கத்திலேயே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிற பாக்கியம் கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திகொடுத்த வல்லினத்திற்கு நன்றி.

முழுக்க முழுக்க தம்பி தயாஜியின் அறிவிப்பில் சோர்வில்லாமல் நகர்ந்த அற்புத நிகழ்வு இது. இவ்வேளையில் அவருக்கும் என் வாழ்த்துகள்.


இம்மாதம் நான்கு கவிதைப் புத்தகங்கள் என் கைவசம்.

முகநூல் நண்பர் R.K. குரு (லஷ்மிகாந்தன்) அவர்களின் – தமிழுக்கு ஆட்கள் தேவை என்கிற புத்தகம். தற்போது எனது வாசிப்பில்.

ப.ராமு – எனது பழைய நண்பர். அவரின், சிணுங்கும் சிறகுகள் என்கிற கவிதைப் புத்தம்.

கே.பாலமுருகனின் – தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் என்கிற கவிதைப் புத்தகம்.

 ம.நவீன் – வெறிநாய்களுடன் விளையாடுதல் என்கிற புத்தகமும்....

எல்லாவற்றையும் வாசித்தபின்பே, அதையொட்டிய கருத்துப்பகிர்தலை முகநூலிலோ அல்லது ப்ளாக்கிலோ பகிர்வேன். கவிதை மாதம் இது எனக்கு.