புதன், மார்ச் 21, 2012

மாம்பழம்


`லில்லி’ மாம்பழங்கள் வாங்கினேன். சாப்பிடத்தான் நேரமில்லை. மறந்துவிட்டேன் என்று கூட சொல்லலாம். வாங்கியபோது இந்தியா மாம்பழங்கள் போல் தோலேல்லாம் பளபள என மஞ்சளும் லேசான சிகப்பும் கலந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

பிள்ளைகள் இருந்தார்கள் என்றால், அந்த மாம்பழத்தின் கொட்டை கூட முளைத்திருக்கும், சாப்பிட்டு, சப்பி எடுத்து வீசியிருப்பார்கள், காரணம் அவ்வளவு இனிப்பு. தித்திப்பான மாம்பழம். திகட்டாதா மாம்பழம். 

நேற்றுகூட அவர்,  பழம் வாங்கினாயே, எங்கே?  வெட்டி எடுத்திட்டு வா, சாப்பிடலாம் என்றார். வேலை செய்யுமிடத்தில், தோழி சில மாங்காய்களை வெட்டி வேகவைத்து, அதில் கச்சானை (கடலை) அரைத்து, ஊசி மிளகாய், உப்பு, கிச்சாப், ஒய்ஸ்ட்தெர் சாஸ் என ஊற்றி கலந்து ஒரு பாட்டலில் அடைத்துக்கொடுத்தாள். அதை அவர் முன் வைத்தவுடன், வாங்கி வைத்திருந்த  மாம்பழங்களை இருவரும் மறந்து, இந்த மாங்காய் பச்சடியின் ருசியில் மூழ்கினோம். உண்மையிலே சுவைதான். புளிப்பு,இனிப்பு, காரம், கச்சானின் சுவை என அசத்தல் தான் போங்க. இன்று கூட வேலை முடிந்து வந்தவுடன் அந்த மாங்காய் கச்சான் பச்சடி மீதமிருக்கா, என்று கேட்டுவிட்டு, மிச்ச மீதியெல்லாம் காலியாக்கினார். 

நானும் மாம்பழம் இருப்பது நினைவுக்கு வர, சரி, சமையல் வேலையெல்லாம் முடிந்த பிறகு, இன்று அதில் ஒன்றைச் சாப்பிடலாம் என மனதில் நினைத்துக்கொண்டு, வேலையெல்லாம் முடித்தவுடன், பழம் வைத்திருக்கும் கூடையைத் திறந்தேன். பெரிய பெரிய பழங்கள் மூன்று, பத்திரமாக இருந்தது. ஆனால், அதன் தோளில் இருந்த அந்தப் பளபளப்பு குறைந்து காணப்பட்டது. நிறம், மஞ்சள் மற்றும் சிகப்பு கலந்து அப்படியே.! 

ஒரு பழத்தைக் கையில் எடுத்தேன்.. கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன். நன்கு பெருத்த பழம். ஒரு பழமே குறைந்தது முக்கால் கிலோ இருக்கும். அதன் தோளில் கருப்புப் புள்ளிகள் அங்காங்கே. காம்பு உள்ள இடத்தில் கொஞ்சம் கருப்பு அதிகமாகவே இருந்தது. அதன் மூக்கு அப்படியே சிவந்து, பளப்பளப்பாகவே.. பழம் முழுக்கக் கருப்புப்புள்ளிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் பழம் அழுகவில்லை. 

கழுவினேன், கை நழுவி, கழுவும் இடத்தின், வஷிங் பேஷனில் பொத்தென்று விழுந்தது. விழுத்த பழத்தை பட்டென்று எடுத்து அதை மீண்டும் கழுவி தட்டில் வைத்தேன். பார்த்தேன். விழுந்த இடத்தில், பழத்திற்கு அடிப்பட்டு நீர் வடிந்தது. கரும்புள்ளிகள் உள்ள இடத்தில், கை வைத்து அழுத்திப்பார்த்தேன், உள்ளே சென்றது, அதிலும் நீர் வடிந்தது. கொஞ்சம் பலங்கொண்டு அழுத்தினால் ஓட்டை விழுத்துவிடும் அளவிற்கு அந்த கரும்புள்ளிகள் உள்ள இடங்கள் அழுகியதுபோல் இருந்தது. இருந்தாலும் சாப்பிடலாம்.

இதுபோலவே இருந்த ஒரு பெண்ணின் காலை நேற்று நான் மருந்துவமனையில் பார்த்தேன். சக்கரை வியாதியின் கொடுமையால், அவளின் காலுக்கு ஏற்பட்ட கதி. இந்த மாம்பழம் போலவே இருந்தது, அவளின் காலும். அநேகமாக காலை எடுக்கவேண்டிய நிலை வரலாம்.   

அந்தக்காட்சி நினைவுக்கு வர, பழத்தை மீண்டும் கூடையிலே வைத்தேன். நாளைக்குத்தான் ஃப்ரூட் லாசி செய்யவேண்டும், மாம்பழங்களை வெட்டி தயிர் விட்டு கிரைண்டர் செய்தால் ப்ரூட் லாசி தயார்.


செவ்வாய், மார்ச் 20, 2012

காலநேரம்


மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். மாமி அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமியின் கிட்னி ரெண்டும் பழுதாகிவிட்டதால், சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஒரு குழாயும் இடது கையில் ஒரு குழாயும் பொருத்தி, ஒன்றினில் நீர் இறங்கிக்கொண்டும், ஒன்றினில் நீர் வெளியேறிக்கொண்டும் இருந்தது. இரண்டு கால்களிலும் புண். நடக்க முடியாதபடி கால்கள் வீங்கியவண்ணமாகவே இருந்தன. மருத்துவமனை ஸ்பெஷலிஸ்ட் என்பதால், நல்ல கண்காணிப்பு, தரமான சிகிச்சை முறை, இரவு பகல் பாராமல் தாதிகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.

நாங்கள் சென்றபோது பயங்கர குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார் மாமி. கூடுதலாக போர்வைகள் வாங்கிப்போர்த்தியும் குளிர் விட்டபாடில்லை. ஏர்கோண்ட் அதிக குளிராக இருப்பதால் வந்த நிலை இது. அந்த ஏர்கோண்ட்’ஐ கொஞ்சம் குறைக்க முடியுமா.? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டேன். குறைக்க மாட்டார்களாம். சூழல் உஷ்ணமாக இருந்தால் கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடுமாம்! சூடான சிதோஷ்ண நிலையில் அது அதிவிரைவாகப் பெருகுமாம், பரவுமாம்.. (சொன்னார்கள்)

பசியில்லை தூக்கமில்லை என்றார். கணவர் வெளியே டாக்டரிடம் எதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

காலையில் யாரோ பக்கத்து வீட்டில் (வார்ட் என்பதற்கு வீடு என்றார்) இறந்துவிட்டார்களாம், அந்த பையனின் அம்மா பயங்கரமாகச் சத்தம் போட்டார். கொஞ்ச நேரத்தில் ஆட்கள் குவிந்து விட்டார்கள். மாலை பூ என எக்கச்சக்கமாக.. என்னம்மா பெட்டியெல்லாம் கூட கொண்டுவந்து விடார்கள்! அப்படிக்கத்துகிறார்கள், மனசே நல்லா இல்லை. தோ நல்லா கேள், மோட்டார் சத்தம் இன்னமும் கேட்கிறது பார், என்றார்.

அது மோட்டார் சத்தம் அல்ல, ட்ரோலியின் சத்தம். அழுக்குத்துணிகளை பணியாட்கள் எடுத்துச்செல்கிறார்கள், என்றேன்.

ம்ம்ம்.. பக்கத்தில் ஒரு சீனத்தி இருக்கின்றாள், ஓயாமல் எதையெதையோ சாப்பிடுகிறாள் ஆனால் என்னிடம் மட்டும் பேசவில்லை, யார் இறந்தார்கள்? என்ன ஆச்சுன்னு கேட்கிறேன் பதிலே சொல்ல மாட்டேன் என்கிறாள். ரொம்ப மோசம்மா டவுன்’ல உள்ளவர்கள். அங்கெல்லாம் அப்படியில்லை, கேட்காமலேயே சொல்வார்கள்.

ஆஸ்பித்திரி என்றால் இதெல்லாம் சகஜம். நீங்க ஏன் அதெல்லாம் பார்கறீங்க?

ச்சே, மக்க மனுஷாளுங்க.. என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? எதையுமே கண்டுக்காமல் இருந்தால் என்ன புண்ணியம்?

சரி மணியாச்சு தூங்குங்க என்றேன்.

எங்கம்மா தூக்கம் வருது? பசியே எடுக்க மாட்டேங்கிறது. துக்கமும் வரமாட்டேங்கிறது... கதை பேசறாங்க டாக்டர் நர்ஸ் எல்லாம், விடிய விடிய...,  கல்யாணமான பொண்ணுங்க, நம்ம தமிழ் பொண்ணுங்கக் கூட ஆம்பள பசங்கக்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுதுங்க. தொட்டுத்தொட்டு பேசுதுங்க.. படித்த டாக்டரெல்லாம் கூட.. ச்சே, என்ன கண்றாவியோ..!

அதற்குள் பக்கத்து சீனத்தி என்னமோ சொல்ல, விரலை உதட்டருகே வைத்து உஸ்ஸ் என்று சொல்லிவிட்டு, அவள் சொல்வதைக் காது கொடுத்துக்கேட்கிறார். எப்படி விளங்கும், அவள் சீன மொழியில் பேசுகிறாளே?

உதடுகளைப் பிதுக்கி, கண்களை ஓரமாகக் கொண்டு ஜாடை காட்டினார், அவர்களின் பேச்சு விளங்கியதைப்போல..!

சரி இதற்கு மேலும் இருப்பது சரியல்ல, நோயாளிகள் தூங்க வேண்டும், விளக்கை எல்லாம் பணியாட்கள் அணைக்கத்துவங்கியதைப் பார்த்தவுடன். நாங்களும் கிளம்பவேண்டுமே.!


ம்ம்ம், சரி நாங்க கிளம்பறோம்மா. நாளைக்கு காலையிலே அண்ணி வருவாங்க.. சரியா? என்றேன். அதற்குள் கணவரும் அருகில் வந்தார். கிளம்பறோம் என்றோம்.

ரெண்டு வெள்ளியிருந்தா கொடுய்யா.. அம்மா காலையிலே பசியாற எதாவது வாங்கிக்கொள்கிறேன் என்றார். நடக்கவேமுடியாதபடி உடம்பெல்லாம் ட்யூப். இதில் எப்படி. ? சரி, குழந்தையான அம்மாவிற்கு ரெண்டு வெள்ளி கொடுத்து விட்டுக்கிளம்பினோம்.

வெளியே வரும்போது, ஒரு நர்ஸ் எதிரில் வந்தார், அவரிடம் கேட்டேன், என்ன சிஸ், காலையிலே யாரோ இறந்து ஒரே அமளிதுமளியாச்சாமே?

நர்ஸ் சொன்னார், அப்படி எதுவும் நடக்கவில்லை, மெம்.

வாசகர் கடிதம்

ஒரு அழைப்பு வந்தது. இதுவரையிலும் பேசாத ஒரு எழுத்தாளார். என் உற்ற நண்பர் ஒருவரிடமிருந்து எனது தொலைப்பேசி எண்களை வாங்கி அழைத்திருந்தார்

“வணக்கம் விஜி, நான் தான் ..................”

“வணக்கம் எழுத்தாளரே.. மிக்க மகிழ்ச்சி உங்களின் அழைப்பிற்கு. எதிர்ப்பார்க்காத திடீர் அழைப்பு இது. நலமா?”

“நலமுங்க, நீண்ட நாள் ஆசை உங்களிடம் பேச வேண்டுமென்று, இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது.  நந்தாவிடம் தான் தொலைப்பேசி எண்களை வாங்கினேன். உங்களிடம் கேட்காமல், உங்களின் எண்களைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக அவரைத் திட்டாதீர்கள்.!”

“அது நீங்க எப்படி பேசறீங்க என்பதைப்பொருத்துத்தான் இருக்கு.!”

“ஐயோ..அப்படின்னா, பார்த்துத்தான் பேசணும் போலிருக்கு..!!”

“இல்லை, இல்லை..பேசுங்க, பிரச்சனையில்லை.!”

“ஏங்க, உங்களுக்குள் எவ்வளவு திறமை.! உங்க எழுத்திற்கு நான் ரசிகணுங்க. அற்புதமா எழுதறீங்க, கவிதை கூட நல்லா வருது உங்களுக்கு. அன்னிக்கு ஒரு நான்கு வரி கவிதை எழுதியிருந்தீங்களே, ஆஹா என்றிருந்தது. உங்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. தேவையில்லாமல் வாசகர் கடிதங்கள் எழுதுவதால் ஒரு புரோஜனமுமில்லை. எவன் படிக்கிறான் அதையெல்லாம்..? வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சம் கூட வளராத சில வாசகர்கள் போடும் சண்டையில், ஏன் நீங்க வீனாக உங்களின் சக்தியை செலவழிக்கின்றீர்கள்!? உங்களின் எழுத்து பலரால் வாசிக்கப்படுகிறது, நீங்க சிறியதாக எதை எழுதினாலும் அதை முதலில் வாசிக்க நிறைய பேர் காத்துக்கிடக்கிறார்கள். உங்களுடைய ஒரு கட்டுரை கூட அண்மையில் ஒரு இதழில் வந்திருந்தது, படித்து வியந்துபோனேன். எவ்வளவு அற்புதமாகச் சொல்லப் பட்ட விவரம் அது...!!”

”அப்படிங்களா? நான் எழுதினேனா? என்ன கட்டுரை, எங்கே? ”

“அதாங்க... ஒரு கட்டுரை, அந்ந்ந்த இதப்பத்தி...!! இது..!! சரியா ஞாபகத்தில் இல்லை... ”

“எதைப்பற்றிங்க..? கட்டுரைகள் எழுதியே ரொம்ப நாளாச்சு.., வாசகர் கடிதத்தைப் பற்றி சொல்கிறீர்கள் போலிருக்கு! ”

“ஆங்.. ஆமாம் ஆமாம் வாசகர் கடிதம், அதேதான், பிச்சு விளாசு விளாசுன்னு விளாசுனீங்களே..அதான் அதான்.....”

“விளாசினேனா.. !@#$%^ ?? இல்லையே,  நையாண்டியா நகைச்சுவையா சொல்லியிருப்பேனே, வாசிப்பு பழக்கைத்தைப் பற்றி...! வாசகர்கள் இன்னமும் சின்னச் சின்ன பகிர்வுகளிலேயே ஈடுபாடு காட்டி பொழுதைக்கழிப்பதால், நல்ல வாசிப்புப் பழக்கமில்லாமல் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்குண்டுக்கிடக்கின்றார்கள் என்கிற, ஒரு பகிர்வையல்லவா பகிர்ந்திருந்தேன்.., நீங்களே போட்டுக் கொடுப்பீர்கள் போலிருக்கு, விளாசுகிறேன் என்று... தேவையா இதெல்லாம்.!?”

“ஹிஹி.. உங்களச் சீண்டி விடுவதில் தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கின்றார்கள்... அதைத் தான் நானும் சொல்ல வந்தேன், இப்படிப் போய் அதுகளிடம் மாட்டிக்கொண்டு தேவையில்லாமல் வாக்குவாதம் செய்து என்ன வரப்போகிறது? நீங்க என்ன சொன்னாலும் அங்கே எடுபடாதுங்க. அவர்களை மாற்றவே முடியாது. அவர்கள் அப்படியே இருந்து பழகிப்போயிட்டாங்க. எங்க வாசகர் வட்டக் குழுவிற்கும் அதான் கவலை. உங்களின் வாசிப்புத் திறன் அபாரமுங்க. நிறைய வாசிக்கறீங்க.. அன்னிக்குக் கூட ஒரு புத்தகத்தைப்பற்றிய விவரமொன்றை சிறிய விமர்சனமாகச் சொல்லியிருந்தீங்க.. அந்தப் புத்தகத்தை நான் கோலாலம்பூரில் தேடி அலையாத கடை கிடையாதுங்க..”

மனதிற்குள்... எந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னேன்!!?? இந்த ஆளு எதுக்காக இப்போ கதை விட்டுக்கொண்டிருக்கிறார்..! கட் பண்ணலாமா? சரி கொஞ்ச நேரம் பேசுவோம்.. எதோ ஆர்வத்தில் உளறுகிறார், கேட்டுப்பார்ப்போம்.

“ஓ..அப்படிங்களா? அப்புறம் அந்த புக்கு கிடைத்ததா இல்லையா? என்ன புக்குபத்தி சொன்னேன்னு நினைவிலே இல்லைங்க எனக்கு, கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்..”

“அது எனக்கும் சரியா நினைவுல இல்லை, எழுதி வைச்சுருக்கேன், அப்புறமா சொல்றேங்க..”

“ம்ம்ம்...”

“அதாங்க, நாங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்தா, உங்க கதையைத்தான் பேசுவோம், எவ்வளவு அருமையா எழுதறாங்க, ஏன் இப்படிப் போய் சர்சைகளில் மாட்டிக்கொண்டு, வாசகர் கடிதமெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்கறாங்க?  வம்பளக்கும் பெண் வாசகின்னு பெயர் எடுக்கறாங்க’ன்னு பேசிக்குவோம். எழுத்தாளர்/கவிஞர் அந்தஸ்துக்கு நீங்க உயர்ந்துட்டீங்கங்க..பின்னே ஏன் இன்னும்..!!? இப்படின்னு தான் எங்களுக்குள் பேசிக்கொண்டு குழம்புவோம். உங்களை எல்லோரும் நல்ல வாசகி, விமர்சகர் என்பதைவிட நல்ல கவிஞர், எழுத்தாளர்’ன்னு சொல்லணும். மலேசியாவில் முத்திரைப்பதிக்கின்ற இலக்கியவாதிகளில் ஒருவராக நீங்க வரணும்ங்கிறது எங்களின் தீராத ஆசை..”

“ஏங்க இப்படி ஓரேடியா?? எழுதுபவர்களை எதோ எழுதறாங்க, எழுத்தாளர்கள்’ன்னு சொல்லிக்கலாம், ஆனால் கவிதை என்று எதையெதையோ கிறுக்கிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் கவிஞர்களா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.? நான் எங்கேங்க கவிதை எழுதறேன்.. சில எண்ணக்குவியல்களை எழுத்துக்களால் அடுக்கியிருப்பேன், அது கவிதையா?”

“உங்களின் திறமைகள் உங்களுக்குத்தெரியாது, பிறர் சொல்லும் போதுதான் அது வெளிப்படும்..என்ன நாஞ்சொல்றது?”

“சரிங்க, நீங்க சொல்வதாகவே இருக்கட்டுமே, கவிதை எழுதினேன், கவர்ந்தது என்கிறீர்களே, அப்படியென்றால், என்னுடைய கிறுக்கள்களில் உங்களை அதிகம் கவர்ந்தது?” (மாட்டிகிட்டியா மகராசா), மனதிற்குள்.

“ அந்த... இந்த... புக் ல எழுதினீங்களே..!!!?? அட என்ன கவிதை அது..!!!??? அந்த இது..இது..இது !!!”

“சரிங்க, ரொம்ப நன்றி, யோசித்து நினைவிற்கு வரும் போது, மீண்டும் கூப்பிடுங்க..கொஞ்சம் வேலையிருக்கு..ஒகே வா?”

“அட என்னங்க நீங்க, இருங்க.., என்னுடைய ரெண்டு கதைகள் இந்த வாரம் சூப்பரா வந்திருக்கே, படிச்சீங்களா?”

“ஆமாங்க, எல்லாவற்றையும் படிப்பேன், அந்த ரெண்டு கதைகளில் ‘மதில் மேல் பூனை’ நல்லா இருக்குங்க. அந்தக் கதையின் நடை அற்புதம். நல்லா எழுதியிருக்கீங்க. தமிழ் ஆளுமையும் சிறப்பாக இருக்கு. வாழ்த்துகள்.”

“உண்மைக் கதைங்க..!”

“அட அப்படியா? அப்போ அந்தப் பொண்ணு இப்போ விபச்சாரத்தில்.!!? அப்படின்னா அந்த ஆண் குழந்தைக்கு யாருங்க அப்பா, நீங்களா?” சிரித்துக் கொண்டுதான் கேட்டேன்.

“நினைச்சேன் கேட்பீங்கன்னு.. இல்லேங்க, என் நண்பரின் கதை அது. அவளை இன்னமும் வைச்சிருக்கார்..”. அவரும் சிரித்துக்கொண்டே.

“ஓ..அப்படியா..! ஒகே ஒகே..!”

“எழுதுங்களேன் இதைப்பற்றி ஒரு விமர்சனம், நல்ல அறிமுகமா இருக்கட்டுமே.!”

“எழுதினாலும் வாசகர் கடிதத்தில் தான் வரும், பரவாயில்லையா?..”

“ஏங்க வாசகர் கடிதம்னா கேவலமா? நீங்க எழுதுங்க ஜோரா..!”




அணுவணுவாக....

உன் ஞாபகம் போக்க
எல்லாவற்றிலும் நுழைகிறேன்
வடிவின் சின்னமாய்
அணுவிலும் நீ இருப்பதை
வெளியேறும் போதும்
உணர்கிறேன்

என் காதல்
உன்னை ஒன்றும் செய்யாது
ஏன் தெரியுமா?
அந்த உணர்வு
எனக்கும் எதிரிதான்.!

தவிப்பு வரும் போதெல்லாம்
என்னை நானே
கொலை செய்துகொள்கிறேன்
அருவருப்பில்...

செத்துக்கொண்டிருப்பதால்
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்
குழந்தையாகவே..

அதற்காகவே உன்னைப் பிரியேன்


ஞாயிறு, மார்ச் 18, 2012

மடல்தான்

நீ அப்பாவியா இரு, ஆனால் உன்னைப்பற்றி தப்பாகப்பேசப்படுகிறதே, அதில் உனக்கு தெளிவு வேண்டாமா? எப்படி உன்னிடம் சொல்வது? அதை நான் உன்னிடம் சொல்கிற போது, அட இப்படி எதார்த்தமாக இருந்துவிட்டோமே, என்கிற குற்றவுணர்வு உனக்கு வரும், அதை எப்படி நான் ஜீரணிப்பது? அந்த முக பாவனையை நான் எப்படி எதிர்க்கொள்வது!? நீ எதார்த்தவாதியாகவே இரு, ஆனால் எதார்த்தத்தை போற்றத்தெரியாதவர்களை அடையாளங் கண்ட்டுக்கொள். அப்பாவியாக இருக்காதே. சுற்றியிருப்பவர்கள் சூழ்ச்சிக்காரர்கள். அதற்காக சூழ்ச்சிக்காரியாக மாறு என்று நான் சொல்ல மாட்டேன், வாழ்வதற்கு அதுவும் கொஞ்சம் தேவை என்கிறேன். துளி கூட சொரணை இல்லாமல் எப்படி வாழ்வது? 

வெள்ளி, மார்ச் 16, 2012

எழுத்து

ஒரு புத்தகத்தை வாசிக்கின்றோம். அது நாம் நினைக்கின்ற, செய்துகொண்டிருக்கின்ற அத்தனை விடங்களையும் நியாயப்படுத்திக்கொண்டே வருகிறது. நாம் மேலே ஆகாயத்தில் பறக்கின்றோம். சொல்ல முடியாத பரவசத்தில் சிறகடிக்கின்றோம். பாதியிலே நிறுத்தி, சில நண்பர்களிடமும் இப்புத்தகத்தைப்பற்றிச் சொல்லி பூரித்துப்போகின்றோம்.

தொடர்ந்து வாசிக்கின்றோம். திடீரென்று, ஒரு திருப்புமுனை,  நம்மையறியாமலேயே  ஒரு இருள் சூழ்கிறது, நெஞ்சில் லேசான வலி ஆரம்பமாகிறது, நிற்கவைத்து சாட்டையால் யாரோ நம்மை விடாமல் அடிப்பதைபோன்ற ஒரு உணர்வு வருகிறது. அதை குற்றவுணர்வாகக் கூட வைத்துக்கொள்ளலாம்.  அழுகிறோம், யாருக்கும் தெரியாமல். மனம் கனக்கிறது. வாழ்வை  திரும்பிப்பார்க்கின்றோம்,  புத்தகத்தையும் புரட்டிப்பார்க்கின்றோம். எடுகள் காற்றில் பறக்கின்றன. பேய் பிசாசுகள் நம்மை அமுக்குகின்றன. மூச்சு திணறுகிறது...

சரியென்று நினைத்த அனைத்தும் தலைகீழாய் புரள்கிறது. நாம் செய்து வந்த அனைத்துச்செய்களும் அருவருப்பாகிறது. இன்னும் மனிதனாக வாழ ஆரம்பிக்கவில்லையோ, என்கிற சிந்தனை  எட்டிப்பார்க்கத் துவங்குகிறது. தலைசுற்றுகிறது.

யோசிக்கின்றேன்... எப்படி, இப்படி மனித மனங்களில் நுழைத்து மனிதர்களைப் படிக்கின்றார்கள் இந்த இலக்கியவாதிகள்.!? என்கிற சந்தேகம் எழுகிறது. நாம் செய்து விட்ட, செய்கின்ற, செய்யத்துடிக்கின்ற சாட்சிகளற்ற அனைத்திற்கும் சாட்சிகள் யார் மூலமாகவோ எங்கேயோ இருக்கின்ற ஒருவருக்குச் சென்றுள்ளது. யார் அவர்? அட்டமா சித்திகள் கைவரப்பெற்றவரோ!? மந்திரவாதியோ? தெய்வத்தன்மை நிறைந்தவரோ.!? அப்படியே பிட்டுப்பிட்டு வைக்கின்றாரே நம் மனதில் உள்ளவைகளை.!

என் கூடவே இருக்கின்ற மனசாட்சியாக ஒலிக்கும் இந்த குரல் யாருடையது? எப்படித் தகவல் அங்கே சென்றிருக்கும்.? மறைவில் ஒளித்து, மனதில் மறைத்து, நினைத்து நினைத்து செய்யப்பட்ட அனைத்தும் வெட்டவெளிச்சமாக, யாரோ ஒருவரின் எழுத்து வடிவில்.! எப்படி? இதுதான் இலக்கியமா?

படைப்பாளிக்கு; படைப்பாளி என்று எப்படிப் பெயர் வந்தது?  இறைவனின் குணமிருப்பதாலோ? அடபோங்க, இறைவன் எங்கு இருக்கிறார்? ஒரு படைப்பை உருவாக்கி,  மனிதனாக வாழாத மனிதனின் மனிதத் தன்மையை மீட்டெடுக்கும் படைப்பாளி தான் இறைவன். படைப்பாளிதான் குரு, படைப்பாளிதான் ஞானி, படைப்பாளிதான் தந்தை, படைப்பாளிதான் காதலன் (காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி - சைவ சித்தாந்தம் சொல்லும் காதல் இது).

புறையோடிக்கிடப்பதெல்லாம் புல்லட்’ஆல் சுடப்பட்டு, கீறி கிழித்துக்கொண்டு வெளியே வருகிறது!  சரியென்று நாம் செய்ததையெல்லாம் சரியல்ல என்கிற போது, மனம் எதையோ தேடுகிறது. அது தூக்குக் கயிறாகவும் இருக்கலாம் அல்லது கடிவாளமாகவும் மாறலாம்.  செய்கின்ற தவற்றைப்பொருத்து அல்ல, புரிந்துகொள்கின்ற மனப்பக்குவத்தைப் பொருத்தது அது. அந்த ஆயுதமும் வேறுபடலாம்  மாறுபடலாம்.   புரிந்துகொள்வோம்,  நம்மை நாமே குற்றவாளிக் கூண்டில் நிற்கவைப்போம்..! நாமே குற்றவாளி, நாமே நீதிபதி.

இலக்கியமே இறைவன் - இதுவே இறுதியான உறுதியான புரிதல் 

திங்கள், மார்ச் 12, 2012

உன் குரல் கேட்டால்

இன்று ஏனோ தெரியவில்லை, காலையிலிருந்து அப்பாவின் ஞாபகம் என்னை வாட்டுகிறது. எப்படியிருப்பார் அப்பா?  கண்களை மூடிக்கொண்டு அவரின் முகத்தை ஞாபகத்திற்குக்கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

என் முகத்தைக் கண்ணாடியில் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன், ‘நீ, உன் அப்பா போலவே சிரிக்கிறாய்’ என்று பாட்டி முன்பு ஒரு முறை சொல்லியிருந்ததை ஞாபகப்படுத்திப்பார்த்தேன். கண்ணாடி முன் நின்று, சிரித்துப்பார்த்தேன்.. ம்ம் இல்லையே!! அப்பா இப்படி இருக்க மாட்டாரே.!

சரி, சில நிகழ்வுகளை அசை போட்டுப்பார்க்கலாமே என, கன்னத்தில் கைவைத்து, தலையைச் சாய்த்து ஆள் காட்டி விரலை, நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டு யோசித்தேன்.

மாநிறம், உயரமல்ல குள்ளமுமல்ல, வரிசையான பற்கள், கூரிய மூக்கு. ஓரளவு முகம் வந்துவிட்டது.  ஜீ.. அப்படித்தான் அழைப்பார் என்னை.. குரல் ஞாபகத்திற்கு வரவில்லையே..

ஒரு முறை, தாத்தா வீட்டிற்குப் போக வேண்டுமென்று ஒரே ஆர்ப்பாட்டம். சித்தப்பா சின்னம்மா மகள் மகன்கள் எல்லோரும் திருவிழாவிற்கு வருவார்கள், அவர்களோடு விளையாட வேண்டும், திருவிழாவில் பொம்மலாட்டம் பார்க்கவேண்டும், பிடிவாதமாக அழுதோம், போயே ஆகவேண்டும் என்று. கூலிக்கார அப்பா, கையில் காசு இல்லை. ஏழை அப்பா அம்மாவைச் சந்திக்க, கையில் பணமில்லாமலா செல்வது? சைக்கிளை எடுத்தார், கடன் கேட்டார் ஒருவரிடம், கிடைத்தது. வாங்கிவந்தார். வாடகைக்காரில் பாட்டி வீட்டிற்குச் சென்றுவந்தோம்.
அப்போ அப்பா எப்படியிருந்தார்? இளமையாக இருந்தார். பலம், உடலிலும் உள்ளத்திலும். காரில் நிறைய பேசினாரே அன்று, செல்லும் வழியெல்லாம், காண்கிற காட்சிகளையெல்லாம் எங்களிடம் விளக்கிக்கொண்டே வந்தாரே. ம்ம்ம்... குரல் எப்படியிருக்கும்?

யோசிக்கிறேன்.. ஒரு நாள், டியூஷன் வகுப்பிற்குச் சென்று, வேகுநேரம் வரை காத்திருந்தோம், நானும் தம்பியும்..! அப்பா வந்து எங்களை அழைத்துச் செல்லவேண்டும், வரவில்லை. முன்பு கைப்பேசி வசதியெல்லாம் இல்லை, வீட்டிலும் தொலைபேசி வசதியும் இல்லை, உடனே தகவல் சொல்ல. இரவு வெகு நேரமாகிவிட்டது, தம்பி பயத்தில் அழ ஆரம்பித்து விட்டான். எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவனை ஆசுவாசப்படுத்திவிட்டு வழிய வழியப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே அமைதி எங்கும். எனக்கு எதாவதொன்று என்றால் பரவாயில்லை, தம்பியைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்..

அப்பாவின் லோரி (வாகன ஓட்டுனர்) சர்ர்ர்ர் என்று வந்தது நின்றது. தம்பி அழுவதைப் பார்த்தவுடன், `ஏன்யா அழுவற, அதான் அப்பா வந்துட்டேன்ல.. ’ என்றார். கையில் வைத்திருந்த சாக்லெட்களை, உங்க சின்னம்மா கொடுத்தாங்க என்று சொல்லி இருவரிடமும் கொடுத்தார். நான் அமைதியாக இருந்தேன். தம்பி சாக்லெட்டைச் சாப்பிட்டான்.

வீடு வந்து சேர்ந்ததும், பானை சட்டி விறகு கட்டை எல்லாம் பறக்க ஆரம்பித்தன, `மணி என்னா இப்போ? எவ வீட்டுக்குப்போயிட்டு வர?வயதுக்கு வந்த பொம்பளைப்பிள்ளையை எவனாவது தூக்கிட்டுப்போய், கெடுத்துக்கொலை செய்த்தாத்தான், நீ எல்லாம் அடங்குவ, அவனே, இவனே அந்த மவனே இந்த மனவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம். அப்பாவும் பதிலுக்கு சண்டை போட்டார், கத்தினார் வேகமாக, என் நிலைமை புரியாமல், என்னடீ என்னடீ என்று குரலை உயர்த்தி சண்டையெல்லாம் போட்டார், என்னன்னவோ பேசினார்.. நினைவுக்கூர்கிறேன், குரல் நினைவில் இல்லை.

அப்போது அப்பா எப்படியிருந்தார்.? எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு, அவமானங்களை எல்லாம் சகித்துக்கொண்டு அதே புன்னகையுடன்...  எங்களிடம் மட்டும் அன்பும் அக்கறையும் கொஞ்சம் கூட குறையாமல்.. ஐம்பது வயதிலேயே, முதுமை எட்டிப்பார்க் கத்துவங்கியது.  அதிகமாகக் குடிப்பதால், இந்தக் கோலம் வெகுவிரைவாக வந்துவிட்டது,  என, அம்மா இடித்துக்கூறி வசை பாடுவார்.

எங்களுடைய கிழிந்த துணிகளை அப்பாதான் ஒட்டு போட்டுத்தருவார். பழுதான கைக் கடிகாரத்தை, படிக்காத அப்பா ஒரு டெக்னிஷன் போல் பழுது பார்ப்பார். புதிதாக வாங்கியப்பொருளை உடனே போட்டுப் பார்க்கச்சொல்லி அழகு பார்ப்பார். மூக்குத்தி அணிந்த புதிதில், பார்த்துப்பார்த்து ரசிப்பார், எங்க அம்மா மாதிரி இருக்கு எம்மவ என்பார்.
எப்படியோசித்தாலும் குரல் ஞாபகத்திற்கே வரவில்லை. அப்பாவின் குரல் எப்படியிருக்கும்..!!??

இருபது வருடங்களுக்குப் பிறகும் நினைவை விட்டு அகலாமல் இருக்கும் அப்பாவின் அன்பு, சாதாரணமானதல்ல. எங்களைச் சுதந்திரமாக சிந்திக்க விட்டவர். எங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்திருப்பார். அடித்துச்சொல்வார் என் பிள்ளைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்று. எங்களுக்கும் திருட்டுத்தனம்  செய்வதற்கு மனசே வராது. அப்பாவின் முகத்தை நினத்த மாத்திரத்திலேயே, சில அசிங்கமான  சிந்தனைகள் ஓடி மறைந்துவிடும்.

மஹாத்மா காந்தியையும், பாரதியையும் அறிமுகப்படுத்தியவர்.  எதிர்ப்பார்ப்பு என்கிற எந்த சுமையையும் எங்களின் மீது ஏற்றிவைத்ததில்லை, குற்றவுணர்வுக்கும் உற்படுத்தியதில்லை. யாரிடமும் எங்களை ஒப்பிட்டு குறை கூறியதில்லை (அம்மா செய்வார் இந்த வேலையை நன்கு) கண்டிப்பு உண்டு ஆனால் அடித்ததில்லை. எப்படியிருந்தாலும், நீ என் பிள்ளை என்கிற அவரின் அன்பு என்றுமே நிறைகுடம்தான்.

அவரின் குரல் கேட்கவேண்டும் போல் இருக்கிறது. ஒரு நடிகராக இருந்திருந்தால், ஒரு பாடகராக இருந்திருந்தால்... குரலை மீண்டும் கேட்டுப்பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்குமே.! இப்படி ஏங்குவேன் என்று தெரிந்திருந்தால், எதாவதொரு சந்தர்ப்பத்தில் குரலை பதிவு செய்தாவது வைத்திருக்கலாமே.!

உன்னிடம் பேசவேண்டும் போல் இருக்கு. உன் குரல் கேட்டால் என் ஏக்கத்திற்கு தீர்வு பிறக்கலாம்.
.