திங்கள், ஏப்ரல் 23, 2012

சுட்டுவிடு

காதலால் என்னை மூழ்கடி
தற்கொலையை விட
கொலை பிடித்திருக்கு
அதுவும் கொலைக்காரன் நீ என்பதால்
ஆத்ம திருப்தியுடன்
துப்பாக்கியை நானே எடுத்து
சுட்டுக்கொள்கிறேன்

சனி, ஏப்ரல் 21, 2012

தூசுகள்

உணரப்படும் 
தூசுகள் கூட
தும்மல் வரும் போதுதான்
துரத்தப்படுகின்றன..

துரத்தப்படுகின்ற
தூசுகள் கூட
தும்மல் வரும் போதுதான்
உணரப்படுகிறது...

தூசியும் தும்மலும்
துரத்தமுடியாதது தான்
உணரப்படுகின்ற போது

தூசு என்பது மறைமுகம்
தும்மல் என்பது வெளிப்படை..

நகைச்சுவை

எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருப்பதைக் கண் கூடாகக் காணலாம். ஆனால் நகைச்சுவை செய்வதில் மட்டும் ஆண்கள் தான் முன்னிலையில். 

ஆண்களுடைய நகைச்சுவைகள் கவர்வதைப்போல் பெண்களின் நகைச்சுவைகள் கவர்வதில்லை. நகைச்சுவைப் படங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, பெண்களின் body language தான் சிரிக்கவைக்குமேயொழிய அவர்களின் வசனம் அவ்வளவாக சிரிக்கவைக்காது. அப்படியே அவர்களின் வசனம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும்,அது ஒரு ஆண் எழுதிய நகைச்சுவை வசனமாகத்தான் இருக்கும். குறிப்பாக மகளிர் மட்டும் திரைப்படம், ஊர்வசியின் போடி லங்குவேஜ் தான் காப்பாற்றியது அப்படத்தை.

மனோரமா கூட, நகைச்சுவையை விட நவரச நடிப்பில் தான் முத்திரை பதித்தார். மனோரமாவின் நகைச்சுவை அறவே பிடிக்காது எனக்கு.

கோவை சரளா சொல்லவே வேண்டாம், பேசுகிற பாணியே ரசிக்கமுடியாது. கணவனை எட்டி உதைத்து சிரிக்கவைப்பார்.

ஆனால் என்.எஸ்.கே, தங்கவேலு முதல் நாகேஷ், கவுண்டமணி, விவேக் வடிவேலு சந்தானம் வரை எப்போதுமே ஆண்கள் தான் இந்த நகைச்சுவைத் துறையில் மிளிர்கின்றனர். 


நகைச்சுவைக் கதைகள் என்று வரும்போது, தங்கவேலு எப்படிப்பண்ணினார், கவுண்டமணி சொன்னார் பாருங்க, நாகேஷ் இல்லேன்னா.. விவேக் என, சொல்லிச் சொல்லி சிரிப்போம் ஆனால் பெண்கள் பேசிய நகைச்சுவை  வசனங்களை குறிப்பிட்டு யாருமே பேசுவதில்லை.. நான் கேள்விப்பட்டவரை. 

நண்பர்கள் கூட; பல பெண்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆண்களாக இருப்பதற்கு இந்த நகைச்சுவை உணர்வுதான் முக்கிய காரணம். இந்த உணர்வு இல்லையென்றால் பெண்களை நெருங்கவே முடியாது. ஏன் இவளுக்கு ஆண்கள்தான் நிறைய நண்பர்க்ள் என் சிலர் நினைக்கலாம் .. எல்லாம் நகைச்சுவை உணர்வேயன்றி வேறு எதுவாக இருக்க முடியும்!  ஒரு பெண்ணிற்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்களேயென்றால் அவள் எப்போதும் சிரித்துக்கொண்டேதான் இருப்பாள். பெண்களின் இந்த ரசனை உணர்வை மெருகேற்றுவதற்காகவே சில ஆண்கள் தமது நகைச்சுவை உணர்வை அதிகமாக வளர்த்துக்கொள்வார்கள்.

ஆண்களின் நகைச்சுவை உணர்வின் மர்மத்தை ஆராயனும். எல்லா இனத்திலும் இதுதான்.!

வியாழன், ஏப்ரல் 19, 2012

அலுத்துப்போச்சோ...

நாளை நேர்முகத் தேர்வு. தேர்விற்கு வரவிருக்கும் இருபது பேருக்கு இன்று மதியம்தான் நினைவுறுத்தல் அழைப்பு விடுத்து ஓய்ந்தது. தேர்வு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.

நிறைய பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதில் கிட்டத்தட்ட ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பு விடுக்கச்சொன்னார்கள். அந்த ஐம்பது பேர்களில் பத்து பேர் தொலைப்பேசியை எடுக்கவில்லை. பத்து பேர், சில தவிர்க்க முடியா காரணங்களால் வரமுடியாது என்றார்கள். மறுபடியும் அழைத்து உறுதி படுத்துக்கொள்கிறோம் என்கிற கோரிக்கையோடு.
ஆக முப்பது பேர் வரமுடியும் என்கிற நிலையில் அன்று.!

இன்று, மறுபடியும் நினைவுறுத்தல் அழைப்பு விடுக்கும் போது, அதில் இருபது பேர்தான் தேறினார்கள். ஒருவர் வரத்தெரியாது என்றும், ஒருவர் மன்னிக்கவும் என்றும் ஒருவர் பிடிக்கவில்லை என்றும், சிலர் தொலைப்பேசி அழைப்பை எடுக்காமலும்....

இந்த இறுதிநேர, நேர்முகத்தேர்வின் உறுதிபாடு அவசியம், காரணம் சில முன்னேற்பாடுளை செய்யவேண்டும். அதிகமானோர் என்றால், இரண்டு அறைகள் தயார் செய்யவேண்டும். முறைப்படி நேர ஒதுக்கீடு, ஒரே நேரத்தில் எல்லோரும் வந்து விட்டால் அவர்கள் அமர்வதற்கு இடம், பூர்த்தி செய்யபடுகிற விண்ணப்ப பாரங்கள், அனுப்பியிருக்கின்ற ரிஷுமி’யை  வரிசைப்படி தயார் படுத்துதல், நகல் எடுத்தல் போன்ற வேலைகள் சரியாகச் செய்யப்படுவதற்கே இந்த இறுதி கட்ட தயார் நிலையும் நினவுறுத்தலும்.

மேலும் யாருடைய நேரத்தையும் வீனடிக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை என்பதால், இதுபோன்ற எச்சரிக்கைகளில் நிர்வாகம் முழுக்கவனம் செலுத்துகிறது.

இன்று காலையில் ஒருவருக்கு அழைதிருந்தேன். படு சுவாரஸ்யமான அழைப்பு இது. சென்ற வாரம் இவருக்கு அழைப்பு விடுத்தபொழுதே, வேண்டா வெறுப்பாகவே வெட்டி வெட்டிப்பேசி அழைப்பை அலட்சியம் செய்தார். கோபம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு, `டேய் வர்றீயா, இல்லியா, அத மொதல்ல சொல்லு, கஸ்மாலம்’ என்று திட்டவேண்டும் போல் இருந்தது. இருப்பினும் இமெஜ் காக்க, வாயை மூடிக்கொண்டு..`யெஸ் சர், நோ ச்ர்’என்று முடித்துக்கொண்டேன். கம்பனி இமெஜ் முக்கியம், பிறகு மேலிடத்தில் எதாவது போட்டுக்கொடுத்தால், மேமோ வரும்.. ஏற்கனவே எனக்கு வந்திருக்கு. தனியறையில் வைத்து `ஆத்து ஆத்துன்னு’ ஆதிட்டானுங்க அறிவுரையை. போதுண்டா சாமி. இனி தேவையா என, அன்று முதல் மிக பவ்வியம் தான் எல்லோரிடமும்.

இன்று மீண்டும் அதே நபருக்கு அழைத்து, நாங்கள் அனுப்பிய மெயில் கிடைத்ததா? யெஸ்’ என்றார். இங்கே வருவதற்கு எதேனும் பிரச்சனை உள்ளதா? நோ’ என்றார். ``அப்படியென்றால் அந்த மெயிலில் குறிப்பிட்ட நேரப்படி சரியாக வந்து விடு, நன்றி.. என முடிக்கும் போது..`நில்லு, உன்னிடம் ஒரு கேள்வி’ என்றான். `யெஸ்’ என்றேன்.

யார் இண்டர்வியூ செய்வார்கள், நீ யா? என்றான். இல்லை, அந்த டிப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் என்றேன். `எம்.டி ஆர் ஜீ.எம்?’ கேட்டான். `இருவரும் அல்ல, மூன்று மனேஜர்கள் இருப்பார்கள்’ என்றேன். `இரண்டாவது இண்டர்வி யூ இருக்குமா?’ என்றான். `உங்களைத் தேர்ந்தெடுத்தால், சம்பளம் அலவன்ஸ் போன்றவற்றைப் பேசுவதற்கு நிச்சயம் வரச் சொல்வார்கள் தானே!’ என்றேன். ஆரம்பித்து விட்டான்.. ``முதலில் மானேஜர்கள் இண்டர்வியூ எடுப்பார்கள், பிறகு இரண்டாவது இண்டர்வியூ இருக்கு வா’ன்னு, ஜீ.எம்’கள் எடுப்பார்கள். அதன் பின்னர் எம்.டி எடுப்பார் வா’ன்னு மூணாவது இண்டர்வியூ வரும்.. பிறகு எம்.டி’ க்கு பிடிக்கவில்லைன்னு சொல்லி ரிஜெக்ட் செய்வீர்கள், இது எனக்குத் தேவையா? முதல் இண்டர்வியூவிலேயே பெரிய சூப்பர் ஸ்டார் கணக்கா கேள்விகள் கேட்கிறார்களே, பிறகு எதற்கு இரண்டாவது மூன்றாவது இண்டர்வியூ? மூன்று பேரும் ஒன்றாக இண்டர்வியூ செய்யமுடியாதா? நாங்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா? அழைக்கும்போதெல்லாம் வருவதற்கு. !!? எவ்வளவு தூரம் அலையவேண்டும்!? பெட்ரொல் டோல் என எவ்வளவு செலவு? எங்களின் நேரம் வினடிக்கப்படுகிறது. சக்தி வீனடிக்கப்படுகிறது. இப்போ வேலை செய்யுமிடத்தில் லீவு கேட்பதும் கிடைப்பதும் பெரும் பாடாகிறது. இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தில் அல்லல்பட்டு வந்தால், ரிஜெக்ட் செய்கிறீர்கள் சர்வ சாதாணரமாக..தேவையா இது எங்களுக்கு!?’’ புலம்பினான். நான் என்ன செய்ய முடியும்.? என் கடன், ஆணைப்படி பணி செய்துக் கிடப்பதே. !

ஒரே கேள்விதான் அவனிடம், கொஞ்சம் அதட்டலாக. `` நீ வறியா இல்லையா?, வரவில்லையென்றால் நன்றி. வணக்கம்’’ அவ்வளவுதான்.

``யெஸ் மேடம், ஐ எம் கமிங்க்’’ என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தான், இறுதியாக...

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு
அதிர்ஷ்டம்
வரும் போகும்..

அதிர்ஷ்டம் பணமாக வந்தால்
பணமும் வந்தவழியே..

அதிர்ஷ்டம்
பொருளாகக் கிடைப்பதால்

எனக்கு இது கிடைத்தது?
உனக்கு என்ன கிடைத்தது?
இந்த பொருள் என்னிடம் உண்டு!
அந்த பொருளும் என்னிடம் உண்டு!
என்ன செய்வது?
எனக்கும் புரியவில்லை!?
யாரிடமாவது விற்கவேண்டும்
பணமாக்கவேண்டும்..
போன வருடம் கிடைத்ததே அப்படியே இருக்கு
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
அவருக்கு என்ன கிடைத்ததாம்!
இவருக்கு என்ன கிடைத்திருக்குமோ!?
மாற்றிக்கொள்ள கேட்டால் கொடுப்பார்களா?
விலை ஒப்பீடு வந்தால், கூடுதல் பணம் கொடுக்கனுமே
நாமாக இருந்தாலும் சும்மா கொடுப்போமா?
பணம் வாங்காமல் விடமாட்டோமே!
சரி இருக்கட்டும்
உறவுகளில் யாருக்காவது
திருமணம் பிறந்தநாள் என்றால்
பரிசாக கொடுத்து விடலாம்

அதிர்ஷ்டம் கூட
குழப்பம்தான்

அதிர்ஷ்டம் ஒண்ணும்
இல்லாததைக் கொடுத்துவிட வில்லை

அதிர்ஷ்டம் கூட
வியாபார சிந்தனைதான்

அதிர்ஷ்டம் கூட
வெட்டி அரட்டைதான்...

இருப்பினும்
இன்னும் ஓய்ந்தபாடில்லை
அதிர்ஷ்ட சிந்தனை
எனக்கும் தான்..!!

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

புளிப்பு மிட்டாய்

நீயும் திட்டு
விளங்காமல் நானும்
கொஞ்சம் திட்டி வைக்கிறேன்
இப்படி கொந்தளித்தால் தானே
உனக்கு நான் நல்லவன்
ஊருக்கு புரட்சியாளன்

யாருங்க ஊனம்?

சிலரிடம் இருக்கும் அபாரத் திறமைகளைக் காணும் போது, நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் செய்ய இயலவில்லை என்று நினைக்கையில் மனம் சில விஷயங்களைச் செய்துபார்க்கத் துடிக்கும்.

சில நாட்களாக என்னால் முடியுமா என சிலரின் கைவரப்பெற்ற அபாரத் திறமைகளை நான் என்னிடம் பரிசோதித்த்துப் பார்த்துக் கொண்டேன்.
கீழே ஒரு காகிதத்தை வைத்து, வலது கால் விரல்களில் பென்சிலைப் பொருத்தி, (கால்களால் வெட்கத்தில் கோலம் போடுவது சுலபம்) அந்த காகிதத்தின் மீது `விஜி’ என்று எழுதிப்பார்த்தேன். முடியவில்லை, அது அவ்வளவு சுலபமேயல்ல. மண்ணில் கோழி பிராண்டிய குப்பை போல் வந்தது என் எழுத்து. மீண்டும் முயன்றேன், தோல்வியே. மிக மிக கடினமான ஒரு காரியமாகவே இருந்தது. அதற்குள் காலின் நடு விரல் நரம்பு வேறு ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. அது வேறு ஒரு பக்கம் வலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது!  அந்த விரலை இழுத்து நேராக ஆக்கிக்கொண்டு மீண்டும் முயன்றேன், ஓரளவு வந்தது இருப்பினும் அழகாக வரவில்லை. இங்கொன்றும் அங்கொன்றும் கோணல்மாணலாக அலங்கோலமாகவே வந்தது.

அடுத்து, மறுபடியும் அதே பென்சிலை இடது கால் விரல்களின் நுழைத்துக்கொண்டு எழுத முயன்றேன், அறவே முடியவில்லை, இன்னும் கூடுதலாகச் சிரமப்பட்டேன். வலது காலிலாவது ஒரு விரலில்தான் சுளுக்கிக்கொண்டது, இடது காலில் பெருவிரலும் சேர்ந்து இழுத்துக்கொண்டது. பொறுக்கமுடியாத வலியை அனுபவிக்க நேர்ந்தது.

நமக்கு வலது கைப்பழக்கம் எழுதுவதற்குச் சரளமாக இருந்து விட்டால், வலதுகாலால் கொஞ்சம் எழுத முடிகிறது. அதுவே இடது கால் என்று வருகிறபோது கால் சுழலும்போது உடம்பும் ஆடுகிறது, எழுத்துவருவதில் சிக்கல் ஏற்படுகிறது.  எனது கால்களைக்கொண்டு எழுதும் பயிற்சியில்  ஈடுபட்டபோது கண்ட ஆராய்ச்சி இது.

அடுத்து, வாயில் பேனாவை வைத்துக்கொண்டு எழுத முயற்சி செய்தேன்.. பேனா நீட்டமாக இருப்பதான் எழுத்து காகிதத்தில் சரியாக விழவில்லை. காகிதத்தில் எழுதுகிறபோது பேனா வாயிற்குள் நுழைந்து நுழைந்து, தொண்டையினை உராயும்போது, குமட்டல் வந்து எச்சில் ஒழுகுகிறது.

ஆக, பேனா சரிப்பட்டு வராது என்பதால், பென்சிலை சிரியதாகச் சீவி (குட்டையான பென்சில் என்றால் சுலபம்) வாயிற்கும் காகிதத்திற்கும் இரண்டு இஞ்ச், பென்சிலும் அதே அளவில் இருப்பதை உறுதி செய்துகொண்டு., எழுத ஆரம்பித்தேன்.

வாயில் கவ்விய அந்தச் சிறிய பென்சிலால் `அம்மா’ என்று எழுதிப்பார்த்தேன். அதை எழுதி முடிக்கவே அப்பப்ப்பா என்றிருந்தது. எவ்வளவு சிரமங்களைச் சந்திக்கவேண்டியுள்ளது தெரியுமா.!. 

`அ` என்கிற எழுத்தை எழுதும்போது தலையும் சேர்ந்து சுழல்கிறது. வாயில்  நுழைத்த பென்சில் வேறு நழுவிக்கொண்டே இருந்தது. பற்களால் கடித்துக்கொண்டும், உதட்டால் இறுக்கிக்கொண்டும்... பெரும்  பாடாகிவிட்டது நிலை.

அம்மா என்கிற மூன்றெழுத்தை எழுதிமுடிக்கவே சில நிமிடங்கள் ஆனது. பென்சில் அங்கும் இங்கும் வளைந்தது. வாயிலிருந்து எச்சில் வேறு வடிந்து காகிதத்தை நனைத்து நாசம் செய்தது. தலையும் ஆடுகிறது,  ஆடும்போது தலைவலியும் சேர்ந்து வருகிறது. மிகவும் சிரமப்பட்டேன். குனிந்து குனிந்து எழுதுகிறபோது முதுகு வளையும், அப்போது  இடுப்பும் சேர்ந்து வளைகிறதல்லவா, அத்தருணத்தில் பின்புறத்தின் நடுமுதுகுப் பகுதி வலிக்கும். கீழே அமர்ந்துகொண்டு இதைச் செய்யும்போது யோகாசனம் செய்வதுபோல் இருந்தது, நிச்சயம் கொஞ்சம் குண்டானவர்கள் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.

நான் வலது கைப்பழக்கம் உள்ளவள். எழுதுவது தொடங்கி எடுப்பது கொடுப்பது எல்லாமும் வலது கைதான். உதைப்பது, முதல் அடி எடுத்து வைப்பது, படியேறுவது என வலது காலும் எதற்கும் முதலாவதாகவே பயணிக்கும். பெரும்பாலும் பலருக்கு வலது கை வலது கால் பழக்கமாகத் தான் இருக்கும். யாரோ ஒரு சிலர் தான்  இடது கைப்பழக்கம், இடது கால்பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். இருப்பினும் பத்தில் மூன்றுபேர் இடது கை கால் பழக்கமுள்ளவர்களை இப்போது அதிக அளவில் காணலாம்.

இடது கை கால் பழக்கமுள்ளவர்கள் அறிவாளிகள் என்று யாரோ ஒரு சிலர் பரவலாகக் கிளப்பிவிட்ட புரளியால், குழந்தைகளை குழந்தைப்பருவத்திலேயே இடது கைப்பழக்கம் வருவதைப்போன்று செயற்கையாகப் பழக்கப்படுத்தி விடுகின்ற பெற்றோர்களும் இருக்கவேதான் செய்கிறார்கள்.  நான் அனுபவத்தில் கண்ட உண்மை இது.
இடது கை கால் பழக்கமுள்ளவர்கள், இடது கையால் பூப்பந்து விளையாடுவார்கள், இடது காலால் உதைத்து காற்பந்து விளையாடுவார்கள்,  சிலர் உணவு கூட இடது கையால் எடுத்துச் சாப்பிடுவார்கள். எதை எடுத்தாலும் இடது கையையே பயன் படுத்துவார்கள். கோழி, இறைச்சி, மீன் போன்றவற்றை துண்டு போடும் போது கூட இடது கைதான், இதைப் பார்க்கும் நமக்கு வித்தியாசமாகவே தோன்றும்.

இடது கை பழக்குமுள்ளவர்கள் எழுதுவதைப்பார்க்கும்போது எனக்கு படு குஷியாகிடும். எதோ நமக்கு இல்லாத ஒரு தனித் திறமை அவர்களிடம் இருப்பதைப் போன்ற ஒரு ஆர்வத்தில், அவர்கள் எழுதும் போது, வைத்தக்கண் வாங்காமல் அவர்கள் எழுதும் பாணியை ரசிப்பேன். எழுதுகிற எழுத்து அழகாக இருந்து விட்டால், ஒரே ஆச்சிரியம்.  

அதே மாதிரி நானும் எழுதிப்பார்ப்பேன். வலது கையால் எழுதும் போது, இடமிருந்து வலமாக எழுதுவோம்.இடது கை பழக்கமுள்ளவர்களும் அப்படியேதான் எழுதுவார்கள், ஆனால் நான், இடது கையால் எழுதிப்பழகும்போது, எழுத்து வலமிருந்து இடமாகச்செல்கிறது. எழுதியதை, கண்ணாடியின் முன் வைத்துப்பார்த்தால்தான், அந்த எழுத்தை சாரியாகப் வாசிக்க முடியும். இல்லையென்றால் அது தலைகீழாக இருக்கும்.

இவற்றையெல்லாம் ஏன் நான் பகிர்கிறேன் என்றால், எல்லாம் இருந்தும் நாம் ஊனமாகவே உள்ளோம் என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான்.

இப்போது சொல்லுங்கள்.. யார் இங்கே ஊனம்?