புதன், நவம்பர் 07, 2012

சாரு மலேசிய வருகை

சாருவின் எழுத்துகள் நம்மை மிக உயரே பறக்கவைக்கும். பறப்போம் ஆனால் பறப்பதற்கு காரணம் இரண்டு இறக்கைகள் கொண்ட வெள்ளை தேவதைகள் அல்ல. அது கழுகு. நம்மைக் கொத்திச்செல்கின்ற கழுகு. அந்தக் கழுகு எங்கே எப்போது நம்மைக் கடாசும் வீழ்த்துமென்று நமக்கே தெரியாது. எவ்வளவுக்கெவ்வளவு மயக்குகின்ற மாய வித்தை அவரின் எழுத்துக்களில் இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு மண்ணைக்கவுகின்ற சமாச்சாரங்களும் இருக்கும்.

வசீகர எழுத்திற்குச் சொந்தக்காரர் சாரு. அவரின் எழுத்துகளை வாசிக்கும்போது நமது உள்ளுணர்வுகளுக்குத் திரைபோடாமல் வாசிக்கவேண்டும். அன்பு,காமம், ஆன்மிகம், காதல், பெண்ணியம், ஆணாதிக்கம் என எதுவாக இருப்பினும் அதே உணர்வில் தொடரவேண்டும். ஈகோவிற்கு காயங்கள் ஏற்படுகிற தருணத்தில் வாசகன் அவரை நிந்திப்பான். அந்த சந்தர்ப்பத்தில்தான் வசை பாடுகள் நிகழ்கின்றன. அது அவரது பலவீனமல்ல, நம்முடையதே.  

எழுத்தில், அவலமென்பதை அவர் எங்குமே போதிக்கமாட்டார். நம் நிலையிலேயே நாம் அவரை உள்வாங்கிக்கொள்ளவேண்டும். வாசிப்பு அனுபவத்தில்  மனம் பேசுகின்ற மனசாட்சி வாசகங்களை அசைப் போட்டுப்பார்த்துக்கொண்டு, பின்நோக்கிப் பின்நோக்கிப் பயணித்தால், அங்கே இருப்பது எழுத்தாளரான சாரு அல்ல, நாம்தான். இதை ஏற்றுக்கொள்ளாத வாசகன் சாருவை புறக்கணிக்கின்றான். ஏற்றுக்கொண்டவன் அவரைக் குருவாகப் பூஜிக்கின்றான்.

சிலர் சாருவை, அவர்களின் எண்ணங்களைக்கொண்டு மிக மோசமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வடிவத்திற்குள் நுழைந்துக்கொண்டு, `அவர் அப்படித்தான்’ என முடிவெடுத்து, அவரை வாசிக்காமல் இருப்பது, பேரிழப்பு என்றே சொல்வேன். அவரின் நாற்பது புத்தகங்களில், `காமரூப கதைகள்’ என்கிற ஒரு நாவலையாவது முடிந்தால் வாசித்துப்பாருங்கள். அல்லது அவரின் அகப்பக்கத்தை http://charuonline.com/blog/ வலம் வரலாம்.

உலக இலக்கியம் விரல் நுணியில். நல்ல வழிகாட்டி. வாசிப்பும் எழுத்துமே அவரின் வாழ்க்கை. அவரைப்பின் தொடர்பவர்கள் பெண்களாக இருந்தால் ஆண்களையும், ஆண்களாக இருந்தால் பெண்களையும் மதிக்கக்கற்றுக்கொள்வார்கள். சுயமரியாதை சுடர்விடும். எல்லாவற்றிலும் வழிகாட்டுவார். எல்லாமும் மக்கள் நலம் பெற சொல்லப்படுகின்ற கருத்துகள்தாம். நம்மை நாமே திருத்திக்கொள்கிற போதனைகளற்ற எழுத்து அவருடையது. அது ஒரு நுண்ணுணர்வு, அதைப்பற்றி அதிகமாகச் சொல்ல இயலாது

அவரைச் சந்திக்கின்ற இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். அதே போல் அவரைச் சரியாக வாசிக்காமல் அவரைப் பற்றிய கேள்விகள் எதும் இருந்தால் கேட்டுவிடாதீர்கள்.. அவருக்கு எப்போதுமே சமூதாயத்தின் மீது ஒரு சீற்றம் இருக்கின்றது, அது எத்தகையது என்றால், எதையுமே சரியாகக் கற்காமல் கருத்து என்கிற பெயரில்  எதையாவது உளறிக்கொண்டிருப்பது. இதை அவர் முற்றாக நிராகரிக்கின்றார். கடந்த ஒரு ஆண்டு காலமாக அவரைத் தொடர்ந்து வாசித்துப் புரிந்துகொண்டதால், சாதரண வாசகியான அடியேனின் சின்ன  நினைவுறுத்தல் இது.

வருகை சிறப்பாக அமைய என் பிராத்தனைகள். எங்களின் நாடு மிகவும் பாதுகாப்பான நாடு. மகிழ்ச்சியாக வாருங்கள் சாரு. அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் விஜி.




செவ்வாய், நவம்பர் 06, 2012

லட்சியம்

ஒவ்வொரு வினாடியும்
அலட்சியமாய் நகர்கிறது
எனக்குள் எழும் போராட்டங்களை
லட்சியம் செய்யாமல்...

ஞாயிறு, நவம்பர் 04, 2012

மாவில் பெயர்


இன்று, குடும்ப சகிதம் முறுக்கு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். நான் அடுப்படியில்.. மகளும் அவரும் பிழிவார்கள். மகன் அடுப்படியில் வெந்துக்கொண்டிருக்கும்  என்னிடம் தட்டில் பேப்பரில் பிழிந்து அடுக்கியுள்ளவைகளைக்  கொண்டுவந்து கொடுப்பார், பல வருடங்களாக இதுதான் ரூட்டின்.

மாவு முடியும் தருவாயில், கடைசி மாவில் அவனின் பெயரைப் பிழிந்து எழுதி, அதைப் பொரிச்சு கொடுக்கச்சொல்லி அடம் பிடிப்பான். இது வருடா வருடம் நடைபெறும் நிகழ்வு..

அவர்களின் வேலையை விரைவாக முடித்து, எல்லாவற்றையும் பிழிந்து கொடுத்துவிட்டு, டி.வி முன் சென்று சாய்ந்துக்கொண்டார்கள் மூவரும். நான் அடுப்படியில் இன்னமும்..... பொரித்துக்கொண்டே வரும்போது, பிழிந்து வைத்திருந்த மாவுகளின் வரிசையில் இந்த வருடமும் SU இருக்கு. அவனின் பெயரில் முதல் எழுத்து. வயது பதினெட்டு...இன்னமுமா?  

வியாழன், நவம்பர் 01, 2012

சகலகலாவள்ளி உமாவுடன் ஒரு நேர்காணல்

வேதனைகள் சோதனைகளை எல்லாம் களைந்து சாதனை செய்தவர்களை   நேர்காணல் செய்வதுதான் பேட்டி.  ஆனால் இங்கே நான் எடுத்துள்ள  இந்த நேர்காணல் சற்று வித்தியாசமானது சுவாரஸ்யமானதும் கூட. 

இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது. நான் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதின் பேரில், பலவேலைகளுக்கு மத்தியில், தீபாவளி பலகாரங்கள் செய்கிற வேலைகளையெல்லாம் தள்ளிப்போட்டுவிட்டு, எனக்காக இந்த பேட்டியை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய திருமதி உமாசெபஸ்தியன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியினை சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

இவரின் சாதனைகளின் பட்டியல் மிக நீளம், முடிந்த வரையில் கிளறியுள்ளேன். ஞாபகப்படுத்தி யோசித்து யோசித்து, நினைவுக்கு வந்ததையெல்லாம் பகிர்ந்துள்ளார். எல்லாவற்றையும் சேர்த்துள்ளேன் என்பதைவிட, மக்கள் புரிந்துகொள்கிற அளவிற்கு இதனின் உள்ளடக்கத்தில்  போதிய தகவல்கள் உள்ளன என்பதில் எனக்கு வெற்றியே.

எல்லா சாதனைகளிலும், வெற்றிகளிலும், முயற்சிகளிலும் வலிகள் வேதனைகள் நிறைந்திருப்பது சகஜம்தான். அதுவும் இவரின் வெற்றி என்பது பொது ஊடகங்களில் (பத்திரிகை, வானொலி,  தொலைக்காட்சி)  உடனே விளம்பரத்திற்குள்ளாகி அறிமுகப்படுத்தப்படும் என்பதால், இவர் பலரின் வெறுப்பான குத்தலான சூடான தாக்குதலுக்கு இரையாகின்ற நிலை ஏற்பட்டிருப்பினும், எல்லாவற்றையும் ஜாலியாக அலட்சியம் செய்து விட்டு தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகல பேர்வழி. நல்ல தோழி. இனிமையாகப் பாடுவார், நடனமாடுவார், ஒப்பனைக்கலையில் கைத்தேர்ந்தவர், பின்னல் தையல் கைவினைப்பொருட்கள் என பின்னி எடுப்பது, ஓவியம் வரைவார், கவிதை எழுதுவார், வீட்டு அலங்கரிப்பில் கைத்தேர்ந்தவர், வித்தியாசமாக சமைப்பதில் வல்லவர், பலகுரலில் பேசுவார், நாய், பூனை, வாத்து, கோழி போல் சத்தங்களை எழுப்புவார், சரி வாருங்கள் இனியும் அறிமுகம் என்கிற பேரில் நீட்டி முழங்காமல், அவரின் சாதனை எனன என்பதனை அறிந்துகொள்வோம்.

*வணக்கம் உமா, உங்களைப்பற்றி சொல்லுங்கள். பெயர் ஊர், அம்மா அப்பா, திருமணம், குழந்தை..இப்படி?
என் பெயர் உமாபதி செபஸ்தியன் ராஜ்.  அம்மா திருமதி பூபதி நடராஜ். அப்பா இல்லை. ஒரு மகன். அவனின் வயது நான்கு.

*உங்களிடமுள்ள தனித்திறமைகள் பற்றி..., மக்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே.., பலகுரல், பிரபல பாடகிகள் போல் பாடுவது.. கண்டசால குரல்.. என் இன்னும்?
பாடுவது எனக்குப்பிடித்தமான ஒன்று. மேலும் மற்றவர்களை சிரிக்க வைப்பதும் எனக்குப்பிடித்தமானது. குரலை மாற்றி மாற்றிப்பாடுவேன். உங்களிடம் கூட பல முறை சீனர் போலும், பஞ்சாபி போலும், மலாய்க்கார பெண்மணி போலவும், வயதான பாட்டி போலவும் பேசியுள்ளேன். நீங்கள் கண்டு பிடிக்கவே இல்லை. ஒரு முறை போனில் உங்களைத் திட்டியுள்ளேன், நீங்கள் அரண்டு போனீர்கள்.. நானே சிரித்துக் காட்டிக்கொடுத்தாலொழிய உங்களுக்குத் தெரியப்போவதில்லை என்பதை பல வேளைகளில் கண்டுள்ளேன். கண்டுகொண்ட பிறகு இருவரும் சிரிப்போம். அதுதான் என் நோக்கம். எல்லோரும் எப்போதும் கலகலப்பாக இருக்கவேண்டும்.  பலகுரல்களில் பேசி பாடி பயிற்சி எடுத்து, முயன்று பார்ப்பேன். குழந்தைகள்போல் பேசுவேன். நாய் பூனை போல் கத்துவேன். டோனல்ட் டக் போல் பேசுவேன். கண்டசாலா குரலில் பாடுவேன். வாழ்க்கையை எப்போதும் ஜாலியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதுவே என் பாலிஷி..  

*உமாசெபஸ்தியன் – மெரு கிள்ளான் என்றாலே, வானொலி தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒலிக்கும் ஒரு பெயர் அல்லவா.! உள்ளூர் தமிழ் வானொலி தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உங்களின் முகமும் குரலும் பரிச்சயம். எப்படியென்று நீங்களே சொல்லுங்கள்.?
பெரிய பிரபலமெல்லாம் கிடையாது’க்கா. வானொலியும் தொலைக்காட்சியும் எனது உற்ற நண்பர்கள். தொலைக்காட்சியை விட வானொலி என் வாழ்க்கை. எங்கு சென்றாலும் காதில் `வர்க்மேன் பூட்டியிருப்பேன். வானொலி மட்டும், இரவு பகல் பாராமல் என்னுடனேயே இருக்கும். நான் வானொலியின் பரம ரசிகை என்றுகூட சொல்லலாம். பழைய புதிய ஹிந்தி தமிழ் பாடல்களைக் கேட்பதோடல்லாமல், அங்கே ஒலிபரப்பாகும் நேயர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னை இணைத்துக்கொள்வேன். கருத்துப்பகிர்தல், பலவிதமான போட்டி நிகழ்வுகள் போன்றவற்றில் பங்கெடுத்துள்ளேன். அற்புதமான பரிசுகளையெல்லாம் அதிகமாக வென்றுள்ளேன். பரிசுகள் ரொக்கமாகவும், விலையுயர்ந்த ஆபரணங்களாகவும், பொருட்களாகவும், பட்டுப்புடவைகளாகவும், லப்டாப், ஐபோட், கைப்பேசி என பலவடிவங்களில் என்னை நோக்கி வந்துள்ளன.  பலவற்றை முதல் நிலையிலேயே வென்றுள்ளேன். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பரிசு நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிவிடுவேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக்கொடுக்கிறது. கவலைகள் வீட்டுப்பிரச்சனைகள் என எதுவும் என்னை அலைக்கழிக்காது. தொடந்து முயல்வேன், வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும்.. கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். இதன் மூலமும் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். இது எனக்குள் ஒரு வேகமான விவேகமான தேடலை விதைத்துச்செல்கிறது .    

*உங்களால் மறக்க முடியாத சவால் நிறைந்த ஒரு போட்டி என்றால்?
பாபாஸ் (பிரபல மசாலா நிறுவனம்) நடத்திய BABA's & U என்ற வரிகளை வித்தியாசமாக வரைந்து அனுப்பும் போட்டி.  இதில் நான் முதல் பரிசை வென்றேன். ரொக்கம் ரிங்கிட் மலேசியா ஆயிரம். பலர் கலந்துகொண்ட இந்த போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது பெரிய அங்கீகாரமாக கருதினேன். தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் எனது புகைப்படம் வந்தது. பலருக்கு அறிமுகமானேன். உறவுகள் பலர் என்னைப் பாராட்டினார்கள். நண்பர்கள் உற்சாகமூட்டினார்கள்.

*அதிக பணம் அல்லது விலையுயர்ந்த பரிசுகளை வென்ற போட்டிகள் எது?
ஆஸ்ட்ரோ வானவில்  நடத்திய வேட்டையாடு விளையாடு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மறக்க முடியாத அனுபவமே. அந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். வாரம் ஒரு கேள்வி என மொத்தம் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தப் போட்டிகளிலும் நான் பங்கெடுத்தேன். அதாவது நான், என் அண்ணன், கணவர் என மூவரின் பெயரிலும் நானே பங்கெடுத்தேன். அடித்தது யோகம், முதல் மூன்று நிலை பரிசுகளை நாங்கள் மூவரும் பெற்றுவிட்டோம். grand prizes எங்களின் மூவரின் பெயரில்தான் வந்துகொண்டிருந்தது. என்னால் இன்னமும் அந்த மகிழ்வான பரவசநிலையை மறக்கவே முடியாது. அனைத்துமே அற்புதமான பரிசுகள்.. முதல் பரிசு, இரண்டாவது பரிசு - 1800 ரிங்கிட் பெருமானமுள்ள கைக்கடிகாரம். மூன்றாவது பரிசு - 1300 ரிங்கிட் பெருமானமுள்ள ciacomo dinner set, 108pcs. எல்லாமும் எனக்கே என்றாலும் அண்ணனின் பெயரைப் பயன்படுத்தி எழுதிப்போட்டதால்கைகடிகாரம் ஒன்றை அவருக்கே பரிசாகக் கொடுத்து விட்டேன்.  

*நீங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசி இல்லை, பணி செய்யும் பெண்மணி. இருப்பினும் உங்களால் எப்படி இது போன்ற   போட்டிகளுக்கு நேரத்தை ஒதுக்க முடிகிறது?
என்னிடமுள்ள திறமைகளை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும். மனிதனாகப்பிறந்து விட்டால் எல்லோருக்கும் எதாவது ஒரு வகையில் தனித்திறமைகள் இருக்கும். அதை நிச்சயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மனதிற்கு உற்சாகத்தைக்கொடுக்கிறது. அற்புதமான பரிசுகளும் கிடைக்கிறன. வருட முழுக்க வேலை செய்தாலும் சில விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு நாம் பலமுறை யோசிப்போம், இப்படி கலந்துகொண்டு, அவைகள் நமக்கு பரிசாகக் கிடைக்கபெறும் போது, அது நல்ல யோகமே. பெரும்பாலும் நம் இனப் பெண்கள் இது போன்ற போட்டிகளில் பங்கெடுப்பதற்குத் தயங்குகின்றார்கள். நான் கலந்துகொண்ட பல நிகழ்வுகளில், தமிழ் பகுதிபோல் மலாய், சீன, ஆங்கில பிரிவுகளில் அந்தந்த இனப் பெண்களின் பங்கேற்பு வியப்பை ஊட்டுகிறது. அதிகமானோர் பங்கு பெறுகிறார்கள். நம் பெண்களுக்கு தோல்வியைத்தாங்கிக்கொள்கிற சக்தியில்லையோ அல்லது போட்டி என்கிற விளம்பரத்தைப் பார்த்தவுடன், `ஆமாம்..கொடுப்பானுங்க இவ்வளவு காசு...., இவ்வளவு விலையுயர்ந்த பொருளை அப்படியே கொடுப்பார்கள் பாரு..என்கிற அலட்சியம் வேறு. இப்படிச்சொல்லியே நிகழ்வுகளில் பங்கெடுக்காமல் போனவர்களில் நீங்களும் ஒருவர்தானே அக்கா!?. பரிசு கிடைத்து விட்டது என்றவுன்.. ``அப்படியாஆஆ?’ என்று வாய்பிளப்பது.  இதுதானே நம் பெண்களின் நிலை.! சம்பந்தப்பட்ட நிறுவனம்அவர்களின் பொருட்களை விளம்பரம் செய்ய நிகழ்ச்சிகளைப் படைக்கின்றார்கள். அதில் கொடுக்கப்படும் கவர்ச்சிகரமான பரிசுகளை நாம் தட்டிச்செல்வதால்   நமக்கு என்ன கௌரவக்குறைச்சல் வந்து விடப்போகிறது. மெககெட்டு முயலணும், இதுவும் ஒரு சிலருக்குப்பிடிப்பதில்லை. எல்லாமும் சுலபமாக வந்துவிடும்மா என்ன..!!

*இந்த விளையாட்டுகளில், உங்களோடு போட்டியிட்டு தோற்றுப்போனவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? நல்ல திறமைசாலியான உங்களின் இந்த சிறப்புப்பங்கேற்பு சில வேளைகளின் பலரின் எதிர்ப்புக்குரலுக்கு ஆளாக நேரிடுகிறதே, அவற்றை எப்படி சமாளிக்கின்றீர்கள்?  
எனக்கு அறிமுகமான, தெரிந்த அன்பர்கள் வெற்றி பெற்றால் மனதார வாழ்த்துவேன், பாராட்டுவேன். ஆனால் எனக்கு என்று வரும்போது இந்த தாராள மனதைப் பார்ப்பது அரிதாகவே உள்ளது. `ஏன் நீயே பரிசு வெல்கிறாய்அடுத்தவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கலாமே? உனக்கு வேற வேலையே இல்லையா? இதே பொழப்புன்னு அலையுதுங்க..! என்று சொல்லி மனதைப் புண்படுத்துவார்கள். சில நட்புகள், எனது இந்த தொடர் வெற்றிகளைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் என்னிடம் பேச்சு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டு போய்விட்டவர்களும் உண்டுதான். போட்டி என்பது அவரவர் திறமைகளை வெளிக்கொணர்ந்து வெற்றிபெறுவது. பங்கேற்பது மட்டுமே நம் கையில், பரிசு வழங்குவது எல்லாம் தேர்ந்தெடுப்பவர்களின் கையிலேயே உள்ளது. என்னை யார் என்று கூட தெரியாத நிலையில் அவர்கள் என்னைத்தேர்தெடுக்கின்றார்கள் என்றால் என்னிடமுள்ள திறமைதானே முக்கியக் காரணம். இதற்காக பொறாமை கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.!எதைப்பற்றியும் கவலையில்லை. நம்மைக்கண்டு பொறாமைப்படுகிறவர்களால் நமக்கு ஒன்றும் ஆகப்போறதில்லை. நம் வழியை நாம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

*கணவரின் ஒத்துழைப்பு பற்றி சொல்ல முடியுமா, அவரின் பெயரில் கூட பல போட்டிகளின் பங்கெடுத்துள்ளீர்களே..?
ஆமாம், பலபோட்டிகளில் அவர் பெயரில் நான் பரிசை வென்றுள்ளேன். ஆனாலும் அவர்தான் மேடையேறி பரிசைப்பெறுவார். அப்போது அங்கே கேட்கப்படும் கேள்விகளின் போது திருதிருவென விழிப்பார்.. நான் சிரிப்பேன். அவருக்கும் இப்படி பங்கேற்று பரிசை வெல்வது பிடிக்கின்றது. பலரை ஆர்வமூட்டுவார், கலந்துகொள்ளச்சொல்லி அலோசனை வழங்குவார். அவரின் மூலமாகக் கூட சிலர் என்னை அழைத்து, `இதில் பங்கேற்க வேண்டும், அதில் பங்கேற்க வேண்டும், வழிகாட்டுங்கள் உதவி செய்யுங்கள்என கேட்டுள்ளனர். நானும் உதவுவேன்.


*தமிழ் பள்ளிக்குச் செல்லாத உஙகளை தமிழின் பக்கம் இழுத்த்து எது, யார் என்று சொல்லமுடியுமா?
தமிழராய் பிறந்து விட்டு தமிழ் படிக்காமல் போனதே அவமானமான ஒரு செயல். தமிழ் பள்ளியில் அப்பா என்னைச் சேர்க்கவில்லை, அதற்காக அவரும் பலமுறை வருத்தப்பட்டுள்ளார். அப்பாவின் தூண்டுதலின் பேரில் மலாய் பள்ளியில் பயின்றுக்கொண்டே, தமிழ் வகுப்பிற்கு தவறாமல் செல்வேன். எனக்குக் கிடைத்த தமிழாசிரியர் திரு.பத்மநாதன் மிகவும் சுவாரிஸ்யமானவர். அவர் தினமும் எங்களுக்குக் கதைகள் சொல்வது வழக்கம். பெரும்பாலும் திகில் கதைகள்தாம். கதைகளை முடிக்கும்போது மர்மம் தொற்றிக்கொண்டிருப்பதைப்போல் முடிப்பார். கதையைத் தொடர்ந்து கேட்க வேண்டுமா? நாளையும் தமிழ் வகுப்பிற்கு வாருங்கள் என்று சொல்லி, எங்களை தொடந்து வகுப்பிற்கு வரவழைப்பார். அவரின் தூண்டுதலிலும், சொந்த முயற்சியிலும் நிறைய கற்றுக்கொண்டேன். அப்பா வாங்கி வரும் தமிழ் தினசரிகளை நாள் தவறாமல் படிப்பேன். அப்படியே வந்ததுதான் தமிழ் பற்று. மேலும் உங்களைப்போன்ற தமிழ் பற்றுள்ள நண்பர்கள் என்னைச்சுற்றி இருப்பதும், தமிழைத்தொடந்து கற்பதற்கு உந்துதலாக அமைந்து விட்டதும் வரப்பிரசாதமே.  
                             
*எழுத்துத்துறையிலும் கால் பதித்துவிட்டீர்களே அதைப்பற்றி..?
அதுவும் ஒரு விபத்துபோல் நிகழ்ந்து விட்டது. போட்டி நிகழ்ச்சி என்கிற அறிவிப்பைப் பார்த்தவுடன், தமிழ் படிக்காத நான், என்னுடைய முழுமுயற்சியில் முதல் முதலாக ஒரு சிறுகதை எழுதினேன். முற்றிலும் அறிமுகமில்லாத புதிய எழுத்தாளர்கள் பங்குபெறுகிற ஒரு போட்டி என்றவுடன், உத்வேகம் மனதைக்குடைந்தது. பெரிய எழுத்தாளர்களிடம் போட்டி போடமுடியுமா என்ன? ஆக, முயன்றுதான் பார்ப்போமே என்று எழுதிப்போட்டேன். பிரசுரம் ஆனது, இரண்டாவது பரிசும் கிடைத்தது. 500ரிங்கிட், சுற்றுலா செலவிற்கான பற்றுச்சீட்டு அது. நானும் கணவரும் மீண்டும் ஒரு ஹனிமூன் சென்றுவந்தோம்.  அந்த சிறுகதையை எழுதுகிறபோது..  இதுக்கு எந்த `றர, ழளல, நனண, போடுவது? ச்ப்த்க்வருமா? என சதா அழைத்து உங்களை துன்புறுத்தியுள்ளேன் என்பதையும் மறக்கவேண்டாம். இவ்வேளையில் பத்திரிகை ஆசிரியர்களை நினைக்கும் போதும் பெருமையாகவே இருக்கின்றது. யாருடைய எழுத்துக்களையும் புறகணிக்காத ஒரு அற்புத ஆசிரியர்களை நாம் பெற்றுள்ளோம். எப்படி எழுதினாலும் திருத்திப்போட்டு பிரசுரித்து அங்கீகரிக்கின்றார்கள். எல்லோரும் எழுதவேண்டுமென்று மறைமுகமாக உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இது நமக்கு நல்லதொரு வாய்ப்பு. இதை ஒவ்வொரு வாசகரும் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இப்போது எனக்கு எழுத்திலும் ஆர்வம் வந்துவிட்டது.

*அழகு போட்டியில் கூட பங்கேற்று `டாப் 10 ஆக வலம் வந்த்தைப்பற்றி.....
அக்கா என்ன வச்சு காமடி கீமடி எதும்...!!!! வம்பில் மாட்டி விட்டுடாதிங்க.. அது அழகு போட்டி இல்லை, சேலை அழகு ராணி போட்டி. அழகான சேலைக்காக கிடைத்த பரிசு அது. நான் அழகி என்றால் ஐஸ்வரியாராய் யாராக்கும்..!? நல்லா கிளப்பறாங்கய்ய்யா புரளிய.....

*மிக அண்மையில் கலந்துகொண்டு பரிசை வென்ற நிகழ்ச்சி எதும்?
டி.எச்.ஆர் வானொலியில் `தலதளபதிஎன்கிற போட்டியில் பங்கேற்று ரிங்கிட் மலேசியா ஐநூறை வென்றேன். அதனைத்தொடந்து `tesco தீபாவளி வாங்க பாடலாம்என்கிற போட்டியிலும் ரொக்கம் வென்றுள்ளேன். தீபாவளிக்கு செலவுகளுக்கு கூடுதல் வருமானமாக உதவுகிறது.  

*தீபாவளி வருகிறதே.. பல விளம்பரங்கள் போட்டிகளாக அறிமுகப்படுத்துவார்களே, கலந்துக்கொள்வீர்களா?
நிச்சயமாக. என்னால் முடியுமென்றால், வாய்ப்புகிடைத்தால் பங்கெடுத்துக்கொள்வேன்.

*இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும்போது உங்களின் மனநிலை என்ன?
வெற்றி பெறும் போதும், எனது பெயர், குரல் ஊடகங்களை அலங்கரிக்கும், அப்போது நானும் பொதுவில் அங்கீகரிக்கப்படுகிறேன் என்கிற எண்ணம், உள்ளொளி சுடரைத்தூண்டும். இது அவசியமென்றே படுகிறது மனசிற்கு. மனசு மகிழ்ச்சியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

*தொடர்ந்து முயற்சி செய்யவேண்டுமென்றால், பலரின் உதவி உங்களுக்கு அவசியமே. அந்த வகையில் யாரெல்லாம் உதவுவார்கள்? இந்த பயணத்தில் நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் நபர்கள்?
நான் மலாய் பள்ளியில் பயின்றதால், தமிழை பிழையில்லாமல் எழுத வராது. சில போட்டிகளில் பங்கேற்பதற்கு தூய தமிழ் பயன்படுத்தவேண்டும். அப்போது எனக்கு நிறைய நண்பர்கள் உதவி புரிவார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்- ஷா ஆலம் விஜயா (ஸ்ரீவிஜி), கஸ்தூரி கிள்ளான். அக்காவின் மகள் திரேசா. தம்பி மனைவி புஷ்பவாணி, மைத்துனர் சேவியர் போன்றோர்கள் எனக்கு பெரிதும் உதவிய நபர்கள். அதுவும் கணவரின் தம்பி சேவியரோடு  சேர்ந்து பல முயற்சிகள் செய்து பரிசுகளை வென்றுள்ளேன். 

*இறுதியாக, இதுவரை நீங்கள் வென்ற பரிசுகளைப் பற்றிய பட்டியலை பகிரமுடியுமா..ஆட்சேபனை இல்லையென்றால்....?
நிறைய உள்ளனவே. நினைவுக்கு வந்தவரை பகிர்கிறேன். டர்பல் வெர்திக்க அன்றும் இன்றும் - 100ரிங்கிட். ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே - 50ரிங்கிட். சிலிமிட்டா டீ- இரண்டு இலவச பக்கெட் டீ பக்ஸ் மற்றும் ஒரு டிவிடி பிளேயரும் பிரஷர் கூக்கரும். ப்ரூ உங்கள் சாயிஸ் - 50ரிங்கிட். உன்னிமேனன் மேடை நிகழ்ச்சிக்கு - இரண்டு டிக்கட். சங்கீதா சலங்கை ஒலி. கிளாசிக் நிகழ்விற்கு டிக்கட் வென்றுள்ளேன். ஹெர்பல் டானிக் - 100ரிங்கிட்.  நூறுவெள்ளி காயத்திரி பட்டுமாளிகையின் சேலை. நூறுவெள்ளி ஸ்ரீகுமரன் பட்டு மாளிகையில் சேலை. வித்யா ஹேர் ஆயில் 100ரிங்கிட். பாபாஸ் சமையலுக்கு ஒரு சவால் - 3900ரிங்கிட்.  டீன் ஜூவலர்ஸ் - 250ரிங்கிட் பற்றுச்சீட்டு. திருச்சி மசாலா - 50ரிங்கிட் பற்றுச்சீட்டு. QBB நெய் 100ரிங்கிட். தெலிகோம் அழைப்பு போட்டி 50ரிங்கிட் டாப் ஆப்.  ஃபேர் க்ளோ- 100ரிங்கிட் பெருமானமுள்ள முக ஒப்பனை பற்றுச்சீட்டு. எவரிடே பால்மாவு 100ரிங்கிட். கண்டுபிடிச்சா காசு - 1000ரிங்கிட்.  பணம் பணம் பணம் போட்டி - 2000ரிங்கிட். (கணவர்தங்கைதம்பி) என எல்லோரையும் பங்கு கொள்ளச்செய்து வென்றேன். பாபாஸ் & யூ -100ரிங்கிட். அலாம் ப்ளோரா 100ரிங்கிட்.  ஐஸோடோனிக் டிரிங்ஸ் - 200ரிங்கிட். மெக்னம் டி.எச்.ஆர் - 100ரிங்கிட். மெக்னம் அறிவிப்பாளர்களுடன் விருந்து நிகழ்ச்சி போட்டி. தலதளபதி - 500ரிங்கிட்.  ஆஸ்ட்ரோ தங்கத்திரை - 1800ரிங்கிட் பெருமானமுள்ள ipad2. எம்.பி.லிங்கம் & சன்ஸ் - 100ரிங்கிட் அவர்களின் பொருள்களுக்கான பற்றுச்சீட்டு. டிரிங்ஹோ படம் வரையும் போட்டி - KFC கூப்பன். மிஸ்.நிஹார் - grand winner......... ம்ம்ம் இவ்வளவுதான் நினைவில்.

*வாசகர்களுக்கு எதாவது சொல்ல நினைக்கின்றீர்களா?
நீங்கள் நீங்களாகவே இருங்கள். அதுவே உங்களின் அடையாளம்.
 

மிக்க நன்றி உமா.




   
   

செவ்வாய், அக்டோபர் 30, 2012

முடிச்சு

``ஹேய் லதா இன்னிக்கு நான் புது டிரஸ் போட்டிட்டு வேலைக்கு வந்திருக்கேன்’’

``என்ன தீபாவளி டிரஸ்’ஆ?, வாங்கியவுடன் போட்டிடணும் இல்லேன்னா தல வெடிச்சிரும் உனக்கு..!”

``அடிப்பாவி என்ன ஒரு வில்லத்தனம் உனக்கு..  சனிக்கிழமை தீபாவளி ஷாப்பிங் போனேன். எனக்கு டிரஸ் வாங்கணும்னு நினைக்கல, ஆனால் நீண்ட நாளாக நான் தேடிய ஒரு டிரஸ் கண்ணில் பட்டது. எப்போதுமே மற்றவர்களுக்கு ஷாப்பிங் செய்வேன். இந்த முறைதான் எனக்காகச் சென்றேன். பார்த்தவுடன் அந்த டிரஸ் மனதைக் கவரவும் உடனே வாங்கினேன்..  செம விலைதான். அழகா இருந்தது. போட்டுக்கொள்ளணும் போல் தோணுச்சு, போட்டுக்கிட்டேன். வாழ்க்கையில் என்ன இருக்கு? நினைத்ததை நிறைவேற்ற முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை.!’’ இன்று காலையில் நிகழ்ந்த ஒரு பிரச்சனையைச் சொல்வதற்காக எனது உற்றதோழி லதாவை அழைத்திருந்தேன். அழைப்பை எடுத்தவுடன் பிரச்சனையைப்பற்றி பேசாமல், ஆடை வாங்கினேன், தீபாவளி ஷாப்பிங் போணேன் என, நீட்டி முழக்கினேன்.

`` சரி சரி..எஞ்ஜாய் பண்ணுப்பா..!” என்ன கலரு என்ன மாதிரியான ஆடை என்கிற கூடுதல் தகவல்களைப் பரிமாறிய பிறகு விஷயத்திற்கு வந்தேன்.

``காலையிலே ஒரு பிரச்சனை..லதா?’’

``என்னாலா, என்னாச்சு.. பெரியண்ணன் பொண்டாட்டி மீண்டும் வம்பிற்கு வறாளா?”

``அய்யே..குடும்பப்பிரச்சனை இல்லை.. ஆபிஸில்..’’

`` என்ன, கோழ் சொல்லி போட்டுக்கொடுத்துட்டாளா?..” வழக்கமான பிரச்சனைகளையே கிளறினாள் லதா.

``அதுவும் இல்லை லதா.. சரி யூகிக்காதே, நானே சொல்கிறேன்.. புதிய துணிகளை வாங்கியதும், பழய துணிகள் அலமாரியை அடைத்துக்கொண்டிருந்தது. நேற்று எல்லாவற்றையும் கழித்து, அலமாரியைத் தூய்மைப்படுத்தினேன். அப்போது சேராத பல நல்ல துணிமணிகளை ஒரு பையில் கட்டி ஆபிஸுக்குக் கொண்டு வந்தேன், கிளினிங் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்துவிடலாமே என்று. பை பெரிதாக இருக்கவும், என்னால் தூக்க முடியல. சரி, அந்த கிளினரிடமே கார் கீ’யை கொடுத்து, காரில் இருந்து எடுத்துக்கொள்ளச்சொல்லலாமே என அவளைத் தேடினேன்..”

``அவளைக் காலையிலே தேடினால் கிடைப்பாளா..? அங்கேயும் இங்கேயும் போய் ஊர்கத பேசறவளாச்சே அவ.”

லதாவிற்கு இங்குள்ள நிலவரங்கள் பற்றி நன்கு தெரியும். ஏற்கனவே இங்கே வேலை செய்தவள் லதா. லண்டனில் இருக்கும் அம்மா நோய்வாய்ப்பட்டபோது, அங்கு சென்று அவரைக் கவனித்துக்கொள்வதற்கு, தொடர்ந்து சில மாதங்கள் விடுப்பு கேட்கவும், இதுபோன்ற நீண்ட விடுமுறைகளுக்காகான சட்டத்திட்டங்கள் இங்கே இல்லை என்று நிர்வாகம் சொல்லிவிட்டதால், வேறு வழியில்லாமல்  அரை மனதோடு வேலை விட்டுச்சென்று விட்டாள். அவள் இங்கே வேலை செய்த போது நாங்கள் இருவரும் இணைபிரியா தோழிகள். ஆக, சில விஷயங்களைச்  சொன்னவுடன் புரிந்துகொள்வாள் என்பது கூடுதல் தகுதி. மேலும் எனது சில நடவடிக்கைகளில் ஏற்கனவே தொடர்பு இருப்பதால், மீண்டும் `தாத்தா பாட்டி’ கதைகள் எல்லாம் சொல்லி ஆவியை வீணடிக்கின்ற வேலையெல்லாம் இருக்காது. சம்பந்தமே இல்லாத சிலரிடம் சொல்லுகிற போது, அவர் யார்? இவர் யாரு? இது எப்போ நடந்தது? அது எப்போ நடந்தது? மொதல்லே இருந்து சொல்லு, புரியல... விளங்கல.. என வாட்டி எடுப்பார்கள். அதனால் நம்மோடு சில செயல்களில் கூடவே இருப்பவர்களிடம் தான் பிரச்சனைகளைப் பகிரவேண்டும். எல்லோரிடமும் என்றால், சக்தி விரையமாகும். உதாரணம் : இலக்கியம் பற்றி அறவே வாசிப்பு பழக்கமில்லாதவர்களிடம் பேசுவது போல்..!  ஒருவர் கிடைத்தாலே போதும். ஆனால் அந்த ஒருவர் கிடைப்பதுதான் அபூர்வம். அதுவே சிக்கல்.

``ஆமாம் லதா. கண்டீனில் அங்கே உள்ள வர்க்க்ஸிடம் கதையளந்துக் கொண்டிருந்தாள். நான் நுழைந்தவுடன் அந்த கண்டீன் காரி வாளுவாளுன்னு சத்தம் போட ஆரம்பித்து விட்டாள். என்ன கதை என்றால், இந்த கிளினர் அடிக்கடி அங்கே போய் கதை பேசுவதால், அங்கே வேலை செய்பவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்யாமல் சாப்பாட்டில் உப்பு புளி மிளகாய் அதிகமாகப்போட்டு விடுகிறார்களாம். மெனெஜ்மெண்டில் அதிக கம்ப்ளெயின் போகிறது என என்னிடம் சொல்லி சத்தம் போட்டாள்.”

``அடியே கோவில்பட்டி வீரலட்சுமி சாரி விஜயலக்ஷ்மி, உடனே நீ என்ன பண்ணினாய்..!?”

``நான் என்ன பண்ணுவேன், எதையும் காது கொடுத்துக்கேட்காமல், பேசிக்கொண்டிருந்த கிளினரை அழைத்து, கார் கீ’யை அவளிடம் கொடுத்து, `காரில் துணிமணிகள் இருக்கு, போய் எடுத்துக்கோ’ என்று சொல்லி, அந்த கண்டீன்காரி கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததை அவளிடம் சொல்லி, `இனி அங்கே போகாதே, பிரச்சனை வரும்’ன்னு மட்டும்தான் சொன்னேன். அவ்வளவுதான் என் பங்கு. அதற்கப்புறம் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ எனக்குத்தெரியாது. அந்த பொம்பள வரிஞ்சி கட்டிக்கொண்டு வந்துட்டா சண்டைக்கு காலையிலே... `ஏய், நான் என்ன சொன்னேன், நீ என்ன வத்தி வச்சே.. இங்கேயும் அங்கேயும் சொல்றதுதான் உன் வேலையா? அவ வந்து அங்கே கத்தறா. எங்க ஆயி ஆத்தா வரைக்கும் இழுக்கறா..ஆச்ச போச்சா’ன்னு சத்தம் போடறா அந்த மனுசி.”

``ம்ம்ம்..தேவதான்..அப்புறம்?”

`` நான் பொறுமையா.. `நடந்தது என்னன்னு நிதானமா கேளு.. சத்தம் போடாதே. போஸ் வந்திடப்போறாரு. பிரச்சனையாகும், இது வீடு இல்லே’ன்னு நிதானமா சொல்றேன் கேட்க மாட்டேன் என்கிறாள். இஷடத்திற்கு வாயிற்கு வந்தபடி கத்துகிறாள்.., சமாதனப்படுத்திப்பார்த்தேன், பக்கத்து அறையில் உள்ளவர்கள் எல்லோரும் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. எனக்கு என்னமோ ஒண்ணு மண்டைக்கு மணியடிக்க.. பொறுமையை எழந்துட்டேன் `ஏய், உனக்கு என்ன கீலாவா, சொல்றதைக்கேட்க மாட்டே, அவ வெளியூர்காரி எதாவது உளறுவாள், உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை இப்போ, ஏன் என்னிடம் வந்து கத்துகிறாய்? உங்க போஸை அழைக்கவா? ஸ்டூப்பிட் இடியட், அறிவிருக்கா, இது என்ன உன் வீடா?, சண்டைப்போட ஆசையா இருந்தா, தெருவுக்க்ப்போ, உனக்கு மட்டும்தான் கத்த முடியும்னு நெனைக்கிறியா? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே உம்மனசுல, நீ சொன்னதைத்தானே நான் சொன்னேன், வேறு எதாவது புதிதாக உளறினேனா?  தைரியம் இருந்தா பின்னாடி பேசாதே, போய் அவளுக்கு நேராக பேசு.. கூப்பிடு அவளை. நான் என்ன சொன்னேன் என்று அவளே சொல்லுவாள். லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு பவ்யமா வேலைக்கு வருவதால், என்னை என்ன லூசுன்னு நெனைச்சியா? பக்கா லொக்கலு நானு, இறங்கினேன்.. நாறிடும் பிஞ்சிடும் ஜாக்ரதை..’ன்னு கத்திட்டேன். ஆபிஸே குழாயடி மாதிரியாயிடுச்சு.., நான் என்னமோ அந்த பொம்பலைய அடிக்கப்போறதா எல்லோரும் நினைச்சுக்கிட்டு, என்னை இறுக்கிப்பிடிச்சுக்கிட்டாங்க.. `வேணாம் மேடம் விடுங்க விடுங்க’ன்னு.. கொடுமை’லா படு டென்ஷன்..”

``அய்யையோ.. அப்புறம்?” லதா ஆர்வமாக கதை கேட்டாள்.

`` ஆடிப்போயிட்டா அவ.. குரல் தாழ்த்தி, `இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி குதிக்கிறீங்க மேடம்’ன்னு முகமெல்லாம் வெளிறி பயந்துட்டா. இந்த பவ்யம் மொதல்லே இருந்திருக்கணுமா இல்லையா? வெட்கம் நம்மவர்களோட.. ச்சே.”

``கடைசியா என்னதான் ஆச்சு..?”

``ம்ம்ம்.. அந்த பொம்பளையோட போஸ் போன் பண்ணினான். நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். மன்னிப்பு கேட்டான். அவள திட்டியிருப்பான் போலிருக்கு.. காப்பி கலக்கி எடுத்துக்கொண்டு வந்து, `குடி குடி.. சாரி கீரி’ன்னு காலில் விழாத கொறையா மன்னிப்பு கேட்டா.. காப்பியும் வேணா ஒண்ணும் வேணா போயிக்கோ’ன்னு முகத்தைத்திருப்பிக்கொண்டேன். அழுதாள்.. எல்லாம் சரியாயிட்ட மாதிரி ஒரு தோற்றம் வந்தது. ஆனாலும் எனக்கும் ஒரு ` வார்னிங் மெமோ’ வந்தது .. ஆபிஸில் ரௌடித்தனம் செய்கிறேன் என்று..தேவையா இதெல்லாம் எனக்கு.. !!?”

`` விஜி, எனக்கு ஒண்ணு தோணுது, சொன்னா திட்டுவ...!” பீடிகை போட்டாள் லதா.

``என்ன?”

``நீ போட்டிருக்கிற புதிய டிரஸ் உனக்கு ராசி இல்லை. சிகப்பு கலர் அசம்பாவித கலர். டேஞ்சர் கலர். இனிமே சிகப்பு கலர் டிரஸ் வாங்காதே.. நான் சொன்னா நீ நம்பமாட்டே. ஆனால் அதுதான் உண்மை. ப்ளீஸ் இனிமே அந்த டிரஸைப் போடாதே...’’

``நல்லா போடு முடிச்சு.. நீயும் உன் ஐதீகமும்.. லூசு..” முணகிக்கொண்டே போனை வைத்தேன்.

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

எல்லாமே தலைகீழ்



தீபாவளிக்கு curtain ஆடர் செய்து தைக்கக்கொடுத்திருந்தேன். பெரிய பிரபல  பேரங்காடியில் துணி வாங்கி அங்கேயே professional curtain  tailors களிடம் தைக்கக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு மாதத்திற்கு முன்  எல்லாம் ரெடி என அழைப்பு வரவும், வேலை முடிந்தவுடன்  அவசர அவசரமாகச் சென்று எடுத்து வந்து ஒரு இடத்தில் போட்டு விட்டேன், நம்பிக்கைதான்.

இன்று நேரமிருக்கவும் அதை எடுத்துப்பார்த்தால், எல்லாம் தலைகீழ். தையல் சரியாக இல்லை..மேலும் கீழுமாகத் தைத்து, அலங்கோலமாக இருந்தது பார்ப்பதற்கு. கோபம், கோபம்.. காரணம் விலை மலிவு அல்லவே...

அழைத்தேன் அந்த கம்பனிக்கு. ஒரு மலாய் பெண்மணி அழைப்பை எடுத்தாள். பேசுகிற நான் தமிழ்பெண் என்று தெரிந்தவுடன் ஒரு தமிழ்ப்பெண்ணிடம் அழைப்பைக்கொடுத்தாள்.

தமிழ்ப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இன்று ஞாயிற்றுக்கிழமை நாளை எடுத்துக்கொண்டு வாருங்கள், சூப்பர்வைசர் இருப்பார், அவர் செட்டல் செய்வார் கவலை வேண்டாம், என்றார். எல்லம் சரியே, ஆனால் தையல்காரி யார்? என்று கேட்டபோது, `ஒரு நாட்டுக்காரிதான்’ என்றார் பாருங்கள். எனக்கு கடுமையான எரிச்சல். அவள் நாட்டுக்காரி என்றால் நீ யார்?  அவர்களை (மலாய்க்காரர்களை) சிறுமைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு, நம்மை நாமே சிறுமை படுத்திக்கொள்வதுதான் எங்க ஊரில் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். பேசிக்கொண்டிருந்த விவரத்தை விட, இது இன்னும் கூடுதல் கடுப்பேற்றியது என்னை. நம்ம பெண்ணை கொஞ்சம் கண்டித்து, இனி மேல் அவள் நாட்டுக்காரி, இவன் நாட்டுக்காரன், என்கிற அடையாள அடைமொழி எல்லாம் வேண்டாம். நாம் எல்லோரும் வந்தேறிகள்தான். இப்போது இது நம் நாடு. அது எல்லோருக்கும் சொந்தம், என எச்சரித்து விட்டு,  தொலைப்பேசியை வைத்தேன்.

அதற்குள் என் மகன்.. `ஏம்மா எல்லார் கிட்டேயும் சண்டை போடறீங்க?’ என்றான். அவனும் என் கணவரும் ஒன்று. எதையும் தட்டிக்கேட்கக்கூடாது. பொருள்களில் சேதமென்றால், பரவாயில்லை பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமென்றே செய்தார்களா, எதோ தவறு நடந்திருக்கும் .. நாம் என்ன பர்ஃபெக்ட்’ஆ? என்கிற தத்துவமெல்லாம் பேசி, புதிதாக வாங்குவார்களேயொழிய ஒரு போதும் நியாயம் கேட்க படையெடுக்கமாட்டார்கள்.

எல்லோர் வீட்டிலும் ஆண்கள் இப்படித்தானா?

வியாழன், அக்டோபர் 25, 2012

பத்திய விடுதி

இன்று மதியம் வித்தியாசமான தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்தேன்.

மிகப்பெரிய எண்ணிக்கையில் மின்சாரப்பொருட்களை வாங்க எங்களின் கம்பனி ப்ரொஜெக்ட் ஜெனரல் மானேஜரை சந்திக்க வந்திருந்தார்.

சம்பந்தப்பட்ட அவ்வுயரதிகாரி உணவருந்திவிட்டு திரும்புவதற்கு வெகுநேரமானதால், என்னிடம் சில விவரங்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.

கம்பனியின் உற்பத்திப்பொருட்களின் தரம் பற்றியும், எங்களின் கம்பனிப்பொருட்களை அவர் இதுவரையில் பயன்படுத்தியதில்லை என்றும், பொருட்களில் பிரச்சனை என்று வரும்போது, விரைவு சேவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும், அதனின் உபரி பொருட்களின் விலை பற்றியும் அவைகள் சுலபமாக எங்கும் கிடைக்குமா என்பதையும், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது அதனின் கழிவு எத்தனை விழுக்காடு  வரை குறையும் என்பதனைப்பற்றியும் ஓர் அறிமுக உரையாடல் நிகழ்ந்ததுக்கொண்டிருந்தது எங்களுக்குள்.

நம்மவர் என்பதால் எனக்குத்தெரிந்த சில விவரங்களை பகிர்ந்துகொண்டிருந்தேன்.பேச்சுவாக்கில் கேட்டேன் `எதற்கு சார், இவ்வளவு ஏர்கோண்ட், டீவி மற்றும் காற்று தூய்மைப்படுத்தும் (air purifier)  கருவிகள், புதிதாக ஹோட்டல் எதும் திறக்கவிருக்கின்றீர்களா?’.  ஒவ்வொன்றிலும் எண்ணிக்கை தலா அறுபது வரை ஆடர் செய்ய, பட்டியலை கையோடு தயார் செய்து வைத்திருந்தார்..

`CONFINEMENT CENTRE ஆரம்பிக்கவுள்ளோம். முதலில் வீட்டில்தான் சிறிய அளவில் செய்து வந்தோம், இப்போது பிஸ்னஸ் வளர்ச்சியடைந்து விட்டது, வீடு கொள்ளவில்லை. நிறைய பேருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது, ஆறு மில்லியன் செலவில் இந்த  CONFINEMENT CENTRE கட்ட ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது. இரண்டு மாடி கடைவீடுகளைச் சேர்த்து வாங்கி முழுமையாக இதற்கே பயன்படுத்தி  அதைப் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றோம். கீழே முப்பது அறைகள், மேல் மாடியில் முப்பது அறைகள். எல்லா அறைகளிலும் ஏசி, டீவி, air purifier என பொருத்த உள்ளோம். கட்டும்போதே முழுமையாக இவற்றையெல்லாம் செய்துவிட்டால், பிரச்சனை குறையும், இல்லையென்றால் அதற்கென்று வரும் செலவு சங்கடம் இன்னும் அதிகமாகும்..’ என்றார்.



எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.  `CONFINEMENT CENTRE?? அப்படின்னா என்ன சார்?’ கேட்டேன்.

`ஆமாம், இங்கே உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்க, அதுவும் அநேகமா தமிழர்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். காரணம், இது சீனர்கள் மற்றும் மேலை நாட்டவர்களின் கலாச்சாரம். நமது அண்டை நாடான சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இந்த செண்டர் பிரபலம். சீனாவிலும் பரபரப்பாக இயங்கிவருகிறது. இங்கே நம் நாட்டை எடுத்துக்கொண்டால், நான் தான் முதல் முதலில் பெரிய அளவில் ஆரம்பிக்கவுள்ளேன். சிலர் தங்கியிருக்கின்ற வீட்டை விரிவுபடுத்தி லைசன்ஸ் எதுவுமில்லாமல் பணம் சம்பாதிக்க இந்த சேவையை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். கேள்விப்பட்டவரை பெரிய அளவில் செண்டர் திறப்பது நானாகத்தான் இருக்கனும். என் மனைவியின் (சீனப்பெண்) அம்மா சீன நாட்டுவைத்தியத்துறையில் கைத்தேர்ந்தவர். அதுவும் அத்துறையில் அவர் தேர்ச்சிப்பெற்றவர் என்கிற சான்றிதழ் எல்லாம் கைவசம் வைத்திருக்கிறார். வீடுவீடாகச் சென்று, பிரசவித்த பெண்மணிகளுக்கு சீன மூலிகை உணவுகளைத் தயார் செய்வது, பிறந்த குழந்தைகளைப் பராமறிப்பது, மகப்பேறு காலத்தில் தாய் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் களைவது, தாயயையும் சேயையும் பாதுகாத்துக்கொள்வது, போன்ற பல வேலைகளை பல வருடங்களாகச் செய்து வந்துள்ளார். என் மனைவி நவீன மருத்துவத் தாதி. பல மருத்துவர்களிடமும் எங்களுக்குத் தொடர்பு உள்ளது. இது அரிய வாய்ப்பாகவே பட்டதால் இந்த செண்டரை ஆரம்பிக்க நானும் துணிந்து விட்டேன். முக்கால்வாசி வேலைகள் முடியும் தருவாயில், கூடிய விரைவில் திறப்புவிழா நடைபெறும் கலந்துக்கொள்ளுங்கள்..’ என, அவரின் பெயர் அட்டையை என்னிடம் வழங்கினார்.

இத்துறை எனக்குப் புதுமையாகவும் சுவாரிஸ்யமாகவும் இருந்ததால் மேலும் தகவலறிய.. `ஓ, குழந்தை பிறந்தவுடன் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பத்தியமாக இருப்பார்களே, அந்த காலகட்டத்தில் தாய் சேய் போன்றவர்களைக் கவனித்துக்கொள்கிற நர்சிங் ஹோம் மாதிரியா? ’

`ம்ம்..ஏறக்குறைய அதுபோல்தான்..’

`அப்படியென்றால் நிறைய ஆட்களை வேலைக்கு வைக்கவேண்டுமே.!, அது என்ன லேசுபட்ட வேலையா? அந்த துறையில் கைத்தேர்ந்தவர்களை தேடி எடுத்து வேலைக்கு அமர்த்த வேண்டுமே.. கஷடம் இல்லெ..ம்ம்.!!’

`அப்படியெல்லாம் இல்லிங்க, அவங்க அம்மா இருக்காங்க, அந்த கால ஆயம்மா. என் மனைவி இருக்காங்க இந்த கால நர்ஸ், அதற்கு மேலே, பொதுவான உதவியாளர்கள் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக்கொள்ளலாம். பிரச்சனையில்லை. மெயின் வேலைகளை அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வார்கள், மற்ற மற்ற  உதவிகளை சாதரண வேலையாட்கள் செய்வார்கள்.’ 

மேலும் விவரமறிய..`எப்படிங்க, அங்கே வந்து பிரசவித்துக்கொள்வார்களா? ’

`அடடா, அது பிசவ செண்டர் இல்லிங்க. எப்படின்னா.. ஆஸ்பித்திரியில் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் சில தாய்மார்களுக்கு பணம் இருக்கும், ஆனால் முறையாக பாதுகாப்பு வழங்குகிற உறவுகள் இருக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே, குழந்தை பெற்றபின் எவ்வளவு வேதனைகளை ஒரு தாய் அனுபவிக்கின்றாள் என்று..! குழந்தையைத் தூக்கி பால் கொடுக்கக்கூட முடியாமல் சிரமப்படும் பெண்கள், ஆப்ரேஷன் மூலமாக குழந்தையைப் பிரசவித்த பெண்கள் சிலர் நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுவது, பிரசவம் முடிந்தவுடம் கடுமையான காய்ச்சல், பால்கட்டிக்கொண்டு வலி, பயங்கர முதுகுவலி, நரம்பு வலி, அடிபாதம் வலி போன்ற அவஸ்தைகள் சொல்லி மாளாது. சில பெண்கள் அப்படியே மனதில் வைத்துக்கொண்டு வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு, எல்லாம் தானே சரியாகிவிடுமென்று அமைதியாய் இருந்து விடுவார்கள். இதுபோன்ற காலகட்டத்தில் இவற்றிற்கெல்லாம் நாங்கள் நல்ல தீர்வு வழங்குவோம். வீட்டில் உள்ள யாவருக்கும் தொல்லை கொடுக்காமல், பெரிசுகளையும் துன்புறுத்தாமல், எங்களின் செண்டரில் ரெஜிஸ்டர் செய்துகொண்டு எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்..’

`நீங்கள் சொல்கிற தீர்வு என்பது?’ இன்னும் அதிகாரி வரவில்லை..பேச்சைத்தொடர்ந்தேன்.

`தாயிற்கு, நேராநேரத்திற்கு பத்திய உணவு சமைத்துக்கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியம் பேணுவது, நல்ல முறையில் குளிப்பாட்டுவது, சருமங்களைப் பாதுகாப்பது, உடம்பு பிடித்து விடுவது, நன்கு உறக்கம் கொள்ளவைப்பது. அதாவது குழந்தைகளை அவர்களின் அருகில் விடாமல் அவர்களை ஓய்வெடுக்கவைப்பது. சமசீர் உணவு வழங்குவது, அழுக்குத்துணிகளை துவைப்பது, மெல்லிசையில் தாலாட்டுவது, மூலிகை மருந்தளிப்பது போன்ற பராமறிப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறும். குழைந்தகளுக்கும் அதே போன்ற சேவைகளை வழங்குவோம், தாயிடம் தாய்ப்பால் உறிஞ்சுவதற்கு பயிற்சி அளிப்பது, அமைதியாகத் தூங்கும் முறைகளைப் பழக்குவது, வேளாவேளைக்கு பால் அருந்தக்கொடுப்பது, நோய் வராமல் பார்த்துக்கொள்வது, முறையாகக் குளிப்பாட்டுவது, என அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்வோம்...’ சொல்லிமுடித்தார், அவர் யாருக்காக காத்திருந்தாரோ அந்த அதிகாரியும் வந்துவிட்டார்.  இருவரும் மீட்டிங் அறைக்குள் நுழைந்தார்கள்.

எனக்கு ஆச்சிரியமாகவே இருந்தது. என்னன்னமோ சேவைகள். அந்த சேவைகள் அனைத்தும் என் கண்முன் நிழலாடின.

குழந்தை பிறந்த மறுகணம் எவ்வளவு அவஸ்தைகள். அம்மா பாட்டிமார்கள் பார்க்கிறேன் என இன்னும் கூடுதல் கொடுமைகளையல்லவா கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நம்மை நிம்மதியாகவே விடமாட்டார்களே.!

``நாங்களெல்லாம் அந்த காலத்திலே..எ.. எ.. எ.. வேலைக்குப்போய் வந்து வீட்டிலே பெத்துபோட்டோம். காலையிலே பெத்துட்டு, மாலையிலே காண்டா போட்டு வாளியில் தண்ணி தூக்கியிருக்கோம். பத்தியமெல்லாம் கிடையாது, வெந்தத சாப்பிட்டு விதியேன்னு கிடப்போம்.. ஆத்துல போய் துணிதுவச்சு கொண்டுவரணும். பதினாறு இருபது பேருக்கு மூணு வேளையும் சமைச்சுப்போடணும், புட்டி பால் எல்லாம் கிடையாது, மார்ல சொறக்கிற பாலத்தான் ஆறு வயசு வரைக்கும் குடுப்போம்.. ம்ம்ம், இப்போ என்னாடான்னா, பார்க்க ஆளு இருக்கு, ஆனாக்கா வீட்டுல வேலை செய்யவே நோவுது இதுகளுக்கு.. அங்க வலி இங்க வலின்னு கத்தறாளுங்க.. தொட்டா குத்தங்கிறாளுங்க. பெத்த புள்ளய தூக்கமாட்டேகிறாளுங்க.. நடக்க முடியலங்கிறாளுங்க, ஒரு புள்ள பெத்துட்டு இப்படி பெருத்து கிடக்கறாளுங்க, கண்டதெல்லாம் திங்கணுங்கிறாளுங்க, எண்ணெயில பொரிச்சதெல்லாம் விலாசறாளுங்க, வாயக்கட்டமாட்டேங்கிறாளுங்க, நொறுக்குத்தீனி திங்கறாளுங்க... எஹேம்ம்ம்.. !!!’’ இப்படி அலுத்துக்கொண்ட பெருசுகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க தம்கட்டி வலிகளைப்பொருத்துக்கொண்டு மனவுளைச்சலில் உழன்று அமைதி காத்துள்ளோம். இந்த மாதிரி ஒரு செண்டர் அப்பவே இருந்திருந்தால், உடலை நன்கு தேற்றியிருக்கலாம்.. நினைவுகளை அசைப்போட்ட வண்ணம் கண்கள் எதையோ கணினியில் தேட, ஒரு மணி நேரங்கழித்து..

 `சரிங்க பேசியாச்சு..quotation கொடுக்கறேன் என்றிருக்கார். பார்ப்போம்.. அப்ப நான் கிளம்பறேன். எதுவொண்ணுன்னா கூப்பிடுங்க.. யாராவது இருந்தா ரெகமெண்ட் பண்ணுங்க, என்னுடைய பெயர் அட்டையை கூடுதலாக கொடுக்கிறேன், விசாரிப்பவர்களுக்கு கொடுங்கள், சரியா..!’ என்று சொல்லி விடைப்பெற்றவரை அழைத்து..

` பீஸ் எவ்வளவு வருங்க ஒரு மாசத்திற்கு?’

`நம்ம பணம் நாலாயிரத்தி எண்ணூறு (RM4,800) வெள்ளிங்க.. !’

@#$%^&

நல்லவேளை.. அம்மாவிற்கு நான் வெறும் நூற்றைம்பது வெள்ளிதான் கொடுத்தேன்.. என்னையும் குழந்தையையும் குளிப்பாட்டி விட்ட  பாட்டிக்கு ஒரு புதுப் புடவை மட்டுமே..