செவ்வாய், நவம்பர் 12, 2013

ஒலிக்காத இசை

நாய்கள் சொல்லும் 
அதன் பாஷையில்
மனிதன், 
குரைத்துக்கொண்டிருக்கிறான்..

%%%%%%

காற்று அப்படியே நிற்கிறது
உடலுக்குள் உஷ்ணம் தான் 
அசைகிறது..

%%%%%%%

எனக்குள் இயங்குகின்ற 
இசை..
எங்கும் ஒலித்ததில்லை
இதுவரை..

%%%%%%%

Pose கொடுக்காதபோது
click செய்யப்பட்ட புகைப்படத்தில் 
நானும் பேரழகியே... குழந்தைபோல்.!

%%%%%%%


செவ்வாய், அக்டோபர் 29, 2013

பட்டாசு தடை


 காலையில் வெடிக்காதே;
வேலையத்தவன் வெடிக்கிறான் பாரு
என்பார்கள்..

மதியம் வெடிக்காதே;
கைக்குழந்தைகள் உறங்கும்
தொந்தரவு

மாலையில் வெடிக்காதே;
வேலை முடிந்து ஓய்வெடுப்பவர்களுக்குத்
தொல்லை..

இரவில் வெடிக்காதே;
ஆட்கள் உறங்குகின்றார்கள்

பட்டாசுகளை வாங்கிக்கொடுத்த
தந்தை போடும் கட்டளை இது..!

வெடி வெடிப்பவர்களுக்கு
அபராதம்
அரசாங்கம் ஏற்கனவே போட்டுவிட்டது
தடை உத்தரவு

எதையும் வெடிக்காமல்
வெடிகளைப்  பத்திரமாக வைத்துக்கொண்டு
ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றான்
பையன்

தீபாவளிக்காக..

செவ்வாய், அக்டோபர் 15, 2013

TAX

காலையிலே ஒரு கூத்து.

நான்கு நாட்களுக்கு முன் தமிழ்நாடு சென்று, இன்று காலையில்தான் ஊர் திரும்பினோம்.

திருச்சியிலே நான்கு நாள்கள். காலையில் கோவில் செல்வது, மூக்கப்பிடிக்க செட்டிநாட்டு உணவுகளை ஒரு கட்டு கட்டுவது, மாலைமுழுக்க ஷாப்பிங். வழி நெடூக பொறுக்கித்தின்பது. ஹோட்டல் வருவது, காப்பி டீ என ஆடர் கொடுத்து விலாசுவது. மீண்டும் இரவு ஷாப்பிங்....

ஷாப்பிங் என்றால் ஷாப்பிங் அப்படிப்பட்ட ஷாப்பிங். கவரின் நகைகள் தொடங்கி, சவரி கூந்தல் வரை எதையும் விட்டுவைக்கவில்லை.

நேற்றிரவு ஒவ்வொருவரின் லக்கேஜும் சும்மா டன் கணக்கில் ஆள் அடி உயரத்தில் நிற்கிறது.

அவரவர் அறைகளுக்குச் சென்று லக்கேஜ்’களைப் பார்த்துவிட்டு மிரண்டுபோனார் என் கணவர். ( `கூட்டத்தின்’ பாஸ்.)

பார்த்துக்கோங்க, ஒரு ஆளுக்கு இருபது கிலோ’தான். அதற்கு மேல் சென்றால் ஃபையின் கட்டவேண்டிவரும். அதுவும் தமிழ் நாட்டு கஸ்டம்ஸ்கள் கையில் மாட்டினால் கஸ்டம்தான். ஃபிளைட்டே பறந்துவிடுகிற அளவிற்கு யாரைப்பற்றியும் கவலையில்லாமல் லேட் ஆக்குவார்கள். மலேசியா என்றால், நமக்கு ஆள் இருக்கு. இங்கே யாரையும் தெரியாது.... அங்கே போ, இங்கே போ என்று ஆளாளுக்கு ஆடர் செய்வார்கள். கவனம். என்றவுடன், நிறுவையை வரவழைத்து, சரியாக நிறுத்து, எல்லோருக்கும் இருபது கிலோ வரும்படி சரி செய்துகொண்டார்கள். சாமார்த்தியமாக.!

திருச்சி ஏர்ப்போட்டில் தப்பித்தோம். யாருடைய லக்கேஜ்’யும் `திற, பார்க்கவேண்டும்’ என்று எந்த அதிகாரியும் சொல்லவில்லை. நிம்மதியுடன் விமானம் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம். இரவு ஏறி விடியற்காலையில் இறங்கினோம். இரண்டரை மணி நேர வித்தியாசத்தில் இருப்பினும், ஒரு நாள் இரவு முழுக்க ஏர்ப்போர்ட்டிலும், விமானத்திலும் ஆகாயத்திலும் கழிந்தது எங்களின் பொழுது.

விமானத்தில் எல்லோரும் தூங்கினாலும் எங்களுக்கு மட்டும் உறக்கமே வராது. பயம்..பயம்..பயம். கண்களை மூடினால், விமானம் தலைகீழாகப்பறப்பதைப்போன்ற பிரம்மை. இல்லாத கெட்ட கற்பனையெல்லாம் அப்போதுதான் வரும். வரணும், இல்லையேல் நாம் மனிதரல்ல.. :P

தூக்கக்களைப்பில் கோலாலம்பூர் ஏர்ப்போட்டில் இறங்கியவுடன், மழை வேறு கொட்டோ கொட்டுன்னு கொட்டியது. அங்கேயும் இங்கேயும் ஓடி, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் நடந்து, லக்கேஜ் எடுத்துக்கொண்டு கிளம்புகிறபோது, எங்களின் கஸ்டம்ஸ் ஆபிஸர்கள், எங்கள் அனைவரையும் ஒரு ஓரமாக வரச்சொல்லி, பேக்’கில் என்ன உள்ளது? என்ன வாங்கினீர்கள்? பில் இருக்கா? காட்டுங்கள்... என்று டார்ச்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

எங்கம்மா ஒரு புறம், மலாயும் தமிழுமாக கலந்துகட்டி விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். எங்க வீட்டுக்காரர் ஒரு புறம் விளக்கம் கொடுத்துக்கொண்டு.! என் தங்கை, இந்த ஆபிஸர் தெரியுமா? எங்க மாமா. அந்த ஆபிஸர் தெரியுமா? எங்க உறவு. இவரைத் தெரியுமா? எங்க நண்பர்.. என கபடி விளையாடிக்கொண்டிருந்தாள். எனக்கோ.. வீட்டிற்குச்சென்று தூங்கலாம் என்கிற சிந்தனையில் மண் விழுந்துவிட்டதே.. என்கிற ஆதங்கம்.

தூக்கக்கலக்கத்தில் இருந்து பாருங்களேன். தூக்கத்தைத்தவிர வேறு எந்த சிந்தனையும் வராது.

என்னன்னவோ சொல்லிப்பார்த்தோம் அசரவில்லை ஆபிஸர்கள். அங்கேயும் இங்கேயும் அழைத்துப்பார்த்தோம். காலைவேளை, பொதுவிடுமுறை வேறா.! நண்பர்கள் உறவுகள் அனைவரும் தூக்கத்தில், தொலைபேசியை எடுக்கவேயில்லை.

பெரிய ஆபிஸரை அழையுங்கள் பேசவேண்டும் என்று கணவர் கூற, பெரிய ஆபிஸரும் வர. தர்க்கம் தொடர்ந்தது.. தமிழர்கள் என்றால் இளக்காரமா? எல்லோரையும் அனுப்பிவிட்டு எங்களை மட்டும் ஏன் நிறுத்திவைத்துள்ளீர்கள்?  நாங்கள் முதல் முறை செல்லவில்லையே.! பலமுறை சென்று வந்துள்ளோம். இப்போதுமட்டும் எதுக்கு டக்ஸ்.?, அதுவும் வாங்கிய பொருட்களின் விலையில் இருந்து முப்பது விழுக்காடு? மிக மிக அதிகம். குறையுங்கள். பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. என்று சொல்ல.. (பணிவான தொனியுடன்). பேசி கீசி, ஆக குறந்த அளவில் டாக்ஸ் பெற்றுக்கொண்டு, இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் விட்டார்கள் எங்களை.

எங்கம்மா - குழாயடி சண்டைக்காரியைப் போல், புடவையை வரிந்துகட்டுக்கொண்டு.. குரலை உயர்த்தி....!!!!! ம்ம்ம்ம், ஆபிஸர்களிடம் இதெல்லாம் செல்லுபடியாகுமா? அம்மாவின் அண்ணன் கூட கஸ்டம்ஸ் ஆபிஸர்தான். பதினைந்து வருடங்களுக்கு முன்.!  அவரே ஒரு ஹிட்லர். அவரிடம் சொல்லிவிடுவாராம்..அம்மா. அவருக்கு விவரம் சென்றிருந்தால், அனைவருக்கும் செம டோஸ் கிடைத்திருக்கும். காரணம் அவர் ஒரு ரூல்ஸ் மாஸ்டர்.

சரி அப்படி இப்படி பேசி கட்டணம் செலுத்தி வெளியே வருகிறபோது, என் தங்கை, எங்களிடம் வரி வசூல் செய்த அதிகாரியின் அருகில் சென்று, `உங்க பேர் என்ன?’ என்று கேட்க. அவர், இந்தா பார்த்துக்கோ, பெயரை விட, டாக் நம்பர் முக்கியம். எடுத்து  மேலிடத்தில் புகார் செய்யவும் என்றார். மூடிக்கிட்டு விட்டா போதும்னு வந்திட்டோம்...

செவ்வாய், அக்டோபர் 01, 2013

மாதவிடாய்

மாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு பெண் சுறுசுறுப்பாக களையாகவே இருப்பாள். மெனொபோஸ் (MENOPAUSE) ஆனவுடன் சில உபாதைகள் வரும் இருப்பினும் தகுந்த பராமரிப்பு விழிப்புணர்வு இருந்துவிட்டால் அதையும் சரி செய்யலாம்.

உடம்பிலிருந்து வேர்வைமலம்சிறுநீர் வெளியாவதைப்போல் இதுவும் உடலிலிருந்து வெளியேறும் ஓர் கழிவுதான்.

மாதத்திற்கு ஒருமுறைபெண் கர்ப்பம் தரிக்கும்  காலகட்டத்தைத் தவிர்த்து  மற்ற அனைத்து மாதங்களிலும் மாதவிடாய் கண்டிப்பாக வரவேண்டும். அப்படியில்லையேல் உடலில் எதோ சிக்கல் உள்ளதென்றும் அல்லது மெனோபொஸ் காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்று அர்த்தப்படும். சிலருக்கு நாற்பது வயது வந்தவுடன் மெனொபோஸ் அறிகுறிகள் தென்படத்துவங்கிவிடும். ஒன்றும் பிரச்சனையில்லை. மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகள் என்பது சமாளிக்கக்கூடியதே.

அதுவரையில் மாதவிடாய் காலகட்டத்தின் போது சில வேதனைகளைப் பெண்ணாகப்பட்டவள் அனுபவித்தே ஆகவேண்டும். இதை எதற்காக வேதனை என்கிறோம் என்றால்மாதவிலக்கின் போது பெண்களின் உடல்களில் ஏற்படுகிற வலி உபாதைகளைச் சொல்லி மாளாது. இது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடலாம். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கின்ற வேதனைகள் அனைத்தும் ஒரே மாதிரியானதுவே.

மாதம் ஒருமுறை வெளியேறுகிற  இந்தக் குருதிப்போக்கின் போதுசில பெண்கள் வேலைக்கு விடுப்பு எடுத்து ஓய்வு எடுத்துக்கொள்வார்கள். சில பெண்கள் எதாவதொரு தைலத்தைக்கொண்டு உடல் முழுக்கப்பூசிக்கொண்டே இருப்பார்கள். சிலர் தூங்கிக்கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சில பெண்கள் வாந்தி எடுப்பார்கள். சிலர் வலிபொறுக்கமுடியாமல் கதறி அழுவார்கள். குறிப்பாக; ஆரம்ப காலகட்ட மாதவிடாய் என்பது கன்னிப்பெண்களைப் பாடாய்படுத்தி விடும். நாங்களெல்லாம் சுவரில் குத்திக்கொண்டும் தரையில் புரண்டுகொண்டு அழுது வடிந்த காட்சிகளைக் கண்டுஉடன்பிறப்புகளே அரண்டுபோயிருக்கின்றனர்.

மாதவிடாயின் போது ஏற்படுகிற வலியினைப் போக்குவதற்கு சிலர் வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பார்கள். எல்லாக் காலகட்டத்திலும்  தமது கைப்பையிலேயே தயார் நிலையில் வாங்கி   வைத்திருப்பார்கள் இம்மாத்திரைகளை. மாதவிடாய் வருகிறது என்கிற அறிகுறிகள் தென்படத்துவங்கியவுடன் மாத்திரைகளை விழுங்கிக்கொள்வார்கள். மாத்திரைகள் கொஞ்சம் கேட்கும், வலி முற்றாக நீங்கிவிடுமென்பதெல்லாம் சும்மா.!

வலி எப்படி இருக்கும்?

சரிஇதன் வலி எப்படி இருக்கும்?  சில ஆண்கள் நினைப்பார்கள்வலி வலி என்கிறார்களேஅந்த வலி எப்படித்தான் இருக்கும்?

அடிவயிற்றில் இரண்டு கைகளைக்கொண்டு உள்ளே இருக்கின்ற கர்ப்பப்பையை பலங்கொண்டு யாரோ சதா பிசைவதுபோலவே இருக்கும் அதன் வலி. வலி விட்டு விட்டு வரும். கொஞ்ச நேர அமைதிக்குப்பிறகு மீண்டும் வலி ஆரம்பமாகும். மாதவிடாயின் போது முதல் இரண்டு நாள்கள் இவ்வலி இதே அளவில் தொடரும்.

திருமணமாகி குழந்தைகளுக்குத் தாயான பிறகு பெண்களுக்கு அவ்வலி கொஞ்சம் குறையலாம். இருப்பினும், ஆளுக்கு ஆள் மாறுபட்ட நிலையிலேயே இவ்வலியினை எதிர்நோக்கியே ஆகவேண்டிய கட்டாயநிலையில் சில பெண்கள்.

வயதுக்கு வருதல்..!

சினிமாவில் காட்டுவதைப்போல்பூப்பெய்திய மறுநொடிஅப்பெண்குழந்தை வயிற்றைப்பிடித்துக்கொண்டு கதறுவாள்பிறகு மொட்டுவிரிகிற மலர் ஒன்றினைக்காட்டுவார்கள். அதன்பின் தாய்மாமன் மச்சான் எல்லாம் தென்னை ஓலைகளைக் கொண்டுவந்து குடிசை எல்லாம் போட்டு விஷேசமெல்லாம் நடைபெறும். (நம்மவர்கள் மட்டும்தான் இன்னமும்..)

இது அப்பட்டமான கட்டுக்கதை. முதன் முதலில் வயதிற்கு வருகிறஅதாவது ஆரம்ப இரத்தப்போக்கு ஏற்படுகிறபோதுபெண்பிள்ளைகளுக்கு வயிற்றுவலி எல்லாம் இருக்காது. எதோ ஒரு திரவம் வழவழவென சுறந்திருப்பதை அவள் உணர்வாள்ஒன்றும் அறியாத பெண் என்றால் உடைகளை எல்லாம் இரத்தப்போக்கினால் உழப்பிக்கொண்டு என்ன ஏது என்று தெரியாமல் மிரண்டுபோவாள். விவரமறிந்த பெண் என்றால்காதும் காதும் வைத்தாட்போல் தாயிடம் சொல்லி அடுத்தக்கட்ட நிகழ்விற்குத்தயாராவாள்.

அதன்பின்ஒரிரு மாதங்கள் கழித்து மாதவிலக்கு ஏற்படுகையில் வலி ஆரம்பமாகும். லேசாகத்தான் வலிக்கும்மாதங்கள் செல்லச்செல்ல பிடுங்கி எடுத்துவிடும் வலி. கை கால்கள் எல்லாம் நடுங்கும். முகம் வெளிறிப்போகும். மயக்கம் வரும்வாந்திவரும். எதிலுமே நாட்டமில்லாத நிலை ஏற்படும். சில பெண்கள் உணவு கூட எடுக்க `மூட்’ இல்லாமல் நாள் முழுக்க பட்டினியாகவே கிடப்பார்கள். சரியான உணவுமுறை இல்லாதவர்களுக்கு முகமெல்லாம் முகப்பருக்களால் நிறைந்துவிடும். தூய்மை பேணாத பெண் என்றால் உடலில் இருந்து துர்வாடை வேறு வீசும். இதுபோன்ற காலகட்டத்தில் பெண்கள் குறைந்தது  இரண்டு மூன்று முறையாவது குளித்துவிடுவது நல்லது.

மாதவிலக்கு என்றால்?

அதுசரிஏன் மாதவிடாய் வருகிறதுசில ஆண்களுக்கு இதில் இருக்கின்ற ஆர்வமும் ஆய்வுமனப்பான்மையும் பல பெண்களிடம் இருப்பதில்லை. பலர் இதுகுறித்த சந்தேகங்களுக்கு விடைகாணாமலேயே இருந்து விடுகிறார்கள். உடலில் சேர்கிற அசுத்தம் இரத்தத்தின் வழி வெளியேறுகிறதென்று சொல்லி மழுப்பிவிடும் பெண்கள்தான் அதிகம்இன்னமும்.

சித்தர்கள் இராச்சியம் - தோழியின் ப்ளாக்கில் படித்த தகவலை உங்களிடமும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையையும் அதனைப் பாதுகாக்க வேண்டி உருவான நீர்மங்களும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழி குருதிப்போக்கு ஏற்படுவதையே மாதவிலக்கு என்கிறோம். இத்தகைய போக்கு குறிப்பிட்ட நபரின் உடல் அமைப்பினைப்பொருத்து மூன்று அல்லது ஏழு நாட்கள் வரை தொடரும். சுருங்கக்கூரின் - பெண்ணின் சூலகத்தில் உருவாகின்ற கருமுட்டையானது வளர்ச்சி அடைந்து முதிர்ந்த நிலையில் கருப்பையில் வந்து சேர்கிறது. இவ்வாறு வந்துசேர்கிற கருமுட்டையை பாதுகாக்கவேண்டி கருப்பையானது சில நீர்மங்களை உருவாக்கி கருமுட்டையினை பாதுகாக்கிறது. மேலும் கருவறைக்குள் அவைகள் தடித்து கருமுட்டையின் வளர்ச்சிக்கு தேவையான குருதியை நிரப்பிவைக்கிறது. இக்காலகட்டத்தில் கருதரிப்பு நிகழாவிட்டால் அந்த கருமுட்டையானது சிதைந்து அழிந்து கருப்பை உருவாக்கிய நீர்மங்களோடு சேர்ந்து குருதியாக வெளியேறுகிறது. (நன்றி தோழி)

இதுதான் மாதவிடாய். இதைத்தீட்டாகவும்இதனால் கோவிலுக்குச்செல்லக்கூடாது எனவும்நல்ல காரியங்கள் நடைபெறுகிறபோது கலந்துகொள்ளக்கூடாது எனவும்நாயிற்கு சோறு போடக்கூடாது எனவும்துளசி பூ போன்றவற்றில் கைப்படக்கூடாது பறிக்கக்கூடாது எனவும்.. புதிதாகப் பிறந்த குழந்தையை தூக்கக்கூடாது கொஞ்சக்கூடாது எனவும்..... வயதுக்கு வந்த நாளை குறித்துவைத்துக்கொண்டு பஞ்சாங்கம் ஜாதகமெல்லாம் பார்ப்பது எனவும்... இன்னும் இன்னும்..!! நம் இனத்தில் தான் இத்தனை அக்கப்போர்கள். உதிரப்போக்குவை தீட்டு என்றும் வீட்டிற்கு தள்ளி நில்லுதல் என்றும்வயதுக்கு வந்த நாள் சரியில்லை என்று சொல்லி பரிகாரம் செய்வது என தொடர் கூத்துகள் தான் எத்தனை எத்தனை.!  

நாகரீகம் வளராத காலகட்டத்தில் தூய்மை கருதி அப்படிச்சொல்லியிருக்கலாம் இருப்பினும் தற்போதைய சூழல் என்பது பலவித வடிவங்களின் `சனிட்டரிபேட்கள் (SANITARY PADS) தயாராகி இருக்கின்ற காலத்தில் வாழ்கின்ற நாம் இன்னமும் தீட்டு லொட்டு என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.

`PAD' பயன்பாடு இல்லாத காலகட்டம்.!

முன்பெல்லாம்முப்பது வருடத்திற்கு பிந்திய காலகட்டத்தில், sanitary pad பரவலான பயன்பாட்டில் இல்லை. இல்லை என்பதைவிட நடுத்தரவர்கத்துப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு  ஏற்படுகிற போது  பெரும்பாலும் கிழிந்த பழைய துணிகளைத்தான் பயன்படுத்துவது வழக்கம். குடும்பத்தில் ஐந்தாறு பெண்கள் இருந்து விட்டால் மாதமுழுக்க அந்தக் கிழிந்த துணிகள் கொடியில் உலர்ந்தமேனியாகவே இருக்கும் ஒரு வித கவுச்சி வாடையை வீசிக்கொண்டு.

முன்பு நாங்கள் வசித்த இடம் ஒரு புறம்போக்கு வரிசை வீடமைப்புப் பகுதி (கம்பம்). அங்கே வீட்டுக்குவீடு கழிவறை வசதி எல்லாம் கிடையாது.  இரண்டிற்குச் செல்லவேண்டுமென்றால் பொதுக்கழிவறைக்குத்தான் செல்லவேண்டும்தான். மாதவிடாய் காலகட்டத்தின் போது இரவு நேரங்களின் தீராத வயிற்றுவலியின் காரணத்தால் கழிவறை செல்லவேண்டும் போல் இருக்கின்ற தருணத்தில் நாங்கள் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. இரவில் இருளில் எங்கே வாளியைத்தூக்கிக்கொண்டு பொதுகழிவறைக்களுக்குச் செல்வது.!நீர் வசதிவேறு இருக்காதா...! அந்த அசிங்கமான சுழலை நினைத்துப்பார்ப்பதற்கே கூசுகின்ற வேளையில் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை..!!

தூய்மை பேணுதல்..

இந்த சனிட்டரிபேட்ஐ குப்பையில் வீசுகிற வேலைகளை பல பெண்கள் சரியாகவே செய்வதில்லை. முறையாக வீசுவதற்கு அலுவலக கழிவறைகளில் அதற்கென்று இருக்கின்ற ரசாயணக் கூடங்களில்   அவைகளைப்போடாமல்கழிவறை குழியினுக்குள் போட்டுவிட்டு `ப்ளஷ்’ செய்துவிடுகிறார்கள். இதனால் எவ்வளவு பெரிய பாதிப்புகளையும் தூய்மைக்கேடுகளையும் சந்திக்கநேரும் என்கிற தெளிவே இல்லாமல் இருப்பவர்கள் இன்னமு இருக்கத்தான் செய்கிறார்கள்.

நம் வீட்டில் பெண்கள் யாராவது வந்து தங்கிக்கொள்கிற சூழல் ஏற்பட்டுவிட்டால்ஒவ்வொருவருக்கும் இதைப்பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்கவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். ஒரு நாளைக்கு எத்தனை முறை PADகளை மாற்றவேண்டும். மாற்றாமல் காலையில் போடுவதை மாலை வரை பயன்படுத்திக்கொண்டிருந்தால்பிறப்பு உறுப்புகளில் தொற்றிக்கொள்ளும் கிருமிகள் அங்கே தோல்வியாதியினைக் கொண்டுவரும் போன்ற தகவல்களையெல்லாம் சொல்லிக்கொடுத்துள்ளேன். எப்படி தூய்மைப்படுத்தி பொட்டலங்கட்டி குப்பையில் வீசுவது, போன்ற விவரங்களை `டெமோ’ செய்கிற வேலைகளையெல்லாம் பொதுச்சேவையாக நான் செய்துள்ளேன். சில பெண்பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அவைகளைக் கண்ட கண்ட இடங்களில் வீசி பழக்கப்படுத்தியிருப்பதால்அவர்களும் இந்த மதவிடாய் `PADஐ இஷடம்போல் பக்கத்துவீட்டு கொல்லைப்புறத்தில் வீசிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஏற்கனவே என் வீட்டில் தங்கியிருந்த ஒர் இளம்பெண்தமது மாதவிடாய் பஞ்சுவைகழிவறையில் போட்டு ப்ளஷ் செய்துவிட்டு கமுக்கமாக இருந்துஅவளின் பயிற்சி காலகட்டம் (ஒரு வேலையின் பயிற்சிற்காக என் வீட்டில் கொஞ்ச காலம் தங்கியிருந்தாள்..) முடிந்தபின்பு மூட்டையைக்கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

ஒரு நாள் வீட்டில் வெள்ளம். கழிவறை மலமெல்லாம் மிதந்து சமையலறை பக்கம் வரத்துவங்கிவிட்டது. என்ன பிரச்சனையாக இருக்குமென்றுகழிவறை சுத்தம் செய்கிறவர்களை அழைத்து சரிசெய்யச்சொல்லும் போதுதான் தெரிந்தததுஉள்ளே அவ்வளவு PADகள் அடைத்துக்கொண்டுள்ளன என்று.! தமது உதிரப்போக்கு பஞ்சுவை தாமே கையில் ஏந்தி தூய்மைப் படுத்துவதற்கு அருவருப்பு கொண்டு சுலபமாக அவைகளைக் கழிவறையில் வீசிச் சென்றுள்ளாள் அப்பெண்.

இன்னமும் இதுபோன்ற பொறுப்பற்ற பெண்பிள்ளைகள் இருக்கவே செய்கிறார்கள். என்ன செய்ய.?

சிலர் குப்பைக்கூடங்களில் கூட இவைகளைச் சரியாகப்போடாமல் பூனை நாய்கள் அவைகளை வெளியே இழுத்து அசிங்கப்படுத்தி விடுகிற நிலை ஏற்படுவதையும் காணலாம். கோழிகளும் அவைகளைக் கொத்திக்கொண்டிருக்கும். !


SANITARY PAD எத்தனை வகைகள் உள்ளன என்பது பற்றித் தெரியுமா உங்களுக்குஎனக்குத்தெரிந்த சில:-

* சாதா PAD
* மருந்து வைத்து கிருமிகளை அழிக்கவல்ல PAD.
* மிக நீளமான PAD.
* மிக மெலிதான PAD. போட்டதே தெரியாமல் இருப்பதைபோல்     இருக்கும். அதிகவிலையுள்ள பெட் இது.
 * இரவு வேளைகளில் மட்டும் பயன்படுத்தும் PAD.
 * மிக மலிவான PAD.
 * நமது நடுவிரல் அளவில் உள்ள PAD. ஐஸ்கிரீம் குச்சிபோல்  இருக்கும். பிறப்பு உறுப்புக்குள்ளே நுழைத்துக்கொள்வது. (விடாமல்  கொஞ்சம் கொஞ்சமாக உதிரப்போக்கு உள்ளவர்கள் பயன் படுத்தும் PAD இது.)
 * உள்ளாடைகள் (underwear) பயன்படுத்தாமல் போட்டுக்கொள்கிற PAD  (இடுப்பில் வைத்துக் கட்டிக்கொள்வார்கள்.) குழந்தை பெற்ற தாய்மார்கள் பயன்படுத்தும் PAD இது.

அனுபவம்...!

பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தின் போது ஏற்படுகிற அனுபவங்களைத்தொகுத்தால் ஒரு மாபெரும் பொக்கிஷ ஏடு ஒன்றினைத்தயாரித்துவிடலாம். சுவாரஸ்யமான தகவல்களைப் பலரிடமிருந்து பெறலாம். ஆட்சேபனை இல்லாமல் பகிரநேர்ந்தால்...!

எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்று. தமிழ்நாடு பயணத்தின்போது ஒருமுறை எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. காலநேரம் நெருங்காத பட்சத்தில் நானும் தயார் நிலையில் இல்லாததால்முக்கியமான பொருளான PADஐ எடுத்துவைக்கத்தவறிவிட்டேன்.

பிரயாண அலைச்சலில் போகிற இடமெல்லாம் உடலின் ஏற்பட்ட குலுங்கலின் காரணமாக பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே எனக்கு மாதப்போக்கு வந்துவிட்டது.

காரில் பயணம் செய்துகொண்டிருக்கும்போதுயாரிடமும் இதைப்பற்றிச் சொல்லாமல் காரைக் கடையோறங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டு நானே இறங்கி கடைக்காரர்களிடம், PAD இருக்கா?’ என்றேன். நான் என்ன கேட்கிறேன் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் தெரியாததுபோல் இருக்கின்றார்களாஅல்லது நிஜமாலுமே(!) தெரியாது என்பதால்தான் முழிக்கின்றார்களாஎன எனக்கே சந்தேகம் வரும் வகையில் அனைவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கத்துவங்கிவிட்டார்கள்.! என்னங்க இதுஅக்கா தங்களைகளோடு பிறக்கவில்லையா என்னஇதுபற்றி ஒன்றுமே தெரியாத நிலையிலா இருப்பார்கள். சில கடைக்காரர்களிடம் இப்பொருள் விற்பனைக்கு இல்லைவே இல்லை. சில கடைக்காரர்களுக்கு `அது’ என்னவென்றே தெரியவில்லை. சிலர்நான் எதோ அசிங்கமான வார்த்தையை அவர்களிடம் பேசிவிட்டதைப்போல்என்னை முறைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர், `போம்மா எங்கே வந்து என்ன கேட்பதென்றே தெரியவில்லை உனக்கு’ என்று முகத்தில் அறைந்தாட்போல் சொல்லிவிட்டார்கள்.

வயிற்றுவலி ஒருபக்கம்பொருள் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் ஒருபக்கம். போட்டிருக்கின்ற ஆடையெல்லாம் வீணாகிவிடுமோ என்கிற கலக்கம் ஒருபக்கம்.. நம் நாட்டின் (மலேசிய) பெருமையை அன்றுதான் உணர்ந்தேன். இங்கே திரும்புகிற திசையெல்லாம் வெகு சுலபமாக கிடைக்ககூடிய ஒரு பொருளைத் தேடிதிருவண்ணாமலை வரை அலைந்தேன். வேறுவழி இல்லாமல்ஓட்டுனர் அண்ணனிடம் தகவலைச் சொல்லிய பின்அவர் ஒரு கடையின் வாசலின் நிறுத்தி இங்கே கேட்டுப்பார் கிடைக்கலாம் என்றார். நானும் கடையில் நுழைந்து அங்கே கல்லாவில் அமர்ந்திருந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் திருதிருவென விழித்துவிட்டு அருகில் நின்ற பெண்ணை அழைத்தார். அப்பெண் என்னைத் தனியாக அழைத்துச்சென்று, `என்னக்கா நீங்கஇதைப்போய் அவரிடம் கேட்டுக்கிட்டு. உங்களுக்கு வெட்கமே இல்லையா.என்று சொல்லிஒரு காகிதத்தை எடுத்துஅதை அதில் வைத்து பிரியாணியைப் பொட்டலங்கட்டுவதைப்போல் பொட்டலங்கட்டி என்னிடம் கொடுத்தார்..... ஷப்ப்ப்ப்பா எனக்கு மயக்கமே வந்துவிட்டது. இன்னும் வளரணும் நம் சமூதாயம்.

பெண்களின் மாதவிடாயை ஏன் இப்படி மூடிமறைத்து தகிடதத்தோம் வேலை செய்கிறார்கள் என்றுதான் புரியவேயில்லை. கழிவறை செல்கிறோம்அங்கே சில ஆண்கள்தானே பெண்களிடமும் வசூல் செய்துகொண்டு வழிவிடுகிறார்கள். அதுபோல் மாதவிடாயும் ஒரு கழிவுதானேபிறகெதற்கு இவ்வளவு அலைக்கழிப்புகள் என்பதுதான் எனக்கு இன்னமும் வியப்பு.!

ஓஷோ சொல்கிறார்பெண்களைப் புரிந்துகொள்ள முயலாதேஅவளைக் காதலி.

காதலிக்க எல்லாம் வேண்டாமுங்க. அட்லீஸ்அவளின் தர்மசங்கட சூழலை அறிந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான்.   

புதன், செப்டம்பர் 25, 2013

மஹாலக்ஷ்மி


கோழி வியாபாரியுடன் சல்லாபித்து
மாடு அறுக்கும் ஆஹமாட் தொட்டு
பன்றி வியாபாரி ஆச்சோங்கிடம் சென்று
ஆட்டின் இரத்தத்தில் நனைந்து
மீன் உடலில் ஸ்பரிசரித்து
காய்கறிகளின் கழிவுகளில் உழன்று
கழிவறைவாசியின் கைக்குலுக்கி
விபச்சாரியிடம் வீசி எறியப்பட்டு
கொலை கொள்ளைக்காரனிடம் பதுங்கி
தில்லுமுல்லுவிலும் புகுந்து
பொய் பித்தலாட்டத்திற்கு உதவி
பல் இடுக்குகளில் சிக்கியதையும் நீக்கி
கழுவாதவனின் கைப்பட்டு
அவன் தொட்டு இவன் தொட்டு
கீழே பலமுறை விழுந்து
அங்கும் இங்கும் மிதிப்பட்ட
சாதாரண காகித நோட்டு..
ஆச்சாரம் பார்ப்பவன் வீட்டில்
மஹாலக்ஷ்மியாக பூஜையறையில்..

வியாழன், செப்டம்பர் 19, 2013

அதிர்ச்சியில் உரைந்தேன்

காலையிலே பத்திரிகையில் வந்த ஒரு கொடூரமான செய்தியினைப் படித்துவிட்டு இரத்தமே உரைந்துபோனது எனக்கு.

ஏழுவயது மகன் மற்றும் ஐந்துவயது மகளோடு நாற்பது ஐம்பது வயது மதிக்கதக்க தம்பதிகள் (அக்குழந்தைகளின் பெற்றோர்கள்) என நான்கு பேரும் தற்கொலை முயற்சியில் சாக முயன்று, நிலவரம் கொலைக்குற்றமாகி அத்தம்பதிகளை போலிஸ் பிடித்துச்சென்றுள்ளது.

செய்தி இதுதான்.

11 ஆம் தேதி செப்டம்பர் - தற்கொலை முயற்சி, முதல் முறையாக மாஸ்டர் பெட்ரூம்மின் உள்ளே கரியடுப்பினை மூட்டி, அதன் புகையில் குடும்பமே ஒன்றாகச் செத்துவிடலாம் என்று திட்டம் தீட்டி, அதே போல் செய்து, இரவு படுக்கச்சென்றுள்ளனர். மறுநாள் காலையில் அப்புகை அவர்களை ஒன்றும் செய்யாமல் இருக்கவே, அனைவருக்கும் எந்த பாதிப்புகளும் இல்லாமல் சாதாரணமாகவே துயில் எழுத்துள்ளனர்.

12 ஆம் தேதி செப்டம்பர் - இரண்டாவது முறையாக அதே முறையிலான தற்கொலை முயற்சியினை மீண்டும் செய்துள்ளனர் அத்தம்பதிகள். விடிந்ததும் எழுந்து பார்க்கையில், அனைவரும் உயிருடன் இருக்க,  ஐந்து வயது மகள் மட்டும் மரணமுற்றிருக்கின்றாள்.

13 ஆம் தேதி செப்டம்பர் - இறந்த அக்குழந்தையை தூக்கிக்கொண்டு, அருகில் இருக்கின்ற கிள்ளான் ஆற்றில் குத்தித்து தற்கொலை செய்ய மூன்றாவது முறையாக முயன்று, அதுவும் சரியாக அமையாததால்,
செய்வதறியாமல் அக்குழந்தையை ஐந்து நாட்கள் வீட்டிலேயே கிடத்தி வீட்டைப்பூட்டிக்கொண்டு அனைவரும் உள்ளேயே இருந்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒருவாரகாலமாக அக்குழந்தை பாலார் பள்ளிக்கு வராமல் இருந்தததால், விவரமறிய, அப்பாலர்பள்ளி ஆசிரியை அவர்களின் வீடு தேடி வந்து அழைப்புமணியை அழுத்தியுள்ளார். கதவைத்திறந்த ஏழுவயது சிறுவன், அக்குழந்தையின் அண்ணன்.. `என் தங்கை இறந்துவிட்டாள்’ என்று சொல்லி ஆசிரியரைப்பார்த்து கண்ணீர் வடித்துள்ளான்.
அதிர்ச்சியில் உரைந்தபோன ஆசிரியை, உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தையின் உடல் கட்டிலில்...

போலிஸில் புகார் செய்து, பெற்றோர்களைப்  பிடித்துக்கொடுத்துள்ளார்  ஆசிரியை.

இன்றைய சீன நாளிதழில்களில் இதுதான் பரபரப்பை ஏற்படுத்திய முதன்மை தலைப்புச்செய்தி.

தற்கொலை முயற்சிக்குக் காரணம் - வேலையில்லாமல் திண்டாடிய குடும்பத்தலைவனுக்கு அதிகமான கடன் தொல்லை.
 

வியாழன், செப்டம்பர் 12, 2013

அங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை


நாம் ஏன் பயணம் செய்கிறோம்.?  

ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசிக்கவேண்டும் என்பதற்காக.!

எனக்கு பயணம் செய்ய படிக்கும். அதைவிட அதில் ஏற்படுகிற அனுபவங்களைப் பிறரோடு பகிர்வது அதிகம் பிடிக்கும்.

முன்பெல்லாம் எங்கேயாவது சென்றுவந்தால் அனுபவித்த விவரங்களைக்குறித்து நண்பர்களை தொலைபேசியில் அழைத்து, அவர்கள் அதை விரும்புகிறார்களா இல்லையா  என்பதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் வளவளா என நாளெல்லாம்  உளறிக்கொண்டிருப்பேன்.  சிலவேளைகளில் மனதிற்குள் என்னை நான் திட்டியும்கொள்வேன்.. தேவையில்லாமல் ஏன் இப்படி தோழிகளையும் நண்பர்களையும்  பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்று. ஆனால் எப்போது முகநூல் ப்ளாக் என்று நுழைந்தேனோ, அன்றிலிருந்து எனக்கு பயணமோ அல்லது வேறு எதேனும் அனுபவமோ நிகழ்ந்ததென்றால் அதை உடனுக்குடன் அங்கே பகிர்ந்து  உலகத்திற்கே `டமார்’ அடித்துவிடுவேன். இதனால் நான் கூடுதல் மகிழ்வும் அடைகிறேன்.

முன்பெல்லாம் பத்திரிகைகளுக்கு எழுதுவதும் எனது வழக்கம். இப்போது அது `வேஸ்ட்’ என்று தோன்றியதால், அதைவிட ப்ளாக் முகநூல் மேல் என்று மனதிற்குப் பட்டதால், எனது அனைத்து அனுபவங்களையும் இணையத்தில் கொட்டிக்கொண்டிருக்கின்றேன்.

சியாம் ரீப் ஓர் அறிமுகம்.

கம்போடியாவின் முக்கிய பட்டணங்களில் ஒன்றான சியாம் ரீப் வரலாற்றுச் சின்னங்களான பிரமாண்ட இந்து பௌத்த ஆலயங்களைத் தாங்கிநிற்கும் எழில் கொஞ்சும் அழகிய பெரிய நகரம். நகரம் என்பதைவிட ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டுவரை  இந்திய தமிழ் வம்சாவளி மன்னர்களான சூர்யவர்மன்கள் முதல் - ஜெயவர்மன்கள்வரை ஆளப்பட்ட மிகப்பெரிய இந்து சாம்ராஜ்ய கோட்டை அது. இடையில் மன்னரின் புத்தமத தழுவலில், புத்தமதமும் நுழைந்து இரு மதங்களும் போட்டிபோட்டுக்கொண்டு தத்தம் மத அடையாளங்களை நிலைநிறுத்துவதற்காக மிக பிரமாண்ட ஆலயங்களை நமக்குப் பொக்கிஷமாக விட்டுச்சென்றுள்ளனர்.

அப்படி அவர்கள் விட்டுச்சென்ற அந்த பிரமாண்ட ஆலங்கள்தான் இன்றைய நாளில் பலரின் வேலைவாய்ப்புகளுக்கும் சுற்றுலாத்துறையில் பெருந்த லாபத்தை ஈட்டித்தருவதற்கும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பேருதவியாய் இருந்துவருகிறது என்றால் அது மிகையல்ல.

சிற்பக்கலையில் கைதேர்ந்த ஆட்களைக் கொண்டு  ஆட்சிபுரிந்த  மன்னர்களின் கலையம்ச குணம் கோவில்களின் பிரமாண்டத்தின் வழி பிரதிபலிப்பதை அதனின் அமைப்பில் கண்டு ரசிக்கலாம். சுற்றிலும் நீர்வளம் மிகுந்து, ஓரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சிறந்த வணிகநகரமாக அது திகழ்ந்திருக்கவேண்டும் என்பதை கோவில் சிற்பங்கள் சொல்லும் காட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.

பயண ஆர்வம் வந்ததிற்கு..

தமிழ்நாடு சென்று வந்தால், ஓயாமல் அங்குள்ள கோவில்களைப் பற்றிப் பீற்றியபடியே அல்லது புலம்பியபடியே இருப்பேன்.

`ஆஹா சிற்பங்கள், ஆஹா பிரமாண்டம், ஆஹா கோபுரம், ஆஹா மிகநீண்ட நிலப்பரப்புகளின் ஆக்கிரமிப்பு, ஆஹா ஓஹோ..’ என.

இந்தப் புலம்பல்களைக்கேட்டு எரிச்சல் அடைந்த எனது தோழி ஒருவள், `நீ அங்கோர் வாட் போய்ப்பார், பிறகு தெரியும் உனக்கு. தொடந்து பலவருடங்கள் பல ஆட்சிகளின் கீழ் கட்டுமானப்பணி புதுப்பித்தல் என இன்னமும் நடந்துகொண்டிருக்கும் இந்திய/தமிழ்நாட்டுக்கோவில்கள் அனைத்தும் நவீனமாக்கப்பட்டுவிட்டன. கருவறையும், கோவில் சிற்பங்களும் பழமையைப் பறைசாற்றினாலும் கோவில் நவீன வசதியுடன் அழகாகக்கட்டப்பட்டு நடைவசதி, குழாய்நீர் வசதி, கோவில் உள்ளே ஏர்காண்ட் வசதி, பெரிய பெரிய மின்விசிறிகள், கோவில் வளாகத்திலேயே வியாபாரம், பலகாரங்கள் விற்பனை என நவீனமாகிவிட்டது. ஆனால் அங்கோர் வாட் சென்றால் அதிர்ந்துபோவாய், ஆயிரம் வருடங்களுக்குமுன் உள்ள காலகட்டத்திற்குள் நாம் நுழைந்துவிட்டதைப்போன்ற பிரம்மை வரும், அவ்வளவு பழமையான கோவில்கள். புதுப்பித்தல் கட்டுமானப்பணி என முழுமைபெறுவதற்குள் சென்று பார்த்துவிடு, அந்த பழமையை நீ நன்கு ரசிப்பாய்..’ என்று எனக்கு ஆர்வமூட்டிவிட்டாள்.

இச்சிந்தனை என் மனதிற்குள் தணலாய் இருக்கின்றபோது, கணவருக்கு ஒரு OFFER வந்தது. அதாவது, சயாம் ரீப்’பில் உள்ள, தங்கும்விடுதி ஒன்றினை இரண்டு இரவுகளுக்கு பயன்படுத்திக்கொண்டால் AIR ASIA நிறுவனம் அதன் விமான டிக்கட்டுகளை இலவசமாகக் கொடுக்கவிருக்கின்றது என்கிற offer தான் அது.

அது அவரின் மெயிலுக்கு வரவே, அவர் என்னிடம் ஆலோசனை கேட்க, நான் உடனே போகலாம் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டேன். என்னுடைய கனவுதேசமாயிற்றே விடுவேனா.!

இரண்டு இரவு - மூன்று நாள் பயணம்.

மலேசியாவில் இருந்து ஏறக்குறைய இரண்டுமணி நேரத்தில் சயாம் ரீப் விமானநிலையத்தில் ஏர் ஆசிய விமானம் தரையிறங்கிவிட்டது. உள்ளூரிலேயே அருகில் இருக்கின்ற பட்டணத்திற்கு பயணம் செய்கிற போது, இரண்டு அல்லது மூன்று மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு பயணம் செய்து பழகிய எங்களுக்கு, இரண்டு மணிநேரத்தில் வேறொரு ஊரில் இருப்பது பெரிய ஆச்சிரியமாகவே இருந்தது. கொஞ்சநேரத்தில் வேறொரு கலாச்சார சூழலுக்கு வந்திருப்பது வித்தியாசமான அனுபவத்தைக்கொடுத்தது. 

சனிக்கிழமை விடியற்காலை ஆறு ஐம்பதுக்கு ஏறி அங்குள்ள நேரம் ஏழு ஐம்பதுக்கு இறங்கினோம். மலேசியாவிற்கும் கம்போடியாவிற்கும் ஒருமணி நேரம் வித்தியாசம். அதாவது இங்கே காலை மணி ஆறு ஐம்பது என்றால் அங்கே காலை மணி ஐந்து ஐம்பது. மலேசியா ஒருமணி நேரம் முன்னே சென்றுவிட்டது. இருப்பினும் சாயாமில் விடியற்காலை ஆறுமணிக்கே காலை ஏழுபோல் பொலபொல என விடிந்திருந்தது. வானம் வெளிச்சமாகவே தென்பட்டது. இரவும் அதேபோல்தான், இங்கே எட்டு என்றால் அங்கே ஏழு ஆனால் இரவு எட்டு போல் இருட்டாகியிருந்தது.

காலை மாலை வேளைகளில் பரபரப்பிற்கு குறைவே இல்லை. காலை ஆறுமணிக்கெல்லாம் ஆண் பெண் மாணவர்கள் என எல்லோரும் வேகவேகமாக தமது பணியினைத்தொடங்கிவிடுகிறார்கள். சாலையில் வாகனங்கள் குறைவாக இருப்பினும் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களில் மிக வேகமாக பயணிக்கத்துவங்கிவிடுகிறார்கள். சுறுசுறுப்பான மக்கள்.

விமானம் தரையிறங்கியதும் மலேசியர்களான எங்களை அனுப்பிவிட்டு  மற்ற நாட்டவர்களுக்கு ஒரு பாரத்தைக்கொடுத்துப் பூர்த்தி செய்ய சொல்கிறார்கள். அதற்கு அமேரிக்கன் டாலர் இருபதை விசா கட்டணமாகவும் வசூல் செய்கிறார்கள். இதை இந்தியாவில் இருந்து வருபவர்களிடமும் வாங்குகிறார்கள். 

தங்கும்விடுதி சலுகைகளில், விடுதிக்குச்செல்ல, ஒருவழிப்பாதை டாஃக்சி போக்குவரத்து இலவசம் என்று சொல்லியிருந்ததால், அதை நான் முதல் நாளிலேயே அந்த விடுதிக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்து  உறுதிசெய்துகொண்டேன்.

அதாவது, எங்களுடைய பெயர் கொண்ட பதாகையை அந்த டாஃக்சி ஓட்டுநர் ஏந்திக்கொண்டு நிற்பதாகவும், அவரை அடையாளங்கண்டு அவருடன் வந்துவிடுடவும், என்று அறிவுறுத்தப்பட்டது.

நாங்கள் வெளியே சென்றவுடன், வரிசையாக மற்ற இனத்தவர்கள் வரவும், இந்தியர்களான எங்களைக் கண்டவுடன், ஓடோடி வந்து புன்னகை தவழும் முகத்துடன் கையில் ஏந்தியிருந்த விளம்பரப்பலகையைக் காட்டினார் வாகன ஓட்டுனர். அவரின் அருகில் சென்றோம். பலகையை கைகளின் இடுக்கில் சொருகிக்கொண்டு, `வெல்கம்’ என்று சொல்லி, இருகரங்களைக்கூப்பி வணக்கம் தெரிவிப்பதைப்போல் குனிந்து வணங்கினார்.

`நீங்கள் இந்தியாவில் இருந்து வருகிறீர்களா?’ என்று கேட்டார். நாங்கள், `இல்லை, நாங்கள் மலேசியர்’, என்றோம். அதற்கு அவர், `ஓ, அப்படியா? உங்களைப் பார்ப்பதற்கு இந்தியர்கள் போலவே இருக்கின்றீர்கள்..’ என்றார். மௌனமாகச் சிரித்துக்கொண்டோம். காரணம் நாங்கள் இந்தியர்கள்தான் இருப்பினும் மலேசியர்கள் அல்லவா.!!!

ஆரம்பமே மிகப்பணிவான சூழல் அமைந்தவுடன் மனதிற்கு தெம்பாக இருந்தது. பிறகு `டாஃக்சி’ நிற்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார். டாஃக்சி’யைப் பார்த்தவுடன், `அய்யோ... டாஃக்சியாம்.. என்ன இப்படி இருக்கு.!’ என்று மனதிற்குள் முணக ஆரம்பித்தோம். இருப்பினும் ஒருவழிப்பாதை  இலவசம் என்பதால் இப்படி ஒரு டாஃக்சியை அனுப்பியிருக்கின்றார்கள் போலிருக்கு, என்று நானும் என் கணவரும் கிசுகிசுத்துக்கொண்டோம்.

சரி, டாஃக்சி எப்படித்தான் இருந்தது.? மோட்டார் சைக்கிளின் பின்னே மாட்டுவண்டியைப் பூட்டியதுபோல் இருந்தது. அதை அங்கு `டூட் டூட்’ என்கிறார்கள். அதன் ஒலியைவைத்து அப்படி பெயர் வந்திருக்கலாம்.
தங்கும் விடுதிக்குச்செல்லுகிற வழிகளில் பார்த்தோமென்றால், சாலையில் பெரும்பாலும் இந்த டூட் டூட் வண்டிகள்தான் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு உலா வந்துக்கொண்டிருந்தன.

மலேசியாவின் வாகனங்களில் ஸ்டேரிங் வலது புறத்தில் இருக்கும். ஆனால், சயாமில் எல்லாமும் ஐரோப்பிய நாடுகளின் வாகனங்கள் போல் இடது புறத்தில் இருந்தது. கார் ஓட்டத்தெரிகிற நான், டூட்டூட் செல்கிற திசைகளில் கொஞ்சம் குழம்பிப்போனேன். படபடப்பாகவும் இருந்தது, இருப்பினும் சிலவினாடிக்குள் அங்குள்ள சூழல் பழக்கமாகிவிட்டது.

டூட் டூட்’டிலேயே எங்களின் சுற்றுலா தொடந்தது. புதிய அனுபவமாக இருப்பினும் அது உற்சாகப் பயணமாகவே அமைந்தது. எழில் கொஞ்சும் அந்த நகரத்தை வழிநெருக இருக்கின்ற பயிர்கள் கிராமிய வீடுகள் என்று தங்கு தடையில்லாமல் ரசித்துக்கொண்டே வருவதற்கு இந்த டூட் டூட் பயணம் மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

இரண்டு நாள் பயணம் போதும் என்றார் டூட் டூட் ஓட்டி ஷான். இரண்டு வழிப்பாதைப்பயணம்தான் இங்கு. ஒன்று சிறிய வட்டம் மற்றொன்று பெரிய வட்டம். எப்படிப்பார்த்தாலும் சிறிய வட்டம் முடிய முழுசாக ஒருநாள் ஆகும். காரணம் அங்குதான் அங்கோர்வாட் மற்றும் அங்கோர்தோம் இருக்கின்றது. அங்கே சுற்றுவதற்குள் நீங்கள் சோர்ந்துவிடுவீர்கள் காரணம் இரண்டுமே மிகப்பெரிய கோவில்கள், என்றார். இதில் எங்களின் ஆலோசனையை அவர் கேட்கவில்லை. அவரே முடிவு செய்து அழைத்துச்சென்றார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அரைமணிநேர ஓட்டம் தான் இந்த கோவில்கள் செல்வதற்கு.

நுழைவாசல்கள் எல்லாமும் ஒரே வழிதான். முழுமையான அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் சீரமைப்பு செய்யப்பட்ட வழிப்பாதை அது. சுற்றிலும் அடர்ந்த காடுகளேயானாலும் எங்கு நுழைந்தாலும் எப்படி நுழைந்தாலும் இராணுவ ஆடைகளுடன் காவல் காக்கின்ற போர்வீரர்களைத்தாண்டித்தான் நுழைவது வெளியேறுவது எல்லாமும் நிகழ்த்தமுடியும்.


இந்த map'பில் உள்ள இடங்களின் பெயர்களைக் கவனிக்கவும் - கபலபுரம், ப்ரசாத் க்ரவான், குட்டீஸ்வரா, ச்சவ் தேவடா, சரஸ் ஸராங்..

கட்டணம்..?

உள்ளூர்வாசிகளுக்கு இலவசம். நாம் மூன்று நாட்களுக்கு அமேரிக்கன் டாலர் நாற்பதைச் செலுத்தி டிக்கட் வாங்கவேண்டும். ஒரு நாளுக்கு இவ்வளவு என்று முன்பு டிக்கட் விற்பனை செய்தார்களாம். ஆனால், இப்போது அப்படி அல்ல. நீங்கள் ஒரு நாள் பயணம் செய்தாலும் மூன்று நாள் கட்டனம் செலுத்துகின்ற டிக்கட்களைத்தான் எடுக்கவேண்டும், என்கிற சட்டம் தற்போதைய நிலை. ஆக, பயணம் செல்ல நினைப்பவர்கள் மூன்று நாள் பயணத்திற்குத் தயார் நிலையிலே செல்லவேண்டும். இல்லையேல் நஷ்டம் நமக்குத்தான். மேலும் கோவில்களில் சும்மானாலும் நுழைந்தோம் பார்த்தோம் என்று வந்துவிடமுடியாது. ஒவ்வொரு அம்சமும் கலைப்பொக்கிஷம். நேரம் போதாது அணுவணுவாக ரசிப்பதற்கு. முடிந்தால் ஒருவாரம் தங்கி ரசித்து புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.

சுற்றுலா பஸ்ஸுடன் பெரிய கூட்டம் சென்றால், டிக்கட் விலை குறையும் போலிருக்கிறது காரணம் என் தோழி என்னிடம் சொல்கிறபோது நுழைவுக்கட்டணம் யூஎஸ் பத்து டாலர்தான் என்றாள். அவள் பெரிய கூட்டத்துடன் சுற்றுலா சென்று வந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கட்  எடுக்கின்றபோது இருவரையும் வரும்படி அழைத்தார்கள்.  டிக்கட்’டில் நமது புகைப்படம் இருக்கவேண்டும். ஒரு நொடிக்குள் புகைப்படத்துடன் கூடிய பாஸ் தாயாகிவிடுகிறது. அதை நாம் நம் கழுத்தில் மாட்டிக்கொள்ளவேண்டும். டிக்கட் எடுத்துக்கொண்டு வெளியேறுகிறபோது இடையில் உள்ள நுழைவாசலின் ஊழியர்கள் அதைவாங்கி தேதி பிரகாரமான punch hole செய்துவிடுகிறார்கள். நமக்கு விற்கப்பட்ட டிக்கட்கள் தொலைந்தால், மறுபேச்சுக்கு இடமில்லை. மீண்டும் அதை பணம்கொடுத்து வாங்கியாகவேண்டும் என்கிற எச்சரிக்கையையும் பணிவான தொணியில் காதில் போட்டுவைக்கப்பட்டது.

ஒவ்வொரு கோவில் வாசலிலும் டிக்கட் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பயணிகளை உள்ளே அனுமதிக்கின்றார்கள். உடைகளிலும் கவனம் வேண்டும். ஷார்ட்ஸ், குட்டை பாவாடை போன்றவற்றை அணிந்துகொண்டு உள்ளே செல்வதற்கும் அனுமதியில்லை.

மக்கள் மற்றும் வாழும் சூழல்

மலேசியாவில் இருந்து சென்றதால், மக்கள் பார்ப்பதற்கு மலேசியர்கள் போலவே இருந்தார்கள். அசல் மலாய்க்காரர்கள் போலவே காணப்பட்டார்கள். அவ்வளவாக நிறமாக இல்லாமலும், கறுப்பாகவும் இல்லாமலும் மாநிறமாக இருந்தார்கள்.

பணிவாகவே பழகினார்கள் எல்லோரும். வணக்கம் சொல்வதைப்போல் கைக்கூப்பி குனிந்து மரியாதை செலுத்துகிறார்கள். என்ன கேட்டாலும் புன்னகை மாறாமல் பதிலளிக்கின்றார்கள்.

பொதுவாகவே குட்டி குசுமாளங்கள் வரை ஆங்கிலம் ஓரளவு பேசுகிறார்கள். வார்த்தைகள் சிதைந்து சிதைந்து வந்தாலும், ஐரோப்பியர்களின் பாணியில் ஆங்கிலம் பேசுகிறார்கள். தாய்மொழியோடு சேர்த்து, ஆங்கிலம் பிரஞ்ச் மொழியையும் கற்றுவைத்திருக்கின்றார்கள். டூர்கயிட் எங்களிடம் பேசுகிறபோது, உங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லவா அல்லது பிரஞ்சு மொழியில் விளக்கம் சொல்லவா.? என்று கேட்டுவிட்டே பேச ஆரம்பிக்கின்றார்.

பெண்கள் மிகவும் அழகாக இருக்கின்றார்கள். கோவில் சிலைகளில் தென்படுகிற ஆடைகள்தான் கலாச்ச்சார ஆடை அங்கே. கைலிபோல் கீழ் ஆடை. சொக்காபோல் மேல் ஆடை, அதன் மீது தாவணிபோல் சிறிய துணி, புத்தபிக்குகள் அணிகிற மேல் அங்கிபோல் அந்த துணியினை உடம்பில் சுற்றியிருந்தார்கள்.

கைக்களைக்கூப்பி `சொம்ஸ்வாஃகும்’ - என்கிறார்கள் அவர்களின் மொழியில். அதன் அர்த்தம் நல்வரவு. `ஆஃஹூன்’ என்றும் அடிக்கடி சொல்கிறார்கள் கைகளைக்கூப்பி - அதன் அர்த்தம் நன்றி. டூட்டூட் ஓட்டுனரிடம் கேட்டுத்தெரிந்துகொண்டேன்.

அங்குள்ள வீடுகளைப் பார்த்தோமென்றால், அடிக்கடி வெள்ளம் ஏறுகிற அபாயம் இருப்பதால், மலேசிய பாணியில் நான்கு தூண்களின் மேல் பலகை வீடு கட்டியிருந்தார்கள். முற்றிலும் எண்பதுகளின் மலேசிய சூழலை என் கண்முன் கொண்டுவந்தது அவ்வீடமைப்புச்சூழல்.

காண்கிற தூரமெல்லாம் பச்சைப்பசேல் என்று வயல்வெளிகள். காய்கறி தோட்டங்கள். எங்குபார்த்தாலும் சேர்சகதிகள் நிறைந்த ஒத்தையடிப்பாதை. கிராமிய சூழலுக்குச்செல்லலாம் என்று நான் கேட்டுக்கொண்டதன் பேரில், ஒரு சிறிய கிராமத்திற்கு அழைத்துச்சென்றார் டூட் டூட் ஓட்டுனர்.

விவசாயம்தான் முக்கிய தொழில். மணமுள்ள ஸ்டீம் ரைஸ்தான் உணவுக்கடைகளில் பரிமாறுகிறார்கள். சாப்பாடு அருமையான சீன உணவுகள் கிடைக்கின்றது. பன்றி இறைச்சிதான் முதன்மை உணவு. பன்றி வேண்டாம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், பன்றியை சமைக்கின்ற உணவில் கலந்து விடுகிறார்கள். இந்துக்களாக இருக்கின்ற பட்சத்தில், உணவுக்கடைகளில் நுழைந்தவுடன் - சைவ உணவும் உள்ளது, வேண்டுமா? என்று கேட்கிறார்கள்.

சுவையான சீனரக உணவு

எந்த ஊருக்குச் சென்றாலும் அதன் காய்கறி சந்தைக்குச்சென்று காணவேண்டும் என்கிற ஆவல் எனக்கு எப்போதும் உண்டு. மண்மணம் அங்குள்ள விளைச்சலில் எப்படி உள்ளது என்று பார்க்க எனக்கு ஆசை. சயாம்ரீப் மிகப்பெரிய சந்தைக்குள் நுழைந்தவுடன், என்னால் அங்கு கொஞ்சநேரம் கூட நிற்கமுடியவில்லை, பன்றி இறைச்சியின் வாடை என்னை வெளியே விரட்டியது. அங்கு சென்று அந்த வாடையை நுகர்ந்தபின் எங்கு சென்றாலும் அதே வாடை வீசுவதைப்போன்ற பிரம்மை வந்து ஒட்டிக்கொண்டது.

தூரமாகச்சென்று தள்ளி நின்று அந்தப் பரபரப்புச்சூழலை ரசித்தேன். கொய்யா வாழை அன்னாசி போன்ற பழங்கள் வழிநெடூக விற்பனை செய்தவண்ணம் இருந்தார்கள். தாகம் தீர்க்க இளநீர் அருந்தினோம். ஒரு இளநி ஒருவர் பருகி முடிக்கமுடியாத நிலை. காரணம் அதில் உள்ள நீர் ஒரு லீட்டர் தேறும் போலிருக்கிறது. அவ்வளவு பெரிய இளநீ.

பெட்ரொல் விலை லீட்டருக்கு மலேசிய ரிங்கிட் நான்கு வெள்ளி ஐம்பது காசு. பெட்ரோல் போட்டு மாளாது என்பதால்தான் மோட்டார் சைக்கிள் டாக்சி ஆனது இங்கே என்கிறார் அதன் ஓட்டுனர்.

ஒட்டுக்கடைகளிலும் மளிகைசாமான்கடைகளிலும், பெட்ரோல்’ஐ காலியான மினரல் வாட்டர் பாட்டல்களில் நிரப்பி விற்பனை செய்றார்கள். எரிபொருளை இப்படி விற்பனை செய்வது பேராபத்து. இது பார்ப்பதற்கு வித்தியாசமாகவே இருந்தது. மோட்டார் வாகன ஓட்டிகள், பெட்ரோல் ஸ்டேஷனுக்குப் போகாமல், கடைகளின் ஓரம் மோட்டாரை நிறுத்திவிட்டு, பெட்ரோலை வாங்கி வாகனத்தில் ஊற்றிக்கொள்கிறார்கள்.

யூஸ் பணம் ஒரு டாலருக்கு கம்போடிய பணம் நாலாயிரம். மலேசிய ரிங்கிட் 80காசு கம்போடிய பணம் ஆயிரம். அப்படியென்றால், ரூபாய் கணக்கு எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்களேன். இருப்பினும் அங்கே எல்லாமும் யூஎஸ் டாலர்தான். நான்கு கொய்யாப்பழம் யூஎஸ் ஒரு டாலர். இரண்டு சோளம் யூஎஸ் ஒரு டாலர். ஒருவேளைச் சாப்பாடு யூஎஸ் ஐந்து டாலருக்குக் குறையாமல்.. !

அங்குள்ள சீதோஷ்ண நிலை -

ஆக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நல்ல சீதோஷ்ணமாம். மழையும் இல்லாமல் அதிக வெயிலும் இல்லாமல் இருக்கின்ற அற்புத சூழல் என்றே சொல்லப்படுகிறது. அந்த மாதங்களின் தங்குவிடுதிகள் கிடைப்பதற்கே பெரிய பாடாக இருக்குமாம். உலகச்சுற்றுப்பயணிகள் அனைவரும் அங்கே வருகிற காலகட்டம் என்பது இந்த மாதங்கள்தானாம்.

மார்ச் தொடங்கி ஜூன்வரை கடுமையான சூடு என்றும் ஜூலை தொடங்கி ஆக்டோபர் வரை பாதிநாள் நல்ல சீதோஷணம் என்றும் மீதி பாதிநாள் மழை என்று சொல்லப்பட்டது. நாங்கள் சென்றது செப்டம்பர் மாதம். பாதி வெயில் பாதி மழை காலம். மாலை வேளைகளில் மழை பெய்யத்துடங்கிவிட்டது. ஹோட்டலிலேயே சொல்லிவிடுகிறார்கள். மாலையில் மழை வரும் முடிந்தவரையில் அதிகாலையிலேயே உங்களின் பயணத்தைத்தொடங்கிவிடுங்கள் என்று. இருந்தபோதிலும் நமக்குத்தேவையான அனைத்தையும் அந்த டூட்டூட் ஓட்டி தயார் நிலையிலேயே வைத்திருந்தார். குடிக்கநீர், முகம் துடைக்க வெட்டீஷ்யூ, குடை, ரெயின்கோர்ட் என எல்லாமும் அவரின் வண்டியில் தயார் நிலையிலேயே இருந்தது. மழை வந்தாலும் பிரச்சனையில்லை. இருப்பினும் கோவிலுக்குச்செல்கிற வழி சேரும்சகதியுமாய் கால் வைக்கிற இடமெல்லாம் நீராய் அசௌகரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அதுதான் பிரச்சனை. ஐரோப்பிய பயணிகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. ஜாலியாக தொப்பி ஒன்றினை தலையில் மாட்டிக்கொண்டு நடந்துகொண்டே இருக்கின்றார்கள். அதிகமான ஐரோப்பியர்கள் உலவும் ஒரு சுற்றுலாத்தலம் அது.

டூட்டூட் ஓட்டி - Jon Chan


முதல் ஆலயம் அங்கோர் வாட்

இவ்வாலயத்தைப்பற்றி பலர் சொல்லக்கேட்டிருப்போம். பலருக்கு நேரில் சென்று காணவேண்டும் என்கிற ஆவல் விடாமல்  துரத்திக்கொண்டிருக்கும். UNESCO அறிவித்தபடி உலகின் மிகப்பிரமாண்ட இந்து ஆலயம் இது. இதை எட்டாவது அதிசயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். நம்முடைய மூதாதையர்கள் அடியெடுத்துக்கொடுத்து கட்டப்பட்டது ஆலயம் இந்த அங்கோர்வாட் என்பது இந்துக்களான நமக்குப் பெருமையே.
.



இதை ஆலயம், அதாவது வழிப்பாட்டுத்தலம் என்பதைவிட அரசரின் இல்லம் என்றே அறிமுகம் செய்துவைக்கின்றார்கள்.

அரசாங்க ஊழியர்களாக பணிபுரியும் பயண வழிகாட்டி ஒருவரை, (ஆலய வாசலிலேயே நிற்பார்கள்)  யூஎஸ் டாலர் பன்னிரெண்டுக்கு அந்த ஒரு ஆலயத்தைமட்டும் சுற்றிக்காட்டி வரலாற்றுகதைகளைக்கேட்க எடுத்துக்கொண்டோம்.

அற்புதமான விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டே வந்தார்.

அதற்கு முன், அங்குள்ள ஆலயங்கள் பற்றிச்சொல்லியே ஆகவேண்டும். ஒவ்வொரு ஆலயங்களும் நுழைவாசலில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுவழிப்பாதையில் நடந்து சென்ற பிறகே ஆலய வாசல் வருகிறது. பிறகு ஆலயத்தில் உள்ளே கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் கற்கள், சிதைந்த சிலைகள், உடைபட்ட பாறைகளில் என கால்வலி வரும் வரை நடந்து வெளியே வரவேண்டும், அதன் பின் கோவிலின் பின்புறம் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று வெளியேறவேண்டும். அங்கோர் வாட் ஆலயத்தைத்தவிர மற்ற எல்லா ஆலயங்களும் முன்புறம் நுழைந்து பின்புறம் வெளியேற வேண்டும். டூட்டூட் ஓட்டுனரும் வாசலில் நம்மை இறக்கிவிட்டு பின்புறம் வந்துதான் ஏற்றிக்கொள்கிறார். நடந்தே ஆகவேண்டிய கட்டாயம். நான்கு திசைகளிலும் ஒரே மாதிரியான அளவின் படி சீராக அமைக்கப்பட்ட ஆலயங்கள் அனைத்தும். எல்லா ஆலயங்களுக்கு நான்கு பிரமாண்ட நுழைவாயில்கள் மற்றும் நுழைவாசல்கள்.  (தமிழகக்கோவில்கள் போல்). அங்கோர் வாட் சுற்றிலும் மிகப்பெரிய நீர்தேங்கிய அகழி இருப்பதால் அங்கு மட்டும் ஒரே ஒரு நுழைவாசல்தான்.



வரலாறு

அந்த tour guide சொன்ன வரலாற்றுக்கதைகளை நான் உள் வாங்கியதை உங்களோடு பகிர்கிறேன். தவறு எதேனும் இருந்தால், அது என்னுடையதே. காரணம் அவர் சொன்ன விவரங்களை நான் சரியாக உள்வாங்கவில்லை என்று அர்த்தப்படும். எல்லாமும் சரியாக இருந்திருந்தால் எல்லாப்புகழும் அந்தப்பயண வழிகாட்டிக்கே. சரியா.!


தமிழ்நாட்டில் இருந்து சூர்யவர்மன்II என்கிற மன்னன், பண்டமாற்று வியாபார நோக்கத்துக்காக கம்போடியாவிற்கு தமது பரிவாரங்களுடன் சென்றுள்ளார். அங்கு இருக்கின்ற சமயத்தில் அங்குள்ள கம்போடிய இளவரசியின் மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து அங்கேயே தங்கிவிட்டார். அன்றைய கம்போடிய மன்னரான இவரின் ஆட்சியின் கீழ் கிழக்கு ஆசிய நாடுகளான பர்மா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், இந்தோனீசிய போன்ற நாடுகள் அனைத்தும் ஒரே சாம்ராஜ்யத்தின் கீழ் செயல்பட்டுவந்துள்ளது. பீடத்தில் அமர்ந்த அம்மன்னரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பல லட்ச அடிமைகளைக்கொண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஆலயம்தான் இந்த பிரமாண்ட அங்கோர்வாட் ஆலயம்.

ஆரம்பத்தில் விஷ்ணு ஆலயமாக உதயமான அங்கோர் வாட் ஏழாம் ஜெயவர்மன் புத்தமதத்தைத்தழுவிய போது அவ்வாலயம் புத்த ஆலயமாக மாறியது.

வைணவர், சைவர், பௌத்தம் என போராட்டம்  நடந்து. ஒருவர் மாற்றி ஒருவர் ஆலயங்களின் சிலைகளை அழிக்கமுயன்று தத்தம் மத அடையாளச்சின்னங்களை பதிக்க எடுத்த முயற்சிகளின்போது அங்கே சிதிலமைடைந்து சின்னாப்பின்னமான சிவலிங்கம், விஷ்ணு உருவம், புத்த சிலை என, ஆங்காங்கே சிதறிக்கிடப்பதைக் காணலாம். இருப்பினும் மஹாபாரதம் ராமாயணம் என சுவற்றில் செதுக்கியிருக்கின்ற சிலைகள் அப்படியே பொக்கிஷமாகவே ஜொலிக்கின்றன.

இந்தச் சுவர்வெட்டு, ராமாயணம் மஹாபாரதம் கதைகளைச்சொன்னாலும், அந்தப்போர் வீரர்கள் சூடியிருக்கின்ற தலைக்கிரீடம், எஃகிப்த் நாட்டிற்குச் சொந்தமானதாம்.

மன்னர் மக்களிடம், நான் தான் விஷ்ணு அவதாரம் எனக்கு அழிவே இல்லை, எனக்குப்பின் என் வாரிசுகள் அவதாரம் எடுப்பார்கள். ஆக நீங்கள் எல்லோரும் எங்களைத்தான் வணங்கவேண்டும் என்று சொல்லி, மக்களைப்பாடாய் படுத்தியிருக்கின்றார்கள்.

மக்கள் பல மையில்கள் நடந்து வந்து 60டிகிரி வடிவில் செதுக்கப்பட்ட படிகளில் சிரமப்பட்டு ஏறி கூனிக்குறுகிய நிலையில் தம்மை வந்து காணவேண்டுமென்பதற்காக ஆக உயர்ந்த கோபுரத்தில் தமது அறையினை வைத்துக்கொண்டாராம். நெஞ்சுநிமிர்த்தி வர நினைக்கின்ற மக்களை பாதிவழியிலேயே காவலாளிகள் தமது கால்களாலேயே உதைத்து கீழே தள்ளிவிடுவார்களாம்.

மன்னரைக் காண்பதற்கு மிகவும் பணிவோடும் பயபக்தியோடும் அவரின் பார்வை தம்மீது விழவேண்டும் என்பதற்காக  மக்கள்   மன்னரையே  தெய்வநிலையில் வைத்து பூஜித்து தவமிருந்திருக்கின்றனர்.

நடுவில் மிக உயரமாக இருக்கின்ற மன்னரின் அறைக்குச் செல்கிற ஆரம்பக்கால  படிக்கட்டுகளைக் காண்கையில் எனக்கு அடிவயிறே கலங்கிற்று. நான் எப்படி இதில் ஏறுவேன்.? இப்படிப் பாசி படிந்து செங்குத்தாக இருக்கின்றதே, என்று வினவியபோது, கவலைவேண்டாம், பொதுமக்கள் மேலே செல்லவேண்டும் என்பதற்காக தற்போதைய அரசாங்கம் புதிய படிக்கட்டுகளைத் தயார்செய்து வைத்திருக்கின்றார்கள் நீங்கள் அதன் வழி ஏறலாம் என்றார்டூர் கயிட் . கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

மிக உயரமான படிக்கட்டுகள். ஏறுவதைவிட இறங்குகிறபோது, தலை கிர்ர் என்று சுற்றுகிறது


அந்தப் பயண வழிகாட்டி எங்களிடம் கோவில் வரலாற்றுக்கதைகளைச் சொல்லுகையில்,  இது அரசன் அரசியர் பயிலும் நூல்நிலையம். இது குழந்தைகளின் நூல்நிலையம். இது மக்கள் நுழைகிற நுழைவாசல். இது வி.ஐ.பி நுழைவாசல். உயரமாக இருக்கின்ற நுழைவாசல் அரசர் நுழைவது. அரசர் மட்டும் தலை குனிதல் கூடாது என்பதால் இப்படி உயரமான நுழைவாசலைக் கட்டியிருக்கின்றார்கள். இது அரசர் சவாரி செய்கிற குதிரை/யானையின் நுழைவாசல்.. இது மன்னரின் நீச்சல்குளம், இது மன்னரின் வைப்பாட்டிகளின் நீச்சல் குளம், இது குழந்தைகளது... என எல்லாவற்றிலும் அரசகுடும்ப வரலாற்றையே பதிவுசெய்தார்.

மேலிருந்து கீழே பார்க்கின்ற போது சுற்றியிருக்கின்ற அனைத்தும் தெரிகின்ற பட்சத்தில் முதன்முதலில் தென்படுவது  அந்தப்புற ராணிகளின் அறைகளே. மன்னருக்கென்றே இருக்கின்ற லட்சக்கணக்கான mistresses  மேலாடையில்லாமல் தங்களின் மேனி அழகினைக் காட்டி நாட்டியமாடியபடியே இருப்பார்களாம் இவ்வறைகளில். அவர்களின் உருவ சிலைகள்தானாம் அந்தச்சுவரைச்சுற்றி இருக்கின்ற மேலாடையற்ற பெண்சிலைகள். அந்த நடனத்தின் பெயர், அப்ஸரா. சொர்க்க வரவேற்பு நடனம் என்றும் சொல்கிறார்கள். இன்று அந்நடனம்தான் அங்கே கலாச்சார நடனம் - மேலாடையோடு.



முன்பு கம்போடியாவில் பெண் ஆட்சி நடந்துகொண்டிருந்ததாம். தமிழக அரசர் வந்து அங்குள்ள பெண்மீது காதல் கொண்டு அவளை மணமுடிக்க வரதட்சணை கொடுத்துள்ளார். வரதட்சணை கொடுத்து மணம் செய்து அங்கேயே அவர் தங்கிவிட்டதால், அந்த வழக்கம் இன்னமும் அம்மக்களிடையே கடைபிடிக்கின்ற ஒரு வழக்கமாகவும் மாறியிருந்தது. அதாவது ஆண்கள்தான் பெண்களை மணக்க வரதட்சணைக் கொடுக்கவேண்டும். திருமணம் முடித்தவுடன் ஆண் பெண்ணுடன் புகுந்தவீட்டிற்குச் செல்லவேண்டும். பெண் தான் அங்கு எல்லாமும். ஆண்குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு அவ்வளவாக மகிழ்விருக்காது. அதுவே பெண்குழந்தைகள் என்றால் கொண்டடுவார்களாம்.

சூரியவர்மனுக்குக் கூட இரண்டும் பெண்குழந்தைகள்தானாம்.  ஆண்வாரிசுகள் இல்லை. மருமகன்களாக வந்த ஜெயவர்ம வம்சங்கள்தான் அவருக்குப் பிறகு அப்பேரரசை ஆண்டு வந்து கலையம்சம் பொருந்திய ஆலயப்பணிகளைத் தொடர்ந்துள்ளனர். ஆக, ஜெயவர்மன்கள் அனைவரும் கம்போடிய இந்துக்கள்.
எல்லாக்கோவில் கல்வெட்டுகளிலும் ஏழாம் ஜெயவர்மன் என்கிற பெயர் இல்லாமல் இருக்காது.

மதச் சிக்கல், ஓயாதா போர், மன்னர் மரணம், மதம் சமயமற்ற கமுனீஸ்ட் கொடுங்கோல் ஆட்சி என்று தொடர் இன்னல்கள் மக்களைத்தாக்கவே, அதேவேளையில் பசி பஞ்சமும் தலைதூக்கவே மக்கள் அவ்விடத்தை விட்டு நாலாப்பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்துவிட்டனர். அப்போதிலிந்து அவ்விடம் யாருமற்ற இடமாக மாறி, கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் காட்டு மரங்களாலும் வெள்ளத்தினாலும் மறைந்து மூழ்கிக்கிடந்தது சியாம்ரீப் நகரம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரஞ்சு இயற்கை ஆய்வலரான Henri Mouhot  என்பவர் தமது வர்ணத்திப்பூச்சி ஆய்விற்கு சியாம் ரீப் சென்றிருக்கின்றார். அங்கே இருந்த மூன்றே மூன்று விவசாயக் குடும்பங்களைச் சந்தித்து தமது ஆய்விற்கான நோக்கத்தைச்சொல்லியிருக்கின்றார். அதில் ஒருவர், வர்ணத்திப்பூச்சிகள் என்றால் அங்கோர்வாட் கோட்டையின் அருகில் இன்னும் அதிகமாகவும் அழகாகவும் கிடக்கலாம் என்று ஆலோசனை கூறி ஹென்றியை அங்கே அழைத்துச்சென்றிருக்கின்றார். வர்ணாத்திப்பூச்சிகள் பிடிக்கச்சென்ற ஹென்றிக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷம் காத்திருக்குமென்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். அதைக் கண்டு அதிர்ந்துபோய், அதைப்பற்றி உலகமறிய செய்திருக்கின்றார். இன்று அதன் அழகு நம் எல்லோரின் பார்வையிலும் படுகிறதென்றால் அதற்கு முக்கியக்காரணம் ஹென்றியே..

ஆங்கோர் வாட் மட்டும்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது அதன் பிறகு அங்குள்ள அனைத்து இடங்களையும் தேடிக் கண்டெடுத்துள்ளனர். எல்லா ஆலய அறிமுகப்பலகையில் ஹென்றியின் பெயரும் படமும் இருக்கும். அவர்தான் இந்தப்பொகிஷங்கள் அனைத்தும் கிடைப்பதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கின்றார்.


புகைப்படங்கள்

இனி நான் சென்ற ஒவ்வொரு ஆலயத்தின் படங்களைப்போடுகிறேன். கண்டு களியுங்கள். இடையிடையே ஏதேனும் தகவல் இருந்தால் பகிர்கிறேன். எல்லாமும் மும்மூர்த்தி ஆலயங்கள். பிறகு அவை பௌத்த ஆலயங்களாக மாற்றபப்ட்டுள்ளது. கமூனீஸ்ட் ஆட்சியில் இறைவனே இல்லை என்று எல்லாவற்றையும் அழிக்க முயன்றிருக்கின்றனர்.

சில சிவன் ஆலயங்கள் பாதி நீரில் மூழ்கிய நிலையிலேயே உள்ளன. வைணவ ஆலயங்களில் வித்தியாசமான சிலைகளை நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம், அவ்வளவு கலையம்சம் பொருந்திய சிலைகள். பௌத்த ஆலயங்களில் ஏறுவதற்கு மிகவும் சிரமமாகவே இருந்தது. உயர்ந்த படிக்கட்டுகள். மிக உயரமான இடத்தில் புத்தர் சிலையினை வைத்திருக்கின்றனர்.

சில ஆலயங்களின் விஷ்ணுவின் முகத்தை சிதைத்து அதன் தலையை வெட்டி புத்தரின் முகத்தை ஒட்டவைத்து சிலை செய்திருக்கின்றனர்.

சில ஆலயங்களில் ஆவுடையார் மட்டுமே இருக்கும் லிங்கம் இருக்காது.

சில இடங்களில் புத்தரின் முகம் கைகால்கள் வெட்டப்பட்டிருக்கும். கற்குவியல்கள் ஒருபுறம். களவானிகளின் அராஜகம் ஒருபுறம். கோவிலின் மத்தியில் அரசர் வீற்றிருக்கும் இடத்தைச்சுற்றிலும் வைரங்களைப் பதித்துவைத்திருப்பார்களாம்.! அந்த வைரங்களை நோண்டி எடுக்க அங்கே கொள்ளைக்காரகள் இட்ட துளைகள் அங்காங்கே ஓட்டைகளாக சுவர்முழுக்க இருப்பதைக் காணலாம்.

சிலைகளைச் சிதைப்பதற்கும் நாசம் செய்வதற்கு கமூனீஸ்ட் ஆட்சியின் போது அவர்கள் ஊற்றிய நீலநிற அஷிட் இன்னமும் அப்படியே சில சிலைகளில் படிந்துள்ளது. அதைத்தூய்மை படுத்த இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடினார்களாம். இந்தியர்கள் வந்து அதன்மேல் மற்றொரு மோசமான ரசாயனத் திரவத்தைக்கொண்டு சுத்தம் செய்ததைப்பார்த்து, UNESCO அதையும் தடுத்துவிட்டு, அப்படியே இருக்கட்டும் விடுங்கள் என்று சொல்லி, சுவர் தூய்மைப்படுத்தும் வேலைகளை   நிறுத்தியுள்ளனர். எல்லாவற்றையும் பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்து வருகின்றனர்.

கமுனீஸ்ட்  ஆட்சியின்போது  வெடிக்கப்பட்ட  துப்பாக்கிக்குண்டின்  துளைகளை சுவரில் காணலாம்.

ஒரு சுவற்றில் சூர்யவர்மன் விட்டுச்சென்ற தமிழ் எழுத்துக்கள் பதித்த கல்வெட்டுகள்.  என எல்லா அடையாளாங்களையும் முடிந்தவரையில் போடுகிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்.

UNESCO வும் கம்போடிய அரசாங்கமும், இந்திய அரசின் உதவியோடு பல கோவில்களை புதுப்பித்து புனிதமாக்குகிற பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.  இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம் எல்லாவற்றையும் சரிசெய்து அழகாக்குவதற்கு.

எழில் கொஞ்சும் இந்நிலையும் நம்மை ஆயிரம் ஆண்டுகள் பின்நோக்கி அழைத்துச்செல்கிறது. எல்லாமும் சரி செய்தபின் நிச்சயமாக கேமரா அனுமதி வாழங்கமாட்டார்கள் வருங்காலத்தில் காரணம் அதன் அழகு பாதுகாக்கப்படவேண்டுமென்று இந்திய அரசாங்கம் கூடுதல் கவனமெடுத்து சில தடைகளை அறிமுகம் செய்துவைக்கலாம் என்பது எனது யூகம்.

   Bayon Temple.
கோபுரமெல்லாம் முகங்களின் வடிவங்கள். நன்கு உற்று கவனித்தால், மும்மூர்த்திகளின் முக வடிவங்கள் நாலாப்பக்கமும் தென்படும்

Bayon வளாகத்தில் உள்ள புத்த ஆலயம். எல்லாமும் ஒரே நிலப்பரப்பில்தான் உள்ளன. கீழே உள்ள படத்தின் இடமும் அங்குதான்.


   

Bayon நுழைவாசல். நெற்றியைக் கவனியுங்கள். ராமநாமம்.

Bayon மற்றொரு நுழைவாசல் - நான்கு பிரமாண்ட நுழைவாசல்கள். அதில் ஒன்றின் மீது மிகப்பெரிய மரம் விழுந்து பாழ்பட்டுவிட்டதாம். அங்கே  கட்டுமானப்பணியினை மேற்கொண்டுவருவதால், அந்த வாசல் பொதுமக்களுக்குத் திறக்கவில்லை.



அரசியின் சிலை

Neak Poan - பாதி நீரில் மூழ்கிய நிலையில் உள்ள சிவன் ஆலயம். உள்ளே செல்ல அனுமதி இல்லை. சுற்றிலும் காவல். அழகிய நந்தவனம். இவ்வாலயத்திற்குச்செல்ல நீளமான நீர்தேக்கத்தைக்கடக்கவேண்டும். அந்த நீர்தேக்கம் அவ்வளவு அழகு. பெரிய பெரிய மரங்கள் பாதி மூழ்கிய நிலையில், துள்ளிக்குதிக்கின்ற மீன்கள், குருவி பறவைகளின் ஒலிகள், தாமரைப்பூக்கள் என.. அவ்வளவு அழகு 
East Mebon - இந்த ஆலயம் பார்ப்பதற்கு தஞ்சை பெரியகோவில் போலவே இருந்தது அதனின் அமைப்பில்.

Preah Khan கோவில்.  சிவலிங்கம் - அந்த நுழைவாசலின் அமைப்பைப்பாருங்களேன். காண்போரை வியக்கவைக்கும் அற்புதமான கட்டுமானப்பணி. இது மத்தியில் உள்ள சிவலிங்கம். இங்கே நின்றால் நாலாப்பக்கமும் பாக்கலாம் - நுழைவாசல்களை.

சிவலிங்கம் பிடுங்கப்பட்ட ஆவுடையார்.
புதுப்பித்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

Ta Prohm - இந்த ஆலயம்தான் பல சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்ந்த ஆலயம். மரங்கள் விழுங்கிய ஆலயம். அற்புதம் அற்புதம். சென்று பார்த்தால்தான் அதன் பிரமாண்டம் புரியும். மரங்களையும் சேர்த்து பொக்கிஷமாக பாதுகாக்கின்றார்கள். புதுப்பித்தல் வேலை மிகமும்முறமாக நடைபெற்றுவரும் முதல் கோவில் இது.  







விஷ்ணுவின் கால்களை ஒருபெண் பிடித்து விடுவதைப்போன்ற காட்சி. இதனால்தான் அங்கே Foot massage மிகப்பிரபலமாம். இந்த வழியை காலகாலமாகக் கடைபிடித்துவருவதால்தான் கால்பிடிப்பில் கம்போடியர்களை நாடி உலக பயணிகள் படையெடுக்கின்றார்களாம். (கேட்டல் தகவல்) 
பாற்கடல் கடையும் காட்சி

 அப்ஸரா நடன மணிகளின் உருவம் இது. இதில் மூன்று கலாச்சாரங்கள் கலந்துள்ளதாகச் சொன்னார் அந்த டூர் கயிட். அதாவது, அதனின் ஆடை கம்பூச்சிய கலாச்சாரம். தலையில் உள்ள கிரீடம் சீனர்களைப்பிரதிபலிக்கின்ற கலாச்சாரம். ஆடையில்லாத மேனி, இந்தியர்களின் கலாச்சாரம் (மாம்?)

சிதைந்த நிலையில் உள்ள புத்தர்/விஷ்ணு சிலை.

சுவரில் இருக்கின்ற அந்த கலை வேலைப்பாட்டினை கவனிக்கவும். எங்கள் ஊரின் `பாத்திக்’ பேட்டனில் இதுவும் ஒன்று. 


தமிழ் எழுத்துக்கள் உள்ள சுவர் இது. தமிழ் என்கிறார், ஆனால் என்னால் அதைப் படிக்கமுடியவில்லை. கோவில் வழிக்காட்டி படித்துக்காண்பித்தார். இது ல,ன,ஸ்ரீ,லீ,த,க என்று. எப்படி? கேட்டேன். எங்களின் தாய்மொழியில் இந்த எழுத்துக்கள் பரவலாக உள்ளன என்றார். ஆஹா.. 

அங்கோர் வாட் ஆலயத்தில் நடு பகுதி. இங்கே நின்று கண்களை மூடி தீயானம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள். நாங்கள் மிதித்திருக்கின்ற கல் - விலை மதிப்பற்றதாம். அந்த இடம் குளுகுளு என்றே இருந்தது. காலணிகளைக் கழற்றிவைத்து நின்றேன். வேண்டாம் போட்டுங்கொள்ளுங்கள் ஒண்ணும் பிரச்சனை இல்லை என்றார் guide.