செவ்வாய், மே 20, 2014

பிடித்த பிடிக்காத விஷயம்

என் பணிப்பெண் ஊருக்குச்சென்று இன்றோடு இருபது நாட்கள் ஆகிவிட்டன. 

நான் அவளை அதிகமாகவே மிஸ் செய்கிறேன். 

நான் இப்படிச் சொல்வதை உறவுகள் எள்ளிநகையாடலாம்.. வேலைக்காரியை மிஸ் செய்யறாங்களாம்.ஹிஹிஹி என்று.!

நல்ல பெண் அவள். கிழவியோடுதான் ஓயாமல் மல்லுக்கு நிற்பாள். மற்றபடி எல்லா நேரத்திலும் என்னோடு நெருங்கி ஒத்தாசையாகவே இருந்துள்ளாள்.

சில கருத்துவேறுபாடுகள் இருந்திருப்பினும், விட்டுக்கொடுத்து விசுவாசமாகவே இருந்தாள். ஒரு குண்டூசியைக் கூட எனக்குத் தெரியாமல் எடுத்துச் செல்லவில்லை.

அவளிடம் எனக்குப் பிடித்த விஷயம் - வீசு, என்று சொன்ன எல்லாப்பொருட்களையும் எதற்காவது உதவுமென்று எங்கேயாவது எடுத்து பத்திரப்படுத்திவைத்திருப்பது..

அவளிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் - வீசு, என்று சொன்ன எல்லாப்பொருட்களையும் எதற்காவது உதவுமென்று எங்கேயாவது எடுத்து பத்திரப்படுத்திவைத்திருப்பது..

எல்லாவற்றையும் வீசி எறிந்தேன்.. நினைவுகளை சுமந்துகொண்டு

ஞாயிறு, மே 11, 2014

மின்சாரக் கட்டணம்

யாராவது என்னைத்திட்டினால், எனக்கு உறுத்தும். மனக்கஷ்டம் கொள்வேன். மறந்துவிடுவேன்.

அதுவே நான் யாரையாவது திட்டினால்.. கோபம் தொடரும். வெறுப்பு வரும். எரிச்சல் வரும். எதுவும் செய்ய முடியாது என்னால்..

மூன்று மாதங்களுக்கு முன் நான் ஒரு பிரிட்ஜ் வாங்கினேன். செகண்ட் கிளாஸ் பிரிட்ஜ். செகண்ட் கிளாஸ் என்றால், லாரியில் இருந்து இறக்குகிறபோது சின்ன விரிசல் அதனில் கதவுகளில். அது உடனே சர்வீஸ் டிப்பார்ட்மெண்ட் பரிசோதனைக்குச் சென்று, பாதிவிலையில் விற்பனக்கு வந்தது.

இதுபோன்ற பொருட்களை அங்கே பணிபுரியும் நாங்களே, `நான் நீ’ என எடுத்துக்கொள்வோம். பணம் கூட முதலில் கொடுக்கத்தேவையில்லை. சம்பளம் கிடைக்கின்றபோது கொடுக்கலாம். ஆனால் invoice இஸ்ஷு செய்துவிடுவார்கள். நம் பெயரில்.

`சூப்பர் ஐஸ் பெட்டி, வாங்கிக்கோங்க. புதுசு பாதிவிலையில்.. கிடைக்காது. சர்வீஸ் ஒகே.. நல்ல பிரிட்ஜ்..’ என்று சர்வீஸ் டிப்பார்மெண்ட் ஊழியர்கள் சொல்லவே, போனால் வராது. விட்டால் கிடைக்காது என்று அதை நான் வாங்கிக்கொண்டேன்.

என்னிடம் ஏற்கனவே ஒரு பிரிட்ஜ் உள்ளது. இருபது ஆண்டு கால பிரிட்ஜ். பெரியது. அது இன்னும் நல்ல நிலையிலேயே உள்ளது. இப்போது இன்னொன்று கொஞ்சம் சிறியது. சரி பரவாயில்லை, பேரங்காடியில் offer விலையில் விற்கப்படுகிற சமையல் பொருட்களை கொஞ்சம் கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதற்கு இந்த பிரிட்ஜ்’ஐ பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு வாங்கிவைத்துப் பயன்படுத்தி வந்தேன்.

நான் பிரிட்ஜ் வாங்கிய சமையத்திலா நாட்டில் மின்சாரம் விலையேற்றம் காணவேண்டும். !

என்ன கணக்கோ தெரியவில்லை, திடீரென்று இம்மாதம் மின்சாரக் கட்டணம், நாநூற்று இருபது ரிங்கிட் வந்துவிட்டது. கொடுமை. இவ்வளவு அதிகமாக வந்தே இல்லை. எப்போதும் இருநூறு ரிங்கிட்’ஐக் கூட தாண்டாது. இது என்ன புதிய கொள்ளை.! என்று நினைத்து, மின்சாரவாரியத்திற்கு அழைப்பு விடுத்துக்கேட்டால், `மின்சாரம் விலையேறிவிட்டது, இனி கட்டணம் அப்படித்தான் வரும். உங்களின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது.’ என்று மட்டும் ஆலோசனை வழங்கினார்கள்.

பிறகு என்ன.? உன்னால் தான் இவ்வளவு உயர்வு. ஓயாமல் மைக்ரொவெவ் பயன்பாட்டினால்தான்..! ஓயாமல் சுடுநீர் கேத்தலை தட்டிக்கொண்டே இருப்பதால்தான்.. ! ஹிட்டரில் ஓயாமல் குளிப்பதால்தான்..! எல்லா விளக்குகளும், மின்விசிறிகளும் ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தால்..! மழைகாலத்திலும் ஏர்கோண்ட் ஓடினால்..! லப்டாப், தொலைக்காட்சிப்பெட்டி, ஐயர்ன், வாஷிங்மிஷின், வஃகியூம், வானொலிப்பெட்டி என எல்லாவற்றையும் சொல்லிமுடித்த பின்.. நான் வாங்கிய புதிய பிரிட்ஜிக்கு வந்துவிட்டார்கள். `நீ தான் ரெண்டு பிரிட்ஜ் பாவிக்கிற.. அது எவ்வளவு கரண்ட் இழுக்கும் தெரியுமா? அம்மானாலத்தான் கரண்ட் அதிகமா ஏறுது.. என்று எல்லாப்பழியும் என் மேல் விழ, நான் வேலைக்காரியை உருட்ட, ஒரே அமளி சென்ற ஏப்ரல் மாத இறுதியில்.

எப்படி என்ன பிரச்சனை வந்தாலும் நான் தான் பொதிசுமக்கும் கழுதையாகிவிடுவேன் என் வீட்டில். என் தலையிலேயே விடியும் அனைத்தும். சரி இம்மாதம் எல்லாவற்றையும் குறைத்துவிடலாமே என்று பயன்பாட்டைக் குறைக்கப்போராடி வருகிறேன்.

இவ்வேளையில், என் கம்பனியில் ஏற்கனவே பணிபுரிந்த நபர் ஒருவர் கம்பனிக்கு வந்தார். பிரிட்ஜ் வாங்க. பிளாட் வீடு அவரின் வீடு. ஏற்கனவே உள்ள பிரிட்ஜ் கெட்டுப்போக, அது மிகவும் பழமையான பிரிட்ஜ் என்பதால், பழுதுபார்க்கமுடியாது, காரணம் அதனின் உபரிபாகங்கள் தற்போது விற்பனையில் இல்லை. ஆக பழுதுபார்ப்பது விரையம். புதிதாக வாங்கிக்கொள்ளுங்கள், என்று ஆலோசனை வழங்கவே, ஷொரூமுக்குள் வந்தார், புதிய பிரிட்ஜ் பார்க்க. எல்லாம் அதிக விலை. அவ்வளவு பணம் கொண்டுவரவில்லை. விலை குறைவாக இருந்தால் பரவாயில்லை.. என்ன இப்படி விலையேறிக்கிடக்கு சாமான்கள்.! மகளுக்கு கல்யாணம் வேறு வைத்திருக்கேன். பணம் போதாது என்று முனகிக்கொண்டே என்னிடம் வந்தார்.

என்ன பிரிட்ஜ் வேணும்.. நான் வேண்டுமானால் செகண்ட் கிளாஸ் எதும் ஸ்டோர்க் இருக்கா என்று கேட்டுப்பார்க்கிறேன், என்று கூறி அவர் வாங்க நினைக்கின்ற பிரிட்ஜ்’யைக் காட்டச்சொல்லிக் கேட்டேன். என்ன ஆச்சரியம், நான் வாங்கிய அதே பிரிட்ஜ்’ஐக் காட்டினார். எனக்கு தலையில் கொம்பு முளைத்தது. என்னிடம் உள்ளதை விற்றுவிட்டால்.!! மனதில் நினைத்தேன். சொல்லவில்லை. இருப்பினும் அந்த பிரிட்ஜ், செகண்ட் கிளாஸ் இருக்கிறதா என்று கேட்டு விசாரித்துச்சொன்னேன். இருந்தது. ஆனாலும் அதுவும் விலைதான். கொஞ்சம்தான் குறைத்தார்கள். இல்லேங்க.. முடியாது. அவ்வளவு பணம் இல்லேங்க.. ப்ப்ச்ச்.. என்று சலித்துக்கொண்ட அவரிடம், என்னுடைய பிரிட்ஜ் பற்றிய விவரத்தைச் சொன்னேன்.

வாங்கி மூன்றுமாதமே என்றாலும், நான் வாங்கிய விலையில் இருந்து இருநூறு ரிங்கிட் குறைத்துக்கொண்டே பேரம் பேசினேன். பாவம் ஏழை. அகமகிழ்ந்தார். அப்படியா.? நல்லவேளை கடைகளின் பக்கம் செல்லவில்லை. உடனே எடுத்துக்கொள்கிறேன். போன் நம்பர் கொடுங்க.. என்று உற்சாக வசனமெல்லாம் பேசிவிட்டு.. வீட்டு முகவரியைப் பெற்றுக்கொண்டு.. ஓ அங்கேயா வீடு.. வந்திருக்கேன் வந்திருக்கேன். டோல் தாண்டி, லெஃப்ட்ல ஏறி நேரா.. ஓ.. லாரி ஓட்டிக்கிட்டு அங்கே எல்லாம் வந்திருக்கேன். பெரிய வீடுகளாச்சே அது எல்லாம்.. புது ஏரியா.? நான் அங்கே வீடு வாங்கலாம்னு நினைச்சேன்.. லோன் கிடைக்கல.. அழகான எடங்க அது.. என்று பில்டாப் எல்லாம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அன்றிலிருந்து ஓயாத `மிஸ்ட் கால்’கள்.

என்ன.? என்று நாம் அழைத்துக்கேட்டால், நமது பணத்திலேயே.. என்ன மாடல் அந்த பிரிட்ஜ்? எப்போ வாங்கியது.? எப்போ வந்து எடுக்கலாம்.? எவ்வளவுக்கு வாங்கினீங்க? புதுசா இருக்கா? விலை இன்னும் கொஞ்சம் கொறச்சுக்கீங்களேன்.. என் நண்பனுக்கும் வேணுமாம் அதனால நானும் நண்பனும் வருவோம்..! ரெண்டு பேர்ல யாருக்கு பிடிக்கிதோ, அவங்க எடுத்துக்குவோம்.! பிரிட்ஜ்’யில் என்ன எல்லாம் வைப்பீங்க.? நாறுமா? சுத்தம் பண்ணிவையுங்க.. இன்னிக்கு வரோம்.. நாளைக்கு வரோம்.. வந்துக்கிட்டு இருக்கோம்.. லாரி வாடகை நூறுவெள்ளி கேட்கறாங்க.. அத நீங்க கொடுக்கறீங்களா? இப்ப நான் ஒண்டி வந்தா ..ஆரு ஒதவி செய்வா? என இப்படி ஓயாத டார்ச்சர்.

நேற்று மீண்டும் ஒரு மிஸ் கால். தொலைபேசியில் கிரேடிட் இல்லை. இருந்த கொஞ்ச பணத்திலேயும் அழைத்து, என்ன ? என்று கேட்டேன். நான் இப்போ வந்துக்கிட்டு இருக்கேன். பாதை தெரியாம தடுமாறுகிறேன். வழிகாட்டுங்க.. என்றார். எப்படி வழிகாட்டுவது.? கிரெடிட் வேறு தீர்ந்துபோனது. ஆன் லைன்ல இதுக்கென்றே மெனக்கட்டு டாப் ஆப் செய்துகொண்டு, அழைத்தேன்.

``எங்கே இருக்கீங்க?’’

``ஆஸ்பித்திரிக்கிட்டே ..’’

``ஐயோ, அங்கே ஏன் போனீங்க?’’

``நீங்கத்தான் லெஃப்ட்ல நுழையச்சொனீங்க ..அதான்.?’’

``எங்கே இருந்து லெஃப்ட்ல நுழைந்தீங்க? டோல் தாண்டிய பிறகா?’’

``டோல்’எ நான் பார்க்கவே இல்லியே..’’

``பிறகு ஏன் லெஃப்ட்ல நுழைஞ்சீங்க?’’

``அதாங்க சீலாப் ஆ நுழைஞ்சிட்டோம்..’’

``இப்போ எங்கே இருக்கீங்க?’’

``பாண்டார் புத்ரி சைன்போட் முன்னாடி..’’

``ஹூஹும்ம்.. அங்கே இருந்து இன்னும் பத்து கிலோமீட்டர் வரணும்.’’

``ஐய்யோ.. இன்னும் பத்து கிலோ மீட்டரா? லோரிக் காரன் கத்துவானே..”

``சரி சரி.. ட்ரை பண்ணுறேன்.”

ஆள் அழைக்கவே இல்லை. என்னாச்சு என்று மீண்டும் அழைத்தேன். எங்கேயாவது மாட்டிக்கொண்டால்..! அதற்குள் பிரிட்ஜில் உள்ள பொருட்களையெல்லாம் தூய்மை படுத்திக் காலியாக்கினேன்.

``எங்கே இருக்கீங்க?’’

``அட கண்டுபிடிக்கமுடியலங்க.. காரை திருப்பி டோல் கிட்ட வந்திட்டோம்.” யாருடனோ உரத்தகுர்லில் சிரித்துப்பேசிக் கொண்டே பதில் வந்தது. (கவனத்தில் கொள்ளவும்.. அவர் என்னிடம் முதலில், டோல் வரவே இல்லை என்றார். பிறகு லோரி ஓட்டுனர் கத்துவான்.. என்றார். இப்போது வேறுகதை.. இதுதான் நம்மவர்கள்.)

என்னால் அதற்குமேல் பொறுக்கமுடியவில்லை. என்னுடைய கிரேடிட் முப்பது வெள்ளி ஏறக்குறைய தீர்ந்த நிலையில்.. வறுமையில் வாடும் ஒருவருக்கு உதவ நினைத்து நான் வறுமையின் எல்லைக்கோட்டுக்கே வந்திடுவேன் போலிருக்கு.. முப்பது வெள்ளி முடிந்தாலும் பரவாயில்லை, பிரிட்ஜ் விற்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று முடிவுசெய்துகொண்டு, அழைப்புக் கொடுத்து `தாறுமாறாகத்’ திட்டித்தேர்த்தேன் அவனை.

கெட்டவார்த்தைகள் வராத குறைதான். அற்பர்கள்.

வாக்கு காக்கத்தெரியாதவர்கள் எல்லாம் மனிதர்களா? மடையர்கள்.







வியாழன், மே 01, 2014

தங்கச் சங்கிலி

மாமிகதை...

பணிப்பெண்ணின் பெர்மிட் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் அவளின் மாமியாருக்கு ஸ்ட்ரோக் வர, நான் கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டாள்.

இடையில் எனக்கும் அவளுக்கும் என் மாமியால் ஒரு பிரச்சனை வர, அவளை ஒரு நாள் காலையில் செம்மையாகத் திட்டித்தீர்த்தேன். அன்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருந்தாள். வேலைகளைச் சரியாகச் செய்ய மாட்டாள். அலுவலகத்தில் இருந்து அழைப்பு கொடுத்து, மாமி என்ன செய்கிறார்..? குளிர்சாதனப் பெட்டில் உள்ளை மீன்களை வெளியே எடுத்துவை, மாலையில் சமைக்கவேண்டும் ..! என எதாவது சொல்லவேண்டுமென்றால், தொலைபேசியை எடுக்கமாட்டாள்..

நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க, இடையில் சலசலப்புகள் வர, அவள் செல்கிறேன் என்றவுடன், சரி போ.. என்று நானும் விடைகொடுத்துவிட்டேன்.

மாமிக்கும் அவளுக்கும் ஓயாத வியட்நாம் போர் நடந்துகொண்டே இருக்கும். அவள் எது செய்தாலும் மாமிக்குப் பிடிக்கவில்லை. ஏப்பம், குசு, தும்மல், இருமல் என எது சத்தமாக வந்தாலும், `எனக்கு அருவருப்பாக இருக்கு.. அவளைப் போகச்சொல்.. அவள் வேண்டாம்.. ’ என ஓயாத கூப்பாடு. வேலை முடிந்து வீட்டுக்கு ஏன் வருகிறேன் என்றிருக்கும் எனக்கு.. ஒரே அக்கப்போர்.

சரி கிழவி, அல்ஸமீர் வியாதிக்காரர்.. நேரத்திற்கு ஒன்று பேசுவார். நீ சின்னப்பொண்ணுதானே, அநுசரணையாக நடந்துகொள்ளக்கூடாதா? என்றால், என்னிடம் முறைப்பாள்.

சரி, அவளே வேலைக்காரி. வேலைக்கு வந்தவள். அவளிடம் நாம் என்ன எதிர்ப்பார்க்கமுடியும்.? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களேன், அவள் என்ன நீங்க பெத்த பிள்ளையா.? என்றால், மாமி இரண்டு நாளைக்கு சோறு சாப்பிட மாட்டார். கோபமாம். நான் போறேன். என்னை அங்கே அனுப்பு. இங்கே அனுப்பு.. என பல்லவியை ஆரம்பித்துவிடுவார்.

நேரகாலம் கூடி வர, சரி வேலைக்காரப் பெண்ணை அனுப்பிவிடலாமென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினேன்.

மாதக்கடைசி நேற்று. அவளின் கணக்கு வழக்குகளையெல்லாம் முடித்துவிட்டு, அவளுக்கும் மாமிக்கும் கொஞ்சம் புதுத் துணிமணிகள். இன்று நல்ல சமையல் செய்வதற்கு நிறைய பொருட்கள்.. இறைச்சி மீன் காய்கறி பழவகைகள் என வாங்கிக்கொண்டு, அவளுக்கொடுக்கவேண்டிய சம்பள பாக்கி இரண்டாயிரம் ரிங்கிட் சொற்சம் என வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு, வீடு வந்து சேர்ந்தேன்.

இன்று காலையில் (1/5/2014) கிளம்புகிறாள்.

மாமியும் கிளம்புகிறார். இங்கே யாருமில்லை கவனிக்க.. ஆக, இன்னொரு மகன் வீட்டிற்குக் கிளம்ப அவரும் குதூகலமாகவே ஆயத்தமானார்.

மாமி ஒருவாரத்திற்கு ஒருமுறைதான் மலம் கழிப்பார். மருந்துகொடுத்து அதை வெளியாக்கவேண்டும். சென்றவாரம் மருந்துகொடுத்தும் வெளியே வரவில்லை. என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை. பொதுவாக மருந்துகொடுத்து, மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் மலம் வெளியாகிவிடும். பயங்கர நாற்றத்தோடு, கருப்பாக.. பணிப்பெண் தான் அனைத்தையும் தூய்மைப்படுத்துவாள். முகஞ்சுளிக்காமல் செய்வாள்.
பிரச்சனை இப்படி இருக்க.. இன்று கிளம்பவேண்டும். இடையில் எதும் கோளாறு என்றால், பிரயாணத்தில் பிரச்சனை வரும். ஆக, எப்படியாவது மருந்துகொடுத்து அந்த இரண்டு வார `ஸ்டோக்’ஐ வெளியாக்கிவிடு, என்று பணிப்பெண்ணிற்கு உத்தரவு இட்டேன்.

அவளும் நேற்று மதியம் வாக்கில் மருந்துகொடுத்து, வயிற்றை காலியாக வைத்திருந்து, மாலை நான்கு மணிக்கு மாமிக்கு வயிற்றுவலி வந்து, எல்லாம் சுத்தமாக வெளியாகியது.

வயிற்றுவலி என்று மாமி சத்தம்போட.. வேக வேகமாக மாமியின் ஆடைகளைக் கழற்றவே, மாமி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி கீழே விழுந்துவிட்டது. அதை மாமியும் கவனிக்கவில்லை. பணிப்பெண்ணும் கவனிக்கவில்லை.

தூய்மைப்படுத்துகிற வேலையெல்லாம் செய்து முடித்தபிறகு, என்ன குளியலறையில் மினுக்மினுக் என்று மின்னுகிறதே, என்று பார்க்க, மாமியின் தங்கச் சங்கிலி அங்கே கிடந்துள்ளது. அதை எடுத்துக் கழுவி, அவளின் கழுத்தில் மாட்டிக்கொண்டாள், மறந்தாட்போல் எங்கேயாவது வைத்துவிட்டால், அது காணாமல் போய், ஊருக்குப்போகும் தருவாயில் தமக்குக் கெட்டப்பெயர் வந்துவிடப்போகிறதென்று நினைத்து, பத்திரமாக கழுத்தில் மாட்டிக்கொண்டாள்.

இரண்டு வார `ஸ்டோக்’ வெளியாகியவுடன், மாமிக்கு கடுமையான அசதி. வெறும் வயிறு வேறா, கஞ்சி துவையல், ஒரு கப் காப்பி என உள்ளே தள்ளிய பிறகு, சோர்ந்துபோய் தூங்கிவிட்டார். தூங்குபவரை தொந்தரவு செய்ய விரும்பாமல், அதை அவள் கழுத்தில் மாட்டிக்கொண்டாள்.

மாலை ஆறு மணிக்கு நான் வீட்டுக்கு வருகிறபோதுகூட நல்ல உறக்கத்தில் இருந்தார் மாமி. என் குரல் கேட்டவுடன் எழுந்துகொண்டார்.

சுறுசுறுப்பாக கலகலப்பாக இருந்தார். பலநாள் கழிவுகள் உடலைவிட்டு அகன்ற திருப்தியில் உற்சாகமாகவே தென்பட்டார். மறுநாள் பிரயாணம் செய்யப்போகிற மகிழ்ச்சியில், `என்னுடைய பர்சில் பணம் எவ்வளவு இருக்கு பார்.. அவள் திருடிக்கொண்டு போய்விடப்போகிறாள். என் சட்டையெல்லாம் எடுத்துவை. மருந்து எடுத்துவை... ஒரு நல்ல புடவையும் வை.. தோடு இப்பவே போட்டுவிடு.’ என, ஒவ்வொன்றாக நினைவுக்கூர்ந்து நினைவுக்கூர்ந்து `நொய்..நொய்..நொய்’ என்றார். தங்கச் சங்கிலியைப் பற்றி அவரும் கேட்கவில்லை. எனக்கும் தெரியவில்லை.

இரவு உணவிற்குப் பிறகு அவரை அறையில் தள்ளிவிட்டு, புலம்பல்களை ஒரு பொருட்டாகக் கருதாமல்,  நாங்களும் உணவை முடித்துக்கொண்டு, பணிப்பெண்ணின் சம்பளக் கணக்கை முடிக்க, இருவரும் வரவேற்ப்பு அறையில் அமர்ந்தோம்.

இரவுமணி பதினொன்று.

தோ..பாரு.. உன்னுடைய கணக்கு வழக்கு இது.. இவ்வளவு நாள் வேலை செய்ததில், எடுத்தது, அப்பாவிற்கு அனுப்பியது போக மிச்சம் இவ்வளவு. உன்னிடம் பணத்தை ஒப்படைக்கிறேன், என்று கூறி, கணினியில் கணக்கைக் காட்டிவிட்டு என்னுடைய ஹென்பேக்கில் கைவிட்டால், மணிப்பர்ஸைக் காணோம்.

முகமெல்லாம் வெளிறிவிட்டது எனக்கு. வெடவெடன்னு வந்துவிட்டது...வேர்க்கிறது.. என்னுடைய சம்பளம். அவளுடைய சேமிப்பு என ஒரு தொகையை அல்லவா நான் அதில் வைத்திருந்தேன்.! எங்கே என்னுடைய பர்ஸ்.? காணோம். துணிக்கடைக்குப்போனேன்.! பழக்கடைக்குப்போனேன்..! இறைச்சிவாங்கினேன்.! காய்கறி சந்தைக்குப்போனேன்...! பர்ஸ்’ஐ கொண்டுசெல்லவில்லையே.. பாக்கெட் தைத்த யூனிபெர்மில், தேவையான பணத்தை மட்டும் உள்ளே வைத்துக்கொண்டு பர்ஸை ஹென்பேக்கிலே அல்லவா வைத்துவிடுவேன்.. ஆனால் ஹென்பேக்கில் பர்ஸ் இல்லையே.. ஐய்யகோ .. நான் என்ன செய்வேன்.? அழாதகுறைதான்.

பணிப்பெண் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பணம் செலுத்துகிற சமையத்தில், நான் நாடகமாடுகிறேன் என்றல்லவா நினைத்திருப்பாள், மனதில். இருப்பினும் அவளே ஆலோசனை கூறினாள். அலுவலக மேஜையில் வைத்திருந்தால்.?

இருக்கலாம், இருக்கலாம்.. என்று சொல்லிக்கொண்டே, அணிந்திருந்த நைட்டி’யோடு காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு விரைந்தேன். நானும் துணைக்கு வருகிறேன், என்று, அவளும் என்னோடு தொற்றிக்கொண்டாள்.

அலுவலகம் சென்று சேர்ந்தவுடன், கார்ட் கேட்டான், `என்ன விஜி இந்த நேரத்தில்.. ?’ ஒரு முக்கியமான விஷயம். பர்ஸ் காணோம். உள்ளே நுழைய அனுமதி கொடு.. என் இடத்திற்குச்சென்று பார்த்துவிட்டு வருகிறேன். என்றேன். அவனும் கேட்’ஐ திறந்து உள்ளே நுழையவிட்டான்.

பர்ஸ் மேஜையின் கீழ் விழுந்துகிடந்தது. கிடைத்ததே போதுமென்று நினைத்துக்கொண்டு., வீடு வந்து சேந்தோம்

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது, சாலை அமைதியாகவே இருந்தது. காரை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தால்...

மாமி தனியாக அலறிக்கொண்டிருந்தார்..

“விஜி..விஜி.. வந்திட்டியாம்மா.. என்னுடைய தங்கச்சங்கிலியைக் காணோம். யாரோ பிடுங்கிக்கொண்டார்கள். நாசமாப்போச்சு.. எனக்கு மூச்சுத்திணறல் வருகிறது. ஐய்யோ.ஐய்யோ.. ”

நல்லவேளை.. நான் கொஞ்சம் திடகாத்திரமான பெண்...!

     

சனி, ஏப்ரல் 19, 2014

தெனாலிராமன்

வடிவேலுவின் மறுபிரவேசம். இரட்டைவேடம்.

இனி பயணம் தொடரட்’டும்.. என்கிற வாசகத்துடன் உற்சாகமாகப் பயணிக்கிறது திரைக்கதை.

அவரின் நகைச்சுவையும் உடல்மொழிகளை(லை)யும் மிஸ் செய்கிறவர்களுக்கு இந்தப்படம் நல்ல விருந்து.
அரசியலில் மூக்கை நுழைத்து பாதிப்புக்குள்ளாகி, அதனால் தாம் பட்ட அவஸ்தைகளை ஆங்காங்கே வசனமாகப் பேசுகிறார். ஏன் தனிமையில் இருக்கின்றாய்.? என்று கேட்கின்றபோது, `நிறைவாகும்வரை மறைவாக இருப்பதே சிறப்பு.’ என்கிற பதிலைக் கூறுகையில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்குத் தகுந்த பதில் வழங்குவதாகவே எமக்குப் படுகிறது.

பெரிய எதிர்ப்பார்ப்புடன் மக்கள் திரையரங்கில் திரண்டிருந்தனர். ஏமாற்றம் இல்லை. மக்கள் காட்சிக்குக் காட்சி கைத்தட்டி ஆரவாரம் செய்வதைக் காண்கையில், நிஜமாலுமே ரசிகர்கள் வடிவேலுவை `மிஸ்’ செய்துள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை.

அரச சபையில் மந்திரிகளில் ஒருவராக தெனாலிராமன்  நியமிக்கபபடுகிறார். அரசரைக் கொலை செய்யவருகிறார். பிறகு கதை வேறுபக்கம் நகர்கிறது.

அரசராகவும் தெனாலிராமனாகவும் வடிவேலுதான். அரசர் அப்பாவி. தெனாலிராமன் அறிவாளி. தெனாலிராமன் செய்கிற அனைத்து சேட்டைகளும் படத்திற்குத் திருப்புமுனை. சிறுவயதில் ஆரம்பப்பள்ளியில் பயில்கின்ற காலகட்டத்தில் கேட்கப்பட்ட தெனாலிராமன் கதைகளை படத்தின் காட்சிக்கு ஏற்ப மிகவும் நகைச்சுவையாக நுழைத்திருக்கின்றார்கள். `எல்லாம் நன்மைக்கே’ என்கிற கதை தொடங்கி `பானைக்குள் யானை’, `கிடைக்கின்ற பரிசில் பாதி’ என்கிற கதைகளையெல்லாம் என்றோ எங்கேயோ கேட்டதுபோலவே இருந்தாலும், வடிவேலுவின் பாடிலங்குவேஜ்’யின் மூலம் மீண்டும் அவைகளை உயிர்ப்புடன் கண்டு மகிழ்கையில் மனம் குதூகலிக்கிறது.

பேரங்காடிகள் திறக்கப்பட்டால் சிறுவனிகர்களின் பாடு என்னவாகும் என்கிற சர்ச்சை சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்திருந்ததை இத்திரைக்காவியத்தில் இடைசெருகலாக நுழைத்துள்ளார்கள்.

வயிறுகுலுங்க சிரிக்கவைத்த படம் என்று சொல்லமாட்டேன். இருப்பினும் பல காட்சிகளை நான் ரசித்துப்பார்த்தேன். அரச சபையில் நிகழ்த்தப்படுகிற காட்சிகள் அனைத்தும் ரகளையானது.

முப்பத்தாறு மனைவிகளில் ஒருவர், தம்மிடம் எப்படி மயங்கினார் என்று மகளிடம் கதை சொல்லுகையில், `பார்த்தும்மா, நீ எதும் இந்த யுக்திகளைக் கடைப்பிடித்து விடப்போகிறாய். பிறகு நம்மை சொம்பு பரம்பரை என்று முத்திரை குத்தி விடுவார்கள்.. அதுவும் வெறும் சொம்பு... என்று சொல்கிற காட்சியில் தியேட்டரில் கலகல சிரிப்பு. மனைவிகளின் ஒருவரைக் காணச் செல்லுகையில் எங்கே நுழைவது, எங்கே செல்வது என்று தள்ளாடும்போதும் .. உடல்மொழி பிரமாதம். நல்ல நடிகர் வடிவேலு.

அரசர் வடிவேலு சராசரி மக்களோடு கலந்து படும் அவஸ்தைகள் அனைத்து செம காமடி.

அப்போ அப்போ அரசியல் பேச்சுகள்/வம்புகளும் தலைகாட்டுகிறது. யாரைப்பற்றிப்பேசுகிறார்கள் என்று மலேசியாவில் இருக்கின்ற எங்களுக்கே புரிகிறபோது, தமிழ்நாட்டவர்களுக்குச் சொல்லவா வேண்டும்.!?

வடிவேலுக்கு டூயட், ரொமண்டிக் லூக் எல்லாம் ... ஷப்ப்ப்ப்ப்பா.. அதுவும் அழகான பெண்நாயகி ஜோடி.

சீரியஸ் வடிவேலு வருகிறபோது, வடிவேலுவாகவே தெரியவில்லை. நடையில் மிடுக்கு. சிவாஜிகணேசன் திருவிளையாடல் படத்தில் கடற்கரையோரம் நடப்பாரே, அதே போல் இருந்தது.
நாகேஷ் அவர்களை எல்லா வேடத்திலும் ரசிக்கமுடிந்தது. ஆனால் வடிவேலு நகைச்சுவை செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும். வயதான தோற்றமும் வந்துவிட்டது வடிவேலுவிற்கு.

ராதாரவியின் நடிப்பு `ஓவர் அக்டிங்’

அழகுப்பதுமை நாயகி.

நிச்சயம் குழந்தைகளைக் கவரும் படம் இது. குடும்பத்துடன் சென்று காணலாம்.

happy அண்ணாச்சி

திங்கள், ஏப்ரல் 14, 2014

துளிப்பா

வர்ணங்களை ஏந்திய
பறவைகள்
கிளைகளில் ரங்கோலி.

______%______________

கலர் தீட்டுகிறேன்
முகத்தில்
நான் ஓவியனல்ல.

ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

முகநூலில் நாங்கள்

அன்பு ஜெ.. 

வாசிக்க நினைப்பவர்கள் எதையாவது வாசித்துக்கொண்டேதான் இருப்பார்கள். 

முகநூலில் இருந்து விலகிவிட்டால், அவன் புத்தகமும் கையுமாக இருப்பானா என்ன.?

முகநூல் அக்கவுண்ட்’ஏ இல்லாத எத்தனை பேர், புத்தகப்புழுவாக இருக்கின்றார்கள். ? 

புத்தகத்திலேயே மூழ்கி இருப்பவன் மட்டும் என்ன அறிவாளியா?

முகநூலே கதியாக இருக்கவேண்டாம் என்பதைப் பற்றிய தெளிவு உள்ளவர்களும் இங்கே இருக்கின்றார்கள்தான். இருப்பினும் தினமும் எதேனும் புதிய செய்திகள் உள்ளனவா, என்று எட்டிப்பார்த்து, மனதில் தோன்றுவதைப் பதிவேற்றி குதூகலிப்பது, தவறா?

ஒரு சினிமா படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா? என்கிற சிந்தனையில் இங்கே நுழைந்தால், உடனே தெளிவு கிடைக்கலாம்.! பலரின் பகிர்வுகள் சினிமா பற்றியதே..

எங்களுக்கே தெரியாத சில பண்டிகைகளை தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கொண்டாடி மகிழும்போது, நாங்களும் அதனின் தத்துவ அடிப்படைகளை ஆராய்ந்து பின்பற்றத்துவங்குகிறோம். கலாச்சார செயல்பாடு. உகத்தமிழர்கள் இணையத்தின் வழி இணைகிறோமே.. நன்மைதானே.. !? (அம்மா அப்பா சொல்லித்தரவில்லையா? என்று கேட்டால், அவர்களே கூலித்தொழிலாளிகள். பண்டிகையாவது பலகாரமாவது.. என்று ஓடி ஓடி உழைத்தவர்கள். சொல்லிக்கொடுக்கவில்லை என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.)

நிறைய நண்பர்கள் மூலமாக பலர் வியாபாரத்திலும் உலக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். export import, travel agencies என.!

நட்புக்குள் திருமணமும் நடந்துள்ளது. சிறப்பாகவே வாழ்கின்றார்கள்.

படித்ததில் பிடித்த பகிர்வுகள் அதிகம் நம்மையும் கவர்கின்றன. எழுதத்தூண்டுகின்றன..

பத்திரிகைகளுக்கு டாட்டா காட்டியாகிவிட்டது.. எல்லோரும் நிருபர்களாக மாறி இங்கே தகவல்களைப் பகிர்வதால், சுடச்சுட செய்திகள் உடனுக்குடன் கிடைக்கின்றன.

சில பிரபல எழுத்தாளர்கள், முகநூலை விட்டு விலகுங்கள் என்கிற கோரிக்கையினை வைக்கின்றார்கள். இருந்தபோதிலும், அவர்களின் எழுத்துகளின் மேல் காதல் வந்ததிற்கு முகநூல் பாலமாக இருந்துவந்துள்ளது என்பதனை மறுக்கத்தான் முடியுமா, அவர்களால்?

உலகம் சுருங்கிவிட்டது என்பதனை முகநூல் போன்ற சமூகவலைத்தளங்கள் பறைசாற்றிவருகிறன.

தமிழில் தட்டச்சு செய்யவேண்டும் என்கிற வேட்கை, தமிழ் படிக்காதவர்களுக்கும் ஏற்பட்டதிற்குக் காரணம் இந்த முகநூல் என்றால், இல்லை என்போமா?

தமிழில் நாம் செய்யும் எழுத்துப் பிழைகளை உடனே கண்டித்து திருத்தித் தருகிற தமிழ் நட்புகள் இங்கே அதிகம். தனியாளாக புத்தகமும் கையுமாக இருப்பவர்களுக்கு இது சாத்தியமா? நாம் செய்வதுதான் சரி என்கிற இறுமாப்பு அதிகரிக்காதா? இது அவலமில்லையா.?

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்பதைப்போல், ஊறுகாய் போல் முகநூல் சகவாசம் இருக்கின்றபோது, வாசிப்பிற்கு அது சுவை சேர்க்கிறது, என்று நான் சொன்னால் என்மேல் கோபப்படுவீர்களா?

நான் முகநூலின் மூலமாக நிறைய கற்கிறேன். இல்லையேல் கற்கால மனிதர்கள் போல், எதுவுமே தெரியாமல், எதையும் கற்காமல், சுற்றியுள்ள பலரை வெட்டிப்பேச்சால் வெறுப்பேற்றிக்கொண்டே இருப்பேன் என்பது மட்டும் நிச்சயம்..

விலகுங்கள் என்று சொல்லாதீர்கள். தேவையற்றதைப் பேசுகிறவர்களை நட்பு வட்டத்தில் இருந்து நீக்குங்கள் என்று மட்டும் சொல்லுங்கள் சார்..

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

நர்சிங் ஹோம்

நேற்று ஒருவரைச் சந்திக்க அவரின் நர்சிங் ஹோமிற்குச்சென்றேன். அந்த நர்சிங் ஹோமின் முதலாளி அவர். அதை ஹோம் என்பதைவிட, முதியோர் இல்லம் என்று சொல்லலாம். 

சொல்லலாமா? என்று அவரிடமே கேட்டேன். ஹம் சொல்லலாம், ஆனாலும் இது முதியோர் இல்லமல்ல. நர்சிங் ஹோம்தான். என்றார்.

சரி வாங்க, நான் உங்களின் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறேன் என்று கூறி, என்னை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக சுற்றிக்காட்டினார். விளக்கமும் அளித்துக்கொண்டே.

இவர் இன்னார். இவரின் பெயர் இது. இவரின் நிலை என்ன. ஏன் இங்கே உள்ளார். இவர் ஒரு பிரபல மருத்துவர். இவர் ஒரு டத்தோ. இவர் கம்பனி முதலாளி... என, எல்லோரின் அறிமுகத்தையும் வழங்கியபடி நகர்ந்துகொண்டிருந்தார்.

அனைவரும் முதியவர்கள். ஒருவரைத் தவிர. அவர் கார் விபத்தில் உடல் செயலிழந்து சக்கரநார்க்காலியில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கியிருந்தார். யாரையும் கண்டுகொள்ளாமல்...

முதலாளியே தொடர்ந்தார். நார்சிங் ஹோமிற்கும் முதியோர் இல்லத்திற்கும் உள்ள வித்தியாசம். நர்சிங் ஹோம் என்றால், மருத்துவமனைக்கு அடுத்த நிலை. மருத்துவமனை என்றால், வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி போகும் நிலை வரும். ஆனால் இங்கே அப்படி அல்ல. வருகிறவர்கள் சாகும் வரை இங்கேயே இருப்பார்கள். இங்கே மருத்துவர்கள் வருவார்கள். இங்கே உள்ள பணியாளர்களில் பெரும்பாலானோர் முறையான தாதிப்பயிற்சி பெற்றவர்கள். மருத்துவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவர்கள். எங்களிடம் மருந்தகமும் உண்டு. அனைத்து சேவைகளையும் எங்களின் பணியாட்களே அவர்களுக்குச் செய்து தருவார்கள். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இவர்களின் பிள்ளைகள் எங்களுக்குப் பணம் அனுப்பிவிடுவார்கள்.

நான் நோட்டமிட்டுக்கொண்டே, வலம் வந்தேன். இரவு நேரமாகிவிட்டதால், அனைவரும் உறக்கத்தில் இருந்தார்கள். நாங்கள் ஒவ்வொரு அறையாக நுழைகின்றபோது, விழித்திருப்பவர்களிடம், ஒரு, ஹை, நலமா? குட் நைட்.. என்கிற வாசகத்தைச் சொல்லிவிட்டு, அடுத்தடுத்த அறைகளுக்குள் நுழைந்தோம். மிகவும் தூய்மையாக, ஒரு வித நறுமணத்துடன், ஜிலுஜிலு ஏர்காண்ட் வசதியுடன், சிறப்பாக அழகாக அமைக்கப்பட்ட அறைகள் அனைத்தும். அது ஒரு பிரமாண்டமான பங்களாவீடு.

பெரும்பாலும் சீனர்கள்தான் அங்கே.

பார்த்துக்கொண்டே வருகிறபோது, இறுதியாக, ஒரு தனியறையினுக்குள் நுழைந்தோம். அங்கே மூச்சுவாங்க ஒரு மூதாட்டி உறங்கிக்கொண்டிருந்தார். உறங்கிக்கொண்டிருந்தார் என்பதைவிட, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் உள்ளாராம். படுத்தப்படுக்கையாக. மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராம் அந்த மூதாட்டி.

அவரின் அருகில் சென்றேன். அங்குள்ள மேஜை ஒன்றில் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்ட ஒரு குழந்தை பொம்மை. அந்த பொம்மையின் வாயில் பால்புட்டி. அதினின் கைகளைத் தொட்டால், மிருதுவான குழந்தையின் தோல்போலவே இருந்தது. நிஜமான குழந்தைதான் தொடுவதற்கு, இருப்பினும் அது பொம்மை.

எதுக்கு சார், இந்த பொம்மை இங்கே. ? கேட்டேன்.

சிலநேரங்களில் அந்த மூதாட்டியின் கண்களில் இருந்து கண்ணீர் கசியுமாம், அப்போது இந்தக்குழந்தை பொம்மையை அவரின் கைகளில் திணித்துவிட்டால், கண்ணீர் நின்றுவிடுமாம்..

எனக்குக் கசிய ஆரம்பித்தது.... கண்ணீர்.