வெள்ளி, டிசம்பர் 23, 2011

பேட்டரி வீக்

மதிய உணவு நேரம். உணவு வாங்கச்சென்றேன். நான் மட்டும் தனியே..

வழக்கம்போல், உணவு வாங்குமிடத்தில் காரை நிறுத்தியபோது, என் காரின் முன்னே இரண்டு மலாய்க்காரர்கள், கைகளைப் பிசைந்து கொண்டு என்னையே ஒரு மாதிரியாகப் பார்த்தவண்ணம் இருந்தார்கள்..

நான் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல், கடைக்குள் நுழைந்து, அறுசுவை உணவை ஒரு பிடிபிடித்து விட்டுத் திரும்பினேன். திடீரென்று பயங்கர மழை. என் காருக்குச் செல்ல வேண்டுமென்றாலும், குடை பிடித்தே ஆகவேண்டும். அவ்வளவு கடுமையான மழை.

கடைவரிசையிலேயே நடந்த பிறகு, நான்கு ஐந்து அடிகள் வைத்தால் காருக்குள் சென்று விடலாம்.. இருப்பினும் கடுமையான மழையில் நிச்சயமாக உடைகள் (யூனிபர்ம்) நனையும். ஓரமாக நின்று யோசித்துக்கொண்டிருந்தேன்..

முதலில் பார்த்தேனே அதே மலாய்க்காரர்கள் அங்கே குடையோடு நின்றுகொண்டிருந்தார்கள்...

“காருக்குச் செல்ல வேண்டுமா? குடை வேண்டுமா?” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே என்னருகில் வந்தார்கள். எனக்கு பயம் தான், காரணம் இங்கே நிறைய ஜேப்படி,வழிப்பறி கொள்ளைகள் மலிந்துகிடக்கிறது. எங்குபார்த்தாலும் இதையொட்டிய தகவல்கள் பத்திரிகை வானொலி தொலைக்காட்சிகளின் வந்த வண்ணமாகவே இருந்தது. இருந்தபோதிலும் எனக்குக் கவலையில்லை காரணம், உணவிற்குத்தேவையான பணத்தை மட்டும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, மற்றதையெல்லாம் பர்சிலே, ஆபிஸில் பத்திரமாக வைத்துவிட்டுத்தான் வெளியே செல்வது என் வழக்கம். நகைகளைப்பிடுங்கப் போகிறார்கள் என்றால், எனக்குத் தங்கமணிவது பழக்கமில்லை..மஞ்சள் கயிறு, அதில் ஒரு சின்ன குண்டுமணி, அவ்வளவே.!

இருப்பினும் நானே ஒரு தங்கம், என்னை எதாவது செய்துவிட்டால்.. (ஏற்கனவே நான் சொன்ன ஒரு சிறிய தகவலால், பெண்களெல்லாம் ஒன்று திரண்டு, என்னை வாசகவட்டத்திலிருந்து விரட்ட பலவாறான எஸ்.எம்.ஸு களை நாடுதழுவிய நிலையில் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்கிற குறுந்தகவல் என்க்கும் சிலாப்பா (தவறுதலாக) வந்திருந்தது.) அதுவேறு எனக்கு மிகுந்த மனவுளைச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒன்னும் பெரிதாகச் சொல்லிவிடவில்லை. ‘ உங்கள் எல்லோருக்கும் வாசிப்புப் பழக்கமில்லை, வாசகர் என்கிற பெயரில் பேனா பிடித்து என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்? இலக்கிய உலகம் பாழாய்ப் போக!’ இதுதான் நான் எழுதியது. கோபித்துக் கொண்டார்கள். உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. நீ என்ன பெரிய மேதையான்னு சண்டைக்கு வருகிறார்கள்.!! !@#$%^&* என்னத்தச் சொல்ல.!!?

சரி அது கிடக்கட்டும், கதைக்கு வருவோம்.. அப்போது அவர்கள் என் அருகில் வந்தவுடன், நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு..

“பரவாயில்லை, காரி பக்கத்தில்தானே இருக்கின்றது ஓடிவிடலாம், குடை வேண்டாம்!” என்றேன்.

அதில் ஒருவன் தயங்கித்தயங்கி,  “இல்ல அக்கா (மலாய்க் காரர்கள் பண்புள்ளவர்கள், வயதில் மூத்தவர்களை அக்கா என்றும், சிறியவர்களை தங்கையென்றும் அழைப்பார்கள்) குடைக்குள் வாருங்கள், நான் கார்வரை கொண்டுவிடுகிறேன்..” என்று சொல்லி, குடையை விரித்தார். எனக்கு தர்மசங்கடமாக இருப்பினும், பயங்கர மழையாதலால், சரியென உதவியைப்பெற்றுக் கொண்டு, அவர்களின் துணையோடு கார் வரை சென்றேன்.., அப்போது அவனின் தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளியே வந்தன.

“அக்கா, என்னுடைய காரை ஸ்டார்ட் பண்ண முடியவில்லை, உன்னுடைய எஞ்ஜின் பக்கம் கொஞசம் திறந்துக் கொடுத்தால், நான் என்னுடைய கொனெக்டரைக் கொண்டு உனது பேட்டரியில் பொருத்தி, எனது காரை ஸ்டார்ட் செய்துக்கொள்வேன், எனது நண்பனை அழைத்தேன், கடுமையான மழை என்பதால் வரவில்லை.. தொலொங் லா (உதவுங்கள்)” என்றான்.

அடப்பாவமே, இதுதான் பிரச்சனையா? இதில் எனக்கு எந்த குறைவும் வந்து விடாதே.. ஏற்கனவே இதே போல் ஒரு பிரச்சனையில் நான் மாட்டிக்கொண்டபோது, ஒரு மலாய் அன்பர்தான் எனக்கு உதவினார். அதுவும் அதே உணவு வேளையின் போதுதான், ஆனால் அன்று மழையில்லை.

’நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.’

(என்ற அவ்வையின் செய்யுள்தான் உடனே நினைவுக்கு வந்தது.)

“சரி அஃடிக் (தம்பி) பிரச்சனை இல்லை,தாரளமாக எடுத்துக்கொள்!” என்றேன்.

அவனும் எனது காரின் எஞ்ஜின் பகுதியைத்திறக்கச் சொன்னான். நான் அப்படியே செய்தேன். வயரின் நீளம் போதவில்லை. உடனே நான் அவனிடம் “காரைக் கொஞ்சம் பின்னாடி கொண்டு வா! “ என்றேன்.

இருவரும் சிரித்தார்கள். நான் மட்டும் தாமதமாகச் சிரித்தேன்.

மின்குழல்தான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக