புதன், ஜனவரி 04, 2012

இறக்கும் தருவாயில்

இறக்கும் தருவாயில்  உள்ளவர்களிடம் நான் பேசிய கடைசி வார்த்தைகள் :-.

மீனா

பள்ளிப் பருவத்திலிருந்து நானும் மீனாவும் ஒரே இடத்தில் வசித்து வந்துள்ளோம். இசைப்பிரியை. பழைய பாடல்களை அதிகம் விரும்பிக்கேட்பவர். அவர் மூலமாகத்தான் எனக்கு நிறைய பழைய பாடல்கள் அறிமுகமானது. என்னை விட பத்து வயது மூத்தவர். ஆனால் என் ரசிகை.. எப்படியென்று கேட்கிறீர்களா!? நான் சிறுவயதில் ரொம்ப க்யூடா இருப்பேன். நீண்ட கூந்தல். ரெட்டை சடை, மனதில் பட்டதை படபடவென பேசுவேன், ஒளிவு மறைவில்லாமல்.



நோய் தான் அவரை எங்களிடமிருந்து பிரித்தது,  குடல் புண் தீராத வியாதியானது. மருத்துவமனையும் வீடுமாக நடந்தார். கடைசியில் படுத்த படுக்கையானார். நான் அவரை மருத்துவமனையில் சென்று கண்டபோது, அருகில் அவரின் தங்கை அமர்ந்திருந்தார். பரிதாபமாக.

என்னைப் பார்த்தவுடன் மீனா எழுந்து உட்கார முயன்றார். நான் அவரின் அருகில் சென்று அமர்ந்து, வேண்டாம், படுங்கள் என்றேன்.
பேசினோம், முகத்தில் கடுமையான சோர்வு. இருப்பினும் கலகலப்பாகவே பேச முயன்று தோற்றார். உடல் மெலிந்திருந்தது. நான் வாங்கிக்கொண்டு சென்ற பழம் பால் போன்றவற்றைச் சாப்பிட்டு உடலை தேற்றச் சொல்லி கண்களைச் சிமிட்டினேன். சிரித்துக்கொண்டே ஒரு பாடல் பாடினார் ‘என்ன தான் ரகசியமோ இதயத்திலே, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே’..

நான் வீடு திரும்பிய அன்று, தகவல் வந்தது, மீனா இறந்து விட்டார்.

அஞ்சலி

எனக்குக் கிடைத்த தோழிகளிலேயே மிக அருமையான தோழி இவர்தான். எங்கள் பக்கத்து வீட்டில் திருமணமாகி ஒரு குழந்தையோடு புதிதாக குடியேறிய புதுமணத்தம்பதிகள் அவர்கள்.

நல்ல குணவதி. விருந்தோம்பல் என்றால் அவரை யாரும் வெட்டிக்கொள்ள முடியாது. ஏமாளிபோல் இருப்பதையெல்லாம் கேட்போருக்குத் தானமாகக் கொடுத்துவிடக்கூடிய அற்புத பெண் அவர்.

சில தீராத சிக்கல்களால், கணவனிடமிருந்து விடுதலை வேண்டி அலைக்கழிக்கப்பட்டார். சிலரின் தவறான கண்ணோட்டத்தின் காரணமாக, அவளுக்குக் கெட்டபெயர் வந்து சேர்ந்தது. திருமண பந்தத்தில் இணைந்து விட்டால் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தாலும், பெண் என்பவள், ஆயுள் முழுக்க கணவனே கதியென்று கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டுமென்பதை துணிந்து எதிர்த்தவர் அஞ்சலி. யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு அவன் வேண்டாம். நான் தனிமையில் வாழப்போகிறேன் என எல்லா சம்பிரதாயங்களையும் தூக்கிவீசியவள்.

உறவுகளில் கெடுபிடியால், எவ்வளவோ முயன்றும் விவாகரத்து கிடைக்காததால், தாமே ஒரு முடிவுக்கு வந்து தன் கணவனை விட்டுப்பிரிந்து தனிமையில் உழன்று பல துன்பங்களை அனுபவித்தவர். தனித்து வாழும் பெண் நம் சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறாள் என்பதைப் பற்றிய பல திடுக்கிடும் கதைகளை என்னிடம் பகிர்ந்து அழுவார்.

நானோ அப்போதுதான் புதிதாக திருமணமான பெண். என் திருமணத்தின் போது கூட, என்னுடனேயே மூன்றாம் நாள் தாலி பிரித்துத் தனிக்குடுத்தனம் அனுப்பி வைக்கும் வரை அவர்தான் அருகிலேயே.! நாங்கள் திருமண புகைப்படம் எடுக்கக்கிளம்புகையில், என்னுடைய நகைகள் பார்ப்பதற்கு அவ்வளவாக எடுப்பாக இல்லை என்று சொல்லி தனது நகைகளைக் கலற்றி எனக்கு அணிவித்து புகைப்படம் எடுக்கவைத்தவர். இன்னமும் அந்தப் புகைப்படம் அவரின் பெயரைத்தான் சொல்லும்.

நான் அவரிடம் நெருங்கிப்பழகுகிறேன் என்பதற்காக, அவரது கணவர், என் கணவரிடம் இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் போட்டுக்கொடுத்து எங்கள் இருவரையும் இரு கணவன்மார்களும் பிரித்தார்கள்.

வீட்டையும் மாற்றிக்கொண்டு வேறு இடத்திற்கு சென்றும் விட்டார்கள். இருப்பினும், ஒரு தியான இயக்கத்தின் வழி மீண்டும் இருவரும் சேர்ந்தோம். பல கதைகள் பேசினோன்... மீண்டும் பல நாள் தொடர்பற்றுப் போனது, பிள்ளைகள், வேலைப்பளு, குடும்பம் என கிட்டத்தட்ட மறந்தே போனேன் அவரை.

ஒரு நாள் அழைப்பு ஒன்று வந்தது, `அஞ்சலை உடம்பிற்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், முடிந்தால் போய்ப்பார். அவர் உன்னைப் பார்க்கவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.என

உடனே கிளம்பினேன். மருத்துவமனைப் படுக்கையில் மிகவும் சோர்வோடு படுத்திருந்தார். மூச்சு வாங்கியது. “என்ன ஆச்சு, இந்த நிலை?” கேட்டேன். “தெரியவில்லை, ஒண்ணுமேயில்லை, இங்கே கிடக்கிறேன்.” என்றார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். சுற்றும்முற்றும் பார்த்தார், என்னமோ சொல்ல வந்தார்.. நான் அவரை எதுவும் சொல்ல வேண்டாம் என்று தடுத்து, எங்களின் தியான வகுப்பில் போதிக்கப்பட்ட சில நிவாரண மந்திரங்களைச் சொல்லி, அவரின் நெற்றியை கொஞ்ச நேரம் தடவிக்கொடுத்தேன். மயக்க நிலை வருவதைப்போல் கண்கள் சொரூகின... அவர் இறுதியாக என்னிடம் பேசிய வார்த்தை “பசிக்கிறது, ஒண்ணுமே தர மாட்டேன் என்கிறார்கள்.”

கண்கள் மூடிய பிறகு, தூங்கட்டுமே என,  கார் பார்க்கிங் வரை கூட வந்திருக்க மாட்டேன், கைப்பேசி குறுந்தகவல் சிணுங்கியது, Anjalai passed.

ஐயா

நான் வேலை செய்யும் இடத்தில், ஐய்யா துப்புறவு பணியின் சூப்பர்வைசர். கலகலப்பானவர். எல்லாக் கதைகளையும் பகிர்வார். வேலை வீட்டு நிகழ்வு, சம்பளம், பிள்ளைகள் என.!

மனைவி இல்லை, ஒரு சின்ன தகராறினால், விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டவர் அவரின் மனைவி. அவரை நினைத்துப்பார்த்து அடிக்கடி மனசங்கடப்படுவார் ஐய்யா. சில நேரம் மனைவியைப்பற்றி பேசும்போது சோர்வாகி விடுவார்,  `அட, ஏன் ஐயா, வேறு கல்யாணம் பண்ணிக்கவேண்டியது தானே.!’ என கிண்டல் செய்வேன்.

இல்லேம்மா, பிரச்சனையே அதனால்தான் வந்தது, அதை நினைத்தாலே ஒரு வித போபியா எனக்குள், என்று சொல்லி வருத்தப்படுவார்.

நன்றாகத்தான் இருந்தார், திடீரென வயிற்றுவலி. மருத்துவமனைக்குச் சென்றார், உணவே எடுக்க முடியாத நிலை வந்துவிட்டது. வயிற்றில் மோசமான புண். அல்சர்.

ஒரு மாதம் வேலைக்கு வரவில்லை, அவரை அழைத்தேன். தொலைப்பேசியை அவர்தான் எடுத்தார். மெல்லிய குரலில் ‘ம்ம்ம்,ஆஆஆ..ம்ம்ம், வ.. ரு.. வே... ன் வேலைக்கு, அடுத்த வாரம்’  சொன்னார் பதிலாக..
ரெண்டு நாள் கழித்து, தகவல் வந்தது.. அவரின் மகன் எனக்கு அழைத்துச் சொன்னார், “அப்பா தவரிட்டார், ஆபிஸில் தகவல் சொல்லிடுங்க மேடம்”.

குரு

தமிழ்ப்பத்திரிக்கை ஆசிரியர். ஆரம்ப காலத்தில் நிறைய எழுதச்சொல்லி ஆர்வமூட்டியவர் குருதான். வாசகர்களை நன்றாக மூட்டியும் விடுவார். வாசக எழுத்தாளர்களைத் திட்டி வரும் கடிதங்களைப் போட்டு, இலக்கியச் சர்ச்சையில் மாட்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்.

கண்டனக்கடிதங்கள் எப்படியிருக்க வேண்டுமென்கிற  ஆலோசனைகளையும் கொடுத்தவர்.

பள்ளிப் பருவத்திலே எழுத்தின் மீது ஆர்வம் வந்ததிற்குக் காரணமே இவர்தான். எங்கள் பள்ளியின் அருகிலேயே, இவர் தலைமையேற்று நடத்திய வானம்பாடி பத்திரிக்கை அலுவலகம் இருந்ததால், வாரத்திற்கு ஒரு முறையாவது பள்ளி முடிந்து, நானும் என் தோழி மகேஸும் அங்கு சென்று அவருடன் அரட்டை அடித்து விட்டு வீடு திரும்புவோம். நல்ல குரு..பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே.. !


அங்கே சென்று அவரைச் சதா துன்புறுத்துவதால், எங்களைப் பார்த்தவுடன், கட்டுக்கட்டாக வந்திருக்கும் வாசகர் கடிதங்களைக் கொடுத்து பிழைத் திருத்தம் செய்யச் சொல்வார்.  வேர்த்துப்போகும், சிரித்துச் சிரித்து.. அவ்வளவு பிழைகளோடு சில படைப்புகள்.

அவரின் அலுவலகம் மேலே, கீழே உணவுக் கடைகள்.. எங்களுக்கு உணவும் வாங்கித்தருவார் சிலவேளைகளில். விடாமல் எழுதவேண்டும், கல்யாணம் செய்துகொண்டு இத்துறையிலிருந்து விலகிவிடக் கூடாது என்பார். அவர் சொன்னது தான் நடந்தது. கல்யாணம் செய்து, கொஞ்ச நாள் எல்லாம் முடக்கப்பட்டது. பேனா நட்புகளின் தொடர்புகள் கூட துண்டிக்கப்பட்டது.

இருப்பினும் மீண்டும் எழுத ஆரம்பித்த போது, அவரைத்தான் முதலில் தேடினேன். தான் எந்த பத்திரிகையில் பணியாற்றுகிறேன் என்பதைக்கூட வெளியே காட்டிக்கொள்ளாமல், திரைக்குப்பின்னால் எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தார்.

எப்படிக் கண்டுபிடித்தேன் என்றால், என்ன எழுதினாலும் பிரசுரமாகும். அதே வேளையில் என்ன மாதிரியான கண்டனம் தெரிவித்தாலும், அது நியாயமாக இருப்பினும் வரும். சரி தவறு என எல்லாவற்றையும் போட்டுவிடுவார். எதிர்ப்புக்கடிதங்கள் வரும் போது, அதுவும் சிறப்பாகவே ரசிக்கும்படி இருந்தன.  யாரும் அவருக்கு அழைத்து, நான் எழுதியதை மட்டும் போடுங்கள், அதற்கு எதிர்ப்பு வந்தால் தயவுசெய்து போட்டுவிடாதீர்கள் என்றால், புன்னகை மட்டுமே பரிசாக வரும். தொடர்ந்து இருபாலரின் கருத்துகளும் கலைகட்டும். இதுதான் அவரின் பாணியில் நான் அவர் அங்கே இருப்பதை அடையாளங்கண்டுகொண்டேன். பொதுவாகவே பல ஆசிரியர்கள் சர்ச்சைகளுக்கு இடமளிக்கமாட்டார்கள்.

ஒரு நாள் நிச்சயம் அவரிடம் பேசவேண்டுமென்று நினத்துக்கொண்டே இருந்தபோதுதான் தகவல் வந்தது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று. தாமதிக்காமல் உடனே அழைத்தேன்.

“என்ன ஆச்சு சார்?”

“மிஷின் எல்லாம் கெட்டுப் போச்சு.!” என்று சொல்லி சிரித்தார்.

“ நீங்கள் தான் அந்தப் பத்திரிகையில் இருக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும், இருந்தாலும் ஒரு வித பயம் சார், யூகம் சரியாக இல்லையென்றால்..! அதனால்தான் அழைக்கவில்லை.”

“ ஏன் பயம்? நீங்க தான் நன்றாகப் பேசுவிங்களே எல்லோரிடமும்!”

“முன்பு வேறு, இப்போ கொஞ்சம் மரியாதை பயமெல்லாம் இருக்கு சார்..!”

“என்னிடம் பயமா! ஹஹஹ” சிரித்தார்.

பிறகு இரண்டு வாரம் கழித்து மீண்டும் அழைத்தேன். குரலில் பயங்கர சோர்வு...

“நல்லா இருகேங்க.. நீங்க நலமா? சாப்பீட்டீங்களா?”

அவரின் குரலில் தெரிந்த அந்தச் சோர்வு என்னை என்னவோ செய்ய,

“சாப்பிட்டேன் சார், உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்றுகூறி, அழைப்பைத்துண்டித்தேன். நலம் பேண், என்கிற குறுந்தகவலும் அனுப்பிவைத்தேன். பதில் இல்லை. மறுநாள் பத்திரிக்கைச் செய்தி, குருசாமி மரணம், முதல் பக்கத்தில்.

கோவிந்தம்மா

என் எழுதுலக நண்பர். நல்ல ஆலோசக தோழி. என்ன வேண்டுமானாலும் பேசலாம் அவரிடம். எனது படிவங்கள் பத்திரிகைகளில் வந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்வார்.

‘நீ அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதும்மா! நீ இப்படிச் சொல்லியிருக்கணும்மா..! இது உனக்குத்தேவையா? புரியாதவர்களிடம் வம்பு வேணாம்மா! நல்ல எழுத்தாற்றல் உண்டு உன்னிடம்! மிகப்பெரிய எழுத்தாளர்களின் பாணி உன்னிடம் உள்ளது! எனக்கு ஆச்சிரியம் உனக்குள் இவ்வளவு ஆற்றலா என, ! இதுபோன்ற வீண் வம்பெல்லாம் வேண்டாம்டா, நல்ல விஷயங்கள் எழுதுடா! நீ எவ்வளவு போராடினாலும் புண்ணியமில்லை டா! திறமையை வீணடிக்காதேம்மா!’ மனங்கோணாமல் பேசுவார்.

அவரிடம் பேசுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி, டா..ம்மா, ய்ய்யா என்று சேர்த்துக்கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கும் கேட்பதற்கு. எங்கேயாவது நடக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்குச் சென்றால், நான் வருவதாக இருந்தால் எனக்காக இடம் பிடித்து வைப்பார்.

நோயில் படுத்து விட்டார் என்பது தெரிந்ததும் , நாள்தவராமல் தொலைபேசியில் அழைப்பேன். பேசுவோம். பத்திரிகையில் வந்ததைப் பற்றிப்பேசி சிரிப்போம். சாப்பிட்டாச்சா, மருந்தெல்லாம் சரியா எடுக்கிறீர்களா,  என்று கேட்டு வைப்பேன். மீண்டும் மறு நாள் இதே மாதிரியான உரையாடல்கள் தொடரும். இப்படியே கொஞ்ச நாள்!

ஒரு நாள், பேசிக்கொண்டிருக்கும் போது, தென்றல் ஆசிரியர் வித்யாசாகரை பார்க்க வேண்டும் போல் இருக்குடா என்றார். நானும், சரியக்கா, உடனே அவருக்குத் தெரிவிக்கிறேன் என்றேன்.

“ என் இறுதிகாலக் கட்டம்வரை என் கூடவே இருக்கிறாய் அம்மா. ஒரு நாள் தவராமல் அழைக்கின்றாய். நீ ஒரு நல்ல தோழி, நீண்ட நாள் நல்லா இருப்பாய்!” மனதார வாழ்த்தினார். அந்த வாழ்த்தில் எந்த ஒரு சுயநலமும் எதிர்ப்பார்ப்பும் இல்லாததை இன்னமும் நினைத்துப் பார்த்து மனம் நெகிழ்கிறேன். கிடைக்குமா இப்பேர்பட்ட வாழ்த்துகள்..!

தென்றல் ஆசிரியர் வித்யாசாகருக்கு தகவல் சொன்னேன். ‘சரி’ என்கிற ஒரு பதில் குறுந்தகவலாக வந்தது. அன்றைய பொழுது மாலையிலேயே எனக்கு அவரின் மகளிடமிருந்து வந்துவிட்டது ஒரு குறுந்தகவல். “அக்கா, அம்மா இறந்திட்டாங்க”

கோவிந்தம்மா எழுதி, தென்றலில் வெளிவந்த அவரின் இறுதிக் கவிதை.

வஞ்சித்து விட்டது

சருகுகளின் கோடுகளாய்
என் இரு சிறகுகளும்
சிலந்தி வலையானது

வெயிலில் உலர்ந்த
நீலக் கடலாய்
நீர்வற்றிய தேகமது..

ஒரு கணக்கு
முடிவுறும் போது
மற்றவர் முகத்தில்
மகிழ்ச்சியும் சோகமும்!

தேவையாம்
ஊடங்களுக்கு
உல்லாசமில்லா
உயிர்க்கப்பல்கள்..

வெணிசீலை மெத்தைகள்
பல்லை இளிக்கின்றன
இன்றா? - நாளையா?
நாளை மறுநாளா?
என எதிர்பார்த்து!

காற்றுபுகா இடத்திலும்
ஊசிமுனை துளைகள்
பரவசமாய் அழகைக்
காட்டிய நிலைக்கண்ணாடி
வஞ்சித்து விட்டது ஏளனமாய்!

நேசமாய் கோதி கோதி
வளர்த்த கேசம்
வெள்ளை தென்பட்டால்
வேண்டிடும் தலை ‘மை’
இனிதேடாது அது புதுவை!

அன்று
சிலென்று வீசிய
இளந்தென்றல்
இன்று
அனலாய் காய்கிறது

மின் தூக்கியில் பயணிப்பவள்..
விண்ணை நோக்குவானா?
மண்ணை நோக்குவானா?
இறைவன் அறிவான்!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக