வெள்ளி, மே 11, 2012

படித்துப்பாருங்கள்

சைவ சமய புராணங்களின் வரும் சமண வன்முறைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்கிற சுவாரிஸ்யமான கட்டுரை, எழுத்தாளர் ஜெயமோகன் எனக்காக சுட்டிப்பகிர்ந்த சில சமண கட்டுரைகள் என, எனது தேடலுக்கு விருந்தாக அமைந்த சில அற்புதமான ஆய்வுத்தகவல்கள், என்னை ஆச்சிரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது. இவற்றையெல்லாம் வாசிக்கும்போது, மிகப்பெரிய தகவல் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகப் பட்டாலும், காலகாலமாக நாம் பின்பற்றி வந்ததை, வருவதை போதிய புரிந்துணர்வு இல்லாதவர்களிடம் பகிர்ந்தோமென்று வையுங்களேன். அவ்வளவுதான். 

நம்பொருட்டு, இரவு பகல் பாராமல், ஆய்வுகள் பல செய்து, பலமாதிரியான புத்தகங்களைப் புரட்டி, பல இடங்களுக்கு நேராகச்சென்று, ஊண் உறக்கம் மறந்து, வருடக்கணக்காக நேரத்தை ஒதுக்கி, பல இன்னல்களைச் சந்தித்து, வாழ்வையே பொதுவில் அர்ப்பணிக்கிற இது போன்ற அரிய காரியத்திற்கு நமது பங்களிப்பு என்ன!? ஒண்ணுமே செய்ய வேண்டாம். வாசிப்போம் அவர்களை.   இதோ இங்கே இந்த லிங்க்’ஐ தட்டுங்கள். வாசியுங்கள். மதப்பேயை விரட்டியடிப்போம். மனதார நன்றி சொல்லுவோம். 

முதலில், திரு வேணுகோபால் அவர்கள், முகநூல் வழி பகிர்ந்த இந்த கட்டுரையை வாசியுங்கள், அதன் பின் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கேள்வி பதில் அங்கத்தில் எழுதிய சில பதிவுகளையும் வாசிக்கலாமே..!


பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றை எழுத ஆரம்பித்த சில பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள், மதப்பூசலும், ரத்தம் பெருக்கெடுத்து ஓடி, சிலுவைப் போர்களால் நிரம்பிய மத்திய கால ஐரோப்பா பற்றிய அதே கருத்துச் சட்டகத்துடன், இந்தியாவிலும் இது போன்ற மதப்போர்கள் நடந்திருக்கும் என்று கற்பனை செய்தார்கள். இது அவர்களது பிரித்தாளும் கொள்கைக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, சுதந்திரத்திற்குப் பின் இந்திய வரலாற்றை எழுதிய இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களைச் சேர்த்து ஆதாரமற்ற மதப்போர்களை உற்பத்தி செய்ய முற்படுகிறார்கள்.
இன்றைக்கு தமிழில் நவீன இலக்கிய ஏடுகள், சிற்றிதழ்கள், அறிவுஜீவித்தனமான சஞ்சிகைகள் இவற்றில் திரும்பத்திரும்ப திருஞானசம்பந்தர் வரலாற்றில் வரும் சமணர் கழுவேற்றம் பற்றி ஏராளமான ஜோடனைகளுடன் யாராவது ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கிறார். மதுரைக் கருகில் ஒரு ஊரில் எண்ணாயிரம் சமணர்களின் எலும்புகள் குவிந்துள்ளன, அவர்களை எரித்த சாம்பல் கூட இருக்கிறது என்றெல்லாம் சிறிது கூட அறிவியலுக்கும், பொதுப் புத்திக்கும் ஒவ்வாத வகையில் எழுதுகிறார்கள். எண்ணாயிரம் சமணர்களைக் கொன்று குவித்து, அந்த வன்முறை மூலம் வேத நெறியும், சைவ சமயம் பரவியதாக திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமே அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
இதற்கு இன்னொரு உள்நோக்கமும் இருக்கலாம். ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவற்றின் வரலாறு முற்றாக வன்முறையும், போர்களும் நிறைந்தது. ஆரம்பகாலத்தில் அதற்கு முன்பிருந்த புராதன மதங்களையும், இயற்கை வழிபாட்டாளர்களையும் கிறிஸ்தவம் வன்முறை மூலமே அழித்தொழித்தது. அதன் பின் ஐரோப்பிய காலனியாதியாக்கமும், கிறிஸ்தவ மிஷன்களும் இணைந்து ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளில் பழங்குடிகளை ஈவிரக்கமின்றிக் கொன்றார்கள். அரேபியப் பாலைவனத்தில் இஸ்லாமிய மதம் தோன்றியவுடன், ரத்தவெறி கொண்ட போர்கள், கொள்ளைகள், கட்டாய மதமாற்றங்கள் ஆகிய வன்முறைச் செயல்கள் மூலமே பெரும்பாலும் பல பகுதிகளில் பரவியது. இந்த மனிதப் படுகொலைகள் தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ள. வரலாறு இந்த மதங்கள் மீது ஏற்றிவைத்துள்ள சுமை இது. எனவே, "மதச்சார்பற்ற" வரலாற்றில், இதனை ஈடுசெய்வதற்காக, இந்திய மண்ணிலும் பெரிய மதப்போர்கள் நடந்திருப்பதாக, வேண்டுமென்றே பொய்களையும், தங்கள் காழ்ப்புணர்வுகளையுமே வரலாறு என்ற பெயரில் திரித்துக் கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
பாரத நாட்டில் சமய விவாதங்கள் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தன. வேத, உபநிஷதங்களிலும் சரி, புராண, இதிகாச இலக்கியங்களிலும் சரி, சமண, பௌத்த சமய நூல்களிலும் சரி, ஏராளமான உரையாடல்களையும், வாத விவாதங்களையும் நாம் பார்க்கிறோம். இன்றைக்கு இந்து மதத்தின் முக்கியமான தத்துவ நூலான விளங்கும் பகவத்கீதை இத்தகைய ஒரு உரையாடல் வடிவிலேயே உள்ளது. இந்திய கலாசாரம் இன்று வரை பல கட்சிகள் ஜன்நாயக முறையில் உரையாடும், ஓயாது தர்க்கம் செய்யும் இயல்பை இத்தகைய சமய விவாதங்கள் மூலமே பெற்றது என்பது தெளிவு. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான பேராசிரியர் அமர்த்யா சென் Argumentative Indians என்ற தமது நூலில் இதனை மிக விரிவாகவே குறிப்பிடுகிறார். எனவே பண்டைய இந்திய வரலாற்றில் மத மோதல்கள், பூசல்கள் பற்றிய எல்லா சித்திரங்களும், கருத்துத் தளத்தில் நிகழ்ந்தவற்றையே குறிக்கின்றன. இந்த வாதங்கள் முற்றி, சிறிய அளவில் நேரடி வன்முறையாக சிற்சில இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் மதப் போர்களும் பெரும் வன்முறையும் நடந்த்தற்கான ஆதாரங்கள் இல்லவே இல்லை.
தமிழக சமணத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சம்பந்தர் காலத்தில் அது தனது வலுவிழந்த, சீரழிந்த நிலையில் இருந்தது எனலாம். அதனால் தான் சம்பந்தர் அதனை வாதத்தில் எளிதாகவே வென்று விட முடிந்தது. சமணத் துறவிகள் சமூகத்தில் இருந்து மேலும் மேலும் விலகிச் சென்று தனிமையை (seclusion) நாடினர். காலப் போக்கில், இந்தத் தனிமைச் சூழல் பல மாந்திரீக, தாந்திரீக முறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வழிவகுத்தது. பிற்காலச் சமணத்தில் தீர்த்தங்கரர் வழிபாட்டை விட அதிகமாக பரிவார தேவதைகள் மற்றும் யட்சிகள் வழிபாடு வலியுறுத்தப் பட்டது. இந்த தேவதைகள் மோட்சத்திற்காக அல்ல, லௌகீக வாழ்க்கைப் பலன்களுக்காகவே வணங்கப் பட்டனர். தமிழகத்தின் பல சமணக் கோயில்களில் பத்மாவதி, லலிதாட்சி ஆகிய யட்சிகளின் அழகு கொஞ்சும் சிலைகளை இன்றும் காணலாம். தமிழகத்தில் சமணம் வாழும் இன்றைய வடிவத்திலும், தீபங்குடி (தஞ்சை மாவட்டம்) போன்ற ஊர்களில் வாழும் சமணக் குடும்பங்கள் பெண்தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.
சமணர்களின் செயல்களாகப் பெரியபுராணம் கூறும் செய்திகள் மூலம் இது மேலும் உறுதியாகிறது. சம்பந்தர் பாண்டிநாட்டிற்கு வந்து சைவமடத்தில் தங்கியிருக்கையில், மந்திரத்தால் தீவைக்க முயன்றனர். பின்னர் அது பலிக்காமல் போகவே, உண்மையிலேயே தீமூட்டினர். மன்னனுக்கு வெப்பு நோய் பீடிக்க, பின்னர் மன்னன் நோய்தீர்ப்பவர் வெல்வார் என்ற போட்டிக்கும், பிறகு அனல் வாதம், புனல் வாதம் இவற்றிற்கும் சமணர் அறைகூவுகின்றனர். இதன் மூலம் ஆழ்ந்த சமய, தத்துவ விவாதத் தளத்திலிருந்து சமணம் வெகுவாக நகர்ந்து விட்டது புலனாகிறது. அதனால் தான், சைவம் மிக எளிதாகவே அதனை வென்று விட முடிந்தது.
பெரியபுராணத்தின் படி, வாதத்தில் தோற்றால் தங்களை வேந்தன் கழுவேற்றட்டும் என்று சமணர் தாமாகவே கூறுகின்றனர்.
அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார்.

அவர்கள் வாதத்தில் தோற்றவுடன், மன்னன் மந்திரியாகிய குலச்சிறையாரைப் பார்த்து, இவர்கள் மடத்திற்குத் தீவைத்த குற்றமும் புரிந்தவராதலின், தண்டிக்கப் படவேண்டியவர்கள், அதனால் இவர்களைக் கழுவில் ஏற்றுக என்று ஆணையிடுகிறான். அரச நீதியில் தலையிடுவது முறையாகாது என்று கருதி சம்பந்தர் திருவருளைச் சிந்தித்து, வாளாவிருந்தார், அதாவது அமைதியாக இருந்தார். குலச்சிறையார் அரசன் இட்ட ஆணையை நிறைவேற்றினார். புராணம் சொல்வது இது தான்.
இதில் "எண்ணாயிரவர்" என்பது எண்ணிக்கையை அல்ல, ஒரு குழுவினரைக் குறிக்கிறது என்றே கொள்வதற்கு ஆய்வு நோக்கில் இடமிருக்கிறது. எண்ணாயிரவர், நாலாயிரவர், மூவாயிரவர் என்று வணிகர் கூட்டஙக்ளுக்குப் பெயர்கள் இன்றளவும் உள்ளன. கேரளத்தில் மூவாயிரவர் என்ற குடும்ப்ப் பெயரில் இன்று நான்கைந்து குடும்பங்களே உள்ள சமூகக் குழுக்கள் இருக்கின்றன. இத்தகைய ஒரு குழுவைச் சேர்ந்த சமண குருமார்கள் வாதில் தோற்றுப் போயிருக்கலாம்.
மேலும் "கழுவேற்றம்" என்பது ஒரு குறியீட்டுச் செயலாகவே இருக்கலாம். வாதம் நடக்கும் ஞான சபையில் ஒரு கழுமரம் இருக்கும். வாத்த்தில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் முகமாக, தங்கள் தோளில் இருக்கும் உத்தரீயத்தைக் கழற்றி அந்தக் கழுமரத்தில் வீசுவார்கள். அதாவது அவர்களது ஞானமும், பாண்டித்யமும் அங்கே வீழ்ந்து விட்டதாக இதற்குப் பொருள். அந்தக் காலகட்டத்துச் சூழலில், கற்றறிந்த ஒரு பண்டிதனுக்கு உயிர்போவதை விட அவமானகரமான ஒரு செயலாக இது கருதப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கேரளத்தில் ஒரு இருநூறு ஆண்டுகள் முன்பு கூட வாத சபைகளில் உத்தரீயத்தைக் கழற்றி வீசும் இந்த மரபு இருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.
இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை.
ஒன்று, சம்பந்தர் காலத்திற்குப் பின்னும், தமிழகத்தின் பல பகுதிகளில், சமணக் கோயில்களும், மடங்களும் எந்த இடையூறும் இல்லாமல் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.
இரண்டு, கழுவேற்றம் பற்றிய இந்தக் குறிப்பு சமணர்களது எந்த நூல்களிலும் இல்லை.

தத்துவமும் அது உருவாக்கும் வாழ்வியலும்:

அக்காலகட்டத்தில் பாரத நாடெங்கும் நடைபெற்ற சமய, தத்துவ விவாதங்களில் பிரபஞ்சம், சிருஷ்டி, ஜீவன், ஆன்மா, முக்தி ஆகிய கருத்தாங்கள் குறித்த விரிவான அலசல்கள் நிகழ்ந்தன. இதில் பிரபஞ்சம் தன்னாலேயே ஒரு வெடிப்பு (explosion) மூலம் உருவாயிற்று என்ற சாங்கியக் கோட்பாட்டை முதல் தளத்தில் வேதாந்த, சமண, பௌத்த தரப்புக்கள் அனைத்துமே ஏற்றுக் கொண்டன. அடுத்த தளத்தில், இந்தப் பருப்பொருள் மயமான, ஜடமான இயற்கையில் உயிர்ச்சக்தி (சைதன்யம்) புகுந்தது எவ்வாறு என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்ட்து. நம்மாழ்வாரின் வரலாற்றில் "செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்று எழுந்த கேள்வி இந்தத் தத்துவச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டது தான். அங்கு சமண, பௌத்த தரப்புகள் திணறி நின்றன. ஆனால் வேதாந்தம் பிரம்மம், பரம்பொருள் என்கிற அனைத்துமான ஒரு முழுமைத் தத்துவம் (Absolute) மூலம் இதற்கு விடைகாண முற்பட்டது. "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்பதே பதிலாக வைக்கப் பட்டது. "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்" ஆன மெய்ப்பொருள் தர்க்க அறிவினால் அல்ல, உள்ளுணர்வும், அனுபூதியும் கூடிய நிலையில் உணரப் படுகிறது என்றும் வேதாந்தத் தரப்பு சொன்னது. சைவ சமயம், இதனையே சிவனது பிரபஞ்ச லீலையாக, அருள் விளையாட்டாகக் கண்டது.
சமண, பௌத்த தத்துவங்களின் "சூனியம்" என்ற வெறுமைக் கோட்பாடு மறுப்பும், விரக்தியும் சார்ந்த வாழ்க்கை நெறிகளை நோக்கி இட்டுச் சென்றது. அதற்கு மாற்றாக வேதாந்தமும், சைவ சமயமும் முன்வைத்த "பூரணம்" என்ற கோட்பாடு உயர்தத்துவ அளவில் நிறைவானதாகவும், அதே சமயம் வாழ்க்கையின் வர்ணஜாலங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகவும் இருந்து. "உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்" "அலகில் சோதியன்" ஆன பரம்பொருளை "நிலவுலாவிய நீர்மலி வேணியன்" ஆகவும் "அம்பலத்து ஆடுவான்" ஆகவும் காணும் சமய நெறியில், உயர்தத்துவமும், உணர்ச்சிமயமான பக்தியும், கவித்துவமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன.

"குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே"

என்பது சம்பந்தர் தேவாரம். இப்படி ஒவ்வொரு திருத்தலத்திலும் நதிகளையும், மலைகளையும், வயல்களையும், சோலைகளையும் உவகை பொங்க அவர் வர்ணித்துச் செல்வதன் காரணம் இவை அனைத்தும் அந்த பூரணத்தின் வெளிப்படுகளாகவே அவருக்குத் தோன்றுகின்றன.

"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் செல்கதிக்கு யாதுமோர் குறைவிலை"

என்று வாழ்க்கையை இம்மை, மறுமை இரண்டிலும் சாரமுள்ளதாக சம்பந்தரின் பாடல் காண்கிறது. இசை, நடனம், சிற்பம் ஆகிய கலைகள், கோயில்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் ஆகியவற்றால் நிரம்பிய சைவ சமயம் சமூகத்தில் மிகப் பெரிய சக்தியாக ஆனதில் வியப்பே இல்லை. காலப் போக்கில் இதுவே சமணம் தமிழகத்தில் தேய்ந்து மறையவும் காரணமாயிற்று.

எனவேசமணத்தின் மீதான சைவத்தின் வெற்றி தத்துவச் செழுமையாலும், அது உருவாக்கிய வாழ்வியல் நெறிகளின் முழுமையாலும் தான் நிகழ்ந்ததே அன்றி வன்முறையாலோ, ஆக்கிரமிப்பாலோ நிகழ்ந்தது அல்ல என்று உறுதியாகக் கூறலாம்.

இன்றைக்கு சமண சமயத்தவர்களுக்கிடையிலும், சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த இந்துக்களுடையிலும் எந்தவிதமான மதப் பூசலோ, மோதலோ இல்லை. இந்தியா முழுவதும் சமணர்கள் விநாயகர், லட்சுமி, திருமால் முதலிய தெய்வ வடிவங்களை தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களோடு இணைத்து வைத்துப் பூசிப்பதையும், இந்துக்கள் சமணக்கோயில்களுக்குச் செல்வதையும் சகஜமாகப் பார்க்கிறோம். அகிம்சை, தர்மம், நீதிநெறிகள் ஆகிய துறைகளிலும் இரு மதங்கள் கொண்டும், கொடுத்தும், ஊடியும் வளர்ந்து செழித்திருக்கின்றன. எனவே, இந்தக் கட்டுரையின் நோக்கம் பழைய சமய, வரலாற்றுப் பூசல்களை மீட்சி செய்வதல்ல. மாறாக அவற்றைக் குறுக்கல்வாத நோக்குடனும், அரைகுறை தகவல்களுடனும் சித்தரித்து, அவற்றிலுருந்து ஒரு தீய வெறுப்பியல் களத்தை உருவாக்கும் போக்கினைச் சுட்டிக் காட்டி, அதனை விமர்சிப்பதே ஆகும்.

தொகுப்பு/பகிர்வு: வேணு. நன்றி

http://www.jeyamohan.in/?p=27254

நன்றி எழுத்தாளர் ஜெயமோகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக