சனி, செப்டம்பர் 13, 2014

reunion

ஒரு முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது முன்பு நாங்கள் பணிபுரிந்த (PHILIPS AND JVC VIDEO COMPANY ) யின் பழைய ஊழியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்று..  கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக அதையொட்டிய ஆயத்தங்களைச் செய்தவண்ணமாக இருந்தோம்.

வட்சாப்பில் ஒரு குழுவை ஏற்பாடு செய்து, அங்கே ஒருவர் பின் ஒருவராக சேர்த்து. அங்கேயே ஏற்பாட்டுக்குழு, செயலவை உறுப்பினர்கள் என தேர்வு செய்து, பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு மாதகாலமாக இந்த வேலைகளில் மூழ்கியிருந்தோம். வட்சாப்பிலேயே எல்லா ஏற்பாடுகளையும் பகிர்ந்துகொண்டிருந்தோம்.


உணவு ஆடர்கொடுப்பது, பரிசுகளுக்கு ஏற்பாடு செய்வது. என்னென்ன விளையாட்டுகள் விளையாடலாம். கேக் வெட்டலாம். டோர் கிஃபிட் போன்றவவைகள் மகிழ்வுடன் பகிர்ந்து குதூகலித்தோம் 

PHILIPS AND JVC ஒரு பெரிய நிறுவனம். வீடியோ  கேமரா தயாரிக்கின்ற கம்பனி. கிட்டத்தட்ட ஆறாயிரம் ஊழியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஓர் நிறுவனம் இது.

நாங்கள் பணிபுரிந்த டிப்பார்மெண்ட் மிகப்பெரியது. pc board assemble செய்கிற இடம். அங்கேயே கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஊழியர்கள் பணிபுரிவார்கள். அங்கே அலுவலக ஊழியர்கள் தொடங்கி அடிமட்ட ஊழியர்கள் வரை எல்லோரும் ஒரு குடும்பமாகவே செயல் பட்டோம். மலாய்க்காரர்கள் சீனர்கள் பிறகு நம்மவர்கள்.

மலேசியாவில் நாம் இருந்தாலும், இனங்களுக்குள் பேணப்படுகிற சுமூக உறவுகளை நான் இங்கேதான் கற்றுக்கொண்டேன். மலாக்காரர்களின் நல்ல மனங்களை இங்கேதான் பார்த்தேன். அவர்களின் அன்பான பணிவான குணங்கள் எனக்குப் பாடம் போதித்தது இங்கேதான். வேலைகளைக் கற்றோம், சம்பாதித்தோம் என்பதையும் தாண்டி நண்பர்களைச் சேகரித்த இடமாக திகழ்ந்தது இந்த நிறுவனம்.  

நாங்கள் management staffs கிட்டத்தட்ட இருநூறு பேர் இருப்போம். நான் இவர்களுக்கெல்லாம் கிளார்க். அதாவது அட்மின். அனைத்து ஊழியர்களின் welfare’ரும் எனது பொறுப்பு.வீடியோ மாறி குறுந்தட்டும் வந்து, ஸ்மார்ட் டீவியும் வந்து தொழில்நுற்பத்தின் அபரீதமான வளர்ச்சியில் இந்த வீடியோ தயாரிக்கின்ற துறை வீழ்ச்சி கண்டது. ஆறாயிரம் ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குறைந்து, குறைத்து குறைத்து இப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் மட்டும் வேலை செய்கிற இடமாக அது மாறி இருக்கிறது. 

1989யில் தொடங்கிய இந்நிறுவனத்தில் நான் 1991யில் நுழைந்து 2000 த்தில் விலகினேன். வேலைப்பளு, இரவு பகல் பாராமல் வேலை. பணியிடம் நம்முடைய நேரத்தை முழுமையாக விழுங்கிக்கொள்வதால், வீட்டில், குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் போகவே நான் வேலையை ராஜீனாமா செய்தேன். அதன்பிறகு பிஸ்னஸ், இல்லத்தரசி என நகர்ந்து இப்போது SHARP யில், இன்றுவரை.


வேலை மாற்றலாகி பலர் பல்வேறு இடங்களுக்குச் செல்வது, திருமணம் செய்வது, வீடு மாறுவது, வெளிநாடுகளில் பணி செய்து அங்கே செட்டல் ஆவது என எல்லோரும் பிரிந்து போனோம். சமூகவலைத்தளங்களின் மூலம் சிலரை கண்டுகொண்டு அவர்களிடம் தொடர்பில் இருந்தோம். விடாமல் துரத்திப்பிடித்து நட்பு வைத்திருக்கும் ஒரு மலாய்தோழியும் (ரோஹானா) எப்போதும் என்னிடம் தொடர்பில் இருப்பாள். சாப்பிட்டாயா? தூங்கினாயா.? எங்கே போனாய்? என்ன செய்கிறாய்.? என அன்பாகக் கேட்டுக்கொண்டு.

திடீரென்று வட்சாப்பில் சந்தித்து, ஒன்று சேர, ஒருவர் பின் ஒருவராக வந்து, ஒரு மாதகாலத்திற்குள்  விட்ட குறை தொட்ட குறை என நிறைய பேர் ஒட்டிக்கொண்டார்கள்.

நேற்று (12/9/2014) ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வில் உண்டு களித்து கட்டித்தழுவி கண்ணீர்விட்டோம். சிரித்தோம் மகிழ்ந்தோம். இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்பினோம். பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். அந்த நிறுவனத்திற்குப் பிறகு எங்கே சென்றார்கள். என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள். யாரெல்லாம் அங்குள்ள அனுவத்தை வைத்து மேலே வந்தார்கள். நிறுவனத்தில் வேலை செய்வதையே வெறுத்து பலர் சொந்த தொழில் ஆரம்பித்துள்ளார்கள் என பல நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம்.

நிகழ்ச்சிக்கு முழுமூச்சாக உழைத்தது எனது மலாய்தோழி ரோஹானாதான். அவள் இல்லையென்றால் நாங்கள் இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து ஒன்று கூடியிருப்போமா, என்பது சந்தேகம்தான். இடையில் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தாள். என்ன பொருளை பரிசாகக் கொடுக்கலாம் என முடிவு செய்தாள். எங்கே இந்நிகழ்வை வைக்கலாம் என இடத்தைப் பார்த்து பணம் செலுத்திவிட்டு வந்தாள். இன்னும் நிறைய பொறுப்புகளை தாமே ஏற்றுக்கொண்டு செய்து வந்தாள். நிகழ்வுகளின் செயல்பாடுகளை உடக்குடன் வட்சாப்பில் பகிர்ந்தாள். தாம் நடத்துகிற சாப்பாட்டுக்கடையை கால்லேஜ் செல்லவிருக்கும் மகனின் பொறுப்பில் விட்டுவிட்டு, இந்த நிகழ்விற்காக உழைத்தாள். மகன் இந்த மாதம் இறுதியில் கால்லேஜில் சேரவிருக்கின்றான்.நிகழ்வை முடித்துக்கொண்டு, நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். புகைப்படங்கள் தெளிவாக இருக்கட்டும். நான் ப்ளாக் எழுதுவேன். அதில் மகிழ்வாகப் பகிரப்போகிறேன் என்று நானும். நான் முகநூலில் போடுவேன் என்று பலரும் சொல்லி அதிகமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். வீடு வந்துசேர்வதற்குள் புகைப்படங்கள் வட்சாப்பில் குபுகுபுவென புகுந்துக்கொண்டே இருந்தது. போடப்பட்ட புகைப்படங்களைப்பார்க்கமுடியாமல் வட்சாப் ஜேம் ஆகிவிட்டது. புகைப்படங்களை எல்லாம் பார்த்தே ஆகவேண்டும் என்பதற்காக, நள்ளிரவு இரண்டு மணிவரை கைப்பேசியை நோண்டிக்கொண்டே இருக்கையில்.. ... என் தோழி ரோஹானாவிடம் இருந்து இந்த அதிர்ச்சி செய்தி வந்தது.

‘ என் மகன் கார்விபத்தில் இறந்துவிட்டான், எனபதை நான் என் நண்பர்களிடம் மிகவும் வறுத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று.

எல்லோரும் அதிர்ந்தோம். என்னாச்சு? ஏன் இப்படி.? அல்லாஹ் கொடுத்தார் அவரே எடுத்துக்கொண்டார். ! கலங்காதே... என, தொலைப்பேசி அலறிய வண்ணமாக. சில நண்பர்கள் உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்கள். நான் விடிய விடிய தூங்காமல் விழித்துக்கொண்டே இருந்தேன். என்னால் நம்பமுடியவில்லை.

கனவு காண்பதைப்போலவே இருந்தது. காலையில் மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து, நிஜமாகவா? என உறுதிப்படுத்திக்கொண்டு, முதல் முறையாக முஸ்லீம்களின் இடுகாட்டிற்குச் சென்று அங்கே நிகழ்கின்ற நிகழ்வுகளை நேரில் கண்டு சோர்ந்துபோய் வீடு வந்தேன்.

இரவெல்லாம் தூக்கமில்லை. பகல் பொழுதில் கொஞ்ச நேரம் தலை சாய்த்தேன். என்னால் எழவே முடியவில்லை. கண்கள் திறந்துதான் இருக்கின்றன. ஆனால் எழமுடியவில்லை. யாரோ என்னை பலங்கொண்டு அழுத்துகிறமாதிரி ஓர் உணர்வு. என்னை எழவிடாமல் என் மார்பின் மேல் அமர்ந்துகொண்டு அழுத்துகிறார்கள். சண்டை இடுகிறேன். விடு விடு என கத்துகிறேன். ஆனால் அந்தச் சத்தம் யார் காதிலும் விழாததைப்போன்று வாயில் மூச்சு மட்டுமே வெளிப்படுகிறது. எனக்குள் எல்லா உணர்வும் இருந்தது. சுற்றி இருக்கின்ற அனைத்தும் தெரிகிறது ஆனால் எழமுடியவில்லை. எழாதே. படு.. படு.. படு.. என அழுத்தம். போராடி போரில் வென்று எழுந்துவந்ததைப்போல் இருக்கிறது உடலும் மனமும்....

தலைக்குக் குளித்து, பூஜை செய்தேன். கணவர் விபூதி வைத்துவிட்டார். மனதிற்கு ஆறுதலாய் உள்ளது...

இன்னமும் மனம் கனக்கிறது.


3 கருத்துகள்:

 1. நண்பர்களை பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பது என்றுமே இனிமையான ஒன்று.

  இத்தனை சந்தோஷமான சந்திப்பின் பின் ஒரு தாங்கமுடியாத சோகம் அமைந்து விட்டதே உங்கள் தோழிக்கு. படிக்கும் போதே மனதில் பாரம் - அவருக்கு எப்படி இருந்திருக்கும் எனப் புரிகிறது....

  பதிலளிநீக்கு
 2. இனிய சந்திப்பு...
  சந்தோஷத்தின் பின்னே மீளாத் துக்கம்...

  பதிலளிநீக்கு
 3. தங்களின் தோழிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  பதிலளிநீக்கு