வெள்ளி, பிப்ரவரி 03, 2012

வியாழன், பிப்ரவரி 02, 2012

பெருத்த மகளே

எஸ் ஆகி
எம் ஆகி
எல் ஆகி
எஃக்ஸ் எல்’லாகி
டபுல் எஃக்ஸ் எல்லாமுமாகி
குண்டாய்
தண்டமாய்
எல்லாம் விழுங்கி
வல்லரசுரராய்
பேயாய்
கனமாய்
செல்லா இயலாமையாய்
பெருத்த மகளே..

தைபூசம்

எங்கிருந்து வந்தன
இவ்வளவு மயிலிறகுகள்?
இறகுகள் செய்யும் தொழிற்சாலைகள்
உலகத்தில் எங்கோ ஒரு மூலையில்
இருக்கோ?

காவடி

மயில்கள்
வேட்டையாடப்படுகின்றன
மயில் மேல் வரும் முருகனுக்காக

புதன், பிப்ரவரி 01, 2012

ஜீரணம்

தாய் அருந்தியதை
அருந்தி வளர்ந்தோம்

பயிர்கள் பருகிய நீரை
பருகி வளர்ந்திருக்கின்றோம்

பலகாரங்கள் குடித்த எண்ணெய்யையும்
குடித்துக்கொண்டிருக்கிறோம்

தாவரங்கள் ஜீரணிக்காத விஷத்தை
ஜீரணித்துக்கொண்டிருக்கிறோம்

ஜீரணிக்காத மரணத்திற்காக..

யுக்தி

அலுவலகம் நுழையும்போதே
சோகமாக முகம்
யாரிடமும் பேசக்கூடாது
கொஞ்ச நேரங்கழித்து
குளிரில் நடுங்குவதைப்போல்
ஒரு ஸ்வெட்டர் போட்டுக்கொள்வது
பிறகு எல்லோருக்கும் விளங்குவதைப்போல் தும்மல் விடுவது
இடையிடையே இரும்மிக்கொள்வது
பேசமுடியாதபடி பேசுவது திணறித் திணறி
உத்தரவு வாங்கி கிளினிக் செல்வது
அழைப்பு நிச்சயம் வரும்
நான் எம்.சி என்று
நாளைக்கு பொதுவிடுமுறை.
போஸ் தான் சொன்னார்
இந்த யுக்தியை

செவ்வாய், ஜனவரி 31, 2012

பெண்ணுரிமை

சிரித்தாலும் விழுவான்
அழகாய் சிரிக்கிறாய் என,

முறைத்தாலும் விழுவான்
கோபம் பிடிச்சிருக்கு என,

மார்டனா உடுத்தினாலும்
மேலும் கீழும் நோக்குவான்

முக்காடு போட்டாலும்
எதையெதையோ தேடுவான்

பேசாமல் இருந்தாலும்
மௌனமே உன் மொழி
பிடிச்சிருக்கு என்பான்

படபடவென பேசினாலும்
பட்டாசு நீ,
விரும்புகிறேன் உன்னை என்பான்..

தென்றலாய் இருந்தால்
வருடுகிறாய் என்பான்

மின்னலாய் இருந்தால்
தாக்குகிறாயே என்பான்

ஆண்கள் நடத்திய
பெண்ணுரிமைப் போராட்டங்கள்
தலைதூக்கிய காலகட்டத்தில்

அழகாய் இருந்த எங்க பாட்டி
வெளியே வரத்துவங்கினாள்
நாங்கள் அடைப்பட்டுக்கிடக்கின்றோம்
அடிமையாய்..

பெண்ணியம் காக்க.