திங்கள், மார்ச் 12, 2012

உன் குரல் கேட்டால்

இன்று ஏனோ தெரியவில்லை, காலையிலிருந்து அப்பாவின் ஞாபகம் என்னை வாட்டுகிறது. எப்படியிருப்பார் அப்பா?  கண்களை மூடிக்கொண்டு அவரின் முகத்தை ஞாபகத்திற்குக்கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

என் முகத்தைக் கண்ணாடியில் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன், ‘நீ, உன் அப்பா போலவே சிரிக்கிறாய்’ என்று பாட்டி முன்பு ஒரு முறை சொல்லியிருந்ததை ஞாபகப்படுத்திப்பார்த்தேன். கண்ணாடி முன் நின்று, சிரித்துப்பார்த்தேன்.. ம்ம் இல்லையே!! அப்பா இப்படி இருக்க மாட்டாரே.!

சரி, சில நிகழ்வுகளை அசை போட்டுப்பார்க்கலாமே என, கன்னத்தில் கைவைத்து, தலையைச் சாய்த்து ஆள் காட்டி விரலை, நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டு யோசித்தேன்.

மாநிறம், உயரமல்ல குள்ளமுமல்ல, வரிசையான பற்கள், கூரிய மூக்கு. ஓரளவு முகம் வந்துவிட்டது.  ஜீ.. அப்படித்தான் அழைப்பார் என்னை.. குரல் ஞாபகத்திற்கு வரவில்லையே..

ஒரு முறை, தாத்தா வீட்டிற்குப் போக வேண்டுமென்று ஒரே ஆர்ப்பாட்டம். சித்தப்பா சின்னம்மா மகள் மகன்கள் எல்லோரும் திருவிழாவிற்கு வருவார்கள், அவர்களோடு விளையாட வேண்டும், திருவிழாவில் பொம்மலாட்டம் பார்க்கவேண்டும், பிடிவாதமாக அழுதோம், போயே ஆகவேண்டும் என்று. கூலிக்கார அப்பா, கையில் காசு இல்லை. ஏழை அப்பா அம்மாவைச் சந்திக்க, கையில் பணமில்லாமலா செல்வது? சைக்கிளை எடுத்தார், கடன் கேட்டார் ஒருவரிடம், கிடைத்தது. வாங்கிவந்தார். வாடகைக்காரில் பாட்டி வீட்டிற்குச் சென்றுவந்தோம்.
அப்போ அப்பா எப்படியிருந்தார்? இளமையாக இருந்தார். பலம், உடலிலும் உள்ளத்திலும். காரில் நிறைய பேசினாரே அன்று, செல்லும் வழியெல்லாம், காண்கிற காட்சிகளையெல்லாம் எங்களிடம் விளக்கிக்கொண்டே வந்தாரே. ம்ம்ம்... குரல் எப்படியிருக்கும்?

யோசிக்கிறேன்.. ஒரு நாள், டியூஷன் வகுப்பிற்குச் சென்று, வேகுநேரம் வரை காத்திருந்தோம், நானும் தம்பியும்..! அப்பா வந்து எங்களை அழைத்துச் செல்லவேண்டும், வரவில்லை. முன்பு கைப்பேசி வசதியெல்லாம் இல்லை, வீட்டிலும் தொலைபேசி வசதியும் இல்லை, உடனே தகவல் சொல்ல. இரவு வெகு நேரமாகிவிட்டது, தம்பி பயத்தில் அழ ஆரம்பித்து விட்டான். எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவனை ஆசுவாசப்படுத்திவிட்டு வழிய வழியப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே அமைதி எங்கும். எனக்கு எதாவதொன்று என்றால் பரவாயில்லை, தம்பியைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்..

அப்பாவின் லோரி (வாகன ஓட்டுனர்) சர்ர்ர்ர் என்று வந்தது நின்றது. தம்பி அழுவதைப் பார்த்தவுடன், `ஏன்யா அழுவற, அதான் அப்பா வந்துட்டேன்ல.. ’ என்றார். கையில் வைத்திருந்த சாக்லெட்களை, உங்க சின்னம்மா கொடுத்தாங்க என்று சொல்லி இருவரிடமும் கொடுத்தார். நான் அமைதியாக இருந்தேன். தம்பி சாக்லெட்டைச் சாப்பிட்டான்.

வீடு வந்து சேர்ந்ததும், பானை சட்டி விறகு கட்டை எல்லாம் பறக்க ஆரம்பித்தன, `மணி என்னா இப்போ? எவ வீட்டுக்குப்போயிட்டு வர?வயதுக்கு வந்த பொம்பளைப்பிள்ளையை எவனாவது தூக்கிட்டுப்போய், கெடுத்துக்கொலை செய்த்தாத்தான், நீ எல்லாம் அடங்குவ, அவனே, இவனே அந்த மவனே இந்த மனவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம். அப்பாவும் பதிலுக்கு சண்டை போட்டார், கத்தினார் வேகமாக, என் நிலைமை புரியாமல், என்னடீ என்னடீ என்று குரலை உயர்த்தி சண்டையெல்லாம் போட்டார், என்னன்னவோ பேசினார்.. நினைவுக்கூர்கிறேன், குரல் நினைவில் இல்லை.

அப்போது அப்பா எப்படியிருந்தார்.? எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு, அவமானங்களை எல்லாம் சகித்துக்கொண்டு அதே புன்னகையுடன்...  எங்களிடம் மட்டும் அன்பும் அக்கறையும் கொஞ்சம் கூட குறையாமல்.. ஐம்பது வயதிலேயே, முதுமை எட்டிப்பார்க் கத்துவங்கியது.  அதிகமாகக் குடிப்பதால், இந்தக் கோலம் வெகுவிரைவாக வந்துவிட்டது,  என, அம்மா இடித்துக்கூறி வசை பாடுவார்.

எங்களுடைய கிழிந்த துணிகளை அப்பாதான் ஒட்டு போட்டுத்தருவார். பழுதான கைக் கடிகாரத்தை, படிக்காத அப்பா ஒரு டெக்னிஷன் போல் பழுது பார்ப்பார். புதிதாக வாங்கியப்பொருளை உடனே போட்டுப் பார்க்கச்சொல்லி அழகு பார்ப்பார். மூக்குத்தி அணிந்த புதிதில், பார்த்துப்பார்த்து ரசிப்பார், எங்க அம்மா மாதிரி இருக்கு எம்மவ என்பார்.
எப்படியோசித்தாலும் குரல் ஞாபகத்திற்கே வரவில்லை. அப்பாவின் குரல் எப்படியிருக்கும்..!!??

இருபது வருடங்களுக்குப் பிறகும் நினைவை விட்டு அகலாமல் இருக்கும் அப்பாவின் அன்பு, சாதாரணமானதல்ல. எங்களைச் சுதந்திரமாக சிந்திக்க விட்டவர். எங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்திருப்பார். அடித்துச்சொல்வார் என் பிள்ளைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்று. எங்களுக்கும் திருட்டுத்தனம்  செய்வதற்கு மனசே வராது. அப்பாவின் முகத்தை நினத்த மாத்திரத்திலேயே, சில அசிங்கமான  சிந்தனைகள் ஓடி மறைந்துவிடும்.

மஹாத்மா காந்தியையும், பாரதியையும் அறிமுகப்படுத்தியவர்.  எதிர்ப்பார்ப்பு என்கிற எந்த சுமையையும் எங்களின் மீது ஏற்றிவைத்ததில்லை, குற்றவுணர்வுக்கும் உற்படுத்தியதில்லை. யாரிடமும் எங்களை ஒப்பிட்டு குறை கூறியதில்லை (அம்மா செய்வார் இந்த வேலையை நன்கு) கண்டிப்பு உண்டு ஆனால் அடித்ததில்லை. எப்படியிருந்தாலும், நீ என் பிள்ளை என்கிற அவரின் அன்பு என்றுமே நிறைகுடம்தான்.

அவரின் குரல் கேட்கவேண்டும் போல் இருக்கிறது. ஒரு நடிகராக இருந்திருந்தால், ஒரு பாடகராக இருந்திருந்தால்... குரலை மீண்டும் கேட்டுப்பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்குமே.! இப்படி ஏங்குவேன் என்று தெரிந்திருந்தால், எதாவதொரு சந்தர்ப்பத்தில் குரலை பதிவு செய்தாவது வைத்திருக்கலாமே.!

உன்னிடம் பேசவேண்டும் போல் இருக்கு. உன் குரல் கேட்டால் என் ஏக்கத்திற்கு தீர்வு பிறக்கலாம்.
.

வியாழன், மார்ச் 08, 2012

உனது முகவரி வேண்டும்

யாருக்கும் தெரியாமல் ஒருவரிடமும் சொல்லாமல் உனக்கும் தெரிவுபடுத்தாமல், உனக்கு ஒரு பரிசு வாங்கித்தர எண்ணியுள்ளேன். சரி,எப்படி யாருக்கும் தெரியாமல், இந்த வேலையைச் செய்வது?

கடைக்குச் செல்வேன், உனக்கு எது பிடிக்குமென்று எனக்குத் தெரியும் என்பதால், அதை எடுப்பேன் பணம் கொடுப்பேன். இது முழுக்க முழுக்க எனது கட்டுப்பாட்டில்தான். நான் உழைப்பதால் யாரிடமும் கையேந்தும் நிலை எனக்கு இருந்ததில்லை.

வாங்கி வந்தவுடன், அதை அழகாக பேக்கிங் செய்யவேண்டும்.! எப்படிச் செய்வது? வீட்டிலா? முடியுமா? மனம், சித்தம், புத்தி எல்லாம் இறைவனை நினைக்கவேண்டுமோ இல்லையோ, அவரையே நினைக்கவேண்டுமென்று நினைக்கிற ஒரு சர்வதிகாரியிடம் செல்லுபடியாகுமா நமது நியாயங்கள்.!?

ஒரு பெண்ணாக இருப்பதால், வேறொரு ஆணுக்கு அனுப்பப்படுகிற பரிசுப்பொருட்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிற குடும்ப உறுப்பினர்கள் கிடைக்கப்பெறுகிற அளவிற்கு பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா, நம் சமூகத்தில்? மூன்று முடிச்சு தாலிக்கயிறு தூக்குக் கயிறாய் மாறிவிடாதா.! அவருடைய பெண் தோழிகளுக்கு நான் எல்லாம் செய்ய வேண்டும், பெண் என்பதால் பெண் மூலமாக மறைமுக தூது அனுப்பலாம், திறந்த மனதோடு. செய்தும் உள்ளேன். ஆனால் எனக்கு என்று வரும் போது, அது அவலமாகும் அவமானமாகும்..!

சரி, அதையும் வெகு சாமர்த்தியமாக செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவள் தான் நான். எவ்வளவோ விஷயங்களை மறைத்து மறைத்து செய்தாகி விட்டது, இனி என்ன??

அடுத்தது என்ன? உனது முகவரி என்னிடமில்லை. கேட்கத் தோன்றவில்லை, இப்போது கூட உடனே உன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  அழைத்துக் கேட்கலாம் தான்.! கேட்டால், ஏன்? எதற்கு? என்பாய். திடீரென்று கேட்பதால் நான் என்னமோ உனக்கு வாங்கி அனுப்பப்போகிறேன் என்பதை நீ யூகிப்பாய், இதை ரகசியமாக வைத்திருக்க நினைக்கும் எனக்கு அதில் சுவாரஸ்யமில்லாமல் போய் விடுமே..! .

அடுத்த  வாரம் என் தோழி ஒருவள், நீ வசிக்கும் இடத்திற்குத்தான்  சுற்றுலா செல்லவிருக்கிறாள். எனக்குள் பொறி தட்டியது. அவளிடம் கொடுத்து விடலாமா? போஸ்டல் சார்ஜ் செலவு மிச்சம்...!

சில வேளைகளில், நாம் வாங்கி வைத்திருக்கும் பொருட்களை விட,  அவற்றை நாம் அனுப்பிவைப்பதற்கு செய்யப்படுகிற செலவு அதிகமாகவே இருக்கும். அதற்கு அந்த அத்தியாவசியப் பொருட்களை இரண்டாக வாங்கி அனுப்பி விடலாம், நீண்ட நாள் நீ அதை உபயோகப்படுத்தி பயன்பெறலாம். நாடு விட்டு நாடு எடுத்துச்செல்லும் கடுகிற்குக்கூட அதிக விலை, போஸ்டல்  சார்ஜில்.

சரி, அவளிடம் எப்படிச் சொல்வது?

அப்படியே அவளிடம் அதைக்கொடுத்து அனுப்பினாலும், அதை வாங்கிச் செல்ல, உனது சேவகனையல்லவா நான் தொடர்பு கொள்ளவேண்டும்! அவன் உடனே ஓடோடி வந்துவிடுவான் சேவகம் செய்ய, சர்ப்ரைஸ்சாக உன்னிடம் ஒப்படைப்பான், அவனை நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால், இவள்...!!? எல்லாம் நல்லபடி நடக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, எதாவதொரு சந்தர்ப்பத்தில் நட்பில் சின்ன விரிசல் என்று வந்துவிட்டால், சமயம் பார்த்து போட்டுக்கொடுத்து விட்டால்..! அனுபவப்பட்டுள்ளேன்..

இங்கு தலை போகிற அளவிற்கு எந்தத் தவறும் நடக்கவில்லைதான், இருப்பினும் திரித்துக் கூறுகிற போது, என்னிடம் ஏன் ஒரு வார்த்தைச் சொல்லவில்லை? என்கிற அர்த்தமற்ற கேள்விக்கு எத்தனை ஆண்டுகள்தான் பதில் சொல்லிக்கொண்டிருப்பது!? 

மேலும், அவள் எனக்குத்தோழிதான். அதற்கு முன்பு அவளின் கணவனும் இவருக்கு நல்ல நண்பர்.. எதாவதொரு சந்தர்ப்பத்தில் விஷயம் தெரியவந்தால், வில்லங்கமாகிவிடுமே.! மேலும் உன் சேவகனுக்கும் இதுபற்றி தெரிய வரும்போது, அது ரகசியமல்லவே....

உனக்கு ஒரு பரிசை வாங்கி வைத்துக்கொண்டு, நான் இப்படியெல்லாம் புலம்பிக்கொண்டு மனவுளைச்சலில் உழல்கிறேன், என்பது உனக்குத் தெரியவந்தால்.. நிச்சயமாக உனக்குக் கோபம் வரும். உன் கோபத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நான் உன்னிடம் கேட்டேனா? என்று கூட நீ சினங்கொள்வாய்.. உனது கோபம் என்னை சாகடிக்கும்.. வேண்டாம் சொல்ல மாட்டேன்.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிய வேண்டுமென்றால், முகவரி கேட்டு போஸ்டல் மூலமாக அனுப்புவதுவே முறை. கொஞ்சம் செலவாகும், பரவாயில்லை, செலவை விட, மனவுளைச்சல் கொடியது.

எனக்கு உனது முகவரி வேண்டும்.. 

புதன், மார்ச் 07, 2012

வர்ணனை

சில பெண்களின் அழகு 
வர்ணிக்கப்படும் போது, 
நானும் கொஞ்சம் 
எட்டிப் பார்க்கிறேன் 
நிலைக் கண்ணாடியை.

கூலி

சலவை செய்யும் போதெல்லாம், 
அவரின் பாக்கெட்டுகளிலிருந்து 
கிடைக்கப்பெறும் 
சில்லரை காசுகளும் 
நனைந்த நோட்டுகளும் 
எனக்குக் கூலி கொடுத்துக்கொண்டிருக்கிறது 
பல வருடங்களாக.

சோறு

கவிதையைப்பற்றி 
யார் எப்படி பயமுறுத்தினாலும், 
நான் வடிப்பதை மட்டும்
நிறுத்தவே மாட்டேன்...

மெயில்

உனது பதிலுக்காக
காத்திருக்கும் போது
எனக்குக் கேள்வி
அனுப்பியவர்களை
பழிவாங்கினேன்

புனைவுப் பின்னணியில்.....

எழுதும் கதைகளை
நிஜமாக்க..
நிஜவாழ்கையே
புனைவுகளுக்கு
தாரைவார்க்கப்படுகிறதா?

கதை நிஜமா அல்லது
நடைமுறையில்
நடந்து விட்டதெல்லாம்
கற்பனையா?

ஒத்து ஊதுவதற்கு
ஆள் சேர்க்கப்படுகிறதா, அல்லது
ஓட்டி ஓட்டி விரட்டியடிப்பதற்கு
ஆள் சேர்கப்படுகிறதா?

எல்லாமும்
நாடகமாய்
நடைமுறையையும்
வேடமுமாய்..!!

கொஞ்சம் தீர்க்கப்பார்வை
தரிசித்து விட்டதால்
நானும் விலகிக்கொள்கிறேன்
சாதாரண வாசகியாய்...