வியாழன், ஜூன் 07, 2012

அருவுருவ...

அருவமாய்
நீ என் முன்னே
வீற்றிருக்கும் போதுதான்
எனக்கு உருவமிருப்பதையே
நான் உணர்ந்துகொள்கிறேன்

புதன், ஜூன் 06, 2012

பெண் தான் எல்லாமும்


ஒரு பெண்ணை, எந்த ஆணும் அடிமைப் படுத்தி விட முடியாது. அவளே அப்படி மாறிக்கொள்கிறாள். அது அவளின் சுபாவமாகவே உள்ளது.

உதாரணத்திற்கு; வாழ்நாள் முழுதும் அவள் கஷ்டப்படுகிறாள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். கல்யாணத்திற்கு முன் அவளின் குடும்பத்திற்காக உழைக்கின்றாள். கல்யாணம் செய்த பிறகு குழந்தைகளுக்காகவும் குடும்ப சூழலுக்காகவும் உழைக்கின்றாள். குடும்பம் நல்லபடி இருக்கப் போராடுகின்றாள்.

எனக்கு இந்த பொறுப்பு பிடிக்கவில்லை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள் என்று கணவரிடம் சொன்னால், பார்க்காமல் விட்டுவிடுவாரா. பார்ப்பார்தானே,! ஆனால், பெண்களான நமக்குத்தான் மனசு கேட்காது.

சரி நீங்களே குழந்தைகளுக்கு சமைத்துப்போடுங்கள், வீட்டு வேலைகளைச் செய்யுங்கள் எனக்கென்ன, என்றால், செய்யாமல் இருப்பார்களா! செய்வார்கள் தானே.! நமக்கு மனசு வருமா? அவர்களைச் செய்யவிட்டு வேடிக்கைப் பார்க்க.!?

எல்லாப் பொறுப்புகளையும் சரியான இலக்கு நோக்கி நகர்த்தி, குழந்தைகளும் சொந்தக்காலில் நிற்கும் தருணம் வந்து, அப்பாடா, இனியாவது கொஞ்ச காலம் நமக்காக வாழலாமே, என்றிருக்கும் போது, வயதான அம்மா அல்லது மாமி மாமனார் போன்றோர்களைக் கவனிக்கின்ற பொறுப்புகள் புதிதாக முளைக்கும். அது என்ன குழந்தைகளைப் பராமறிப்பதைப்போல் சுலபமானதா? இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்களைவிட இது கொஞ்சம் கூடுதல் கஷ்டமான வேலை.

நாம் பத்து பிள்ளைகளை சீராட்டி பாலூட்டி வளர்க்கலாம் ஆனால் ஒரே ஒரு முதியவரைப் பார்ப்பதைப் போன்றதொரு கடினமான வேலை இருக்க முடியுமா என்ன!

நாம் சொல்லலாம், முடியாது, பார்க்கமாட்டேன், இனிமேல்தான் நான், எனக்காக வாழப்ப்போகிறேன் என்று, `சரி விடு, நானே பார்த்துக்கொள்கிறேனென்று ஒரு ஆண்மகன் சொன்னால், நமக்கு மனசு வருமா!?

நமக்குத்தான் அந்த கலை கைக்கூடும். அவர்களுக்கு இல்லையே. ஆக இப்படி, நாமே இந்த சுழற்சியிலும் சிக்கலிலும் நமது கருணை சுபாவத்தால் மாட்டிக்கொண்டு அல்லல் படுகின்றோம். இதுவே பெண்களின் இயல்பு.

இது புரியாத சில பெண்ணிய புரட்சியாளர்கள் (ஆண்கள்) பெண்ணுரிமை பற்றி மேடையில் முழங்குகிறார்கள்.  நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

அம்மா அப்பா


இவர்கள்தான் எங்களைப்பெற்று வளர்த்த புண்ணியவான்கள்.
தாய், அமிர்தம் பிள்ளை, தந்தை காளியண்ணன்@ காளிமுத்து.
இவர்களின் திருமணம் வெகுவிமர்சையாகவே நடைப்பெற்றது. அம்மா அணிந்திருக்கும் இந்தப் புடவை அப்போதே அதிக விலையாம். அப்பா இறக்கும்வரை பத்திரமாக வைத்திருந்து, அவருடனேயே அனுப்பி வைத்தார். எங்கள் கண்பட அந்த புடவை அவரின் பிரேதத்தில் போர்த்தப்பட்டது.
திருமணம் செய்யும் போது, அம்மாவிற்கு வயது பதினாறு. முகத்தைப்பாருங்கள் (ஆமாம், எங்களுக்கு வேற வேலையில்லையா’ன்னு கேட்கப்படாது) பால் வடியும் முகம். அப்பாவிற்கு வயது இருபத்தியேழு. ஆ..பொண்ணு மைனர்.. பதினோரு வயது வித்தியாசத்தில், சின்ன பொண்ணை.. ! அப்பா படித்தவர். அப்போதே மலேசியாவில் பிரபலமான ஒரு கம்பனியில் டிரைவர் வேலையில் இருந்தவர். ஓரளவு படித்தவர்களுக்குத்தான் அங்கே வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளம் ஆனாலும் பணக்காரர்களாக முடியாத வறுமைதான்.

செவ்வாய், ஜூன் 05, 2012

சேவை செய்வதில் ஆனந்தம்

வயதானவர்களைப் பாதுகாக்கின்ற அரிய பணியைச் செய்பவரா நீங்கள்.!
அப்படியென்றால் இங்கே நான் குறிப்பிடுவது, உங்களுக்குச் சரியாகப் படுகிறதா பாருங்கள்.

1. அவர்கள், நன்றாக நடமாடிக்கொண்டிருக்கும் போது சரியாகக்கூட குளிக்க மாட்டார்கள்கள். ஆனால், நாம் அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது, நல்லா தேய்த்துக்குளிப்பாட்டு, முதுகு தேய், அங்கே தேய், இங்கே தேய் என்று கட்டளை பிறப்பிப்பார்கள்.

2. நன்றாக இருக்கும் போது தலை வாரிக்கொள்ள மாட்டார்கள். நேரமிருக்காது. சோம்பேறித்தனம். தள்ளாடி தளர்ந்து உட்கார்ந்திருக்கும் போது, எண்ணெய் வைச்சு விடு, வகிடு எடு, அள்ளி முடி, கொண்டை போடு, பவுடர் போடு.. என்பார்கள்.

3. லோஷன் என்றால் என்ன வென்று கூட அறிந்திராத அவர்கள். நாம் போடுவதைப்பார்த்து விட்டால், எனக்கு கொஞ்சம் தடவி விடு, கால்கள் கைகள் காய்கின்றன என்பார்கள். ஒரு நாள் போட்டு விட்டால், தினமும் நமக்கு ஞாபகப்படுத்தி போடச்சொல்வார்கள். அப்படியே ஜாலியாக உட்கார்ந்திருப்பார்கள் நாம் போட்டு விடணும்.

4. கை கால்களின் நகங்களை ஆயிரத்தி தொள்ளாயிரத்தின் ஆரம்பத்தில் வெட்டியதாக இருக்கும். இப்போது, நகங்கள் கருத்து சிறுத்து காணப்படும், அதை நம்மிடம் காண்பித்து அவைகளை வெட்டிச் சுத்தம் செய்யச் சொல்வார்கள்.

5. அறவே நடக்க முடியாமல் என்றில்லை, நடக்க முடியும், இருப்பினும் உட்கார்ந்த இடத்திலேயே எல்லாமும் கொண்டு வந்து வைக்கவேண்டுமென்று சதா அழைத்த வண்ணமாக இருப்பார்கள். உதாரணத்திற்கு குடிக்க தண்ணீர், துடைக்க துண்டு, சளி வருது, எச்சில் வருது, கொசு கடிக்கிறது, எறும்பு கடிக்கிறது.. என.! சொரிந்து விடுவதற்குக்கூட நம்மை அழைப்பார்கள்.

6. வாழ்நாட்களில், வெந்ததைத் தின்று விதியே என்றிருந்தவர்களுக்கு, இப்போது, சாப்பிடவுடன், பால் வேண்டும், பழம் வேண்டும்.. சூப் வேண்டும்.. எல்லாவற்றையும் கொண்டு வந்து வைக்கவேண்டும் பிறகு எடுத்துச்சென்று சுத்தம் செய்யவேண்டும்.

7. சமைக்கின்ற கஞ்சியோ, சோறோ, குழம்போ, கூட்டோ பிடிக்கவில்லை என்றால், உடனே கடைகளில் எதையாவது வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் முகம் வாடிவிடும். பி.கு.. நன்றாக இருந்த போது கடை உணவுகளை சுத்தமாக நிராகரித்தவர்கள் இவர்கள்.

8. நேற்று சமைத்ததை, இன்று பரிமாறினால் முகம் நீளமாகும். சுடச்சுட ஒரு பிடி அரிசி கஞ்சி வைத்துக்கொடுத்தால் குறந்தா போவாய்ன்னு.. எங்கோ ஒரு மூலையியிலிருந்து தகவல் வரும். போன் எல்லாம் நல்லா குசுகுசு வென பேசுவார்கள். சொந்தமாக கைப்பேசி எல்லாம் வைத்துக்கொள்வார்கள். சொந்தமாக சமைத்துச் சாப்பிடும் போது, நான்கு அல்லது ஐந்து நாள் உணவுகளை (கெட்டுப்போனதாக இருந்தாலும்) பசிக்கு, ருசி பார்க்காமல் சாப்பிட்டவர்கள்தான் இவர்கள்.

9. உட்கார்ந்த இடத்திலேயே மலம் சிறுநீர்கழிப்பார்கள். அப்படி ஒன்றும் நிதானமில்லாமல் இல்லையே, சம்பவங்களை தேதி நாள் வருடம் போன்றவற்றோடு, அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அன்று நீ அப்படிச் செய்தாய்! இன்று நீ இப்படி செய்தாய்! என்று இடித்துக்கூறி பேச முடிகிறதே. ஆனால் மலம் மூத்திரம் வருவது மட்டும் தெரியாதாம். சரி, போயாச்சு, கழுவலாம் என்றால் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள். கொஞ்சம் அதட்டினால், அழுவார்கள்.

10. வீட்டிற்கு யாராவது வந்து, எதையாவது பேசிக்கொண்டிருந்தால், மெனகட்டு கட்டிலில் இருந்து எழுந்து வந்து சொந்தமாக தள்ளாடித் தள்ளாடி ஹாலில்அமர்ந்துக்கொள்வார்கள், ஆனால் அங்கிருந்து, சாப்பாட்டு மேஜைக்கு அழைந்தால், யாராவது கை கொடுத்து ஊன்றுகோலாக நின்று அழைத்துச்செல்ல வேண்டும். இல்லையேல், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.

11. உணவை நாம் ஊட்டி விடவேண்டும், ஆளைக்கண்டு ஏய்ப்பார்கள். நாம் ஊட்டி விட்டால், அப்படியே வாயில் வைத்துக்கொண்டு, குமட்டி குமட்டி வாந்தி எடுப்பார்கள். அவர்கள் சொந்தமாகச் சாப்பிடும் காலத்தில் நடந்துக்கொண்டும் ஓடிக்கொண்டும் சாப்பிட்டவர்கள், இப்போது, நம் பொறுமையைச் சோதிக்கின்ற மாதிரி உட்கார்ந்திருப்பார்கள்.

12. குழந்தகளுக்கு போடுகின்ற பெம்பஸ் மாதிரி முதியவர்களுக்கும் உண்டு. அதைப்போட்டுப் பழகிவிட்டால், அவர்கள் அதற்கு அடிக்ட் ஆகிவிடுவார்கள். சோம்பேறித்தனம் வந்து விடும். ஏன்னா உட்கார்ந்த இடத்திலேயே எல்லாமும்.. சுலபமான வேலையாச்சே. அந்த பெம்பஸ் போடுவது பெரிய பாடு. முதியவர்கள் சரியாக ஒத்துழைக்காவிட்டால், அதைப்போகின்ற நமக்கு இடுப்பு கழன்று விடும். கிட்டத்தட்ட ஒருவருடமாகப் போட்டுக் கொண்டிருந்தாலும், சிலர் சரியாக ஒத்துழைப்பு நல்க மாட்டார்கள். நாமே புரட்டிப்போடனும், நாமே நகர்த்தனும்.. ஆத்திரமாக வரும். ஆனால் அதை அகற்றும் போது மட்டும் பட்டென்று கழற்றி எங்கேயாவது கடாசி விடுவார்கள்.

13. கடைசியாக, எவ்வளவு நல்லபடி சேவை செய்தாலும், திருப்தியடைவே மாட்டார்கள். எதாவது குறையிருக்கும் சொல்வதற்கு. உள்ளபடியே சேவை செய்பவர்கள் போற்றத்தக்கவர்கள். ஏற்றுக்கொள்கிறேன், எல்லோராலும் முடியாது.

உங்களின் மனைவியோ, சகோதரிகளோ அல்லது அம்மாவோ இது போன்ற சேவைகளில் ஈடுபட்டிருந்தால், அவர்களின் நிலைமையைப் புரிந்து நடந்துக்கொள்ளுங்கள். முடிந்தால், ஒரு பணிப்பெண்ணை அவர்களுக்காகவே நியமிக்கலாம். தொட்டதிற்கெல்லாம் அழைப்பார்கள். இல்லத்தரசிகளுக்கு நிச்சயம் இது ஒரு பாரமாகவே இருக்கும். குடும்பத்திற்கும், அவர்களின் சொந்த விருப்பங்களுக்கும் நேரமில்லாமல் செய்துவிடும் இந்த சேவை. இதனால் குடும்பங்களில் விரிசல் வரலாம். பிரச்சனைகள் எழலாம்.

சகித்துக்கொண்டும், மனத்திருப்தியோடும் செய்பவர்கள் தாராளமாக செய்யட்டும்... நீங்கள் வணங்கப் படவேண்டியவர்கள். இறைவனின் முழு ஆசி உங்களுக்கே. வாழ்க வளமுடன்.

நான் வேண்டுவதெல்லாம், அந்த நிலை வருவதற்குள் மரணம் என்னைத்தழுவ வேண்டும். 

வியாழன், மே 31, 2012

Heart attack (news view)

Heart attack symptoms in women differ from men. Unexplained fatigue and shortness of breath are two of the most common symptoms of heart attack in women. IJN status.
Symptoms in women differ from men because women who develop heart attacks usually do not experience cheat pains, they are often given lower priority than men - who would usually come in with chest pains at hospitals.
The best chance of surviving a heat attack was to reach the hospital in time but women often missed out on early treatment as many would come late due to the atypical symptoms.
Generally, about 50% of those who experience heart attacks die before reach the hospitals.
Women who experienced symptoms like unexplained fatigue and shortness of breath to remind the attending medical personnel of the possibility of heart attack, particularly when they had risk factors
In Malaysia, one out of four women dies of heart attack and stroke and the trend has not changed for the last decade.

Thanks Dr. Robaayaah. IJN (National Heart Institute) & star news paper

அவசர சிகிச்சை

காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வு, மயக்கம், வாந்தி வருவதைப்போல் குடலைப் பிரட்டியது, வயிற்றில் லேசான வலி வேறு. என்ன சாப்பிட்டோம் நேற்று இரவு?  யோசித்தேன். வீட்டு உணவுதானே. நானே சமைத்தது, புதிய எண்ணெய், புதிய பொருட்கள் தூய்மை என மிக சுகாதாரமாக சமைப்பவளாச்சே நான்.! ஆக வீட்டு உணவால் பிரச்சனை வர வாய்ப்பில்லைதான். வெளியே சென்று சாப்பிட்டால், எதோ ஒரு கோளாறு நடந்துள்ளதென்று சொல்லலாம்.!

வேலைக்கு வந்தவுடன், என் மருத்துவ நண்பருக்கு அழைப்புவிடுத்தேன். அவர் கேட்ட கேள்வியும் அதே தான்.

`நேற்று இரவு என்ன சாப்பிட்டீர்கள்.? ’

`மீன் சம்பல், கோபிஸ் சாம்பார். ’

`ஓ..வீட்டுச் சமையலா? பிரச்சனையில்லையே.! என்ன மீன்? அந்த மீனை இதற்கு முன் சாப்பிட்டுள்ளீர்களா?’

`வழக்கமாக சாப்பிடும் மீன் தான் டாக்டர்.’

`பிரஷர் சுகர் எதும் இருக்கா உங்களுக்கு. ?’

`இல்லையே டாக்டர். சுகர் இல்லை, ஆனால் பிரஷர் தான் எல்லோருக்கும் வருமே.!’

`நான் உங்களை நேரில் சந்தித்தால் தான் சொல்லமுடியும். பிரஷர் பார்க்கனும். எதுக்கும் அருகில் உள்ள கிளினிக் செல்லலாமே!’

`இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, பிறகு செல்கிறேன் டாக்டர். ’

`சரி சரி.. என்ன பிரச்ச்னைன்னு பிறகு அழைத்துச் சொல்லுங்கள், ஒகேங்களா.! ’

`நன்றி டாக்டர்.’

அவரிடம் பேசிவிட்டு, ஒரு 100+ குடித்தேன் (isotonic). மாற்றம் இல்லை, சிறியதாக ஒரு ஏப்பம் வந்தது ஆனால் வயிற்று வலி அதிகரித்தைப்போல்தான் இருந்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் வலி வேறுமாதிரியாக வர ஆரம்பித்தது. தொப்புழ் பகுதியில் சுருக் சுருக் என்றது.

மாறுநாள் வெளியூர் பயணம் செல்லவேண்டும், நீண்ட தூர பயணம் அது. இப்போதே இது போன்ற கோளாறுகள் ஏற்பட்டால், நாளையின் நிலை? சும்மானாலுமே எனக்குப் பிரயாண அசதி பேய் மாதிரி வரும். இதில் கோளாறோடு சென்றால், சுத்தம். எல்லாம் பாழ்.

இன்றே இதைக் குணப்படுத்தி ஆகவேண்டுமே. மருந்து எடுப்பதில் அவ்வளவாக விருப்பமில்லை. எதையாவது சாப்பிட்டுப்பார்ப்போமே என, கைவசம் இருந்த நெஸ்டம்’ஐ எடுத்துக்கொண்டு, ரெஸ்ட் கார்னருக்குச் சென்றேன். கையோடு டி.எஃக்ஸ்.என் தையலத்தையும் எடுத்துச்சென்றேன்.
காப்பிக் கோப்பையில் நெஸ்டமைப் போட்டு அதில் சுடுநீரை மட்டும், எதுவுமே போடவில்லை, மற்ற நாள் என்றால் பால் சக்கரை சேர்த்துக்கொள்வேன். இன்று கொஞ்சம் உப்பு மட்டும் அதில் சேர்த்துக்கொண்டு, கொஞ்ச நேரம் சுடுநீரில்  ஊற வைத்துவிட்டு, கொண்டு வந்த டி.எஃக்ஸ்.என் தையலத்தை வயிற்றில், தொப்புழ் பகுதியைச் சுற்றி தடவ ஆரம்பித்தேன்.

அங்கே சுத்தம் செய்கிற ஒரு இந்தோனிஷிய பெண்மணி வந்தாள்.
`அக்கா என்ன் செய்கிறாய்? ’ என்றாள். சொன்னேன் என் பிரச்சனையை. அவ்வளவுதானா, `கொடு அந்தத் தையலத்தை’ என என் கையிலிருந்த தையலத்தைப் பிடுங்கி, அருகில் இருந்த நாற்காலியை இழுத்து, என்னை அதில் அமரச்செய்து, அவள் கிழே என் கால்களுக்கு நேராக அமர்ந்துகொண்டு, எனது இரண்டு கால்களையும்  அவளின் தொடையின் மேல் வைத்து, பாதங்களை அவளது விரல்களால் ஜாலம் செய்ய ஆரம்பித்தாள். தேய்த்தாள், பிடித்து விட்டாள், அமுக்கினாள், அழுத்தினாள்.. எனக்கு சங்கடமாக இருந்தது. வேண்டாம் விடு என்றேன். கொஞ்ச நேரம் இரு அக்கா, என்று சொல்லி பத்து நிமிடங்கள் பிடித்து விட்டப்பிறகு, என் இரண்டு கால் விரல்களில் உள்ள மூன்றாவது நான்காவது விரல்களை, அவளது மோதிர நடுவிரல்களின் இடுக்கில் வைத்துக்கொண்டு, அவைகளை பலம் கொண்டு இழுத்து விட்டாள் பாருங்க.. அய்யோ அம்மா, ஆள விடு, என்று கதறியே விட்டேன். அவ்வள்வு வலி.

பொறு பொறு.. அமைதி அமைதி.. என தொடர்ந்தாள்.. , சரி, செய்துத்தான் பார்ப்போமே என வலியைப் பொறுத்துக்கொண்டேன்.
கால்கள் நடுங்குகிற அளவிற்கு வலி.. போச்சுடா, நாளைய பயணம்! நடக்க விடாமல் செய்திடுவாளோ என அஞ்சினேன். `போதுன்டி ஆள விடு.’ என்றேன். பிறகு எழுந்தாள். எனது ஆடைகளை பாதியாக களைத்து, குனிய வைத்து,  முதுகுப் பகுதியில் கொஞ்சம் தையலத்தைத் தேய்த்து, சில்லரை காசு கொண்டு,  வருடிவிட்டால்.. அதன் பிறகு குனிய வைத்து, பொத்துபொத்து அடித்தாள். அவ்வளவுதான். கொஞ்சம் சுடுநீர் வெதுவெதுப்பாக அருந்தகொடுத்தாள். போ சரியாயிடும் என்றாள். ஒரு பெரிய ஏப்பம், மிக சத்தமாக வெளியேறியது. உடம்பு லேசானது. வலியில்லை, பசி ஆரம்பித்தது. நெஸ்டம் சாப்பிட்டேன். மயக்கம் இல்லை, ஒண்ணுமே இல்லை. !

என்ன மேஜிக் இது?

இப்போது, அவளை மீண்டும் அழைத்தேன். சிரித்துக்கொண்டே வந்தாள். எப்படி இருக்கு அக்கா? என்றாள். என்ன சொல்வது.. என்ன அதிசயம் வலியெல்லாம் காணாமல் போயிடுச்சே, என்றேன்.

மௌனமாக சிரித்த வண்ணம்.. அதுதான் ரகசியம் என்றாள். என்ன ரகசியம், எப்படி உனக்கு இந்த சூட்சமம் தெரிந்துள்ளது.? கேட்டேன்.

`இந்தோனிஷியாவில், உடம்பு பிடிக்கும் பரம்பரையில் இருந்து வந்தவள் நான். எங்கள் வீட்டிற்கு எப்போதும் ஆட்கள் வருவார்கள், எதாவது ஒரு கோளாறோடு.. தாத்தா, அப்பா, பாட்டி, அம்மா, போன்றோர்கள் செய்வதைப்பார்ப்பேன், நானும் கற்றுக்கொண்டேன்..’ என்றாள்.

எனக்கு ஆச்சிரியம். எதாவது செய்யவேண்டுமென்று நினைத்து, பத்து வெள்ளியை நீட்டினேன். அவளுக்குக்கோபம் வந்தது. பணம் கொடுத்து எல்லாவற்றையும் கொச்சைப்படுத்தாதே என்று அன்பாகக் கண்டித்துக்கொண்டாள்.

மருந்து எடுக்காமல் எவ்வளவோ வழிகள் உள்ளன நம் நோயை நாமே குணப்படுத்த. நாம்தான் தும்மினாலும் மாத்திரை வாங்க கிளிக் செல்கிறோம்.

புதன், மே 30, 2012

வாங்க பின்னாடி போவோம்

வாங்க ஒரு முப்பது வருடத்திற்குப் பின்னால் போவோம்.

அப்பொழுது எனக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம், வயது சரியாக ஞாபகத்தில் இல்லை இருப்பினும் அந்தக் காலக்கட்டத்தின் நிகழ்வுகள் அப்படியே மனதில் பதிந்து இருக்கின்றன.

கேஸ்சில்லோன் விளக்கு

அன்றைய காலகட்டத்தில் மின்சார வசதி எல்லா இடங்களிலும் இல்லை. பட்டணங்களில் மட்டுமே முழுமையான மின்சார உபயோகம் இருக்கும்.  கிராமம், எஸ்டேட், கம்பம் போன்ற இடங்களில் `கேஸ்சில்லோன்’  என்ற மண்ணெண்ணை விளக்கு தான் பெரிய அளவில் பயன் பாட்டில் இருந்தது

அந்த விளக்கை எரிய வைப்பதற்கு, அதில் நன்கு தேர்ச்சிப்பெற்றவர்கள் அதை ஏற்றி எரிய வைப்பார்கள். அதற்குச் சிறப்பான அணுகுமுறைகளைப்  பயன் படுத்துவார்கள். எங்களின் சித்தப்பா (நாங்கள் கூட்டுக் குடும்பவாசிகள்)  அந்த வேலையை நன்கு செய்வார். ஆனால், அதற்குள் அந்த விளக்கு எரிவதற்கு தேவைப்படுகின்ற அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைக்க வேண்டும்.


அதாவது, அந்த விளக்கை எரிய வைப்பதற்கு, துணி போன்ற ஒரு உரையைப் பயன்படுத்துவார்கள், அதை மெண்டல் என்று சொல்லுவார்கள். அதன் மேலே தொப்பிபோல் உள்ள அந்தக் கவசத்தை நீக்கிவிட்டு அதன் தலைப்பகுதியை வெளியே எடுத்தால், அந்த மெண்டல் துணி கட்டுவதற்கான இடம் இருக்கும். அந்த வெள்ளைத்துணியிலே சிறிய நூல் கேர்த்திருப்பார்கள், அந்த நூலை அதன் தலையில் லேசாகக் கட்டவேண்டும், கட்டியவுடன், அதனை ஸ்பிரிட் கொண்டு நனைத்து, அதன் கீழே சிறிய மூடி போன்ற வட்ட வடிவில் ஒரு தட்டு இருக்கும், அதில் கொஞ்சம் ஸ்பிரீட்டை ஊற்றி, (அந்த ஸ்பீரிட் ஊற்றிவைக்க ஒரு சிறிய குவளை  இருக்கும், அதுவும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்) அதை மூடிவிடவேண்டும். பிறகு கீழே குடம் போன்ற குடுவையில், மண்ணெண்ணையை ஊற்றி, இறுக்கமாக மூடியபிறகு, மூடி போன்ற இடத்தில் ஊற்றப்பட்ட ஸ்ப்ரீட் இல் தீக்குச்சியைப் பற்ற வைத்து உள்ளே விட்டால், அந்த மெண்டல் துணி பற்றிக்கொள்ளும். அது முழுமையாக பற்றி முடிந்த போது, அதன் கீழே உள்ள பம்ப்’ஐ அடிக்கவேண்டும். அடிக்கும் போது மிதமான மண்ணெண்ணை கீழிருந்து மேலே பாய்ச்சுவதால், அது, அந்த மெண்டலின் வழி இறங்கி, அந்த மெண்டலை எரித்து முட்டைப்போல் செய்து வெளிச்சம் கொடுக்கும். அந்த வெளிச்சத்தில் தான் பலரின் இருள் அகன்றது.

முட்டை போல் இருக்கும் அந்த மெண்டல், உடையும் வரை பயன் படுத்தலாம். ஒளி மங்கினால், விளக்கை கீழே இறக்கி, மீண்டும் பம்ப் செய்வார்கள். வெளிச்சம் பொளேர் என்று வரும். அந்த வெளிச்சத்தில் தான் நாங்கள் படித்தோம்.

மண்ணெண்ணை, அதை ஊற்றும் புனல், ஸ்பிரீட் குவளை, கேஸ்சில்லோன் விளக்கில் உள்ள வட்டமான கண்ணாடி (அதையும் ஸ்பிரீட் ஊற்றி  தினமும் துடைக்கவேண்டும், சுத்தமாக) தீப்பெட்டி, பழைய துணி, மெண்டல் போன்ற எல்லாமும் சரியாக இருந்தால் தான், சித்தப்பா விளக்கின் அருகில் உற்காருவார், இல்லையேல், அன்றைய டூட்டி யாருடையது என்று கேட்டு, அடி விழும்.

அந்த பம்ப’ஐ சரியாக அடிக்காமல், அலட்சியமாக இருந்தாலும், விளக்கு வெடித்துவிடும். இதனால் பல வீடுகள் தீப்பிடித்துக் கருகிய நிகழ்வுகளும் உண்டு. கவனமாகக் கையாளவேண்டும்.!


இது வரவேற்ப்பு அறைக்கு மட்டும் தான். சமையலறை, படுக்கையறை,குளியலறை போன்றவற்றிற்கு மற்றொரு விளக்கு பயன் படுத்துவார்கள். அதுவும் மண்ணெண்ணை விளக்குதான். திரி பாதி வெளியே இருக்கும் மீதி மண்ணெண்ணையில் நனைந்து கொண்டிருக்கும்- அப்போதுதான் அந்த விளக்கு எரியும். இந்த விளக்கும் கடைகளில் வரிசையாக அடுக்கப்பட்டு பலவித வடிவங்களில் விற்பனை செய்வார்கள். இதற்கெல்லாம் முன்பு கிராக்கிதான்.

இப்போது, இது போன்ற விளக்குகளை எல்லாம், மியூசியத்தில் தான் பார்க்கலாம். யார் வீட்டிலும் இல்லை. நாடு வளர்ந்து விட்டது.

புடவை

எங்கு பார்த்தாலும், குத்துவிளக்கு புடவை பிரபலம். எங்களின் வீட்டிலும், எங்க அம்மா சின்னம்மா மார்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு குத்துவிளக்கு சேலை வைத்திருப்பார்கள். சேலையின் எல்லாப் பகுதியிலும் குத்துவிளக்கு சின்னம் இருக்கும். `நானும் குத்துவிளக்கு சேலை வைத்திருக்கிறேன்’ என்பது முன்பு பெருமை போலிருக்கிறது!.

காதணிகள் கூட, தங்கக் குமிழ் தோடுதான் மிக மிக பிரபலம். அந்த தோடுகளை கூட்டு பிடித்து, நான் நீ, உனக்கு எனக்கு என்று வாங்கி வைத்திருப்பார்க்ள். திருவிழா, தீபாவளி என்றால், அந்தத் தோடுகளைப் போடாத நடுத்தர வர்க்கமே இல்லை என்பதைப்போல் எல்லோருமே அதை அணிந்திருப்பார்கள்.


டீவி, ரேடியோ

முன்பெல்லாம் டீவி ரேடியொவிற்கு லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும். பணம் கொடுத்து அவைகளை புதுப்பித்து வைத்திருக்கவேண்டும். இது அரசாங்க உத்தரவு. எப்படியெல்லாம் வசூலித்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா!? திடீரென்று அவைகளைப் பரிசோதிக்க சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து கொண்டு, ஒரு கணமான புத்தகத்தைக் கையில் ஏந்திகொண்டு ஒருவர் வருவார் வீடுவீடாக.


அவர் வருகிறார் என்பது தெரிந்துவிட்டால் (பொதுவாக, தமிழர்கள் வசிக்கும் இடங்களுக்கு, தமிழர்தான் வருவார்) வீட்டில் இருக்கும் டீவி ரேடியோ’களை தாய்மார்கள் தடால்புடால் என்று எங்கேயாவது ஒரு மூலையில் பதுக்கிவைப்பார்கள்- காமடியாக இருக்கும் அதைப்பார்க்க.. அப்போது நான்  சின்னப்பொண்ணுதான் இருந்தாலும் கெக்கபெக்க’ன்னு சிரிப்பேன்.

ஆமை காடி

வாகனங்கள் அவ்வளவாக இல்லாத காலகட்டம் அது. சாலைகளில் பார்த்தால் லாரி, பஸ் மற்றும் சில வாகனங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் சாலைகள் அமைதியாகவே காணப்படும். மோட்டார்கள் கூட குறைவுதான். எங்கோ ஒன்று இரண்டு காணலாம். இப்போது நிகழ்வது போன்ற சாலை விபத்துக்கள் அரிது, ஏன் இருக்கவே இருக்காது என்றும் சொல்லலாம்..

அப்போது இந்த ஆமைகாடி தான் பிரபலம். ஆரம்ப கால வோல்க்ஸ்வேகன் கார் இது. ஆமை போல் இருப்பதால், ஆமை காடி என்போம்.

மண்ணில் அ.ஆ.இ.ஈ

எங்களை, எங்களின் அப்பா ஒரு பாலர்பள்ளியில் சேர்த்து விட்டார். பணம் வாங்காமல், சேவை மையமாகத்திகழ்ந்த ஒர் பாலர் பள்ளி அது.  தரையில் உட்கார வைத்து, நம் முன்னே மண்ணைக்கொட்டி, பிஞ்சு ஆட்காட்டி விரலை ஒரு ஆள் அழுத்திப் பிடித்து, அம்மண்ணில் எழுதவைப்பார். `அ ஆ.. ஆஆஆ..’ வலிக்கும், இருப்பினும் சத்தம் போட்டுச்சொல்லவேண்டும். அப்படிச்சத்தம் போடும் போது, அவர்கள் நினைத்துக்கொள்வார்கள் நாங்கள் அ ஆ நன்கு படிக்கின்றோமென்று. ஆனால் கை விரல்கள் ரணமாய் வலிப்பதால் வரும் கதறல்தான் அது. மண் அங்கேயும் இங்கேயும் பரவி, உட்காரும் இடமெல்லாம் மண்ணாக இருக்கும்.. முட்டிகூட போடமுடியாத நிலையில் மண் முள்ளாய் குத்தும். அப்படியே நெளிவோம், அடிப்பாரு அந்த ஆளு.. (வாத்தியாராம்).  சரியாக எழுதவில்லையென்றால் கற்கள் கொண்ட மண்ணிலேயே முட்டி போடவேண்டும். கொடுமைதான்.

சாம்பல்

முன்பு வீடுகளில் விறகு அடுப்புதான் பயன்படுத்துவார்கள். அதில் தேங்கியிருக்கும் சாம்பலை அள்ளி வைத்துக்கொண்டு, அலுமினிய பாத்திரங்கள் தேய்ப்பார்கள் பாருங்க.. அப்படியே பளப்பள’ன்னு ஜொலிக்கும். யார் விட்டில் உள்ள பாத்திரங்கள் அதிகமாக மினுமினுக்கும் என்கிற போட்டி வைத்தால், நம்மவர்கள்தான் முதல் பரிசைத் தட்டிச்செல்வார்கள். எல்லோர் வீட்டிலும்  இதே யுக்திதான். அலுமினிய பாத்திரங்களில் கொஞ்சம் கரி ஒட்டி அசுத்தமாக இருந்தால் போதும், இது என்ன, ஆஷோ (சீனர்கள்)  வீட்டுப்பாத்திரம் மாதிரி இருக்கே என கிண்டலும் செய்வார்கள்.

காட்டுப்பண்டி(பன்றி,பன்னி)

மேல் வீட்டு கவுண்டர் தாத்தா, வாரம் ஒரு முறை, வேட்டைக்குச்செல்வார். அவர் வேட்டைக்குச்சென்றுவந்தால், எங்கள் வீட்டிற்கு காட்டுப்பன்றியின் தொடை ஒன்று வந்துவிடும். அப்படியே கருகரு உரோமங்களோடு இரத்தம் வடிய வடிய கொண்டுவந்து போடுவார்கள்.. இதனாலேயே அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டே, சண்டையாக இருக்கும். அம்மாவிற்கு இதெல்லாம் பிடிக்காது. அப்பாவிற்கு இவைகள்தான் இஷடம்.. ! சமைத்துக்கொடுக்காவிட்டால் அடி. (தண்ணியைப்போட்டு விட்டுதான், இல்லேன்னா ஏது வீரம்!?)

மற்றொரு மீன் வகையும் அம்மாவிற்குப்பிடிக்காது, ஆனால் அதுவும் அப்பாவின் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆற்றில் வாழும் அழுக்குக் கருப்புகெண்டையாம் (சாரி, சரியாகச்சொல்லவில்லை என்றால்)

இன்னும் இருந்தால் பகிர்வேன். இப்போதைக்கு இவ்வளவே. இதற்கும் அப்பால் சென்றால் இன்னும் சுவாரஸ்யமான விவரங்கள் கிடைக்கலாம். நான் சொல்வது இறுதி எழுபது மற்றும் ஆரம்ப எண்பது..

ஐம்பது அறுபது களுக்குசென்றால் சுவாரிஸ்யம் கூடலாம்...
யாராவது பகிருங்கள், எனக்கு மிகவும் விருப்பம் இது போல் பின்னோக்கிச்செல்வது.