ஞாயிறு, அக்டோபர் 07, 2012

கதையின் கரு


நிலத்தில் உதிர்ந்த பவளமல்லியில்
புனிதமேது அசுத்தமேது
நானறியேன்..
எடுத்து சேகரிக்கப்பட்ட
வழிப்போக்கனின் கூடையில்
மந்திரங்களை மட்டும்
உச்சரித்து விட்டுச்செல்கிறேன்
சேர வேண்டிய இடத்தில் சேரும்
என்ற நம்பிக்கையில்
யாரோ எழுதிய விமர்சனத்தில்
உன் கதையின் மூலக்கருவை
தேடுவதைப்போல
இறையடி சேரும்
மலர்களின் புனிதத்தன்மையை
தேடியபடி நான்...

வெள்ளி, அக்டோபர் 05, 2012

முட்டை தேர்வு.


முட்டை சாப்பிடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம் இது. எனக்கு இது புதிய செய்தியாக இருப்பதால், உங்களிடமும் பகிர்கிறேன்.

வாங்கிய முட்டைகள் ஊளை என்பது தெரியாமல், குழம்பு வைக்க அவித்து அதனில் ஓடுகளை அகற்றும்போது துர்வாடை வீசியது. ஏன் இப்படி துர்வாடை வீசுகிறதென்று ஆராய்ந்துப்பார்த்தால், வாங்கி வந்த முட்டைகளில் பல முட்டைகள் ஊளை. அட்டையில் உள்ள முப்பது முட்டைகளை அப்போதுதான் வாங்கிவந்தேன். மீண்டும் கடையில் கொடுத்து மாற்றலாம் தான் ஆனால் வாங்கிய அத்தாட்சியான அதனின் பில்’ஐ எங்கேயோ போட்டுவிட்டேன். எப்படி மாற்றுவது.? மேலும் அவித்த பத்து முட்டைகள் போக, இன்னும் இருபது முட்டைகள் மட்டுமே இருந்தன. அவைகளை என்ன செய்ய!? சரி ஓரு ஆய்வு செய்யலாமே என்றெண்ணி, ஒவ்வொன்றாக உடைத்து உடைத்து பரிசோதித்தேன், சில முட்டைகளின் மஞ்சள் கரு, மஞ்சளாகவும்,  சில முட்டைகளின் மஞ்சள் கரு, கருப்பு வெள்ளையாகவும் தூர்வாடை வீசிய வண்ணமாக இருந்தது.  எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போட்டேன்.

ஒரு பாத்திரத்திரத்தில் நீரை நிரப்பி, முட்டைகளை அதனுள் இட்டு நீரில் உள்ள முட்டைகளில் நிலைப்பாட்டினைக் கொண்டு அவைகளை நல்ல ஊளை முட்டைகளா என்பதனைப் பரிசோதித்துக்கொள்ளலாம்.

மேலே உள்ள படத்தில் :-

முட்டை 1 - புதிய முட்டை. இந்த முட்டை நீரில் முழுமையாக மூழ்கி பாத்திரத்தை உரசிக்கொண்டிருக்கும்.

முட்டை 2 - கோழி இட்டு ஒரு வாரகாலமாகியிருக்கும் முட்டை இது. மஞ்சள் கரு இருக்கும் பகுதி கொஞ்சம் லேசாக மேலே தூக்கியவாறு மிதந்துக்கொண்டிருக்கும். பயன்படுத்தலாம்.

முட்டை 3 - இந்த முட்டை முழுமையாக பாத்திரத்தில் ஒட்டவில்லை. கொஞ்சம் தூக்கியபடி ஒட்டியும் ஒட்டாமலும்.. லேசான மிதப்பில்.

முட்டை 4 - முழுமையான மிதப்பில் உள்ள முட்டை இது. கெட்டுப்போன முட்டை, பயன்படுத்தக்கூடாது. இதுதான் ஊளை முட்டை.  


முட்டைகளில் எது நல்ல முட்டை, எது ஊளை முட்டை என்பதனைக்கண்டு கொள்ள இப்படி ஒரு யுக்தி உள்ளதென்பதை இப்போது அறிந்துக்கொண்டேன். இனி முட்டையைப்பற்றிய சந்தேகம் வந்தால், இப்படிப் பரிசோதித்துப்பார்த்து, பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனாலும், மிக அண்மையில் போலி முட்டைகள் சீனாவின் தயாரிப்பாக வந்து சில பயனீட்டாளர்களை கதிகலங்க வைத்தது. நாடு முழுக்க விற்பனையில் இருந்த இந்த போலி கோழி வாத்து முட்டைகளைக் கண்டுபிடிக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இணையத்திலும் அந்த முட்டையை எப்படித்தயாரிக்கின்றார்கள் என்பதனைக் காட்டும் `வீடியோ க்ளிப்’களும் பரவலாகப் பகிரப்பட்டது. இதை எப்படி அடையாளங்காண்பது என்பதைப்பற்றிய போதனைகள் இன்னமும் குழப்பமானவே இருந்து வருகிறது. அப்படியே நிஜமான முட்டைகள் போலவே தயாரித்திருக்கின்றார்கள்.  இந்த சம்பவத்திற்குப்பிறகு பலர் முட்டை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டனர்.

முட்டைகளுக்கு மட்டுமல்ல, இன்னும் பலவிதமான பொருட்களில் எது தரமானது, எது நிஜமானது, எது போலி, எது விலைகொடுத்து வாங்க தகுதியானது, எது பயனுள்ளது, எது பயனற்றது என்பதனை சரியாக அறிந்துக்கொள்ளாமலேயே பல பொருட்களை பணவிரையம் செய்து வாங்கி ஏமார்ந்துப்போகிறோம்.   குறிப்பாக சில;  ஸ்படிக மாலை. அதிர்ஷ்ட கற்கள், ருத்திராட்சம், ஐம்பொன் தங்கம், வெள்ளிப்பொருட்கள், போலித்தயாரிப்பில் உள்ள பிரண்டட் மதுபானங்கள், நறுமண வாசனத்திரவியங்கள், அலங்காரப்பொருட்கள் என பலவற்றில் போலிகள் உலவுகின்றன. ஏமாளிகள் இருப்பதால் ஏமாற்றத் தெரிந்தவர்களுக்கு கொள்ளை லாபம்.

சுயதேன் வாங்கும் விஷயத்தில் நான் பலமுறை ஏமார்ந்துள்ளேன். `இது ஒரிஜினல் தேன். மலைவாழ் பகுதிக்குச்சென்று நானே கொண்டு வந்ததேன், பாருங்கள், தேனீக்கள் கொட்டி, கைகள் கூட வீங்கிப்போயிருக்கிறது.’ என எதோ ஒரு ஜந்துக்கள் கடித்த இடத்தைக் காட்டி தேன் வியாபாரம் செய்தவர்களையும் பார்த்துள்ளேன். வாங்கி ஏமார்ந்தும் உள்ளேன். கருப்பட்டி பாகை தேன் என்று சொல்லி பல மடங்கு லாபத்தில் விற்பனை செய்பவர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள்.

இதுவும் பத்திரிகை செய்தியே - ஒரு சிறிய அறையை மட்டும் வாடகைக்குக்கு எடுத்துக்கொண்டு நாட்டில்  மிகப்பிரபலமான நிறுவனத்தால் தயாரிக்கப்படும்  `பீர்’ ஒன்றை, சில பணியாட்களை வேலைக்கு வைத்துக்கொண்டு சொந்தமாக போலியான முறையில் தயாரித்து பெட்டிப்பெட்டியாக பல உணவுக்கடைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்த ஒரு கும்பல் கூட அண்மையில் பிடிபட்டது. மது பிரியர்களுக்கு இந்த செய்தி மனஉளைச்சலைக் கொடுத்தது எனலாம். உஷார்.

மினரல் வாட்டருக்கும் இதே கதிதான். நாடு தழுவிய நிலையில் போலியாக பல முத்திரைகளில் மினரல் வாட்டர்கள் தயாரிக்கப்படுவதாகவும் செய்திகள் பலவாறாக வந்த வண்ணமே.

வெளிநாட்டுப் பிரபல நறுமண வாசனைத்திரவியங்களிலும் இப்போது போலிகள் மலிந்து விட்டன. ஒரிஜினல் திரவியங்கள் மலிவான விலையில் கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லை. இருந்தபோதிலும், `சுங்கத்துறை நண்பர்கள் கொடுத்தார்கள், பொருட்கள் வந்து இறங்குகிற கொன்டேனா போர்ட்’யில் தெரிந்தவர்கள் வேலை செய்கிறார்கள், விமானப்பணிப்பெண் என் உறவுக்காரர், சரக்கு கடத்தல் கப்பல் பிடிப்பட்டதில் பல பொருட்கள் பரிமுதல், பிரபல பேரங்காடி மூடுவிழா,’ என, பல மாதிரியான புரட்டுகளைச் சொல்லி பல போலி பொருட்களை  அசலைவிட கொஞ்சம் குறைந்த விலையில் எமாளிகளின் தலையில் கட்டுகிறார்கள். இதுவும் கண்டுபிடிப்பதற்கு சிக்கலான ஒன்று.

அசல் பொருளைப்பற்றிய போதிய ஞானம் இருந்தால்தான் இதுபோன்ற போலி பொருட்களை அடையாளங்கண்டு கொள்வதில் சிரமம் இருக்காது. இல்லையேல் இதில் தொடர் ஏமாற்றம் உறுதி.

(படம் மெயிலில் வந்தது, அனுப்பியவர் பாலகோபாலன் நம்பியார். நன்றி)

//#பி.கு:  ஊளைக்கு எந்த லை/ளை போடுவது என்கிற நீண்ட தேடலில் ஈடுபட்டிருந்ததால், இந்த பதிவு ஒரு நாள் முழுக்க கிடப்பில் கிடந்தது  :))) //




.

வியாழன், அக்டோபர் 04, 2012

நான் கர்ப்பமாக இருக்கின்றேன்

இன்று மதிய உணவுவேளைக்கு வெளியே  சாப்பிடச் செல்லவில்லை. சாப்பிட மூட்  இல்லை.

ட்ரொவரில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மெஃகி மீ’யில் (நூடல்ஸ்) சூடுநீர் ஊற்றி, இதமாக வேகவைத்து, சுவைத்துக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் மெஃகியை சாப்பிடுகிறேன். அதற்குள் போவோர் வருவோர் எல்லாம், `இது உடம்பிற்குக்கெடுதல், அதிகமான அஜினாமோட்டோ, வயசாச்சு, இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்து விடு,  சாப்பாட்டு நேரத்தில் இதை ஏன் சாப்பிடுகிறாய்? முடி உதிரும், சூடு, அந்த பேஸ்ட் கெடுதல்..’ அப்படி இப்படி  என  ஆலோசனைகள்  கூற  ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக்கொடுத்து விட்டு, எனது மெஃகி சூப்’ஐ சுவைத்துக்கொண்டு, ஒரு அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

எங்களின் அலுவலக கால் செண்டரில் ஒரு வேலை காலியாய் இருந்தது. அந்தக் கால் செண்டர் டிப்பார்ட்மெண்டில் ஏற்கனவே நிறைய மலாய்க்காரப் பெண்மணிகள் வேலையில் இருப்பதால், ஒரு தமிழ்ப்பெண்ணை வேலைக்கு நியமிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள்.

இரண்டு வாரங்களாய் தேடியும், இந்த தேர்விற்கு இன்னும் சரியான ஆள் கிடைக்கவில்லை. தமிழ் பெண்கள் வந்தால், நன்கு படித்த பெண்களாக வருகிறார்கள், கேட்பதைவிட கூடுதல் தகுதியோடு வந்து, சாதாரண வேலையாக இந்தக் கால் செண்டருக்கு சரியில்லாத நபர்களாகி தேர்வாகாமல் போய்விடுகிறார்கள். அல்லது, அறவே தகுதி இல்லாமல், வேலை அனுபவமும் இல்லாமல், ஆங்கிலமும் சரியாக பேசதெரியாமல் வருகிறார்கள், அதுவுமில்லாமல் சிலர் அதிக அளவில் சம்பளம் எதிர்ப்பார்த்து, நேர்முகத் தேர்வின் போது  தோல்வியடைந்து விடுகிறார்கள்.

தமிழ்ப்பெண்களை வேலைக்கு எடுப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதனை இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். நிஜமாலுமே லேசில் சிக்க மாட்டேன் என்கிறார்கள். பெரிய கம்பனிகள், பெரிய பதவிகள் என ஒரு எதிர்ப்பார்ப்போடு வருகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான்கு பெண்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அங்கேயும் இங்கேயும் நண்பர்கள் தோழிகள் என சிலரிடம் சொல்லிவைத்து, வரவழைத்தேன். அதில் ஒரு தற்காலிக தமிழாசிரியயை தேர்வாகிவிட்டார். கேட்ட சம்பளத்திற்கே வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்கள். இவரிடம் வேலை அனுபவமும், திறமையான பேச்சாற்றலின் மூலம் நேர்முகத்தேர்வில் அசத்திவிட்டார் போலும். தேர்வு முடிந்த மறுநாளே, தொலைப்பேசியில் அழைத்து, வேலை கிடைத்து விட்டது என்கிற விவரத்தைச் சொல்லச்சொன்னார்கள்.

நான் தான் அழைத்துச் சொன்னேன். பேசும்போது, நல்ல அரசாங்க வேலையான ஆசிரியர் வேலையை விட்டுட்டு எப்படி இந்த பிரைவர்ட் கம்பனி வேலைக்கு.!? கேட்டேன். அந்த வேலை நிரந்தரம் இல்லை. தற்காலிகம்தான். மேலும் இப்போது ஆசிரியர் வேலைக்கும் கெடுபிடிகள் ஜாஸ்தி. தொடர்ந்து பேர்போடமுடியுமா, என்பது தெரியாததால் வேலையை விட்டுட்டேன். இப்போது தமிழர் ஒருவரின் செகரட்டரியா வேலை செய்கிறேன். தனி ஆளாய் நான் மட்டும்தான் அங்கே வேலையில், அவசரத்திற்கு லீவு எடுக்கக்கூட கஷ்டமாக இருக்கிறது மெம். அதான் வேறு வேலை தேடினேன், உங்கள் மூலமாகக் கிடைத்தும் விட்டது. முதல் வேலையாய், அந்த செகரட்டரி வேலையை ராஜினாமா செய்யவேண்டும், என்கிற உற்சாக குரலோடு விடைபெற்றார்.

அடுத்தவாரம் அவர் வேலைக்குச் சேர வேண்டும், அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரும் தயாராகிவிட்டது, இப்போது செய்கிற வேலையையும் தூக்கிப்போட்டுவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன், மயக்கமாகவும் வாந்தி வருவதைப்போல் இருக்கவும், கிளினிக் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், நான்கு வார கர்ப்பம் என்றிருக்கின்றார். மகிழ்ச்சியான செய்திதான்,  இருப்பினும், புதிய வேலையில் சேர இது தடையாக இருக்காதா?, என்கிற ஒரு நெருடல் அவருக்குள். என்னை அழைத்தார்.

``மெம்..நான் அடுத்த வாரம் வேலைக்குச்சேர வேண்டும்..’’

``ஆமாம்..’’

`` ஒரு பிரச்சனை..ம்ம்’’

``என்ன பிரச்சனை?’’

``நான் நாலு வாரம் கர்ப்பம் மெம்..’’

``ஓ..’’

``என்ன செய்யலாம்.? இப்போ செய்கிற வேலையை வேறு ராஜினாமா செய்துவிட்டேன்.!’’

`` நீங்க முதலில் வேலையில் சேருங்கள், பிறகு அதைப்பற்றி பேசலாம்..’’

``தெரிந்தால் பிரச்சனையாகாதா மெம்?’’

``சொன்னால்தானே தெரியும், ஏன் சொல்லனும்..!?’’

``ம்ம்ம்ம்.....’’

`` வேலைக்குச் சேருங்கள். நீங்கள் இருக்கிற சைஸ்சுக்கு, இந்த கர்ப்பம் வெளியே தெரிய கொஞ்ச நாள் ஆகும், அப்போது சொல்லிக்கலாம். சரியா, ஒண்ணும் பிரச்சனை இல்லை. ’’ என்றேன்

``சரி, மெம்’’ என்கிற சிறு சிரிப்பொலியோடு தொலைப்பேசியை வைத்தார்.

இன்று காலையிலேயே, எங்களின் அட்மினில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த வேலை இன்னமும் காலியாகவே உள்ளது. ஆள் பார்,என. எனக்கு அதிர்ச்சி. ஏன் என்னாச்சு என்று விசாரித்தால். அவர் கர்ப்பம் என்பதை, அந்த நேர்முகத்தேர்வு அதிகாரியிடம் சொல்லி விளக்கம் கேட்டுள்ளார்.! அதற்கு அந்த அதிகாரி, அப்படியென்றால் நீ இப்போது வேலைக்குச் சேரவேண்டாம், குழந்தை பிறந்து, உடல் நலம் தேறிய பிறகு வா, என்றிருக்கின்றார்.

தேவையா இது?  காலையிலிருந்து தொலைப்பேசி ஓயவேயில்லை. நான் தான் சொன்னேனே.. அதற்குள் என்ன அவசரம், இப்போ என்ன செய்ய முடியும்?

அவளைப் பேசி விட்ட என் தோழி வேறு, `பாவம், எப்படியாச்சும் சொல்லி, கேட்டுப்பார்..’, என, தொலைப்பேசியில் கெஞ்சியவண்ணமாக இருந்தார்.. எப்படிக் கேட்டாலும் முடியாது. பெண்களின், அதுவும் கர்ப்பிணிப்பெண்களின் உடல்நல ஆரோக்கியத்தில் எங்களின் அதிகாரி கூடுதல் கவனம் செலுத்துபவர். எப்படி நான் பேச முடியும்.!? எல்லாம் நன்மைக்கே, என ஆறுதல் சொல்லி, வளவளா பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.

தொலைப்பேசி மணி அடித்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த மெஃகி கப்பை கீழே வைத்து விட்டு, தொலைப்பேசியை எடுத்தேன்.

``வேலை காலி என்றீர்களாமே.. எப்போது இண்டர்வியூ?’’ மறுமுனையில் ஒரு பெண் குரல்.



செவ்வாய், அக்டோபர் 02, 2012

பின்நவீனத்துவமும் கற்பனைக்குதிரை ஓட்டிகளும்

எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு இலக்கிய வியாதி அதி வேகமாகப்பரவி வருகிறது. அது என்னவென்றால், ஒரு பிரபலமான எழுத்தாளரின் படைப்பு, அதை வாசிக்கின்ற மற்றொரு எழுத்தாளருக்குப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தி, எதோ ஒரு பரவச நிலையைக் கொடுத்து விட்டால், எழுதப்பட்ட அதனின் உள்ளர்த்தத்தைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல், இப்படிப் புரியாமல் எழுதுவதுதான் இலக்கியம் போலும் என தவறாகப் புரிந்துக்கொண்டு,  தாமும் அதேபோல் புரியாமல் எதையாவது எழுதி, தனக்கும் பின்நவீனத்துவ பாணி வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிற  நிலை இப்போது தொற்றுவியாதியைப் போல் துரத்தி வருகிறது இலக்கிய உலகை.

கதை எழுதுபவர்களை என் பார்வையில், (கவனத்தில் கொள்ளவும் `என் பார்வையில்') இரண்டு விதமாகப்பிரித்துள்ளேன். ஒன்று; முதல்நிலை. அதாவது, நடைமுறை வாழ்வியலை அழகாகவும், அவலம் என்பதை மறைமுகமாகவும், எங்குமே போதனைகளை நுழைக்காமல்,  ஒரு கருப்  பொருளை அடையாளமாகக் காட்டி  அதில் இரண்டு அல்லது அதற்கும் மேலான புரிதல்களை மறைமுகமாகப் புகுத்தி, வாசிப்பவர்களை அவர்களின் போக்கிலேயே யோசிக்கவைத்து, வாசிப்பனுபவத்தில் பரவச நிலையைக்கொடுக்கின்ற அற்புதப் படைப்பாக மலர்ந்து, வாசகர்களுக்குப் புதிய புதிய அனுபவங்களைக் அடையாளங்காட்டி பிரமிக்க வைக்கும் படைப்பாளிகள் இந்த ரகத்தைச்சேர்ந்தவர்கள்.

வாசகர்களை எழுத்தால் கட்டிப்போட்டு வசீகரிக்கும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர்களுக்கு இந்த பாணி சரளமாக வந்துவிடும். தமிழ்நாட்டு எழுத்துகள் பல இந்த வடிவில் இருப்பது கண்கூடு. சாரு, அசோகமித்திரன்,  நகுலன், விமலாதித்த மாமல்லன், பிரேமிள், சுப்ரபாரதிமணியன், இ.பா, சுஜாதா, சுரெஸ்குமார் இந்திரஜித், ஆதவன், தி.ஜா, பிரபஞ்சன்,  என இன்னும் பலரின்  படைப்புகளைப் படித்து விட்டு அப்படியே பிரமித்துப் போயியுள்ளேன்.  இவர்களின் எழுத்துகளை வாசித்து முடித்த பின்பும் அதனின் எதிரொலி இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் ரீங்காரமிட்ட வண்ணமாகவே இருக்கும். யோசிக்க யோசிக்க விடுகதைகளின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதைப் போன்ற பரவச நிலையில் இவர்களின் எழுத்து ஓலமிட்டுக்கொண்டே இருக்கும். எப்படி இவர்களுக்கு இப்பேர்ப்பட்ட  அற்புத எழுத்தாற்றல் கைவசம், என, பலமுறை  அதிர்ந்துள்ளேன். இங்கே மலேசியசூழலில், நான் படித்தவரையில், வல்லின இணைய இதழ் ஆசிரியர் மா.நவீன் இதில் கைத்தேர்ந்தவராகத் திகழ்கின்றார்.  இவர்  இலக்கிய உலகில் பேர் சொல்லும் பிள்ளையாக முத்திரை பதிப்பார் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது நிலை என்பது,  நேரிடையாக விஷயத்திற்கு வந்து, அழகான புரிதல்களைக்கொடுத்து விட்டு, அற்புதமான நடையில், இடையிடையே போதனைகளையும் நுழைத்து, இறுதியில் ஒரு சின்ன  திருப்பத்தைத்தந்து,  அழகான சுபம் அல்லது மனதை வருடும்  சோகம் அல்லது ஒரு கேள்விக்குறியோடு கதைகளை முடிக்கும் எழுத்தாளர்கள். இதுபோல் எழுதுபவர்கள் இங்கே மலேசிய இலக்கியச்சூழலில் அதிகம்தான். ஏன், நான் கூட இதே பாணியில்தான் எழுதுவேன். இதில் கைத்தேர்ந்த எழுத்தாளர்கள் எண்ணில் அடங்கா. இவர்கள் வழக்கம்போல், பல அரிய விவரங்களை; படித்தது, கேட்டது, பார்த்தது, அனுபவித்தது என,  சாதாரண நடையிலேயே மிக எளிமையாக பலருக்குப் புரியும்படி, அழகான தமிழில் எழுதிக்குவித்து, நிறைய படைப்புகளைக் கொடுத்து,  எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தக்கவைத்துக்கொண்டு, தொடர்ந்து பெயர் போட்டு வருகின்றனர்.  இதில்  தப்பேதும் இல்லை. இந்த பாணிதான் இன்னமும் பலரை எழுத்தாளர் என அடையாளங்காட்டி வருகிறது. எழுத்துக் கலையை வளர்த்துக்கொள்ள  இது ஒரு நல்ல அணுகுமுறை.

இதையும் தாண்டி இன்னொரு கூட்டம் ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டு நிலையிலும் இல்லாமல், தம்மை ஒரு சிறந்த படைப்பாளியாக பறைசாற்ற வேண்டும் என்பதற்காக, இரண்டாவது நிலையை விட ஒரு படி மேலே நின்று, முதல் நிலைக்கும் போக முடியாமல், இரண்டாவது நிலைக்கும் வர மனமில்லாமலும், பின்நவீனத்துவ புயலாய் மாறி, நேற்றைய மழையில் பூத்த காளான்களாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது இவர்களுக்கே புரியுமா என்பதுதான் இங்கே புரியாத புதிர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டிக்கொள்ளும் என்பதைப்போல், அங்கேயும் இங்கேயும் தாவி, சிறுபிள்ளைத்தனமாகக் கிறுக்கி, படைப்புகளைத் தாறுமாறாகக் குழப்பி, அகராதியைக் கொண்டு யாருமே இதுவரையில் பயன்படுத்திராத சில தமிழ் சொற்களையோ அல்லது சமஸ்கிருத வாசகங்களையோ  நுழைத்து, படைப்பை வெற்றிகரமாக முடித்திருப்பார்கள்.

இவர்கள், இவர்களின் கதைகளைத் தேர்தெடுக்கின்ற பத்திரிகை ஆசிரியர்களையும் அந்த படைப்புகளை வாசிக்கின்ற வாசகர்களையும் வார்த்தை ஜாலங்களைக்கொண்டும், அழகிய தமிழ்ச்சொற்களாலும், புதுமையான வர்ணனைகளாலும், ஒண்ணுமே இல்லாத மர்ம முடிச்சுகளாலும் தலைசுற்றலை ஏற்படுத்தி, படைப்பை நிலை நிறுத்தப் போராடியிருக்கின்ற யுக்தியை வெகு சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதுவும் ஒருவகை சித்துவேலையே. கண்கட்டி வித்தைக்காரனின் ஜாலம் போல், அங்கே வித்தைகள் மட்டுமே இருக்கும், பார்வையாளர்களின் கண்களை அகல விரியவைக்கும் வித்தைகளை, நுண்ணிய பார்வை கொண்டு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, ஆரய்ந்துப் பார்த்தோமென்றால், அங்கே ஒன்றுமேயிருப்பதில்லை. அதுபோல்தான் இவர்களின் கதைகளும், படிக்கும்போது எதோ ஒன்று இருப்பதைப் போன்ற தோற்றத்தைக்  கொடுக்குமேயொழிய அவைகள் காலங்கடந்து நிற்குமா என்பது கேள்விக்குறியே.

அதிகமான வர்ணனைகளையும் வார்த்தை ஜாலங்களையும் புகுத்தி, இழுவையாய் இழுத்து, மர்மத்தை நுழைத்து, அங்கேயும் இங்கேயும் தாவி, இறுதியில் இறந்து போன தாத்தாவின் பிணத்தை வாசகர்களின் பார்வைக்குக்கொண்டு வருகிறார்கள். இந்த இறப்பைச் சொல்வதற்கு எதற்கு வாசகர்களின் பொறுமையை சோதிக்கவேண்டும்.!? தாத்தா இறந்து விட்டார் என்பதில் என்ன நீதி இருக்கப்போகிறது? ஓ...தாத்தா எப்படி வாழ்ந்தார் என்பதைச் சொல்லுகின்றார்கள் போலிருக்கு! அவரவர்  தாத்தாக்கள்  வாழ்ந்த நிலையை பலர் பலவிதமான பாணியில் ஏற்கனவே சொன்ன விதமாகத்தானே இருக்கின்றார்கள், இன்னும் என்ன புதிய பாணியில்..?? கேட்டால், அதற்கும் இவர்களிடம் தட்டையாக மொக்கையாக  ஒரு விளக்கமும் இருக்கும், உப்புசப்பில்லாமல்.

இவர்களின் கெட்டிக்காரத்தனம் என்ன தெரியுங்களா, சராசரி வாசகர்கள், இவர்களின் எழுத்துகளில் எதுவுமே இல்லை என்று புறக்கணிக்க முடியாமல் திணறடிக்கச் செய்துவிடுவதுதான். எப்படிப் புறக்கணிப்பது? நல்ல தமிழ் இருக்கின்றது. அற்புத வர்ணனைகள் இருக்கின்றது, சூரிய ஒளி, ஜன்னல் வழியாக படுக்கையறைக்குள் நுழைந்து எப்படி வியாப்பித்திருக்கின்றது என்கிற வர்ணனை எவ்வளவு நீளமான விளக்க வரிகளில். எதுக்கு? இப்படியும், வாசிப்பவர்களை தலைசுற்றல் ஏற்படுத்துகிற ஆற்றல் வேறு, இன்னும் என்ன வேண்டும்?  வேறு வழியே இல்லாமல் இவைகள்தான் நல்ல கதைகள், நல்ல எழுத்துகள் என்கிற ஒரு மாயத்தோற்றதை உருவாக்கி விடுகிற புத்திசாலித்தனம் இவர்களின் சாமர்த்தியக் கலை.

இப்படிப்பட்டவர்களுக்கு வாசிப்பின் மகத்துவம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமே  இல்லை. அவர்கள் எழுதுவதையே அவர்கள் வாசித்துக்கொள்வார்கள். அட எதையும் வாசிக்காமல் கூட இருக்கலாம். தமிழில் பிழையில்லாமல் எழுதக் கற்றுக்கொண்டு,  இவர்கள் காண்கின்ற கற்பனைக் கனவுகளை மொழிபெயர்த்துக்கொண்டு, அதற்கும் புரியாத நிலையில் ஒரு தலைப்பை வைத்து விட்டு, அப்படியே கற்பனைக் குதிரையை  தட்டிவிட்டு, அது எங்கெல்லாம் ஓடுகிறதோ, அங்கெல்லாம் தமது எழுதுகோலை மேயவிடுவார்கள். நன்கு கூர்ந்து கவனித்தால், அதில் ஒன்றுமே இருப்பதில்லை வர்ணனைகளைத்தவிர.  ஆனால் இவர்கள்தான் சிறந்த படைப்பாளிகள் என்கிற முத்திரையை வெகு விரைவில்  மிகச்சுலபமாகத்  தட்டிச்சென்றுவிடுவார்கள். முதல் நிலை பரிசுகளைப் பல முறை வென்றவர்களான இவர்களின் படைப்புகள் இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிற போதுதான் அதிகமாகத் தலைக்காட்டும். இந்த முறையில்  வெல்பவர்கள்  மக்கள் மத்தியில் சிறந்த படைப்பாளர்களாகப் பார்க்கபடுவதால்,  நிஜங்களைச் சொல்லும் அற்புத எழுத்துகள் தொடர்ந்து தோற்றுப் போகின்றன.

இன்னொரு நெருடும் உண்மை என்னவென்றால், கதைகளைத் தேர்ந்தெடுக்க  நியமிக்கப்படும் கதைக்குழு ஆசிரியர்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ பரந்த வாசிப்பனுபவமும், வாழ்வியல் கூறுகளை கூர்ந்து நோக்கும் நுண்ணறிவு ஆற்றலும் போதிய அளவில் இல்லாமல் இருப்பதால்,  புதிய பாணியில் எழுதப்படும் கதைகளின் போக்கு புரியாமல் போகவே, வெறும் வார்த்தை ஜாலக் கற்பனைக்கதைகளில் மது உணட வண்டாய் கிறங்கிப்போய், அவற்றையே சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்தும்   விடுகின்றனர்.

இதுபோன்ற கதைகளுக்குத் (பரிசு கிடைப்பதை வைத்து) தொடர்ந்து ஆதரவு இருப்பதைக் காண்கின்ற  அடுத்த தலைமுறையினரும், அதே போல்  `கோக்குமாக்காக’ படைப்புகளை எழுதி விரைவாக எழுத்தாளர் என்கிற முத்திரையைப் பதிக்க, தற்காலிக புகழுக்காக  குளறுபடியான கதைகளை எழுத ஆயத்தமாகிவிடுகின்றனர். இந்நிலையில் எழுதப்படுகின்ற கதைகள்தான்  ஏராளமாக பிரசுரமாகி தற்போதைய ஏடுகளை அலங்கரித்து வருகின்றன. ஃபாஸ்ட் பூட் இஸ் ஆல்வேஸ் வேஸ்ட் ஃபூட்.

இது இலக்கியச் சூழலின் ஆரோக்கியமின்மையைப் பிரதிபலிக்கும்  எரிச்சலூட்டும் ஓர் நிலைப்பாடு. பத்திரிகையில்  பிரசுரமாகுகின்ற கதைகளைத் தேர்ந்தெடுகின்ற கதைக்குழு ஆசிரியர்கள், கதைகளுக்குப் புள்ளிகள் வழங்குகின்ற நீதிபதிகள் போன்றோருக்கு பரந்த வாசிப்பனுபவம் இருப்பதை உறுதி செய்த பிறகே கதைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தி.ஜா, பிரபஞ்சன், சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன் போன்றோர்கள்  யார் என்பது கூட தெரியாத நிலையில் இருப்பவர்களை கதைத் தேர்வுக் குழுவில் நியமித்தால், நல்ல கதைகள் அடையாளங் காணப்படாமல் புறந்தள்ளப்படும் என்பது உறுதி.

எழுத்தாளன் என்பவன் முதலில் நல்ல வாசகனாகத் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதே சிறப்பு. கற்பனையில் குதிரை ஓட்டுகிற சில வார்தை ஜால ஆசாமிகளைப் பிடித்து, வாசிப்பனுபவத்தை பரிசோதித்துப்பாருஙக்ள்.

பூஜியம் பூஜியம் பூஜியம் தான்.
  

திங்கள், அக்டோபர் 01, 2012

கவர்ந்த குட்டிக்கதை - படித்ததில் பிடித்தது

தலைப்பு : உலகத்திலேயே மிகவும் வேகமானது எது???
உலகப் பிரசித்திப்பெற்ற நிறுவனம் ஒன்றில் மிகவும் கௌரவமிக்க வேலை ஒன்று
காலியாக இருந்தது.  பலர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் சிலரை ஒரு பிரபல ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிக்கு நேரடி பேட்டிக்கு
வரும்படி அழைத்திருந்தது அந்த நிறுவனம்.

அவர்களில் நால்வர் மிகச்சிறந்தவர்களாகக் காணப்பட்டனர்.  நால்வரும்,
பல்கலைக்கழகப் பட்டதாரிகள்அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில்
அந்த நிறுவன அதிபருக்குக் குழப்பம்.

"
போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்கிறோம், பிரிதொரு நாளில் இறுதிப் பேட்டிக்கு வாருங்கள்" என்று கூறி அந்த நால்வரையும் அனுப்பி வைத்தார்.
வேறொரு தேதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டிக்கு அந்த நால்வரும் வந்தனர்.
அவர்களுடன் இரவு உணவில் கலந்துகொண்ட நிறுவன அதிபர், "நீங்கள் நால்வரும் உண்மையிலேயே மிகவும் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள்; முடிந்தால் உங்கள் அனைவரையுமே வேலைக்கு அமர்த்திக்கொள்ள ஆவலாக உள்ளேன்.  ஆனால், உங்கள் தகுதிக்குரிய வேறு வேலைகள் காலியில்லைஆகவே, இந்த கௌரவமிக்கப் பதவிக்கு உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாளை காலையில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன்.  அதில் யார் சிறந்த பதிலைக் கூறுகிறீர்களோ, அவருக்கே அந்த வேலை" என்று கூறிச்சென்றார்.
மறுநாள் காலை பேட்டி ஆரம்பமானது.
முதல் நபரிடம், "உலகிலேயே மிகவும் வேகமானது எது?" என்று கேட்டார் அதிபர்.

"
நொடிப்பொழுதில் வந்துபோகும் சிந்தனை" என்றார்.
இரண்டாமவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார் அதிபர்.

"
இமைகளை மூடித்திறப்பது" என்றார் அவர்.
மூன்றாவது நபரிடமும் அதே கேள்வி.

"
மின்சாரம்தான் உலகிலேயே வேகமானதுஇங்கிருந்து விசையைத் தட்டினால் அந்த நொடியில் பல மைல்களுக்கு அப்பால் உள்ள விளக்கு எரிகிறது" என்றார்.

"
ஓ நல்ல பதில்" பாராட்டினார் அதிபர். இப்பொழுது நான்காவது நபர்.

"
வயிற்றுப் போக்கு, அதாவது பேதி" என்றார் பீதியுடன்.
பதில் கேட்டு முகம் சுளித்த அதிபர், "எப்படி?" என்றார்.

"
நேற்று இரவு உணவுக்குப்பின் அறையில் படுத்திருந்தேன்என் வாழ்நாளில் என்றுமே ஏற்படாத வயிற்றுக் கலக்கல் ஏற்பட்டதுகழிவறைக்குப்போக நான் 'சிந்திப்பதற்குள்'...
'
இமைகளை மூடித்திறப்பதற்குள்'... 'விளக்கின் விசையைத் தட்டுவதற்குள்'... ... சோரி... அங்கேயே பேதியாகிவிட்டது!"
அந்த நான்காவது நபர் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.


                        ***
முற்றும்***
 எழுதியவர் : பாலகோபாலன் நம்பியார்.


வெள்ளி, செப்டம்பர் 28, 2012

கொஞ்சம் சோகம் இன்று...

சீனா குவங்சிங்கில்,  இறந்துப்போன தமது மகனை ஆறுவருடமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ள ஒரு தம்பதியினரின் செய்கை அம்பலத்திற்கு வந்துள்ளது.

வீட்டிற்கு வருகிற உறவுகள், எத்தனையோ முறை இந்த செய்கையைக் கண்டித்து, நோயின் காரணமாக இறந்துப்போன இக்குழந்தையை எரியூட்டச்சொல்லியும், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் பிரேதத்தை பத்திரப்படுத்தி, ஏக்கமாக இருக்கின்ற சமயத்தில், பெட்டியைத் திறந்து  தமது மகனைப் பார்த்து கொஞ்சி திருப்திப் பட்டுக்கொண்டார்களாம்.

கிட்டத்தட்ட ஆறுவருடங்கள் இப்படிச் செய்து வந்ததிற்குக் காரணமும் இருந்திருக்கிறது. முதன் முதலில் பிறந்த இவர்களின் மூதத மகளையும் பதினைந்து வருடங்களுக்கு முன்பே நோய் பறித்துக்கொண்டது. இரண்டாவதாகப் பிறந்த இந்த மகனையும் இதே நிலையில் பறிகொடுக்க நேர்ந்ததை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

`என் மகன் குளிர்சாதனப்பெட்டியில் பார்ப்பதற்கு இன்னும் அழகாக உயிரோடு இருப்பதைப்போலவே இருக்கின்றான். அவனின் முகத்தைப் பார்த்தாலே போதும், கவலைகளெல்லாம் பறந்துப்போகிறது. அவன் எங்களுடனே இருப்பதைப்போன்ற ஓர் உணர்வைக்கொடுக்கிறது இந்நிலை. அதனால்தான் அவனை எரிப்பதற்கோ அல்லது புதைப்பதற்கோ எங்களுக்கு மனமில்லை..’ என்று சொல்லி  தாம் செய்து வந்த இச்செய்கைற்கு நியாயம் கற்பித்து வந்துள்ளனர் அத்தம்பதியினர்.

இச்செய்தியைப் படித்தவுடன் எனக்கு இன்னொரு சம்பவம் நினைவிற்கு வந்தது. கொஞ்சம் சோகம்தான். என்ன செய்வது வாழ்வில் இரவு பகல், மேடு பள்ளம், இன்பம் துன்பம் என எல்லாவற்றையும் இரண்டாகத்தானே வகுத்துள்ளார்கள்.

மிக அண்மையில் ஒரு பெண்மணியை உணவுக்கடையில் சந்தித்தேன். பழைய நட்பு. நட்பு என்பதை விட, முன்பு நான் சிறுவணிக முதலாளி. ஒரு கடை வைத்து வியாபரம் செய்துவந்தேன். விடுமுறை நாட்களில் கடையைத் திறப்பேன். `பியூட்டி ஷாப்’ அது, பலவிதமான அலங்காரப்பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்து வியாபாரம் செய்துவருவேன்.

அங்கு பொருட்கள் வாங்க வருபவர்களை விட, என்னோடு மணிக் கணக்காக  கதையளக்க சிலர் வருவார்கள்.  `கஸ்டமர்’ இல்லையென்றால் எனக்கும் பொழுது போகும் இவர்களால். அப்போது ஏற்பட்ட பல நட்புகளில் இவரும் ஒருவர். பெயர் மல்லிகா.

அவரும் ஒரு சிறுதொழில் வியாபாரிதான். அவரின் பொருட்கள், ஒரு பிரபலமான `டைரக்ட் சேலிங்’. அப்பொருட்களைக் கொண்டு வந்து என் கடையில் கொடுத்து விற்பனை செய்யச்சொல்லி தொல்லை கொடுத்த வண்ணமாக இருப்பார். ஒரு நாள், ``சரி விற்றுக்கொடுக்கிறேன், ஆனால் பணம் உடனே கொடுக்க முடியாது, வியாபாரம் ஓடினால் தான் தருவேன், இல்லையென்றால் பொருளை எடுத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்..” என்று எச்சரித்தேன்.

ஒரே சொற்பொழிவு மழைதான் போங்க. `தமிழர்கள் வாழ்வு, உருப்படாத நிலை, பணம் வைத்துக்கொண்டு கஞ்சத்தனம் செய்கிறார்கள். வாரி கட்டிக்கொண்டா போகப்போகிறார்கள்.! வியாபாரம் தெரியாதவர்கள். திடீர் பணக்காரர்கள், இவர்களைப் பாருங்கள், அவர்களைப் பாருங்கள். நாசமாய் போன இந்த சமூகத்தைப் பாருங்கள். என்னைப் பார், இன்னும் கொஞ்ச நாளில் நான் மெஸ் கார் வாங்குவேன், என்னைப் பார்த்து நீ ஆச்சிரியப்படுவாய். அப்போது நானே உனக்கு சாமான்களை இலவசமாகத் தந்துத் தொலைக்கிறேன்... ஆ..வூ....’ என, ஒரே பிதற்றல்.

இப்படிக் காரசாரமாகப் பேசினாலும், ஆள் படு உற்சாகமான பேர்வழி. என் கடைக்குள் நுழைந்து விட்டால், இடம் களைக்கட்டும். இதற்காகவே இவர் வருவாரா என காத்திருப்பேன். எல்லா சூழலிலும் நேர்மறையான பேச்சுதான். திட்டினாலும் சுவாரிஸ்யமான நட்பு.

இப்போது கடை இல்லை. உதவிற்கு ஆள் இல்லை மேலும் வியாபாரம் செய்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்துகொண்டேன். கடையை விற்றுவிட்டேன். அதோடு அங்கே ஏற்பட்ட சில நட்புகளும்   தொடர்பில்லாமல்  போனது. ஐந்து ஆறு வருடங்கள் ஆகியிருக்கும்.

அன்று உணவுக்கடையில் அவரைச் சந்தித்தவுடன், முதலில் எங்கேயோ பார்த்ததைப் போலத்தான்  இருந்தது, அவருக்கும் அப்படியே தோன்றியிருக்கக்கூடும், என்னையே உற்று நோக்கினார். ஆனாலும் நானே  முதலில் கண்டுபிடித்து,

`ஹாலோ பிஸ்னஸ் லேடி, மெஸ் கார் வாங்கியாச்சா?’ என்றேன்.

`ஹாய் விஜி, எப்படியிருக்கீங்க? கடை இன்னும் இருக்கா?’  என, மிகவும் அமைதியான தொனியில் கேட்டார்.

`என்ன பழைய உற்சாகமெல்லாம் காணாமல் போச்சு. பிஸ்னஸ் பெரிய அளவில் வந்துவிட்டதோ, எங்களிடம் பேசக்கூட பிடிக்கவில்லை மேடத்திற்கு..’ என கிண்டல் செய்தேன்.  முகம் வாடியது, தலை கீழே கவிழ்ந்தது. கண்கள் பனித்தன. `என்னாச்சு? அட விடுங்க, பிஸ்னஸ் என்ன பிஸ்னஸ்.. அது எல்லோருக்கு சரிப்பட்டு வராது. இப்ப என்ன செய்றீங்க அத சொல்லுங்க! ’ என்றேன்.

வாடிய முகம் வாடியபடியே.. ` பிஸ்னஸ் நல்லா வந்ததுங்க.. வேகமா உயர்ந்து வந்தேன். எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடி எல்லாமே அமோகமாக வந்தவேளையில், கடவுள் என் இருபத்தொன்று வயது மகனை எடுத்துக்கொண்டான். ஒரு கார் விபத்தில் முழுசா எம்மவனைப் பறிகொடுத்து விட்டேன். என்னிக்கு அவனை இழந்தேனோ, அன்றிலிருந்து எனக்கு எதுவுமே வேண்டாம், என் பிள்ளைதான் வேண்டும். அவன் தான் என் உயிர்.. இந்த இரண்டு வருடமா நான் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். அவன் ஒரு முறைதான் செத்தான், நான் தினம் தினம் சாகிறேன்.’ என்றார்.

என்ன சொல்ல? அந்த நிலையில் நாம் இருந்தால்தான், அதனின் வலிதெரியும், அதுவரையில், ஆறுதல் என்கிற பெயரில் காயங்களைச் சீண்டிப்பார்க்க எனக்கு எப்போதுமே இஷ்டமில்லை. பேச்சை வேறு பக்கம் திருப்பி, அட வாங்க சாப்பிடப்போகலாம் என்று சொல்லி,  அந்த பேச்சையே எடுக்காமல், அற்புதமான உணவுகளை ஆடர் செய்து, சாப்பிட்டு வந்தோம்.

பிஸ்னஸ், செய்யுங்கள். உங்களுக்கு அந்த திறமை இருக்கிறது. அது எல்லோருக்கும் வராது. என்று சொல்லி மட்டும் , விடைபெற்றேன்.    


வியாழன், செப்டம்பர் 27, 2012

விறால் மீன்

விறால் மீன் பற்றிய சில தகவல்கள்.



விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒரு மீன் கிடைத்துவிட்டாலே பெரிய வெற்றிபோல் குதூகலிப்பார்களாம். அடிக்கடி குளம், குட்டை, ஆறு, சேறு என மீன் பிடிக்க அலையும் எங்களின் சக பணியாளர் ஒருவரிடம் விசாரித்தேன். அவருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு. ஏற்கனவே நிறைய மீன்கள் பிடித்து  வந்து காரிலேயே வைத்துக்கொண்டு சிலரிடம் விற்றிருக்கின்றார். விறால் மீன்களும் இருந்தன. மலிவான விலையில்தான் கொடுத்தார். மலிவாகக் கிடைக்கிறது என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்களும் இறங்கி வந்து வாங்கிக்கொண்டார்கள். நான் வாங்கவில்லை, அதை ஆய்ந்து சுத்தம் செய்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.  மார்க்கெட்டில் வாங்கினால் அங்கேயே சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள்.

சேறு சகதியான இடங்களிலும் அழுக்கடைந்த நீர் தேக்கங்களிலும் தான் விறால் மீன் உயிர் வாழும். வயல்வெளிகளில் அதிகமாகக்கிடைக்குமாம்.

எலிகளைப்போல், நீரின் சேற்றின் உள்ளே உள்ள சில பொந்துக்களில் ஒளிந்துக்கொள்ளும் இந்த விறால் மீன், பார்ப்பதற்கு பாம்பின் தலைபோலவே இருக்கும். ஆங்கிலத்தில் பாம்பின் தலை (Snakehead) என்றே பெயர் வைத்துள்ளனர்.


சாதாரண மீன் பிடிப்பதைப்போல் விறால் மீன்களைப் பிடிக்கமுடியாது தவளையை தூண்டிலில் மாட்டிவிட்டு விறால் மீன்களைப்பிடிப்பார்களாம்.

விறால் மீன்களில் முப்பதுவகைகள் உள்ளன என்பதை கூகுளில் மூலம் தெரிந்துக்கொண்டேன்.

இங்கே மலேசியாவில் விறால் மீன்களின் விலை கிலோ முப்பத்தைந்து ரிங்கிட் (கூடலாம், குறையலாம்). பங்களாதேஷ் மற்றும் நேப்பாள் போன்ற நாடுகளில் இதனின் விலை மிகவும் மலிவாம். சர்வசாதாரணமாக வயல்களில் கிடைக்கும் இம்மீனை பிடித்துக்கொண்டு வந்து தினமும் சமைத்துச் சாப்பிடுவார்களாம். இங்கேதான் (மலேசியா) இதனை பவுன் விலையில் விற்கின்றார்கள் என ஆச்சிரியப்பட்டுப்போகின்றனர் சில வெளிநாட்டு வாசிகள்.

சேற்றில் கிடைக்கின்ற விறால் மீன்கள்தான் சுவை அதிகமாம். தற்போது சூப்பர்மர்க்கெட் மற்றும் சந்தையில் கிடைக்கின்ற விறால் மீன்கள் பெரும்பாலும் குளங்களில் வளர்க்கப்படுபவைகளாம். இவைகளில் அந்த அசல் ருசியை சுவைக்க முடியாது என்கிறார்கள்.

விறால் மீனை உயிரோடு பிடித்துவந்து தரையில் போட்டுவிட்டால், அது துடித்தாலும் நீண்ட நேரம் உயிரோடு இருக்கும் என்பதும் கேள்விப்பட்ட செய்தி.

மண் அல்லது சாம்பல் கொண்டு தூய்மையாகக்கழுவி, புளி நீரில் ஊறவைத்த பிறகுதான் சமைக்கவேண்டுமாம். இல்லையேல் குழம்பு வழவழ கொழகொழவென சுவைகுறைந்து பாழாய் போய்விடுமாம்.


பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்குமென்கிறார்கள் தமிழர்கள். விறால் மீன் குழம்பு தேன்போல் தித்திப்பாக இருக்குமென்று சிலர் சொல்வதையும் கேட்டுள்ளேன். இருப்பினும் சீனர்கள், முழு மீனை அவர்களுடைய மருந்து மூலிகைகளைக்கொண்டு அப்படியே ஸ்டீம் செய்து, சூப்’ஆக சாப்பிடுவதற்குப் பிரியப்படுவார்கள்.



சீனர்கள் மத்தியில் இதனின் சூரணம் மிகவும் பிரபலம். பதனப்படுத்தி பாட்டல்களில் அடைக்கப்பட்ட விறால் சூப் அதிக விலையில் விற்கப்படுகின்றன. மீன் கிடைக்காத போது அல்லது இவ்வகை குளத்து ஆற்று மீன்களை விரும்பிச்சாப்பிடாதவர்கள், அல்லது சைவம் மட்டும் உண்பவர்கள் உடல் நலம் கருதி, இதனின் சூப்’ஐ மட்டும் வாங்கி குடித்துக்கொண்டு, மீன் சாப்பிட்ட முழு திருப்தியில் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விதைத்துக்கொள்கின்றனர்.


ஆஸ்த்மா வியாதி உள்ளவர்கள், அடிப்பட்டு தையல் போட்டவர்கள், குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், அறுவைசிகிச்சை செய்தவர்கள், பெரிய வெட்டுக்காயம் உள்ளவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள் போன்றோர், விறால் மீன்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புண்கள் விரைவாக ஆறும் நோய்கள் குணமாகும் என்கிற நம்பிக்கை பரவலாக இருப்பதால், இந்த விறால் மீன் சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இருப்பினும் இக்கூற்று அனைத்தும் உண்மைதானா என்பதனை ஆதாரப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக இன்னமும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கின்றது எனபதும் கூடுதல் தகவலே.