வியாழன், அக்டோபர் 18, 2012

மிகவும் பிடித்த ப்ளாக்

எழுத்தாளர் சாருவின் அறிமுகத்தால் பல தமிழ் எழுத்தாளர்களைக் கண்டு கொண்டேன். அவ்வரிசையில் புதிதாக அறிமுகமானவர் கவிஞர் கலாப்பிரியா

இன்று காலையிலேயே கலப்பிரியா அவர்களின் ப்ளாக்’ஐ வலம் வந்துக்கொண்டிருந்தேன். அவரைப்பற்றிய தேடலில், அவர் follow பண்ணும் ப்ளாக்’குகளைக் கண்ணுற்றேன். அங்கே என்னை அதிகம் கவர்ந்த ஒரு வித்தியாசமான வலைப்பூவைப் கண்டவுடன் மனம் குதூகலித்தது.

அற்புதமான இனிய கானங்களின் இசைத்தொகுப்புகள் அடங்கிய ப்ளாக் அது. ஞானவெட்டியான் திண்டுக்கல் அவர்கள் தேர்ந்தெடுத்த செவிக்கினிய பாடல்கள்

இதுபோனறதொரு தொகுப்பைத்தான் நான் பலநாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். அதைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் உடனே பாடல்களைக் கேட்கத்துவங்கிவிட்டேன். 

என்ன இனிமையான பாடல்கள் அனைத்தும். நாமே முயன்று தேடினாலும் கிடைக்காது இதுபோன்றதொரு இசைக் கலவை. முதல் பாடலே என்னைத்தாலாட்டிச்சென்றது..

பாடல்களுக்கு இசையமைப்பதில் அறுபது எழுபதாம் ஆண்டு சினிமா இசைமேதைகள் முத்திரை பதித்ததுவிட்டுச்சென்றுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கலாகாது. நான் இந்த பூமியில் பிறக்காத காலகட்டமாக அவைகள் இருப்பினும், அக்காலக்கட்ட பாடல்களே என்னை அதிகமாக ஆக்கிரமிக்கின்றன.

எங்களின் காலகட்டமான எண்பதாம் ஆண்டுப்பாடல்களில் ஒரு வித சோர்வு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், பலமுறை கேட்ட பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒலியேற்றி சலிப்பை ஏற்படுத்தி விட்டனர் வானொலி நிலையத்தினர்.

அறுபதாம் எழுபதாம் ஆண்டுப்பாடல்களை முற்றாக புறக்கணித்த நிலையில் இன்றைய வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன (மலேசிய சூழலில்). அப்படித்தேன்றும் ரசிகர்களுக்கு இந்த ப்ளாக் புத்துணர்வைக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

கேட்டுப்பாருங்கள் நீங்களும் மயங்கிவிடுவீர்கள். முதல் பாடலே...

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்...



செவிக்கினிய பாடல்கள்

புதன், அக்டோபர் 17, 2012

அன்புள்ள....

நீண்ட நாட்களுக்குப்பிறகு
ஒரு கடிதம் எழுதினேன்..

பள்ளியில் படித்ததைப்போல்
அப்பா தமது உறவுகளுக்கு எழுதச்சொன்னதைப்போல்
பக்கத்து வீட்டுப்பையன்
எனக்காக எழுதிய காதல் கடிதம்போல்
கண்மணி அன்போடு காதலன் எழுதும் லெட்டர் போல்
காதலிகளுக்கு காதலர்கள் எழுதி அனுப்பிய கடிதம்போல்
அவருக்கு நான் எழுதியது போல்
அக்காவிற்கு வந்த சர்ச்சைக் கடிதம்போல்
வெறும் உதட்டுச்சாயத்தால் முத்தமிட்டது போல்
இரத்தத்தால் எழுதியதுபோல்
எழுதி கண்ணீரால் அழித்ததைப்போல்


பெயர்
முகவரி
தேதி
வணக்கம்
அன்புள்ள நீ ....
நாங்க நலம். நீங்க நலமா?
இடையில் நிற்க; என்கிற சொல்லும் மறவாமல்..

இதுவரைதான் பழயபாணி
அதற்குப்பிறகு?

மனதில் வந்த அனைத்தையும் எழுதினேன்
கொட்டித்தீர்த்தேன்,
எழுதிக்கொண்டே அழுதேன்
நிறுத்தினேன்..
வேதனையைச் சொன்னேன்
வேண்டாமென்றேன்
வேண்டுமென்றேன்
கிடைக்காது, நிலைக்காது என்றேன்
ஏமாற்றத்தின் சீற்றம்
இச்சையாகி கொச்சையாகி
பீடிகையோடு பல கேள்விக்குறிகள்..
தொடர்ந்தேன்
ஒன்று இரண்டு மூன்று போதாது என்றேன்
உன்னையும் நொந்தேன்
என்னையும் நொந்தேன்
இடையில் ஒரு கவிதையையும் நுழைத்தேன்
சிறிய உதாரணமாக ஒரு விளக்கமும் அங்கே
அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டேன்
போதவில்லை போதவில்லை
மனம அமைதியடையவில்லை
இன்னும் இன்னும் என்னன்னமோ
கிறுக்கினேன்..
கண்ணம்மா வந்தாள்
கலீல் ஜிப்ரான்
மைக்கெல் எஞ்சலா
கம்பர் காளிதாசன் கண்ணதாசன்
நீயும் அங்கே
யார் யார் என்று..
புரிந்தும் புரியாமலும்..
எனக்கே ஒன்றும் விளங்காமல்
என்னையே அவை குழப்பியதால்
ஒரு ஹைக்கூ’வை எழுதி
முற்றுப்புள்ளி வைத்தேன்..

இப்படிக்கு,
அன்புடன் உன் விஜி
மற்றவை நேரில்.

முடித்துவிட்டேன்,  
கடிதம் எங்கே?





திங்கள், அக்டோபர் 15, 2012

புதிதாக புரிவதற்கு ஒன்றுமில்லை

புழு நெளியும் ரவையில்
புதிய உப்புமாவா?

வண்டு மொய்க்கும் அரிசியில்
ஆத்தாவுக்கு கூழ்..?

காம்புகள் காய்ந்த
கனிகள் என்ன
பறி(ழ)க்கப்படாததோ?

நுணி உடையா
வெண்டை
பிஞ்சாகுமா?

தேன் தீர்ந்த மலரில்
இன்னும் என்ன இருக்கு
உதிரும் இதழ்களைத்தவிர..!?

புகைப்போட்ட கனியின்
சுவையும் ருசியும்
நம்(பிக்)கையில் இல்லை

செவுல் கறுத்த செத்த மீன்
கடல் நீரை
முத்தமிட்டு நாளாகியிருக்கலாம்..

களையிழந்த கண்களையாவது
பதுக்கி வை
ஒளியற்ற ரகசியங்களை
வெளியே சொல்கின்றன..


ஞாயிறு, அக்டோபர் 14, 2012

அனுபவங்கள் பேசுகின்றன

இன்றைய தினக்குரலில் வெளிவந்துள்ள எனது வாசகர் கடிதம் - அனுபவங்கள் பேசுகின்றன

இன்றைய சூழலில், நவீன பாணியில் பல விதமான எழுத்துகள் சிறுகதைகள் போலவே வந்துவிட்டன. குறிப்பாக, அனுபவங்கள் பேசுகின்றன என்கிற பகுதியில் வாசகர்களின் கைவண்ணங்கள் அனைத்தும் அற்புதமான சிறுகதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. போட்டிகளில் சேர்த்துக்கொள்கின்ற கதைகளை விட வாசகர்கள் தங்களது அனுபவங்களைக் கதைகளைப்போல அற்புதமாகச் சொல்லி வருவதைப் படிக்கின்றபோது வியப்பாகவே இருக்கின்றது. நல்ல முயற்சி. இது தொடரவேண்டும். ஐம்பது வெள்ளி சன்மானம் பெரிதேயல்ல. வாசகர்களின் எழுத்துப்பயிற்சியை ஊக்குவிக்கின்றது இப்பகுதி. இவைகளைக் குட்டிக்கதைகளாக்க் கூட தொகுக்கலாம், காரணம் அனைத்தும் உண்மை நிலவரங்களைச் சொல்லும் அற்புதக் கதைகள்.   

அப்பகுதியை விடாமல் வாசித்து வருகிறேன். ஆனந்தி ஆறுமுகம், ஆசுகவி கே.எஸ்.மணியம், நேசமணி, ஆர்.லோகநாதன், பாரதிசெல்லம்மா மற்றும் பலரின் அனுபவங்கள் அனைத்தும் அற்புதமான சிறுகதைகள். எழுத்துகள், வர்ணனைகள் போன்றவைகள் கொஞ்சம் குறைவாக இருப்பதால் அவைகளை சாதரணமாக எடைபோட்டுவிடவே கூடாது. தற்போது உலக அளவில் பிரபலமாகப் பேசப்படும் சிறுகதைகள் அனைத்தும் இந்த வடிவில்தான் உள்ளன. பிரபல ஆங்கில எழுத்தார்கள் எழுதும் பாணி இது. நாம்தான் இக்கருவில் கூடுதல் வர்ணனைகளை நுழைத்து, நடப்பது, நிறபது, நகர்வது, ஊர்வது, பறப்பது, சுழல்வது என நீட்டிமுழக்கி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். அப்படிச்சொன்னால்தான் அது சிறுகதை என்கிற வட்டத்திற்குள் நிற்கும் என நினைத்துக்கொண்டு, இதுபோன்ற வர்ணனைகளற்ற நிஜக் (சிறு) கதைகளை சிறுகதை பட்டியல்களில் சேர்த்துக்கொள்ளாமல் புறந்தள்ளுகிறோம்.

நவீன பாணி கதைகள் என்றால்; அது, இதுபோன்ற கதைகளே. வாழ்கிற வாழ்வை கூர்ந்து நோக்கினால், நிகழ்கின்ற அனைத்துச் சம்பவங்களும் சிறுகதைகளே. இனியும், இப்படித்தான் சிறுகதைகள் இருக்கவேண்டுமென்று யாருமே வரையறுக்கவேண்டியதில்லை. நம் கண்முன் நிகழ்வதை அப்படியே எழுதவேண்டியதுதான். தேவை மொழியாற்றல் மட்டுமே. அதில் கூடுதல் கவனம் செலுத்தினால் நாம் எல்லோரும் எழுத்தாளர்களே. கதைகள் எதைப்பற்றி, எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கதைசொல்வது மட்டுமே கதையல்ல என்கிற புரிதல் அவசியம்.

சென்ற வாரம், போட்டிக்கதைகளின் வரிசையில் இடம்பெற்றிருந்த டாக்டர் ஜி.ஜான்சனின் `எதிர்வினை என்கிற சிறுகதையும் இதே பாணிதான். கதையில் கூடுதல் தகவல்களை வலுக்கட்டாயமாக நுழைக்கவேண்டுமென்றால், மருந்துகளின் பட்டியல்களையும், மருத்துவத்துறையின் சிக்கல்களையும், குவிகின்ற நோயாளிகளின் தன்மைகளையும் குணாதிசயங்களையும், கிளினிக் சூழலையும், தாதியர்களின் நிலைப்பாடுகளையும் சொல்லி நீட்டி முழக்கியிருக்கலாம். 

ஆனால், அக்கதை கணக்கச்சிதமாக மிக எளிமையாக மலர்ந்து, மருத்துவத்துறையில் ஏற்படுகிற சிறிய சிக்கலைக் களைத்து, வாசகர்களுக்கு தெளிவைக் கொடுத்துச்சென்றது. என்னைப்பொருத்தவரை இதுதான் எழுத்து. எளிமையான ஆரம்பம், அழகான நடை, ஒரு சின்ன திருப்பம், தெளிவான முடிவு. (மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால், இதைப்பற்றிய அலசல்கள் ஆராய்ச்சிகள் இன்னும் தொடரலாம். ஆனால் சிறுகதைக்கு இந்த சின்ன `ட்டுவிஸ்ட்போதுமானது.)    

எனக்குத் தெரிந்தவரை, கடந்த பத்து ஆண்டுகாலமாக, நம்நாட்டு அனைத்து பத்திரிகைகளில் பிரசுரமாகும் சிறுகதைகள், வாசக எழுத்தாளர்களின் எண்ண ஓவியங்கள், கட்டுரைகள், கவிதைகள் என விடாமல் வாசித்து விமர்சனம் செய்பவர் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்கள் மட்டுமே. பெரிய எழுத்தாளர், மருத்துவர் என்கிற பேதமெதுவும் இல்லாமலும், நல்ல விமர்சகராகவும், யார் மனதையும் காயப்படுத்தாத அற்புத மனிதராகவும், நல்ல இலக்கிய ஆர்வலராகவும், அதேவேளையில் நல்ல இலக்கிய மருத்துவராகவும் (பல வருடங்களாக மருத்துவ கேள்வி பதில் அங்கத்தில் விளக்கம் சொல்பவர்) இளகிய மனம்படைத்தவராகவும், இரக்க்குணமுள்ளவராகவும், பல அறிஞ்ர்களின் (குன்றக்குடி அடிகளார்) நேரிடையாக ஆசி பெற்றவருமாகிய, பந்தாபகட்டு இல்லாத தன்னடக்கவாதியாகவும், திறந்த பன்மொழி வாசிப்பு பழக்கமுள்ளவராகவும், நாவலாசிரியராகவும், நல்ல வழிகாட்டியாகவும் எனக்கு நல்ல நண்பராகவும், குருவாகவும் நான் காண்கிறேன் அவரை. இதுவே அவரின் தனிச்சிறப்பும் கூட.

மருத்துவத்துறையின் மர்மங்களைச்சொல்லும் `உடல் உயிர் ஆத்மாஎன்கிற நாவல், மலேசிய மண்ணில் மட்டுமல்லாது உலக இலக்கியத்திலும் முத்திரை பதித்தவிட்ட அவ்வற்புத நாவலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் ஜி.ஜான்சன் தான். தொடரட்டும் எழுத்துப்பணி. இன்னும் அதிகம் படைக்கவேண்டுகிறேன்.

நன்றி தினக்குரல்..

வெள்ளி, அக்டோபர் 12, 2012

ரகசிய மைக் (குட்டிக்கதை)

“விக்கி, என்ன திடீரென்று போலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள்?” முன் வாசலின் வழியே நுழைந்த விக்கியை வழிமறைந்து விவரம் கேட்டாள் சுதா.

“ என்னது போலிஸ் வந்ததா? ஏன்? நீதான் உள்ளே இருக்க, என்னைக்கேட்டால், எனக்கு எப்படித்தெரியும்!” விவரம் தெரியாத விக்கி, மேலும் விஷயத்தை அறிய ஆவலாய், நடையைத் தளர்ந்தி அங்கேயே நின்றான்.

“நான் கேள்விப்பட்டேன், ஸ்டோரில் சில திருட்டு வேலைகள் நடக்குதாம்.  திருட்டுத்தனமாக சில பொருட்கள் லாரிகளில் ஏற்றுகிறார்களாம். நூறு ஏற்றும் இடத்தில் நூற்றியொன்றாக ஏற்றப்படுகிறதாம்.” சுதா விளக்கினாள். விலையுர்ந்த மின்சாரப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. ஒரு பொருளே ஆயிரக்கணக்கான விலையில் விற்கப்படுபவை..

முகம் வெளிற.. “அட அப்படியா? எப்படி சொல்றே,” கேள்விக்குறியோடு மேலும் விவரமறிய காத்திருந்தான் விக்கி.

“நான் கேள்விப்பட்டேன்?”

“கதை விடாதே, போலிஸ் வந்தால் வேறு எதாவது ரீசனா இருக்கலாம்... நீ இருக்கியே, நல்லா கிளப்பி விடு..!”

“அய்யோ, நிஜமாலும் விக்கி. போலிஸுடன் சேகரும் வந்திருந்தார்..”

“சேகருமா..?” அதிர்ந்தான் விக்கி. சேகர் அங்கே நிருவியுள்ள செஃக்யூரிட்டி நிறுவனத்தின் முதலாளி.

“ஆமாம், இல்லேன்னா எனக்கு எப்படி விஷயம் தெரியப்போவுது.!” பீடிகையோடு தொடர்ந்தாள் சுதா.

“சேகர் சொன்னாரா?”

“ஆமாம்!?”

“ என்னன்னு?”

“முதலில் போலிஸில் இருந்து இருவர் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் பூனைப்படை போல், பெரிய பிஸ்டோலை கையிலேயே ஏந்திக்கொண்டிருந்தார். மற்றொரு போலிஸ்காரர் முழுக்கைச்சட்டை போட்டிருந்தார். இரண்டு கைகளிலும் நிறைய ஸ்டார்கள் குத்தப்பட்டு இருந்துச்சு. முகம் அப்படியே தங்கப்பதக்கம் சிவாஜி கணக்கா, உர்ர் என்றிருந்தது.!”

“ஓ..நீட்டுக்கை சட்டை போட்ட போலிஸ் ஆபிஸ்ரா? அப்போ, பெரிய ஆள்தான் வந்திருக்கணும்..”

“அவர்கள் வந்தவுடன், நம்ம எம்.டி இறங்கிவந்தார், பிறகு உங்க போஸ், எங்க போஸ் இருவரும், போலிஸ்காரர்கள் என எல்லோரும் மீட்டிங் ரூம்மிற்குள் போனார்கள். அதன் பிறகுதான் சேகர் வந்தார்.., தனியாளாக அதுவும் நம்மவராக இருப்பதால், அவரிடம் என்ன சங்கதி என கேட்டேன், முதலில் சொல்லவில்லை, `இது கம்பனியின் ரகசியம், யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்கள், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்’ என்று உங்களின் டிப்பார்ட்மெண்டில் நடக்கின்ற திருட்டு வேலைகளைச் சொன்னார்.”

“யார் செய்யறா திருட்டு வேலைகளை? ஒருவேளை புதுசா வந்த காண்ட்ரெக்ட் காரனுங்க சிலர் செய்யறானுங்களோ..!? எப்படி கண்டுபிடிப்பானுங்க? சாட்சி வேணுமில்ல.!?” எதையோ நியாயப்படுத்துவதைப்போல் இருந்த விக்கியின் பேச்சை இடைமறித்தாள் சுதா.

“ஏய், என்ன ராசா, என்னமோ நீ திருட்டுவேலைகளைச் செய்வதைப்போல் இருக்கே உன் பொறுப்பற்ற பேச்சு. நீ இன்வல்ஃவ் பண்ணலன்னா விடு.. செய்தி கேட்டதிலிருந்து அரண்டுப்போயிருக்கே, என்ன சங்கதி.?”

“அப்படியெல்லாம் இல்லெ சுதா. நான் தானே அங்கே சூப்பர்வைசர். எதாவது பிரச்சனன்னா என்னைத்தானே கொடைவார்கள்.”

“யார் செய்யறான்னு பாரு, அவர்களைக் காட்டிக்கொடு..!”

“அவ்வளவு ஈசியா? மாட்டிக்கிற மாதிரியா செய்வானுங்க..!?”

“அதான் சில ரகசிய சி.ஐ.டி டெக்னிக்’குகளை பொருத்தப்போகிறார்களாமே..ஸ்ஸ்..” என்னமோ உளறியதை நினைத்து, உதட்டைக் கடித்துக்கொண்டாள் சுதா.

“என்ன டெக்னிக்?.. என்னமோ உனக்குத் தெரியுது, ஆனா சொல்லமாட்டேங்கிற இல்லே.., சரி விடு, விருப்பமில்லையென்றால்  பரவாயில்லை, தெரிந்ததைச் சொன்னால், உன்னைப் பற்றிய ஒரு விவரமும் என்னிடம் இருக்கு, அப்பதான் அதைச் சொல்லுவேன்..!” புதிர் போட்டான் விக்கி.

“ஐயோடா..என்னைப் பத்தி என்ன இருக்கு? நான் பாட்டுக்கு வேலைக்கு வரேன் போறேன்.. நான் என்ன திருடியா?..”

“நீ மொதல்ல அந்த சி.ஐ.டி டெக்னிக் என்னன்னு சொல்லு, பிறகு உன் கதையைச்சொல்கிறேன்..” போட்டுவாங்கினான் விக்கி.

“அது வந்து..அது வந்து.. யார் கிட்டேயும் சொல்லக்கூடாது..”

“ ச்சே..சே சொல்ல மாட்டேன், சொல்லு..”

“ ம்ம்ம்ம், சாமன்கள் ஏற்றுகிற லாரியில், யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா ஒண்ணு பூட்டியிருக்காங்களாம்.. லாரியில் ஏற்றுகிற சாமான்களை லிஸ்ட்ல உள்ள கம்பனிகளுக்கு இறக்கிய பிறகு, மீதமுள்ள பொருட்களை எங்கே கொண்டு போய் இறக்குகிறார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டும் கேமரா அது. லாரி எங்கெல்லாம் போகுதோ, அதை இங்கிருந்தே சி.சி.டீவியின் மூலம் பார்க்கலாம். திருட்டு வேலைகளைக் ஈசியா கண்டுபிடிச்சிடலாம். லாரியில் அந்த கேமரா எங்கு பூட்டியிருக்கு என்பதைக் கூட யாரும் கண்டுபிடிக்கமுடியாது, அதை அங்கே பொருத்திய டெக்னிஷன்களைத் தவிர.! இந்த விவரம் யாருக்கும் தெரியாது. அட்மின்’ல உள்ளவர்களுக்கும் சேகருக்கும்தான் தெரியும்.. சேகர் என்னிடம், நான் கேட்டுக்கொண்டதால் பகிர்ந்துக்கொண்டார். இப்போ இந்த விவரம் உனக்கும் தெரிந்து விட்டது. நம்மவர்கள் புள்ளகுட்டிக்காரர்கள், குடும்பமெல்லாம் இருக்கு, கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்னு  உன் கிட்டே சொல்றேன். கவனம், இது யாருக்கும் தெரிய வேண்டாம்...” அலுவலக ரகசியங்களை உளறிக்கொண்டிருந்தாள் சுதா. இந்த விவரம் அட்மின் நிர்வாகிகளுக்குத் தெரிந்தால், இவளின் வேலைக்கே ஆபத்து.

“ம்ம்.. இப்படியெல்லாம் நடக்குதா.. பையனுங்கள எச்சரிக்கையாக இருக்கச் சொல்லனும். எதிலாவது மாட்டிக்கப்போறாங்க..பாவம். சரி தகவலுக்கு ரொம்ப நன்றி..” கிளம்பினான் விக்கி..

“என்ன நன்றியா, அது கிடக்கட்டும், நீ என்னமோ என்னைப் பற்றிய ஒரு விஷயத்தை சொல்வதாகச் சொன்னியே, என்ன அது?, அத சொல்லாம போனே, தொலைச்சுபுடுவேன்..”

“ஓ..அதுவா, நீ போறவரவங்ககிட்ட எல்லாம், ஆபிஸ் விஷயத்தை லீக் செய்யறீயாமே..அதனால, உன் இடத்தில் ஒரு ரகசிய மைக் பூட்டியிருக்காங்களாம்... அந்த லிங்க் எம்.டி ரூம் வரை போகுதாம்.. அவர் அதை ஆன் செய்தால், நீ என்னவெல்லாம் பேசறீயோ, அது அப்படியே அங்கேயும் கேட்குமாம்.. எதுக்கும் நீயும் கொஞ்சம் ஜாக்ரதையா இரு. பாவம் புள்ளகுட்டிக்காரி. வேலையிலிருந்து தூக்கிடப்போறாங்க.. ஹிஹி..” சிரித்துக்கொண்டே இடத்தைக்காலி செய்தான் விக்கி.









RED GIANT STAR


RECENT RELEASED IMAGE OF A SPIRAL SHELL OF COSMIC DUST AND GAS SURROUNDING A RED GIANT STAR

டெலெஸ்கோப் மூலமாக வின்வெளி உலாவில் நிகழ்ந்த ஓர் நட்சத்திர வெடிப்பை சித்தரிக்கும் அரிய படம். அறிவியல் வரலாற்றுப்படம். பார்ப்பதற்கு தீபாவளி பட்டாசு போல் மிகவும் அழகாக இருந்ததால் உங்களிடமும் பகிர்கிறேன்.

கூடுதல் தகவலுக்கு

செவ்வாய், அக்டோபர் 09, 2012

அலைகரை

உன் நினைவுகள்
அவ்வப்போது வந்து வந்து மோதுகிறது
நீ என்ன கடலலையா
அல்லது, நான்தான் கரையா?