செவ்வாய், ஜூலை 03, 2012

உணவு

வாடாத
கீரையாக வாங்கி
வதங்கிய பின்
சமைத்தேன்

நடையா இது நடையா?

வருடத்திற்கு ஒருமுறை, ஜூன் மாத இறுதியில் எங்களின் அலுவலகத்தில், சீருடை மற்றும் காலணிகள் கொடுப்பார்கள். (கம்பனி யூனிஃபோர்ம்)

பெண்கள் நாங்கள் அலுவலகத்திலேயே உலவுவதால், எந்த மாதிரியான காலணிகள் வேண்டுமென்று கேட்பார்கள். இரண்டு வகைகள் உண்டு, ஒன்று ஹை ஹில்’ஸ் மற்றது சாதாரணமானது.

நான் எப்போதும் ஹை ஹில்’ஸ்தான் எடுப்பேன் ஆனால் இந்த முறை சாதாரண shoe எடுத்துக்கொண்டேன்.

சென்றவாரம் கிடைக்கப்பெற்ற அந்த காலணியை நேற்றுதான் பார்த்தேன், புதிய காலணிகள் தான் இருப்பினும் அதன் அடியில் பிளவு பட்டிருந்தது. அலுவலகத்தில் முறையிட்டேன், என் அளவு காலணி ஸ்டாக் இல்லையாம்; ஆகையால் சொந்தமாக ரிப்பேர் செய்து பயன்படுத்திக்கொள் வேறுவழியில்லை, என்று சொல்லிவிட்டார்கள்.

அருகில் உள்ள ஒரு கடையில் ரிப்பேர் செய்யக் கொடுத்தேன். பதினைந்து நிமிடத்திற்குள் செய்து கொடுத்து விட்டார்கள். 

இரண்டு ஜோடி காலணிகளையும், அதாவது ஒரு ஜோடி இப்போ நான் அணிந்திருக்கும் ஹை ஹில்’ஸ், மற்றொரு ஜோடி புதியது சாதாரணமானது.  ஹில்’ஸ் தான் வித்தியாசம், ஆனால் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரியே இருக்கும்.  இரண்டு ஜோடிகளையும் ஒன்றாக ஒரே இடத்தில் வைத்து விட்டேன்.

இன்று காலையில் காலணிகள் அடுக்கியிருக்கும் அலமாரியைத் திறந்து, கையில் அகப்பட்ட ஒரு ஜோடியை எடுத்து காரில் கடாசிவிட்டு (பெண்கள் நாங்கள், கார் ஓட்டும் போது காலணிகள் அணிவதை பெரும்பாலும் விரும்புவதில்லை) அலுவலகம் வந்துசேர்ந்தேன்.

கார் பார்க்கில் காரை வைத்துவிட்டு, காலணிகளை அணிந்துகொண்டு நடக்கையில், cat walk செய்ய முடியவில்லை, நடை ஏறி இறங்குகிறது.. என்னவென்று பார்த்தால், ஒரு பக்கம் ஹை ஹில், மற்றொரு பக்கம் சாதாரண ஷூ.!!

பாதிவழியில் கழற்றமுடியாதே, போட்டுக்கொண்டேதான் நடந்து வந்தேன். நல்ல வேளை நம்மவர்கள் யாரும் பார்க்கவில்லை; பார்த்திருந்தால் `நடையா இது நடையா, ஒரு நாடகமன்றோ நடக்குது’ என்கிற பாடலைப் பாடியிருப்பார்கள.

இன்று அலுவலகத்தில், பழய சிலிப்பர் (சண்டல்) ஒன்று ஸ்பேராக வைத்திருப்பேன், கழிவறைக்குப்போகும் பொது பயன்படுத்துவது.. அதுதான் உதவிக்கொண்டிருக்கிறது.!


திங்கள், ஜூலை 02, 2012

உடனே தோசை..

சமையல் குறிப்பு; 

சிலர் தோசை மாவு புள்ளித்தவுடன் தான் தோசை சுடுவார்கள். அதற்காக முதல் நாளே அரைத்துவைத்து மறுநாள்தான் சுடுவார்கள். 

உடனே அரைத்து உடனே புளித்து உடனே சுடவேண்டுமா? இதோ ஐடியா.. 

இதுபோன்ற ரகசிய சமையல் குறிப்புகளை பெரும்பாலும் பெண்கள் சொல்லிக் கொடுக்கமாட்டார்கள், ஆனால் நான் அப்படியல்ல.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். 

காலையில் அரிசியையும் உளுந்தையும் சுத்தமாக கழுவி, பழைய சோறு, கொஞ்சம் உப்பு, வெந்தயம் சேர்த்து சரியான அளவோடு நீர் விட்டு ஊறவைக்கவும். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியதும், ஊற வைத்திருந்த அந்த கலவையே நுரை தள்ளிய நிலையில் இருக்கும். அதை அப்படியே கிரைண்டரில் அரைந்து வைத்து விட்டால், குளித்து விட்டு, குழம்பு வைப்பதற்குள் அது பதமாகி விடும். சுடச்சுட சுட்டு, மச்சானோடு சாப்பிடவும். 


ரெடிமெட் மாவு வாங்கி தோசை சுடுவதை தவிர்க்கவும்..

Clown

வட்டமான
சதுரமான
முக்கோண வடிவில்
முட்டை வடிவில்
உர் ரென்றும்
சிரிப்பும்
புன்னகையும்
ஏளனமும்
அலட்சியமும்
கோபமாக
கோரமாக
பலமுகங்கள்
நம்மைச்சுற்றி
கோமாளி
முகமூடியோடு



மறந்துவிடவும்


என் முகம் நினைவில் இருக்கா?
மறந்து விடவும்.

நான் யார் என்று தெரிந்திருந்தால்
தயவு செய்து மறந்து விடவும்.

இன்னார் மனைவி, மகள், தாய், மருமகள் என
எப்போதாவது நான் சொல்லியிருப்பேன்..
ப்ளீஸ் மறந்து விடவும்..

என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன்..பேசினேனா?
என் குரல் கேட்டதுண்டா?
மறந்து விடவும்.

என் உயரம், எ(இ)டை, நிறம், பதவி,பட்டம்,
எதாவது உங்களுக்குத்தெரிந்திருந்தால்...
மறந்து விடவும்..

ஏதேனும் உளறல்கள், திட்டுதல்கள்,
கோபம், பந்தா பகட்டு..நிச்சயம் இருந்திருக்கும்..
மறந்து விடவும்.

நான் மறுபிறவி எடுக்கப்போகிறேன்,
எழுத்தால்,சொற்களால்..
என்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல்...

எப்போதாவது

நீருக்குள் நான் இட்ட செடி
புதிதாக ஒரு வேர் விட்ட போது.

பிடித்தவர்களின் அழைப்பு
வரும் போது..

நல்ல கவிதை வரிகள்
மனதைத் தொடும் போது..

எனக்குப் பிடித்த பாடல்
வானொலியில் ஒலிக்கும் போது..

ஒரு பூ
என்னைப் பார்த்து
கண் சிமிட்டும் போது

தொலைக்காட்சியில் இருவர்
ஆரத்தழுவி முகம் புதைக்கும் போது

காலைவேளையில்
குருவிகள் பேசும்போது

உனது
குட் மார்னிங் வரும் போது

இதில் எதாவதொன்று
தினமும் நிகழும் போது

நான் உன்னை நினைப்பேன்
எப்போதாவது..




பேசுகிறேன் பேசுகிறேன்


எங்கு இருந்தாலும்
ஜடப்பொருள்களிடம்
பேசுவதே வழக்கமாகிவிட்டது-

கடைக்குச் சென்றால்;
அந்தப் பொருளோடு

வீட்டில் இருந்தால்;
பானை சட்டி, விளக்குமாறோடு

ஆபிஸில் இருந்தால்
காகிதங்களோடு கடிதங்களோடு

காரில் சென்றால்;
முன்னே பின்னே போகிற வாகனங்களோடு


பூஜையில் இருந்தால்;
சிலையாக இருக்கும் கடவுளோடு

இப்போ கணினியின் முன்
உன்னோடு..!