வியாழன், செப்டம்பர் 27, 2012

விறால் மீன்

விறால் மீன் பற்றிய சில தகவல்கள்.



விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒரு மீன் கிடைத்துவிட்டாலே பெரிய வெற்றிபோல் குதூகலிப்பார்களாம். அடிக்கடி குளம், குட்டை, ஆறு, சேறு என மீன் பிடிக்க அலையும் எங்களின் சக பணியாளர் ஒருவரிடம் விசாரித்தேன். அவருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு. ஏற்கனவே நிறைய மீன்கள் பிடித்து  வந்து காரிலேயே வைத்துக்கொண்டு சிலரிடம் விற்றிருக்கின்றார். விறால் மீன்களும் இருந்தன. மலிவான விலையில்தான் கொடுத்தார். மலிவாகக் கிடைக்கிறது என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்களும் இறங்கி வந்து வாங்கிக்கொண்டார்கள். நான் வாங்கவில்லை, அதை ஆய்ந்து சுத்தம் செய்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.  மார்க்கெட்டில் வாங்கினால் அங்கேயே சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள்.

சேறு சகதியான இடங்களிலும் அழுக்கடைந்த நீர் தேக்கங்களிலும் தான் விறால் மீன் உயிர் வாழும். வயல்வெளிகளில் அதிகமாகக்கிடைக்குமாம்.

எலிகளைப்போல், நீரின் சேற்றின் உள்ளே உள்ள சில பொந்துக்களில் ஒளிந்துக்கொள்ளும் இந்த விறால் மீன், பார்ப்பதற்கு பாம்பின் தலைபோலவே இருக்கும். ஆங்கிலத்தில் பாம்பின் தலை (Snakehead) என்றே பெயர் வைத்துள்ளனர்.


சாதாரண மீன் பிடிப்பதைப்போல் விறால் மீன்களைப் பிடிக்கமுடியாது தவளையை தூண்டிலில் மாட்டிவிட்டு விறால் மீன்களைப்பிடிப்பார்களாம்.

விறால் மீன்களில் முப்பதுவகைகள் உள்ளன என்பதை கூகுளில் மூலம் தெரிந்துக்கொண்டேன்.

இங்கே மலேசியாவில் விறால் மீன்களின் விலை கிலோ முப்பத்தைந்து ரிங்கிட் (கூடலாம், குறையலாம்). பங்களாதேஷ் மற்றும் நேப்பாள் போன்ற நாடுகளில் இதனின் விலை மிகவும் மலிவாம். சர்வசாதாரணமாக வயல்களில் கிடைக்கும் இம்மீனை பிடித்துக்கொண்டு வந்து தினமும் சமைத்துச் சாப்பிடுவார்களாம். இங்கேதான் (மலேசியா) இதனை பவுன் விலையில் விற்கின்றார்கள் என ஆச்சிரியப்பட்டுப்போகின்றனர் சில வெளிநாட்டு வாசிகள்.

சேற்றில் கிடைக்கின்ற விறால் மீன்கள்தான் சுவை அதிகமாம். தற்போது சூப்பர்மர்க்கெட் மற்றும் சந்தையில் கிடைக்கின்ற விறால் மீன்கள் பெரும்பாலும் குளங்களில் வளர்க்கப்படுபவைகளாம். இவைகளில் அந்த அசல் ருசியை சுவைக்க முடியாது என்கிறார்கள்.

விறால் மீனை உயிரோடு பிடித்துவந்து தரையில் போட்டுவிட்டால், அது துடித்தாலும் நீண்ட நேரம் உயிரோடு இருக்கும் என்பதும் கேள்விப்பட்ட செய்தி.

மண் அல்லது சாம்பல் கொண்டு தூய்மையாகக்கழுவி, புளி நீரில் ஊறவைத்த பிறகுதான் சமைக்கவேண்டுமாம். இல்லையேல் குழம்பு வழவழ கொழகொழவென சுவைகுறைந்து பாழாய் போய்விடுமாம்.


பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்குமென்கிறார்கள் தமிழர்கள். விறால் மீன் குழம்பு தேன்போல் தித்திப்பாக இருக்குமென்று சிலர் சொல்வதையும் கேட்டுள்ளேன். இருப்பினும் சீனர்கள், முழு மீனை அவர்களுடைய மருந்து மூலிகைகளைக்கொண்டு அப்படியே ஸ்டீம் செய்து, சூப்’ஆக சாப்பிடுவதற்குப் பிரியப்படுவார்கள்.



சீனர்கள் மத்தியில் இதனின் சூரணம் மிகவும் பிரபலம். பதனப்படுத்தி பாட்டல்களில் அடைக்கப்பட்ட விறால் சூப் அதிக விலையில் விற்கப்படுகின்றன. மீன் கிடைக்காத போது அல்லது இவ்வகை குளத்து ஆற்று மீன்களை விரும்பிச்சாப்பிடாதவர்கள், அல்லது சைவம் மட்டும் உண்பவர்கள் உடல் நலம் கருதி, இதனின் சூப்’ஐ மட்டும் வாங்கி குடித்துக்கொண்டு, மீன் சாப்பிட்ட முழு திருப்தியில் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விதைத்துக்கொள்கின்றனர்.


ஆஸ்த்மா வியாதி உள்ளவர்கள், அடிப்பட்டு தையல் போட்டவர்கள், குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், அறுவைசிகிச்சை செய்தவர்கள், பெரிய வெட்டுக்காயம் உள்ளவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள் போன்றோர், விறால் மீன்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புண்கள் விரைவாக ஆறும் நோய்கள் குணமாகும் என்கிற நம்பிக்கை பரவலாக இருப்பதால், இந்த விறால் மீன் சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இருப்பினும் இக்கூற்று அனைத்தும் உண்மைதானா என்பதனை ஆதாரப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக இன்னமும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கின்றது எனபதும் கூடுதல் தகவலே.






புதன், செப்டம்பர் 26, 2012

எழுத்தாளர்களே நில்லுங்கள்....

படித்ததில் பிடித்தது

தி.ஜா ஐயாவே இப்படிச்சொன்னால், நாமெல்லாம்???

*******
எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு thija4 இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.
எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல்எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் , வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.
இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?
தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,
சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.
சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.
என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.
எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.
இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)
நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.
இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.
என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.
நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.

*********

எழுத்தாளர் தி. ஜானகிராமன், 1969 யில் எழுதிய `சிறுகதை எழுதுவது எப்படி?’ என்கிற கட்டுரை இது.  நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்று நேற்று சொல்லப்பட்டது போல், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தி வருவதுதான் இக்கட்டுரையின் தனிச்சிறப்பு.

என் மனதின் தேடலுக்கு ஒத்துப்போவதைப் போல் அமைந்த  ஓர்  அற்புதமான ஆய்வுக்கட்டுரை.  

நன்றி : அழியாச்சுடர்கள்.  

அழகான வரிகள்

மெயிலில் வந்தது. தினம் தினம் அழகழகான வரிகளைக்கொண்ட ஆங்கில தத்துவங்களை காலை வேளையில் அனுப்பி உற்சாகமூட்டிவரும் பார்த்தி. இது பார்த்தி அனுப்பிய பாப்பாத்த்தி.

நன்றி: பார்த்திபன்.

செவ்வாய், செப்டம்பர் 25, 2012

சிலவேளைகளில்....

சிகரெட் மற்றும் பலவிதமன மதுபானங்களை ஏற்றிச்சென்ற பெரிய சரக்கு லாரி ஒன்றும், இருவர் பயணித்த ஒரு காரும் சாலையில் மோதி விபத்துக்குள்ளாயின. பயங்கரமான சாலை விபத்து. காலையிலேயே பத்திரிகையின் முதல் பக்கத்தை அலங்கரித்த செய்தி அது. காரில் இருந்த இருவரும் அங்கேயே அகால மரணம். லாரி சாலையில் தடம் புரண்டதால் லாரி ஓட்டுனருக்கு கடுமையான காயம். பார்வையாளர்களும் சாலையில் பயணிப்பவர்களும் முதலுதவி செய்வதற்குப் பதில், உடையாத மதுபான பாட்டல்களையும், சிதையாத சிகரெட் பக்கெட்டுகளையும் சேகரிக்கும் மும்முரமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் புகைப்படத்தை பத்திரிகையில் போட்டு, இச்செய்கையையும் கோடிக்காட்டியிருந்தார்கள்.

%%%%%%%%%%

மும்பையில் நடந்த சம்பவமாம்.. பத்திரிகையில் படித்தேன். தமது பதினைந்து வயது மகளை, கணவன் புரிந்த கள்ளக்காதல் விவகாரத்திற்கு  சாட்சியாக, பெற்ற தாயே அழைத்துச் சென்றுள்ளார். இதைத் தாங்கிக்கொள்ளாத அந்த மகள், சாட்சி சொல்லி வீடு திரும்பியவுடன் விஷமருந்தி, தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டாளாம். . கொடுமை.

%%%%%%%%%%%%

சாலையின் செல்லுகையில், டோல் சாவடியின் அருகில் ஒரு விபத்து. கண்ணால் பார்த்த நிகழ்வு இது. குளிர்பான டின்களை பெட்டி பெட்டியாக ஏற்றிச்சென்ற லாரி அப்படியே தரம் புரண்டது. டின்கள் சாலையில் உருல்கின்றன. உடைந்த டின்களில் இருந்து பானங்கள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. உதவிக்கு வந்த  Tow Truck Service ஆட்கள், முட்டை மூட்டையாக உடந்து நசுக்கிய காலி டின்களோடு, பானங்கள் உள்ள புதிய நசுங்காத டின்களையும், குப்பைகளை அப்புறப்படுத்துதல் போல், அபேஸ் செய்துக்கொண்டிருந்தார்கள். பொதுமக்களை நெருங்க விடாமல். எப்படி கண்டுபிடித்தேன் என்றால், காலி டின்கள் கனமில்லாமல் இருக்கும் தானே..! ஆனால் இவர்கள் டின்களின் மூட்டையைத் தூக்க முடியாமல் தூக்கி, அவர்களின் டிராக்கில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.  தேன் எடுக்கச்சென்றவன் புறங்கையை நக்காமல் வருவானா என்ன.!

%%%%%%%%%%%

இன்று இண்டர்வியூவிற்கு ஒரு இளைஞன் வந்திருந்தான். அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவனுடைய அம்மாவிற்கு வயது நாற்பத்திரண்டு. எப்படி? எனக்கு மண்டையில் நண்டு ஊறுகிறது. ஒருவேளை இரண்டாவது அம்மாவாக இருப்பாரோ..!? முடியாதே, பாரத்தில் நிஜமான தாய் தந்தையர் பற்றிய தகவல்கள்தானே போடவேண்டும். கேட்கவில்லை. எதுக்கு வம்பு?

%%%%%%%%%%%%

பெண்கள் ஒன்று சேர்ந்தால் எதாவது பேச்சு வரும். இன்று ஒரு பேச்சு வந்தது எங்களுக்குள். அதாவது எங்களின் செக்கரட்டரி ஒருவள், வயதிற்குத்தகுந்த உடல் இல்லை. உடலை சின்ன பெண் மாதிரி சிக்கென்று வைத்திருப்பாள். அழகாகவும் இருப்பாள். இன்று அவளிடம் இதுபற்றி பேச்சு கொடுக்கையில், அவள் ஒரு யுக்தியை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தாள். அதாவது, நேராக நின்று, இரண்டு கைகளையும் ஒன்றாகக்கூப்பி, எவ்வளவு உயரத்திற்கு தூக்கமுடியுமோ அவ்வளவு உயரத்திற்குத் தூக்கவேண்டும். உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவேண்டும். அப்படித்தூக்கும்போது, கால்களும் நுனி பாதத்தில் நிற்க வேண்டும். இதை எங்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.  கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் எல்லாம் இதேபோல் செய்துக்கொள்வாளாம். தனியாக உடற்பயிற்சி மேற்கொள்வதைவிட இது எனக்குக் கைகொடுக்கிறது என்றாள். இதுபோல் தினமும் செய்வதால், மார்பகங்கள் கூட வயதின் காரணமாக ஏற்படும் தளர்ச்சியிலிருந்து விடுபட்டு, எப்போதுமே firm ஆக இருக்குமாம். சொல்லி வாய் மூடவில்லை, பக்கத்தில் இருந்த ஒருவள் தள்ளாடித்தள்ளாடி முயன்றுக்கொண்டிருந்தாள்.

%%%%%%%%%%%%%%%

விளக்குமாறு வாங்குவதற்குக்கூட சூப்பர் மர்கெட் தான் போகணும் போலிருக்கு. எல்லாமும் சூப்பர் மார்கெட் மயமாக இருப்பதால், அவசரத்திற்கு விளக்குமாறு வாங்கச்சென்றால், விடாதே அடிமை சிக்கிவிட்டது என்பதுபோல் அதன் விலையை இரண்டுமடங்காக ஏற்றி விற்கின்றார்கள் மளிகைக் கடைக்காரர்கள். நேற்று வாழைப்பழம் கிலோ 4.50காசிற்கு வாங்கிவந்தேன். அதே கடையில்... :((

திங்கள், செப்டம்பர் 24, 2012

மூஞ்சுறு

விரல்கள் கிடைக்காத
பொழுதுகளில்
விறகுகளை
துளையிட்டுச் செல்கின்றன
சுவையறியா
மூஞ்சுறுகள்..

ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

பாக்கியம் அக்கா மன்னியுங்கள்.

வாசகர் விழா.

பாலகோபாலன் நம்பியார் அவர்களின் தலைமையில் போர்ட் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் சென்ற ஞாயிறு, மதியம் தொடங்கி இரவு வரை மிகச்சிறப்பாக நடந்தேறிய ஒரு அற்புத விழா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.


விழாவின் கருப்பொருள் ஒழுக்கமே விழுப்பம். கருப்பொருளுக்கேற்ப, நிகழ்விலும் ஒரு ஒழுங்குமுறை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கெல்லாம்  ஒரே மாதிரியான ஆடைகள், பேச்சாளர்கள் மேடையில் முழங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம் என்கிற நேர ஒதுக்கீடு, நிகழ்ச்சி நிரல் அறிக்கையிலேயே அச்சாகி இருந்தது. சீரான வழிநடத்தல், சோர்வில்லாத அறிவிப்புப்பணி, அற்புதமான நடனங்கள். நடனங்களைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும், பிரமாண்டமான நிகழ்சிகளில் அரங்கேறும் கலாச்சார நடனங்கள் போல், முழுமையாக நடன உடைகள் ஆபரணங்கள், முக ஒப்பனைகளோடு மிக அற்புதமாக அரங்கேறிய நடனங்கள். நன்கு பயிற்சி பெற்று, குழுவாக இயங்கி, கவனங்கள் சிதறாமல், ஒரே சீராக அபிநயம் பிடித்து, நடனங்களை வழங்கி நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்த அவர்களைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. நடன  ஆசிரியருக்கு ஒரு சபாஷ் இவ்வேளையில். நமது கலை கலாச்சாரங்களை வளர்த்து வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள்  இவர்களைப்போன்ற  நல்ல  கலையார்வம் கொண்ட நடன ஆசிரியர்கள்தான். வாழ்த்துகள் ஆசிரியர்களே.


எல்லாமே இலக்கியத்தனமாக இருந்தாலும் சோர்வாகிவிடுமென்பதால், இடையிடையே பலவிதமான கலைநிகழ்ச்சிகளும் குதூகலிக்கவைத்தன.

இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ஸ்கைஃப் வழி, தமிழ் நாட்டு பிரமுகர், இலக்கியவாதி, இதழாசிரியர் கீழாம்பூர் சிவசுப்ரமணியன் அவர்களை தொடர்புக்கொண்டு சில கேள்விகளின் வழி அவர் எங்களோடு பேசியதுதான். இது எனக்கு இன்ப அதிர்ச்சி. மற்ற நிகழ்ச்சிகளில் செய்துள்ளார்களா என்பது தெரியவில்லை, ஆனாலும் இந்த முயற்சி வரவேற்கக்கூடிய ஒன்று. வெளிநாட்டுப் பிரமுகர்களை அதிக செலவில் வரவழைத்து உரையாற்றச்செய்வதை விட இப்படி ஒரு யுக்தி, புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. உலகத்தமிழர்கள்  எல்லோரும் தமிழால் ஒரே குடையின் கீழ் இணையத்தின் வழி கைகோர்த்து நிற்கின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சிதான். தொழில்நுற்ப வளர்ச்சியின் உச்சத்தைக்காட்டும் இவ்வரிய வாய்ப்பிலிருந்து மலேசியர்களான நாமும் விடுபட்டுவிடாமல் இருப்பது இன்னொரு மகிழ்ச்சியே.

அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று, இலக்கியப்பத்திரிகை நடத்தும் உங்களின் கலைமகள் இதழுக்கு யாரெல்லாம் எழுதலாம்? 

அவருடைய பதில், யாருக்கெல்லாம் தாம் சரியாக எழுதுகிறோம் என்கிற எண்ணமும், தம்முடைய படைப்பின் மீது முழு நம்பிக்கையும் இருக்கின்றதோ, அவர்களெல்லாம் தாராளமாக படைப்புகளை அனுப்பலாம். என்றார். பதில் எவ்வளவு நாசுக்காக இருக்கின்றது பார்த்தீர்களா.! எல்லோரும் நம்பிக்கையோடுதான் படைப்புகளை அனுப்புகிறோம். ஆனால் கலைமகள், நந்தவனம், தீராநதி, காலச்சுவடு, குமுதம் போன்ற தமிழ் நாட்டு இலக்கிய இதழ்களில் நமது படைப்புகள் வருவதென்பது சாதாரணமா.!?

பாலகோபாலன் நம்பியார் நிகழ்ச்சிகளை அழகாக வழிநடத்துவதில் வல்லவர். இவருக்குப்பின், அரசாங்கத்தால் பதிவுபெற்ற இவ்வாசக இயக்கத்தை சரியாக வழிநடத்துபவர் யார் என்பது தான் அன்றைய நிகழ்வில் பலரின் உள்ளகிடங்கின் கேள்விக்குறியாக இருந்தது வினா. அள்ளிக்கொடுக்கவும், நிகழ்வுகளுக்கு முதுகெலும்பாக நிற்கவும், கொடைநெஞ்சர் கிள்ளார் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் சங்கபூஷண் சித.ஆனந்தகிருஷ்ணன் எப்போதுமே இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பட்சத்தில், நிகவுகளை சரியான முறையில் வழி நடத்துவதற்கு திரு பாலகோபாலன் நம்பியாரைத் தவிர வேறொரு நபர் இன்னும் உருவாகவில்லை என்கிற அரசல் புரசல் பேச்சுகள் கூட செவிகளில் விழுந்தனவே. காத்திருப்போம். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

வாசக இயக்கங்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு காலத்தில் மலேசிய தமிழ் பத்திரிகைகளுக்கு உயிர் நாடியாகத் திழந்தவை வாசக இயக்கங்களே. எண்பதுகளில் எழுத ஆரம்பிக்கும்போது, இப்பொழுது உள்ளதுபோல் மின்னஞ்சல், பெஃக்ஸ் வசதி, குறுந்தகவல் சேவை, நினைத்தமாதிரத்தில்  பத்திரிகை ஆசிரியர்களோடு தொலைப்பேசி வழி உடையாடல் போன்ற வசதிகளெல்லாம் கிடையாது. எழுதுவோம், சென்றதா, அல்லது பாதிவழியிலேயே காணாமல் போனதா, என்பனவற்றையல்லாம்  ஆராயவே முடியாது. பத்திரிகையைப் பார்த்தால்  தான் உண்டு. அந்த காலகட்டத்தில் வாசக இயக்கங்கள்தான் இவற்றிற்கெல்லாம் பாலமாக இருந்தது.


வாசகர்களை எழுத ஊக்குவிற்பதற்கு வாசக  இயகங்கள் பெரும் பங்கு வகித்தன. குறிப்பாக எங்களின் வாசக வட்டத்தலைவர் என்று சொன்னால் அது  எம்.கே.சுந்தரம் அவர்களே . அவரின் அழைப்பின் பேரில் பத்திரிகை அலுவலகங்களுக்கும் சென்றுள்ளோம். அவரிடம் சில கடிதங்களை எழுதிக்கொடுத்து அனுப்புவோம். சும்மாலும் ஒரு காகிதத்தைக் கிழித்து, மனதில் பட்டதை எழுத்துப்பிழைகளோடு எழுதி அனுப்பினால், அதை, வாசகவட்டத் தலைவரான இவர் இன்னும் கொஞ்சம் அழகாக மெருகேற்றி, திருத்தி ,பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்ப்பார். படைப்புகள் பத்திரிகைகளில் வந்தாலே பெரிய அதிர்ஷ்டம். இந்நிலை, தொடர்ந்து எழுதுவதற்கு ஊன்றுகோலாக அமைந்தது. 

இன்னமும், அந்த காலகட்டத்தில் எழுதிய வாசகர்கள் பலர்தான்  இன்றும் எழுதி முத்திரைப் பதித்து வருகின்றனர். புதிதாக எழுத்துலகிற்கு வருபவர்கள் கொஞ்சநாளிலேயே காணாமல் போய்விடுகின்றனர். இதை மாற்றியமைக்க இன்றைய வாசக இயங்கங்கள் முன் வரவேண்டும். நமது பத்திரிகைகளும் இன்றை சூழ்லுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, குறுந்தகவல் மின்னஞ்சல் பயன்பாடுகளையும் பெரிய அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.  கணினி யுகத்தில் நாம் போட்டிபோட்டுக்கொண்டு தரமான படைப்புகளை மக்களின் பார்வைக்குக்கொண்டு வரவில்லை என்றால்,  சிறப்பானவற்றை விரும்பும் இளைய தலைமுறையினர், நம் நாட்டு எழுத்துகளை புறக்கணித்துவிட்டு இணையத்திலேயே உலா வருகிற நிலை வரலாம். நான் சொல்வது கணிப்பு அல்ல, உண்மை. நடைமுறையும் அதுவே.   இளைய சமூதாயத்தின் தாய் என்பதாலும், சிலரின் இலக்கிய ஆர்வங்களைக்கூர்ந்து கவனித்தவள் என்பதாலும்  இதைச்சொல்கிறேன். மற்றபடி யார் எழுத்தின் மீதும் காழ்ப்பு இல்லை எனக்கு.

நான் எழுதினால், அவர் எழுதக்கூடாது, அவர் எழுதினால் நான் எழுதமாட்டேன் என்கிற சிறுபிள்ளைத்தனமெல்லாம் எனக்கு எப்போதுமே வந்ததில்லை. பாக்கியம் அம்மையார் எழுத்திற்கு மறுமொழி எழுதிவிட்டேன், இலக்கிய உலகில் கருத்து மோதல்கள் சகஜம், புகைகின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயும் மூட்டி விடும் சிலரை அடையாளங்காட்டியது இந்த சர்ச்சை.  அவர், நாடு போற்றும் ஒரு நல்ல பெண்படைப்பாளி என்பதை மனதார ஏற்கிறேன். புண்படும்படி எழுதியிருந்தால் மன்னியுங்கள் அக்கா. தொடர்ந்து படைப்புகளைக்கொடுங்கள். வாழ்க வளமுடன்.


இன்றைய தினக்குரலில் வந்த எனது கட்டுரை. வாசகர் விழா விமர்சனம்

நன்றி தினக்குரல். திரு.பி.ஆர்.இராஜன்.

சனி, செப்டம்பர் 22, 2012

ராட்டினம்

நேற்று இரவு ராட்டினம் என்கிற ஒரு படம் பார்த்தேன்.. ஆஹா போட வைத்த படம். அழகான காதல் போல் காட்டி, அதை இறுதியில் நாமெல்லாம் வெறுக்கும்படி செய்துவிட்டார் அந்த இயக்குநர். அந்த முதியவரின் இறுதிக்கண்ணீர் பல கதைகள் சொலதைப்போல..அற்புதம். - ஏன் சொல்கிறேனென்றால், மனதைக்குடையும் ஒரு கதை, பொழுதுவிடிந்தும் மனதைவிட்டு அகலவேயில்லை.