புதன், பிப்ரவரி 13, 2013

இலையடி (மாமி கதை)

இது உண்மை -

மாமிக்கு, மோசமான மூச்சுத்திணறல் வந்து இழுத்துக்கோ பரிச்சிக்கோ என்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, வேலைக்காரி ஒரு ஐடியா கொடுத்தாள்.. 

மூன்று விதமான பச்சை இலைகளைக் கொண்டு, உடம்பில் அடித்தால் திணறல் நின்றுவிடும், பற்றிக்கொண்டிருக்கும் `சைத்தான்’ ஓடிவிடும் என்று. 

ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை என்கிறவர்களுக்கு... 

`இனி அடிக்கடி இப்படியாகும், இருதயமும் கிட்னியும் செயலிழக்கும் அறிகுறிகள் தெரிகிறது, பிள்ளைகள் பக்கத்தில் இருந்து அன்பாக அரவணித்துக்கொள்ளுங்கள், கொடுத்த மருந்துகளை தொடர்ந்து கொடுத்துவாருங்கள்...’ என்று ஆலோசனை வழங்கினார் மருத்துவர்.

அதன் படியே நானும் அவளும் மாமியின் அருகில் இருந்து போராடிக்கொண்டிருந்த போது அவள் இவ்வாலோசனையை வழங்கினாள்.

வெளியே சென்று வேப்பிலையை உடைத்தேன்.. மூன்று இலைகள் வேண்டாம், இந்த ஒரு இலை தான் எங்களின் தெய்வம் என்று சொல்லி கொண்டு உடைத்துவந்து..

`அம்மா, ஆத்தா வந்திட்டா.. இனி எல்லாம் சரியாயிடும் என்று சொல்லி, வேப்பிலையை உடல் முழுக்க அடித்தேன்.. அடித்தேன்.. பேய் ஓட்டுவதைப்போல்.....

என்ன ஆச்சிரியம், அப்படியே அமைதியானது மூச்சு.. சத்தமில்லாமல் சாதாரணமாக வந்தது... கைகளைப் பற்றிக்கொண்டு முத்தமிட்டார்.. `அம்மா, ஆத்தா மாரி மகமாயி என்னை காப்பாற்றிவிட்டாய் என்று...’

வேலைக்காரிக்கும் சந்தோசம்.. பாத்தியா நான் சொன்னேன் இல்லெ, அது சைத்தான்..எமன், உயிரை எடுக்கவந்திருக்கு, இலைகளைக்கொண்டு அடித்தால், ஓடிவிடும்..’ என்று பெருமைபொங்க மார்தட்டிக்கொண்டாள்.. 


இக்கதையை - வேடிக்கைபோல் நான் எழுதினாலும் அத்தருணத்தில் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.! காரணம், மரண பயம் ஒருவரிடம் குடிகொள்ளும்போது, சம்பந்தப்பட்டவரின் முகபாவனைகள் மிகக்கொடூரமாக மாறுகிறது.. நாக்கு வெளியே தள்ளும், கண்விழிகள் பிதுங்கும், குமட்டல் வரும், கை கால்கள் விரைக்கும், வேர்க்கும், நகங்கள் நீலமாகும், முகம் வெளுக்கும், எப்படி செய்தாலும் திருப்தியடையாத நிலையே வரும் அவர்களுக்கு... ஐய்யோ நான் சாகப்போறேனா என்கிற முணகல் வரும்.. பேசவேண்டும் போல் இருக்கும் ஆனால் அவர்களால் பேசமுடியாது... நம்மை தெய்வமாகப் பார்ப்பார்கள். என்னைக்காப்பாற்று என்பதைப்போல் இருக்கும் அவர்களின் பார்வை. நீ மனது வைத்தால் நான் பிழைத்துக்கொள்வேன்... நீயே தெய்வம் என்பதைப்போல் நம் கைகளை இறுக்கிப்பிடித்துக்கொள்வார்கள். பரிதாபமான நிலை இது. தேவையா. !!!

உடல் தேறி, இப்போது கொஞ்சம் சுமார். இருப்பினும் அந்த மூச்சுத்திணறல் மீண்டும் வந்துவிடப்போகிறது என்கிற பயத்தில், எல்லாமும் முடித்து, குளிப்பாட்டி கஞ்சி கொடுத்து அறையில் தூங்க வைத்துள்ளோம்.. அறையில் அவர் தூங்கினாலும் சமையலறை ஜன்னலில் இருந்து நிலைமை எப்படி இருக்கிறது.., மூச்சுவாங்குகிறதா.. உயிர் இருக்கா, நிம்மதியாக தூங்குகிறாரா.. என எட்டி எட்டி நானும் என் வேலைக்காரியும் ஒருவர் மாற்றி ஒருவர் கண்காணித்து வருகிறோம்... 

`ச்ச்சே என்ன பழக்கம் இது? படுத்துத்தூங்குகிற என்னைய எட்டி எட்டிப்பார்க்கறது..! இங்கே என்ன அவுத்துப்போட்டுக்கிட்டு ஆடறாங்களாக்கும்.. கெட்ட பழக்கம் இப்படி எட்டி எட்டிப்பார்க்கறது.. நினைக்கிறீங்களா நான் தூங்கறேன்னு, எல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. அவ (வேலைக்காரியை) என் கையால் அடி வாங்காமல் போகமாட்டாள்.. அதோட அவ இந்த வீட்ட விட்டு ஓடணும்.. நீயும் போடு ஜால்ரா.’ 

வேலைக்காரி கேட்டாள், அக்கா என்ன கோவமா யாரையோ திட்டுகிறார் பாட்டி.. என்ன கதை?
அப்படியே மொழிப்பெயர்த்தேன் இதை..

இருவரும் சத்தம் போட்டுச்சிரித்தோம். மாமிக்கு எரிச்சல் கூடிவிட்டது...

`இரு எம்மவன் வரட்டும்..’

ஹஹஹஹஹஹஹஹஹஹஹ...





சனி, பிப்ரவரி 09, 2013

ஆதாம்டீஸ்ட்


தமது ஐந்து வயது மகன் படிக்கும் பாலர் பள்ளிக்குக் காலையிலிருந்து அலைந்துகொண்டிருக்கும் தோழி, இப்போதுதான் அழைத்திருந்தாள். (படம் பார்க்கப்போகலாம் என்று ப்ளான் பண்ணியிருந்தோம் - இந்த பிரச்சனையால் அது நடக்கவில்லை..)

பள்ளியில் மகனுக்கும் (40கிலோ இருப்பான் - obesity child)  மற்றொரு மாணவிக்கும் சண்டையாம். இவரின் மகன் கோபத்தில் அந்தப் பெண் குழந்தையை எட்டி உதைத்து மிதித்துள்ளான்.

பெண் குழந்தை டீச்சரிடம் சொல்லி பிறகு தமது பெற்றோர்களிடமும் முறையிட்டுள்ளாள். நேற்றுநடந்த சம்பவம் இது. டீச்சர் அந்தப்பையனை கூப்பிட்டு மிரட்டி, ரோத்தான் அடி கொடுத்து கண்டித்துள்ளார். பையனின் பெற்றோரான என் தோழிக்கும் அவரின் கணவனுக்கும் தொலைப்பேசியின் மூலம் அழைத்துத் தகவல் சொல்லி கண்டிக்கச்சொல்லியுள்ளார்.

முடிந்துவிட்டது என்று நினைத்தால், இன்று காலையில் மாணவியின் பெற்றோர்கள் பள்ளிக்குப் படையெடுத்து டீச்சரை வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறார்கள். (சொற்போர்தான்..) போலிஸ் ரிப்போர்ட் அப்படி இப்படி என பயமுறுத்தியுள்ளார்கள்.

கலவரமடைந்த ஆசிரியை, என் தோழியையும் அவரது கணவரையும் அழைத்து பெற்றோர்கள் இருவரையும் பேசவைத்துள்ளார். குழந்தையின் அம்மா வேதனையில், `பையனைக் கண்டியுங்கள் இல்லையேல் விபரீத முடிவு எடுக்கவரும்..’ என்று எச்சரித்து திட்டியிருக்கிறார்... டீச்சரும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளார் இருவீட்டாரையும்.. (செய்யத்தான் வேண்டும்..பாலர் பள்ளிகளின் கட்டணம் அப்படி இங்கே.. பல்கலைக்கழகமாவது பரவாயில்லை)

கதை இதுதான்..!!

ஆனால் என் தோழி என்னிடம் இச்சம்பவதைச் சொல்லும்போது, தன் மகன் செய்தது நியாயம் என்பதைப்போல் சொன்னாள்.

`அந்தப் பெண் குழந்தை அவனை எப்போதும்  ஆதாம்டீஸ்ட் செய்கிறாள்.. குண்டு குண்டு.. மொட்டை மொட்டை என்றும்..’

`பெத்தவங்களுக்கு அறிவு இல்லையா? இத போய் பெரிசு படுத்திக்கொண்டு..!!!’

`அந்த அம்மாகாரி டீச்சரையே வார்னிங் செய்கிறாள்..திமிறு...’

`எங்க வீட்டுக்காரருக்கு பயங்கர கோபம்.. செய்வதற்கு எவ்வளவோ வேலை இருக்கு.. இது ஒரு பிரச்சனையா? அறிவு கெட்ட ஜென்மங்கள் (அந்த பெண்குழ்ந்தையின் தாய் தந்தையர்களை)..

`சும்மா சும்மா அவனை குண்டு குண்டு என்றால், அவனுக்குக் கோபம் வராதா?..’

`இனிமேல் எதும் பிரச்சனையென்றால்.. விவரம் பெற்றோர்களுக்குப் போகாமல் டீச்சரே செட்டல் செய்யட்டும்.. அதான் பணம் வாங்குகிறார்களே.. அது கூட செய்யமுடியாதா?’

`மிதிக்கட்டும்.. இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. (சிரிக்கிறார்)..

இதுக்கு மேல் என்னால் தாங்கமுடியாது. எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.

அடி வாங்கியது உன் பிள்ளை என்றால் அதன் வேதனை தெரிந்திருக்கும் உனக்கு!. சின்ன வயதிலேயே உம்மவனுக்கு இவ்வளவு கோபம் வருதா? நாளை ஆண்பிள்ளைகளிடம் உன் மகன் கைவரிசையைக்காட்டும் போது, எல்லோரும் சேர்ந்து மிதி மிதி என்று மிதிப்பான்கள்..அப்போது சொல்லு, பள்ளி விவரம் எனக்கு வரவேண்டாம் டீச்சர் நீயே செட்டல் பண்ணுங்க என்று..ஒகே வா? கண்டித்துவை.. சின்னப்புள்ள கணக்கா உளறாதே என்றேன்...

படம் பார்க்க என்னோடு வரமாட்டாள் - அநேகமாக. நட்பை முறித்துக் கொண்டாலும் ஆச்சிரிப்படுவதற்கில்லை.

வியாழன், பிப்ரவரி 07, 2013

வால் பகுதி

`விரால் சூப் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது, வாங்கிட்டு வாம்மா.’ என்றார் மாமி. கேட்டு இரண்டு வாரமாகிவிட்டது.

இன்று அலுவலக அருகில் இரவுச் சந்தை. இந்த விரால் விவரம் சட்டென்று ஞாபகத்திற்கு வரவே, வரும் வழியில் அச்சந்தைக்குச் சென்றேன். அங்கே நம்மவர் ஒருவர், இதுபோன்ற ஆற்று சேற்று மீன்களை கணிசமான விலையில் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் உள்ள மீன்கள் அனைத்தும் உயிருடனேயே இருக்கும்.

பெரிய வாளியில் இருந்த விரால் ஒன்றினைக்காட்டி நிருத்துபபார்க்கச் சொன்னேன்... ஒன்றரை கிலோ வந்தது. கிட்டத்தட்ட நாற்பது ரிங்கிட். நிருவையில் நிற்கவேயில்லை அந்த விரால். இங்கேயும் அங்கேயும் குதித்தது.

கையில் வைத்திருந்த ஒரு இரும்புத்தடியினால் அதன் தலையில் ஓங்கி அடித்தார். சாகவில்லை. வாய் பகுதியை ஒரே வெட்டு வெட்டினார். துடித்தது. செவுல் செதில்கள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்தார். கழுவினார். துண்டு போட ஆரம்பித்தார். முதலில் வால் பகுதியில் ஒரு துண்டு.. பிறகு தொடர்ந்து ஒவ்வொரு துண்டாகப்போட்டார் .... பையில் போட்டுக்கட்டும் வரை வால் துண்டின் அதிர்வு நிற்கவேயில்லை. துடித்துக்கொண்டே இருந்தது அந்த வால்.

வீட்டிற்கு வந்தவுடன்..

`அம்மா, விரால் வாங்கிவந்துள்ளேன், சூப் செய்யவா? சொல்லிக்கொடுங்க, எனக்குத்தெரியாது..’ என்றேன்.

வேலைக்காரி மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள்..

`அப்ப நி நாங்கிஸ்?’

`காக்கா.. நென்னே, டாரி தாடி லெமாஸ், தாங்கான் காக்கி செமுவா கெபாஸ்.. சயா தக்கூட்..’

`யா கா..! அப்ப ஜடி?’

`தாக் தாவ்வு க்கா.. பாடன் டியா புன் டிங்கின் சாங்ஙாட்.’

`ஓ..ஒகே ஒகே, ஜங்கான் நாங்ஙிஸ்...’

அறைக்குள் நுழைந்தேன்..

`யம்மா, என்னாச்சு?’

`காலையிலிருந்து ஒருத்தி வந்து என்னிய கூப்படறாம்மா.. உயரமா இருக்கா.. என்னுடைய துணியெல்லாம் துவைக்கறா... நான் வரலே’ன்னு சொல்லிட்டேன்..’

`அப்படியா, யார் அது?’

`பைடுதல்லி மாதிரி இருக்கு..’

`ஓ..’

`வீடெல்லாம் நல்லா சுத்தமா கூட்டி, மேக் ஆப் போடும்மா..!’

`ஏன்?’

`ச்ச்சே, நாளைக்கு எல்லோரும் வருவாங்கதானே.. நல்லாவா இருக்கும்..!’

`ஏன் வரணும்? யாரும் வரமாட்டாங்க...’

`ஓ..ஓவ்வ்வ்.. ஒவ்வ் எவ்வ்வ்..ல்ல்ல்ல்ல்...லலால்லா.’ என்னமோ சொல்ல வாய் எடுத்தார்.. கண்கள் சொரூகின, கைகள் நடுங்கின, அப்போது அவரின் நாக்கு .. துடித்தது.

அது, துண்டு போடப்பட்ட மீனின் வால் பகுதி துடித்ததை எனக்கு ஞாபகப்படுத்தியது..

நல்லவேளை, அம்மாவை முதியோர் இல்லத்தில் விடவில்லை. அங்கே இருந்திருந்தால், இதுபோன்ற நிலையில் யார் பேச்சுத்துணைக்கு ஆதரவாய் இருந்திருப்பார்கள்..!! பிள்ளைகள் போல் வருமா?

புதன், பிப்ரவரி 06, 2013

மாமி கதை ( சிரி சிரி)

`இது யார் வீடு?’


`இது நம்ம வீடு.’


`ஓ..அம்மா வீடா?’


`ஆமாம்...’


`நீ இங்கேயே தூங்கும்மா.. நேரமாச்சு எப்படி வீட்டுக்குப்போவ?’


`சரி தூங்கறேன்..’


`உம் புருஷன் பேர் என்னா?’


`நட்ஷணா..’


`ஓ..நட்ஷணா பொண்டாட்டியா நீ..’

`ம்ம்..’

`எங்கே அவன்?’

`தோ, இப்பதானே மேலே போனார்..’

`ஓ, நட்ஷணா, வீடு வாங்கிட்டானா?’

`ம்ம், வாங்கிட்டார்..’

`நல்லா இருப்பானம்மா, எவ்ளோ கஷடப்பட்டான்.., இவ்வளவு பெரிய வீடு இருக்குமா, அவன் வீடு..?

`ஆங்..இவ்வளவு பெரிய வீடுதான்’

`அவனையும் இங்கேயே தூங்கச்சொல்லு..’

`சரி தூங்கச்சொல்றேன்..’

வேலைக்காரியைப்பார்த்து..`அப்போ இவ எங்கே தூங்குவா?’

`அவளும் .. இங்கேயே..’

`அவ..அங்க அங்க மூத்திரம் அடிக்கறாம்மா.. ஒரே நாத்தம்.. வுவக் வாந்தி வருது..’

வாய்விட்டு சிரித்துவிட்டேன்..`ஹஹஹ..அப்படியா?’

`சிரி, நல்லா சிரி.. கிட்டவா ஒரு விஷயம்.. மனசிலேயே வைச்சுக்க....
வீட்டுக்கு யாரோ வந்தாங்க.. அவகூட ரொம்ப நேரம் பேசினா.. இரெண்டுபேரும் நல்லா படுத்து தூங்கினாங்க.. நான் கூப்பிடறது கூட கேட்கல..’

மாமி கதை (கண்ணு தெரியல)

`கண்ணு தெரியமாட்டேங்கிறது’ ம்ம்மா’

`அதான் கண்ணாடி புல்லி அனுப்பிடுச்சு இல்லே.. போட்டுக்கவேண்டியதுதானே..!’

`அத போட்டாலும் தெரியமாட்டேங்கிறது..’

`அதுக்கு, நான் என்ன செய்ய.. ?’

`ஆஸ்பித்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போம்மா.. செஃக் பண்ணீட்டு, கண்ணு உரிப்பாங்க..’

`ம்ம்..சரி சரி.. சீனப்பெருநாள் லாங் லீவு வருதில்லே, அப்போ பார்க்கலாம்..ஹ்ம்ம்’

`ஹ்ம்ம்.. ’

டீவி பார்க்கிறார்...பழைய பாடல்கள் ஓடுகின்றன..

`அது யாரு சில்க்’ஆ..? முத்துராமன் மகன் அப்படியே இருக்கான்(ர்).. ! பிகராஷ் அப்பா.. பேரு என்னாம்ம்மா...?

`ம்ம்..தியாகராஜன்..’

`ஓ.. சேகரும் இருக்கான்(ர்) ..’

`ம்ம்ம்ம்... கண்ணுதான் நல்லா தெரியுதே..!!’

`ஆஸ்பித்திரிக்கு போனாத்தான், இன்னும் நல்லா தெரியும்..!’

`எது? சினிமா நடிக நடிகர்களையா? ஹிஹி’

வியாழன், ஜனவரி 31, 2013

அடி போடி


`ஏம்மா, அவ கிட்ட ஏன் கண்டதையெல்லாம் பேசறீங்க.. அவ அப்படியே சொல்றாதானே..!’

`அய்யோ அம்மா, நான் ஒண்ணுமே சொல்லல, வந்தது வராததுமா எப்படி கோள் மூட்டறா பாரு..’

`அவ கோள் மூட்டல, நீங்க பேசியதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு ஒப்பிக்கறா..!’

`யம்மா..யம்மா.. அவ சொல்றத கேளு, என்னை நம்பாதே..இல்லெ.’

`சாதாரணமா பேசினா சிரித்துக்கொண்டு சும்மா இருக்கலாம்.. கெட்டவார்த்தையெல்லாம் பேசறா.. யார் வாத்தியாரு.. இங்கே?’

`அய்ய்யோ..அவுவு (வாயில் அடித்துக்கொண்டு).. கெட்டவார்த்தையெல்லாம் யார்’ம்மா பேசுவா? நீ ஏம்மா என்னிய நம்ப மாட்டேங்கிற..!’

`அப்போ கெட்ட வார்த்த யார் பேசறா அவ கிட்ட இங்கே.. இன்னிக்கு ஒரு வார்த்தை சொன்னா.. தெரியுமா?’

`நீ நல்லா எடங்கொடு, அவ என்னிய ஏய்க்கிறா.. மரியாதை கொடுக்கமாட்டேங்கிறா..அதான் திட்டினேன்..’

`அதுக்குன்னு கெட்ட வார்த்தையா?..’

`அது என்ன கெட்ட வார்த்தையா?’

`...... இது கெட்ட வார்த்தை இல்லையா?’

`அது நான் சொல்லல..’

`பின்னே..?’

`டீவி’ல சீரியல் பார்க்கறா என் கூட, அதில் வந்த வார்த்தையா இருக்கும்.. அத சொல்லுவா.. அத போய் பெரிசு படித்திக்கிட்டு.. போம்ம்மா..’

`ஓ.. டீவி’ல சென்சார் இல்லாம இந்த வார்த்தைகளெல்லாம் பேசறாங்களா..!!? நான் சீரியல் பார்ப்பதில்லை.. இருங்க, பேப்பருக்கு எழுதி.. வாரு வாருன்னு வாரறேன்.. இப்படியா நாடக வசனங்களை சென்சர் இல்லாமல் ஒளியேத்தறாங்க..’

மாமி மௌனமாக என்னை நோக்கி ஒரு அலட்சியப்பார்வையை வீசினார்.. அதில், அவளிடம் பயன்படுத்திய அதே வார்த்தையோடு.. `அடி போடி......, பெரிய இவ இவ..’ என்கிற மையிண்ட் வாயிஸ் கேட்டது..

அவ்வளவு சத்தமாவா கேட்குது..!!!

செவ்வாய், ஜனவரி 29, 2013

ரோபோ..


கம்பனியில், புதிய வகை வக்கியூம் ஒன்று பார்வைக்கு வந்துள்ளது. ரோபோ வக்கியூம். பேசும். சொல் பேச்சு கேட்கும். (மருமகள் போல்)

சுத்தம் செய் என்றால், அப்படியே `டிர்ர்ர்ர்ர்’ என்று சுற்றிச்சுற்றி வேலை செய்யும் (மருமகள் போல்) போதும் என்றால் நிறுத்திவிட்டு, அதனின் இடத்திற்குச்சென்று பொருத்திக்கொண்டு.. `வேலை முடிந்து விட்டது’ என்று சொல்லி, சொந்தமாக ஆஃப் செய்து கொள்ளும்.

மீண்டும் ஒருமுறை, நீ செய்தவேலை சுத்தமில்லை என்றால், அது சுழலும் (மருமகள் போல்)
பிரச்சனை என்னவென்றால், அதற்கு ஆங்கிலம், மெண்டரீன் மற்றும் ஜப்பான் மொழிதான் தெரியும். அம்மொழிகளில் பேசினால் மட்டுமே விளங்கும்.

மேலும் தற்போது பார்வைக்கு வந்துள்ள இந்த ரோபோவிற்கு ஆங்கிலமும் தெரியவில்லை. அம்மொழியை இன்னும் சரியான முறையில் பதிவு செய்யவில்லை. அதற்கான வேலைகள் நடைபெற்றவண்ணமாக இருக்கிறது.

அங்கே வேலை செய்யும் சில மலாய்க்காரர்களுக்கு இது எரிச்சலைக் கொடுத்தது.   நம்ம ஊரில் விற்பனை செய்கிறார்கள் நம்ம மொழி இல்லையே என்று.

எனக்கும்தான்.. கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழியான என் மொழி கூட இல்லையே. :(

இன்று அந்த மிஷின் பழுதாகிவிட்டது. சில டெக்னீஷன்கள் வந்து சரி செய்துகொண்டிருந்தார்கள்.
என்ன பிரச்சனை என்று பார்த்தால், அங்கே உள்ள உள்ளூர் பணியாளர் ஒருவர், அதை அவர் மொழியில் `திட்டு திட்டு’ என்று கெட்ட வார்த்தையால் திட்டினாராம்,  அதனால்தான் என்றார். (இது டூப்பு... அடிக்கடி பேசி பேசி வேலை வாங்கினால், அது என்னவாகும்!! அது என்ன மருமகளா..!!?) -

கூடிய விரைவில் மலாய்மொழியிலும் பேசும் அந்த ரோபோ..

சில எழுர்ச்சித் தமிழர்கள் பத்திரிகையில் எழுதுவார்கள்..ரோபோவில் தமிழ் இல்லை என்று, கூடிய விரைவில் வ..ரு..ம்ம்ம்...