திங்கள், செப்டம்பர் 02, 2013

யோகா..

தொலைபேசியில்...

` ஹாலோ கலா, நீ இருக்கும் இடத்தில் யாராவது யோகா சொல்லித்தருகறார்களா?’

`ஹாஹாஹா’

`என்ன சிரிப்பு.? முன்பு அங்கு எங்கோ ஓர் இடத்தில் சொல்லித்தந்ததாக ஞாபகம்.’

`ஹாஹாஹா’

`ஏன் இப்படி லூசு மாதிரி சிரிக்கற?.. உன் மவ படிக்கிற பள்ளியில் கேட்டுப்பார்க்காலாம்..!’

`ஹாஹாஹா.’

`நிப்பாட்டும்ம்மா, இது ஒண்ணும் அவ்வளவு பெரிய காமடி இல்லை..’

`ஹாஹாஹா.’

`அங்கே ஒரு கோவில் இருக்கே..அங்கு விசாரிக்கலாம்னு நினைக்கிறேன். எப்படி. விசாரிக்கிறீயா?’

`ஹாஹாஹா.’

`அட உதவி கேட்டா ஏன் இப்படி சிரிக்கிற.? என்னிய பார்க்க எப்படி இருக்கு.?’

`ஹாஹாஹா’

`முன்பு நம்மா எல்லோரும் ஒரு மாஸ்டர்கிட்ட போனோமே, அவர் இப்போ எங்கே யோகா க்ளாஸ் சொல்லித்தருகிறார்?’

`ஹாஹாஹா’

`என் வீட்டுக்கிட்ட ஒரு சீனர் சொல்லித்தருகிறார். மாதக்கட்டணம் ரிங்கிட் மலேசியா 200. நம்ம கலையை நாம் எப்படி அவரிடம்ம்ம்..!!?’

`ஹாஹாஹா,’

`ஹூக்கும்..என்ன சிரிப்பு..?’

`நல்லா சாப்பிட்டுச்சாப்பிட்டு குண்டான பிறகு, யோகா மாஸ்டர தேடவேண்டியது.. இதுதானே நாம்.! நானும் தேடுகிறேன். கிடைத்தால் இருவரும் கலந்துகொள்வோம்..எனக்கும் உக்கார்ந்தா எழுந்திரிக்க முடியல.’

`ஹாஹாஹா..’

மக்கள் ஓசை பத்திரிகைக்கு ஒரு கேள்வி..

போகிறபோக்கில் கதை கட்டுரை எழுதிவிடலாம் ஆனால் எதிர்வினை ஆற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதனை இன்று மக்கள் ஓசையில் வெளிவந்த முனைவர் ஐயா ரெ.கார்த்திகேசு தொடுத்திருந்த எதிவிர்வினையில் கண்டுகொண்டேன். அதிர்ந்தும் போனேன். 

ஐயா, நீங்கள் ஒரு பேராசிரியர் மற்றும் மலேசிய இலக்கிய ஜாம்பவான் . இப்படியா - குளறுபடியான ஒரு எதிர்வினையைக் கொடுப்பீர்கள்..? சராசரி வாசகர்களோடு நீங்களுமா? 

தனிநபர் தாக்குதல் இல்லாமல் பொதுவான கருத்தாக வந்திருக்கவேண்டிய ஒரு எதிர்வினையில் வரிக்கு வரி பதிலடி என்கிற பெயரில் தனிப்பட்ட ஒருவரின் பெயரை இணைத்திருப்பது, வாசிப்பவர்களை சோர்வில் ஆழ்த்துகிறது.

உங்கள் தரப்பு நியாயங்களை யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அழகாகக் கோர்த்திருக்கலாமே, சம்பந்தப்பட்டவர் என்கிற முறையில் அதில் உங்களுக்கு முழு உரிமையும் பங்கும் உண்டு என்கிறபோது.!

இறுதியாக டாக்டர் சண்முகசிவா ஏன் வந்தார், இந்த கருத்துமோதலில்? எல்லாக்கதவுகளையும் மூடிவிட்டு, ம.த.எ.சங்கத்தைத் துதிபாடும் கடிதங்களாக வந்துகொண்டிருக்கிறனவே - இரண்டுவாரங்களாக.. என்னாச்சு?

சனி, ஆகஸ்ட் 31, 2013

சுதந்திரதின வாழ்த்துகள்

மலேசியாவில் குண்டர்கும்பல் நிருவகிப்பில் தமிழர்கள் முதல் நிலை என்கிற செய்தி நாடுதழுவிய நிலையில் தீப்போல் பரவி வருகிறது. 

சொந்த வீட்டைப் புதுப்பிப்பதற்குக் கூட அவர்களுக்கு பணம் செல்லுத்தவேண்டிய துர்பாக்கியம் என்று சொல்கிறார்கள். 

இரவுவிடுதி, தனிநபர் காவல், கார் இழுப்பது, மதுபாணக்கடை, வட்டிமுதலைகளில் எடுபிடிகள், போலிஸ்காரர்களின் அடியாட்கள் என பட்டியல் நீள்கிறது. 

`கைகளை’ நன்கு பயன்படுத்திக்கொண்டு இப்போது போட்டுதள்ளுகிறார்கள். எங்குபார்த்தாலும் தமிழர்கள் குண்டர் கும்பல் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுகிறார்கள் இல்லையேல் சுட்டுத்தள்ளுகிறார்கள்.

நேற்றுவேலை முடிந்து வீடுதிரும்பிய நம்ம பையன் ஒருவனின் வேனை மடக்கி விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் போலிஸ்காரர்கள். சாலையில் பார்த்தேன்.

கைகளில் பச்சை குத்தி அந்த பச்சை துரதிஷ்டவசமாக போலிஸ் தேடுகிற குண்டர்கும்பலின் சின்னமாக இருந்துவிட்டால், நீங்கள் உள்ளே வைக்கப்படுவீர்கள் இல்லையே சுட்டுத்தள்ளப்படுவீர்கள். கவனம்.!

கவலையாகத்தான் இருக்கிறது. அலுவலகத்தில் தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லி பேசிக்கொள்கிறபோது மனது வேதனைப்படுகிறது.

முகமூடிபோட்டுக்கொண்டு பல நாசவேலைகளைச் செய்தவர்கள் எல்லோரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற ஒரு நிலை உருவாகிவிட்டது.

தமிழர்களே தமிழர்களைப் பழித்துச் சொல்லுகையில் இன்னும் அதிக கோபம் வருகிறது எனக்கு.

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு தமிழர் மற்றொரு தமிழரை மலாய்க்காரகளின் மத்தியில் பழித்துக்கூறியதைக் கண்டு மனம் வெதும்பி, அவனை `நல்லா’ கேட்டேன்.

கஷ்டப்பட்டு உழைக்கின்றார்கள். உடல் கிண்ணென்று பலசாலிபோல் இருப்பான்கள். வீரன்போல் மீசையை முறுக்குவார்கள். அவர்களின் உழைப்பின் வேகம் உடம்பில் தெரியும். அவர்கள் எல்லோரும் குண்டர் கும்பலில் உள்ளவர்களாம். வாய்கூசாமல் சொல்கிறார்கள்.

இந்த நிலை யாரால்? குண்டர்கும்பலில் தமிழர்கள் அதிகம் ஈடுபடுவது எதனால்? ஏன் இந்த நிலை? என்ன இல்லை இங்கே? இப்படியெல்லாம் ஊடங்களில் கேட்டுவிட்டு, கேள்விகளோடு நிற்கிறது செய்தி..

ஐம்பத்தாறு ஆண்டுகள் சுதந்திரம் அடைந்துவிட்ட மலேசியாவில் நாங்கள்..

(தமிழர்கள்)

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

பேசலாம் இஷ்டம்போல்..

சில செய்கைகளில் நமக்கு அடக்க முடியாத ஆர்வம் வருவதென்பது இயற்கையான ஒன்று. அது மனித இயல்பும் கூட.

உதாரணத்திற்கு ரகசியம் என்று யாராவது போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுச் சென்றார்களேயானால் - அது என்னவாக இருக்கும்.? என்கிற ஆராய்ச்சியில் சில நொடிகள் நம் மனது ஈடுபடாமல் இருக்காது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.. `எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, இதெல்லாம் தேவையற்ற ஒன்று.' என்கிற வாசகத்தை அடிக்கடி உச்சரிக்கின்றவர்களாக இருப்பவர்களேயானாலும் கூட, சில விஷயங்கள் மறைமுகமாக நிகழ்கின்ற போது, தமக்குச் சம்பந்தமில்லை என்கிற உணர்வு ஆழ்மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும் கூட, அது என்ன ரகசியமாக இருக்குமென்கிற யோசனை தலைதூக்காமல் இருக்காது.

சிலருக்கு இதுபோன்ற ஆர்வம் இருப்பதற்குக்காரணம் அவர்களுக்கென்று இருக்கின்ற தனிப்பட்ட சுற்றம் நட்பு போன்ற வட்டத்திற்குள் சுவாரஸ்ய பேச்சுகள் அமையவேண்டும் என்பதற்காக சில சம்பவங்களில் கூடுதல் கவனமெடுத்து ஆராயத்துவங்கிவிடுவார்கள். இது ஒரு தவறாக செய்கை என்று சொல்வதற்கில்லை. காரணம் நல்ல சுற்றம் நல்ல நட்புவட்டம் என்று அமைகின்றபோது தைரியமாக சில கதைகள் (ஊர்கதையாக இருப்பினும்) பேசுவதில் எந்தப் பாதிப்புகளும் வராது என்று உறுதியாக நம்பலாம். அப்படி நம்புகிறபோது நமது பேச்சாகப் பட்டது பல கோணங்களில் நகரலாம்.  எடுத்துக்காட்டுக்கு;  எனது நட்புவட்டம் என்பது வேறு -  கணவரின் நட்புவட்டம், நண்பர்களின் நட்புவட்டம், சகோதரிகளின் நட்பு வட்டம், பிள்ளைகளின் நட்புவட்டம் என பலவட்டங்கள் தனித்தனியாக இயங்குகின்ற பட்சத்தில், ஒருவருக்குகொருவர் சந்தித்து உரையாடுகிற சமையத்தில், அவரவர் வட்டத்துப்பேச்சுகள் பற்றியும் சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறபோது அங்கே பலரின் கதைகள் பேசப்படுவது இயல்பான ஒன்று. தவிர்க்கமுடியாத ஒன்றும். சாடல் சொல்லாடல்களாகவும் அது விரியும்.

`எனக்கு யார்கதைகளைப் பற்றியும் பேசப்பிடிக்காது. நான் உண்டு என் வேலை உண்டு’ன்னு இருப்பேன்.’ என்று பீற்றிப் பிதற்றிக் கொள்பவர்களின் ஆழ்மனமாகப்பட்டது சுனாமி அடித்துக்கொண்டிருக்கும் கடல் என்றே உவமை கூறலாம்.  - நீங்கள் ஞானநிலையில் இருந்தால் - இந்த அற்ப சுகவாசியின் கருத்தை ஒரு பொருட்டாகக் கருதத்தேவையில்லை. நிஜமாலுமே நீங்கள் ஊர்கதைகள் பேசா கேளா ஆசாமிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவே நீங்கள் சாதாரண ஆள் என்றால், சராசரி நிலையில் உள்ள என்னோடு கைகுலுக்கிக்கொள்ளுங்கள்.  நாமெல்லாம் ஒரு ஆள்.

யாரிடமும் எதுவுமே பகிராமல் இருக்கின்ற ஆசாமிகளுக்குக் கதைகளே இருக்காது. கதைகளோ செய்திகளோ இல்லாத ஒரு ஆள் மனநோயாளி போல் நடந்துகொள்வான். இப்படி இருக்கின்றவன் யாரிடம் என்ன பேசுவான்? பழம்பெருமைதான் அவனின் கதைகளாக இருக்கும். பழம்பெருமை பேசி மகிழும் மனிதனிடம் நிகழ்காலச்சிறுமைகள் மளிந்து கிடக்குமென்று ஒரு வாசகம் படித்தேன் புத்தகத்தில். இது நிஜமும் கூட.  இன்றைய நவீன காலகட்டமென்பது முன்புபோல் அல்ல, கூட்டுக்குடும்பம், அண்டையையலார் என நல்லுரவு பேணி அளவளாவி மகிழ்வதற்கு.  நல்லது கெட்டது முன்பைவிட அதிக அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற காலகட்டமிது. கூடி பேசுவதற்கு ஆள் இல்லாமல், எல்லாவற்றையும் சல்லடை செய்து பேசி, தாம் பொதுவில் உயர்ந்த மனிதன் என்கிற பறைசாற்றலை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தில் தனிமையில் தனிமனிதன் மனநோயாளியாய் உழன்று தம்மைத்தாமே  தீர்த்துகட்டிக் கொள்வதற்கும் தயாராகி விடுகிறான்.

நான் மேல் நிலை மனிதன். மேல் தட்டு வாசி. உயர் பதவி வகிப்பவன் என்கிற நிலையிலும் சிந்தனைப்போக்கிலும் உலாவருபவர்கள் கூட, யாரிடமாவது தூது அனுப்பியாவது சில விவரங்களைச் சேகரித்து முழுகதைகளையும் அறிந்துவைத்திருப்பார்கள். நம்மைவிட இன்னும் அதிக அளவில் ஊர் உலக விவரங்கள் (பக்கத்துவீட்டுப் பெண்ணின் கள்ளக்காதல் முதற்கொண்டு)  தெரிந்திருக்கும் அவர்களுக்கு. மனித இயல்பு இதுதான். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கின்றது.!

எனக்குத்தெரிந்த உயர் பதவி அதிகாரி ஒருவருக்கு சினிமா கிசுகிசுக்கள் அத்துப்படி. இரண்டு எழுத்து சினிமா படத்தில் நடித்த முன்று எழுத்து நடிகையும், நான்கு எழுத்து நடிகரும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஆறு எழுத்து இயக்குனரின் சிபாரிசில், ஏழு செய்தார்கள்...என்று எழுதியிருந்தால், அதான்.. இது இது.. இவரு... இந்தக்கதைதான் என்று மிகச் சரியாகக் கண்டுபிடித்து சொல்லிவிடும் ஆற்றல் கொண்டவர் இவர். இதில் மட்டும் ஆற்றல் உள்ளவர் அல்லர், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டியிலும்  மிகக் கெட்டிக்காரத்தனமாக செயல்பட்டு வெற்றி வாகை சூடும் திறமையும்  கொண்டவர்தான் அவர்.. கவனித்தீர்களா, இதுபோன்ற தீர்க்கப்பார்வை உள்ளவர்கள் தெளிந்தநிலை அறிவாளிகளாகத் திகழ்கின்றார்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சிலரை நாம் பார்த்தோமென்றால் நமக்குத்தேவையில்லாத காரியம் இது என்று சொல்லிவிட்டு, ஜாடை மாடையாக துருவித்துருவி சில விவரங்களை வாங்க சதா நமக்கு தொலைபேசி  அழைப்பு விடுத்தவண்ணமாக இருப்பார்கள். கதை அங்கேயும் இங்கேயும் அலைமோதினாலும் `ஆங்.. கேட்க மறந்துட்டேன்...’ என்கிற பீடிகையோடு அழைத்ததன் நோக்கத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். நாம்தான் உளறுவாயாச்சே, எதாவது சொல்லப்போக, விஷயங்களைத் திரட்டிய திருப்தியில், `தேவையா இது நமக்கு? ஊர் கதை எதுக்கு? வேலைவெட்டி இல்லாதவர்கள் செய்கிற காரியம் இவையெல்லாம்..’ என தம்மை விடுவித்துக்கொள்கிற எச்சரிக்கையில் விலகிச்செல்வதைப்போல், நழுவிவிடுவார்கள். இவர்களை அடையாளங்காண்பது மிகச்சுலபம். தொலைபேசியில் அழைக்கின்றபோது அதைத்துண்டித்துவிடுவதுதான் நாம் செய்கிற நல்ல செய்கை.

முகநூல் அரட்டைகள்கூட சிலரை அடையாளங்காட்டிவிடும். எழுத்துவடிவில் கருத்துப்பகிர்தல் நிகழ்ந்தாலும், அமைதியாய் சிலரின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிற கருவி இந்த முகநூல்.  என் தேடல் ஆர்வத்திற்கு வடிகாலாக முகநூல் அமைந்துவிட்டதால் நான் தினமும் செல்வேன் அங்கே. அங்கு நிகழ்கின்ற கூத்துகள் கொஞ்சநஞ்சமா.? சிலர் நான் முகநூல் வருவதில்லை. அங்கே நிகழும் வெட்டி அரட்டைகள் படு போர். தேவையா? தினமும் எதாவது எழுதிகொண்டு மொக்கை போடுகிறார்கள் அதற்கும் ஆயிரதெட்டு லைக்குகள் கமெண்டுகள்... என்று, அவைகள் பிடிக்காததுபோல் காட்டிக்கொண்டாலும், தினமும் அங்கே நடக்கின்ற அக்கப்போர்கள் அனைத்தையும். அக்கு அக்காகச் சொல்லி தமது மனப்புழுங்களை வெளிக்கொணர்வார்கள். நாமாவது கணினிமுன் இருக்கின்றபோது கொஞ்சம் ஈடுபாடு காட்டிவிட்டு, பிறகு அதை ஒருபொருட்டாகவே கருதாமல் நமது அன்றாட நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபடத்துவங்கிவிடுவோம். ஆனால் இவர்களோ, நான் போகவில்லை, நான் முகநூலை மூடிவிட்டேன், எல்லாம் போலி, யாருக்கும் ஒழுக்கமில்லை, நேர்மையில்லை.. ஆச்சா போச்சா.. என்று தாண்டுவார்கள், இருந்தபோதிலும் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். என்ன ஒரு வெக்ககேடு இது.!

அதற்கு எல்லாவற்றிலும் சமநிலைநோக்கோடு இருந்துவிட்டுப் போகலாம். வாழ்வாவது சுவாரஸ்யமாக இருந்து தொலைக்கும்.

என்னைச்சுற்றி இருக்கின்ற தோழிகளுடன் பேசிவிட்டு வந்தால், அது சுவாரஸ்யமான பிறர்கதைகளே என்றாலும் அதில் குற்றவுணர்வு வராமல் பார்த்துக்கொள்வோம். தாம் செய்கிறதனைத்தும் யோக்கியம் அடுத்தவர் செய்வது எல்லாம் அயோக்கியத்தனம் என்கிற ரீதியில் நமது பேச்சு இல்லாமல், நாம் ஏற்கனவே செய்த குளறுபடிகளோடு சம்பவங்களை ஒப்பிட்டு கதைகளை நகர்த்துகின்றபோது அங்கே குற்றவுணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை. பக்குவப்பட்ட மனமுதிர்வு உரையாடலாக அது பதிவாகின்றபோது, `ஏய் எங்கேயும் உளறிவைக்காதே.. அவகிட்ட சொல்லிடாதே, போய் கேட்பியா? அம்மா சத்தியமா? சாமி சத்தியாமா? என்கிற எச்சரிகை வாசகங்களைத் தேவையில்லாமல்  உதிர்க்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

இரண்டு நிகழ்வுகள் - இரண்டும் பொடிவைத்துப் பேசப்பட்ட பேச்சாகவே இருந்தன.

என் மலாய் தோழி ஒருவளிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது - அவள் சொன்னாள், `நேரமிருந்தால் இந்தப்பக்கம் வாயேன். நோன்புப்பெருநாள் பலகாரங்கள் எல்லாம் உன் வருகைக்காகக் காத்திருக்கிறது.’, என்றாள்.

நான் உடனே, `இன்று முடியாது நானும் என் இன்னொரு தோழியும் வெளியே செல்கிறோம், வேறுநாள் பார்க்கிறேன்.’ என்றேன்.

`அடூய்ய் உனக்கு வயசாச்சுதானே? தோழிகளோடு ஊர் சுற்றுவதை இன்னும் விடலையா? நீயும் எங்கம்மாவும் ஒண்ணு. அவர் அவரின் கணவனோடு வெளியே கிளம்பும்போது பார்க்கணுமே  உடுத்தலை..!’ என்றாள்.
நான் மௌனமானேன். அம்மாவின் கணவன் என்றால் அவளுக்கு அப்பாதானே.? ஏன் இவள் அப்பா என்று சொல்லாமல் அம்மாவின் கணவன் என்கிறாள்..! யோசித்தேன், இருப்பினும் காட்டிக்கொள்ளவில்லை. குடும்ப விவகாரம். கேட்டால் எதாவது வில்லங்கமாகுமே என்று, `ஹ..ஹ’ என்கிற சத்தத்தத்தோடு முடித்துக்கொண்டேன். இருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு, என்றாவது ஒருநாள் நிச்சயம் கேட்பேன்.

இன்னொரு சம்பவம் - கம்பனியில் வேலை செய்கிற ஒருவளோடு இங்கே அண்மையில் கெந்திங் மலையில் நடந்த மிகமோசமான சாலை விபத்தொன்றைப் பற்றிப்பேசுகையில், அவள் சொன்னாள், `என் முன்னால் கணவன், என்னை அடிக்கடி இந்த மலைப் பிரதேசத்திற்குத்தான் அழைத்துச்செல்வான். எனக்குப் பிடிக்கவே பிடிக்காது, கெந்திங் என்றால் என் அம்மா விடவே மாட்டார். இதனாலேயே எனக்கும் அவருக்கும் பிரச்சனை வரும்..’ என்றாள்.  ஆ.. இன்னும் கல்யாணம் ஆகாத பெண் இவள் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன இப்படியொரு கதையைச் சொல்கிறாளே.! ` உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’ கேட்டேன். `நிச்சயதார்த்தம் ஆகி பாதியிலேயே நின்றுபோனது என் திருமணம்.’ என்றாள்.

நாம் பேசுகிற எல்லாக் கதைகளிலும் யாராவது இருப்பார்கள். அது நல்லதோ கெட்டதோ நிச்சயம் மூன்றாவது மனிதர் சூட்சமாக நம் அருகில் இருப்பார்.  ஆலோசனை என்கிற பெயரில் சில விஷயங்கள் வருகிறபோது சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவது நல்லது. காரணம் மனித உறவு என்பது, இன்றைய பகைவன் நாளைய நண்பன்,என்கிற ரீதியின் மிக விரைவாகப் பயணிக்கத்துவங்கிவிடும். நாமும் ஒரே மாதிரியாக பல ஆண்டுகள் சிந்திக்கப்போவதில்லை.

 ஆக, நல்லதை மட்டும் பேசுகிறேன் என்று ஒரு வித போலி உரையாடல் உள்ளபடியே சுவாரஸ்யமற்றது. மனமுழுக்க குப்பைகளை சுமந்துகொண்டு நாவில் மட்டும் தேன் தடவி பேசிக்கொண்டிருப்பவர்கள்தான் குள்ளநரிகள்.

அவர்களை மட்டும் அடையாளாங்கண்டு விலக்கிவிட்டால், பிரச்சனைகள் வராது. நாம் என்னவேண்டுமானாலும் பேசலாம் இஷ்டம்போல்....

        

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

தப்பித்தல்

புதிதாக அறிமுகமான தோழி ஒருவள், எனக்கு தினமும் தொ(ல்)லைபேசி அழைப்பு விடுத்து எதாவது பேசுவாள். எனக்குத் தொலைபேசியில் வளவள பேச்சுப் பிடிக்காது. சில சமையங்களில் அவளின் தொலைபேசியை எடுப்பது கூட இல்லை. அப்படி எடுத்தால் கலகலன்னு பேசுவேன், எவ்வளவு வேலையாக இருந்தாலும்.

சென்றவாரம் நானும் அவளும் வெளியே சென்றுவந்தோம். அப்படிச்செல்லுகையில், உணவருந்த ஒரு கடையில் அமர்ந்தோம். உணவு ஆடர் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்து யார் என்று பார்த்தேன்.  ஒரு இலக்கிய நண்பர் அழைத்திருந்தார். இலக்கியம் பற்றிப்பேசுவதற்கு அது, அதுவும் அந்தத்தோழியின் முன் அங்கே பேசுவது சரியாகப் படவில்லையாதலால், அழைப்பை எடுக்காமல் அழைப்புமணி நிற்கும் வரை பார்த்துவிட்டு கைப்பேசியை அடைத்துவிட்டேன்.

இக்காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்ட தோழி,

`ஏன் விஜி இப்படிச் செய்கிறீர்கள்? பாவம் இல்லையா. எதோ முக்கிய விஷயமாக இருக்கப்போகிறது, பேசுங்களேன்’ என்றார்.

`முக்கியமெல்லாம் ஒன்றும் இருக்காது. வழக்கமாக பேசுகிற நண்பர்தான். பேசலாம் பிறகு. என்ன இப்போ.!’ என்று சொல்லி எங்களின் பேச்சுக்கு வந்தோம். அவரால் என்னோடு தொடர்ந்து பேச முடியவில்லை.

`ச்சே, எடுத்திட்டு, நான் வெளியே இருக்கேன், பிறகு அழைக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே. நண்பர்களை அவமதிக்கின்றீர்களே..’ என்றாள் அலுத்துக்கொண்டு.

எப்படிச்சொல்லி புரியவைப்பது என்பதால், `சரி சரி.. பிறகு அழைப்பேன். விடுங்க விடுங்க ..’ என்று சொல்லி சாப்பிட்டுவிட்டு வீடு வந்துசேர்ந்தோம்.

அன்று சந்தித்ததிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக அவளிடமிருந்து அழைப்பே வரவில்லை.

எனக்கு ஓரளவு புரிந்தபோதிலும், இன்று மதியம் அழைத்துக்கேட்டேன்,

`என்ன ஒருவாரமாக அழைக்கவில்லை.?’

அவளின் பதில், `நீங்க பிஸியாக இருப்பீங்கன்னுதான் அழைக்கவில்லை...’  

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

மண்மண(ன)ம்

மண்மணம் கமழ்கின்ற எழுத்தே  படைப்பாளி கொடுக்கின்ற சிறந்த எழுத்தாகப்பார்க்கப் படுகிறதாம்.!!

தமிழ்நாட்டில் வட்டாரவழக்கு மொழியினை தமது கதையினில் நுழைத்து மண்மணம் கமழ படைத்து வெற்றி வாகை சூடிவிடுகிறார்கள்.

எங்களின் சூழல்? மண்மணம், முன்பு வாழ்ந்த எஸ்டேட் வாழ்க்கைதான். அது இப்போது இல்லை. இருப்பினும் வலுக்கட்டாயமாக எஸ்டேட் சூழலை நுழைத்து மண்மணம் கமழ கதை எழுதுகிறேன் என்று கற்பனைப் புனைவுகளை படைக்கின்றார்களே. சரியா?

வட்டாரவழக்கு என்கிறபோது நாங்கள் மலாய் ஆங்கில மொழியினை பேச்சுவழக்கில் கலந்துபேசுவதான ஒரு நிலையில் கதைதனை வடித்தால், அக்கதை தேர்வாகமலேயே போய்விடலாம் - காரணம் இங்கே தமிழ் மொழியில் கலப்பு என்பது அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அதற்காக - மலேசியாவில் இருக்கின்ற நாங்கள் தமிழ்நாட்டு சூழலை கற்பனை செய்து வைத்துக்கொண்டு, மண்மணம் கமழ கதை எழுதினால் அது பதினாறு வயதினிலே என்கிற சினிமா சூழலை கண்முன் நிழலாட வைத்துவிடுமே. அந்தத் தோரணையில் வந்த கதைகளை நான் படித்ததுண்டு.

நாட்டின் தற்போதைய மண்மணமாகப்பட்டது - தினசரி நடக்கின்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வே.
அதை நம் கதைகளில் நாம் வடிக்கின்றபோது, அது பலநாடுகளில் அன்றாடம் நடக்கின்ற பொது நிகழ்வாகிப்போகிறது. அங்கே மண்மணம் தெரிய வாய்ப்பில்லை.

ஆக, மண்மணம் கமழ்கின்ற கதைகள்தான் சிறந்த கதை என்கிற கருத்து புலம்பெயர்ந்து வாழ்கிற உலக தமிழர்களுக்கு பொருந்துமா?  

பலநாடுகளின் மண்மணம் - நாகரீகம் வளர்ந்துவிட்ட நிலையில் எல்லாமும் ஒரே மாதிரியாக இருக்கின்ற பட்சத்தில்.. மண்மண கதைகளை இன்னமும் எதிர்ப்பார்ப்பது சரியா? 

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

அறிவுப்பூர்வ அறிக்கை

நண்பர்களே இன்றைய தினகுரல் பக்கம் 5-ல் வந்திருக்கும் 'மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுச் சிறுகதைத் தேர்வு நிறுத்தப்படுகிறது' என்ற கட்டுரையை யாரெல்லாம் படித்துவிட்டீர்கள். அது குறித்து என நினைக்கிறீர்கள்...? Taya G Vellairoja

// பிரச்சனை என்னவென்றால் - பெண்படைப்பாளிகள் தங்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவரை `சொற்பொழிவு’ ஆற்ற அழைத்துள்ளார்கள். இது நடந்தது சென்ற மாதம் பன்னிரண்டாம் தேதி.
தலைவரின் சொற்பொழிவின் போது, பெண்களைப் பற்றிய கருத்து ஒன்றினை தவறுதலாக உளறிவிட்டார். மைக் கையில் கிடைத்துவிட்டால் உளறல் எல்லாம் சாதாரணம் இங்கே. அதாவது பெண் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குவது ஆண் படைப்பாளிகளின் பெருந்தன்மையையே காட்டுகிறது, என்று. இது தவறுதானே.? மன்னிப்பு கேட்டிருந்தால்,பிரச்சனையில்லாமல் போயிருக்கும். மன்னிப்பு கேட்கவில்லை. இது இளம் எழுத்தாள வாசகர் மத்தியில் கடுங்கண்டனத்திற்கு உள்ளானது.முகநூலிலும் விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது.
வாசகர்களான நாங்கள் இதையொட்டிய கண்டனக்கடிதங்களை வல்லினம் இணைய இதழில் பகிர்ந்திருந்தோம்.
நேற்று 15/8/2013 கிட்டத்தட்ட ஒருமாத காலங்கழித்து, எங்களின் எந்தக் கண்டனக் கடிதங்களுக்கும் பதிலடி கொடுக்கமுடியாத பட்சத்தில், தயாஜி என்கிற வாசகரின் கடித்தத்தில் இருக்கின்ற ஓரிரு வரிகளை மட்டும் எடுத்து (எழுத்தாளர்களைக் கேட்காமல் அவர்களின் கதைகளை புத்தகங்களாகப் போட்டு, விற்பனை செய்கின்றீர்களே. எழுத்தாளர்களின் ராயல்ட்டி எங்கே?).. அவர் இப்படிச்சொன்னதால் நாங்கள் எங்களின் எல்லா எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளையும் நிறுத்தப்போகின்றோம் என்று அறைகூவல் விட்டிருக்கின்றனர் ம.த.எ.சங்கம். நேற்றைய தினக்குரலில் ஐந்தாம் பக்கத்தில் வந்திருந்த அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்கநேர்ந்தால் - அறவே இலக்கியச் சார்பில்லாத சாதாரண மனிதனும் சிரிப்பான்.
யாராவது உன்னைச் சப்பானின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறை. என்பதைப்போல பக்கா பாமரத்தனமாகவே இருக்கின்றது அந்தக் கட்டுரை. //



இது ஒரு சிறுபிள்ளைத்தனமான மிரட்டல் என்று பத்திரிகைப் பதிவினைப் படித்தவுடன் புரிந்துகொண்டேன். 

இவர்கள் இவ்வளவு மோசமான அறிக்கை மன்னர்களாக இருப்பார்கள் என்று நான் கடுகளவும் யோசிக்கவில்லை. ம.த.எ.ச பெரிய ஜாம்பவான்களின் குகை என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்.

தனி நபர் ஒருவரின் சாடலைக் காரணங்காட்டி ஒட்டுமொத்த சங்க நடவடிக்கைகளையும் முடக்கநினைக்கின்ற இவர்களின் வீரம் நிஜமாலுமே மெய்சிலிர்க்கவைக்கிறது.

இது இணைய இதழ் வல்லினத்திற்கு எதிராக ஆட்களைத் (எழுத்தாளர்களை) திரட்டி, சென்றமுறை வந்துள்ள எங்களின் கட்டுரைகளுக்கு எதிர்வினையினை ஆற்றத்தூண்டும் ஒரு யுக்தி என்றே எமக்குப் படுகிறது.

வல்லினத்தில் வந்துள்ள எதிர்வினைகளுக்கு எந்த எழுத்தாளரும் தமது கருத்தினை வைக்கவில்லை என்கிற மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதங்கத்தில் - பழிவாங்க எங்களோடு இணையுங்கள் என்கிற கூக்குரல் சத்தம் மட்டும்தான் கேட்கிறது.

ஏறக்குறைய ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கின்ற இந்தக் கட்டுரை, எவ்வளவு அறிவுப்பூர்வமாக இருக்கின்றதென்று உலகமறிய .. Navin Manogaran இதை அப்படியே வல்லினத்தில் பதிவேற்றம் செய்யவும்.

என்னைப் பொருத்தவரையில், தவறோ சரியோ - சரியான பதிலடி என்பது எதிரியைக்கூட மௌனங்காக்கவைக்கும். ஆனால் இதுபோன்ற கட்டுரையை எழுதி, `இனி நீங்களெல்லாம் பேனா பிடித்து எங்களை மிரட்டுவீர்கள்..? ம்ம்ம் ஜாக்கிரதை, நாங்களும் தாதா..’ என்பதைப்போல் உள்ளது.

இலக்கிய உலகில் நடக்கின்ற மற்றுமொரு வெட்கக்கேடான செய்கை இது.