வெள்ளி, ஜூலை 20, 2012

ஒற்றை எழுத்து சொற்கள்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்



இவை எனக்கான சேமிப்பு... (நன்றி ஸ்மிலி பிரபு திருச்சி) 

வட்ட மேசை

ஒரு வார
முதல் பக்க நாளிதழ்
செய்திகளை வாசித்து
மீள்பர்வை செய்துகொண்டேன்

நாட்டு அரசியலில் நிகழும்
மாற்றங்கள் குறித்து
தெரிந்து வைத்துக்கொண்டேன்

அலுவலக அரசல் புரசல்
செய்திகளையும்
சேகரித்துக்கொண்டேன்

நாட்டு நிலவரம்
சாலை நெரிசல்
நித்தமும் நிகழும்
வாகன விபத்துகள் குறித்து
தகவல் தெரிந்துக்கொண்டேன்

போன மாதம்
மருத்தவமனையில் சேர்க்கப் பட்ட
ஜேம்ஸ்சின் நிலை குறித்து
அறிந்து வைத்துக்கொண்டேன்

கூட்டுபவர்கள்
பெருக்குபவர்களின்
பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்டேன்

என்னை சதா
`டார்ச்சர்’ செய்யும்
ஒரு மேலதிகாரியைப் பற்றிய
சம்பவங்களை மனதில்
ஓடவிட்டுக்கொண்டேன்

சுற்று வட்டார உணவகங்களின்
அறுசுவை உணவுகள் குறித்து
சில ‘பில்டாப்’கள்
செய்துவைத்துக் கொண்டேன்

இன்று
உயர் அதிகாரியோடு
சாப்பிடச் செல்கிறோம்

ஒரே மேஜையில் சாப்பிடும்போது
பேசுவதற்கு ஒன்றுமில்லாமல்
போய்விடக்கூடாதே..

அங்குதான்
அவர்
நாங்கள்
சொல்வதைக்கேட்பார்..

வியாழன், ஜூலை 19, 2012

நேற்றைய நான்

நேற்றைய நீ
இன்றைய நீயாகவே இரு
நாளைய நான்
இன்றும் இல்லை
நேற்றும் இல்லை

நேற்றைய என்னை
நீ என்ன தேடுவது?
நானே தேடுகிறேன்
பிரம்பால் அடித்து
மரண தண்டனை கொடுக்க

அங்கிருந்து தான் வந்தேன்
ஆனால், அது நான் இல்லை
கடந்து போன நாளில்
நாளும் இல்லை
நேரமும் இல்லை
நானும் இல்லை

செல்வேன் இன்னும்
பல அவதாரங்களில்
பொழுதுகளை
நாளையாக்கிக் கொள்ளும்
நேற்றைய நான்


புதன், ஜூலை 18, 2012

என்னுள் எழும் சில வினாக்கள்??

சில கேள்விகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும், அவைகள்தான் சிலவேளைகளில் உணர்வுக் கொந்தளிப்பாக  விஸ்வரூபம் எடுக்கும்.


இதோ இவைகள் :-

எல்லார் மீதும் எரிந்து விழும்போதுதான் இலக்கியவாதி என்கிற அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்கிற அற்ப சிந்தனை வருவது எதனால்?


யாருமே அவரை வாசித்திருக்கமாட்டார்கள், ஆனால் அவர் நாடுபோற்றும் இலக்கியவாதி. எப்படி?


இணையத்தில் எழுதினால் எழுத்தாளர்கள் இல்லையா?


கதை எழுதினால்தான் எழுத்தாளரா?


பேட்டி எடுக்கப்படும் இலக்கியவாதிகளிடம், அம்மாவிற்கு பிடித்தவை, மனைவிக்கு பிடித்தவை, கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்கிற கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, இலக்கியதைப் பற்றி மட்டும் பேசினால் நல்லா இருக்குமே.! இலக்கியப் புரிதல் பேட்டி கொடுப்பவரை விட, பேட்டி எடுப்பவருக்கு அவசியம்.. சரியா?


திட்டுகிறவர்களை திட்டிவிடலாம். பாராட்டுகிறவர்களை என்ன செய்யலாம்?


சினிமா பாடல்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, பேச்சின் போது இடையிடையே அதில் வரும் கருத்தினை நுழைத்துப் பேசுகிறவர்களை பெரிய இலக்கியவாதியாகப் பார்க்கப்படுவது எதனால்?


மேடையில் முழங்கிவிட்டால் பெரிய இலக்கியவாதியா?


தமிழ் எழுத்துக்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, தமிழ் பற்றில் உச்சத்தில் இருப்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறவர்களைப் பார்த்தால் எனக்கு வெறிவருகிறது. ஏன்?


நாத்திகம் பேசுகிறவர்கள் பெண்களின் நிலையை யோசித்திருக்கின்றார்களா? பெண்களால் நாத்திகம் பேசமுடியாது என்பதைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் இருந்தால், பல பெண்கள் மனநோயாளியாகியிருப்பார்கள்! யோசித்துப்பாருங்கள்!?


பரிசு பெற்ற சிறுகதை/நாடகம் ஒரு சினிமா படக் கதையின் காப்பி என்கிற கருத்தை நாம் முன்வைத்தால், ஏன் பரிசு கொடுக்கக்கூடாது!? எத்தனையோ பேர் அந்த சினிமா படத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்!! (சினிமா பார்க்க மாட்டார்களாம், இவர் எழுதிய கதை/நாடகத்தை உட்கார்ந்து கேட்பார்களாம், படிப்பார்களாம்.. இது எப்படியிருக்கு?) சரி அப்படியே சினிமா கதையாக இருந்தால் என்னவாம்!? அது போன்ற கதைகளை மீண்டும் எழுதினால் தப்பா? கதை எழுதுவது எவ்வளவு கடினமான வேலை... பேனா பிடித்து எழுதிப்பாரும், பிறகு தெரியும்!!? இப்படியெல்லாம் வெட்டியாக எழுதுபவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்பவர்களை  என்னவென்று சொல்வது?


இலக்கியத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது எது? பல இலக்கியவாதிகளிடம் கேட்கப்பட்ட கேள்வி? இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லலாம்.?  கஷ்டமான கேள்விதானே.!?


தமிழ் மொழியில் மாஸ்டர்/ பி.எச்.டி பட்டம் வைத்திருப்பவர்களுக்கு, இலக்கியப் புரிதல் வந்துவிடுமென்று நம்பலாமா? நான், ஒரு தமிழ் பேராசிரியர் ஆய்வு செய்த கதைகளைக் கவனித்தேன், அவர் ஒரு அற்புதமான கதையில் ஒன்றுமேயில்லை என்று சொல்லி ஆய்வு செய்திருந்தது  இன்னமும் எனக்கு வருத்தம்.


இலக்கியப் புரிதல் எனபது ஒரு ஜென்.. ஆன்மிகப் புரிதல் போல். வெளியே சொல்ல முடியாத ஒரு உணர்வு அது. எல்லோருக்கும் வந்து விடாது. ஏற்றுக்கொள்கிறீர்களா?


மாற்றத்தைக் கொண்டு வர முடியாத ஒரு துறை, நம் இலக்கியத்துறை (தமிழ்). வாய் சவுடால்களும் வெட்டிப்பேச்சுகளும்தான்  அதிகம் இங்கே.!?

ஏதோ முட்டாள் போல் உளறுவதாக இருந்தால், மன்னிக்கவும். என் மனதில் பட்டது.  ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள் அமைதி அமைதி...





செவ்வாய், ஜூலை 17, 2012

Geoduck (பூகோள வாத்து)


சீனா, ஹாங்காங், ஐரோப்பியா நாடுகளில் மிக பிரபலமாகப் பேசப்படும் இந்த நீர் வாழ் உயிரினத்தின் உணவு மிக சுவையானதாம். தமிழில் இதன் பெயர் எதுவாக இருக்கும் என கூகுளில் போட்டுப்பார்த்தேன், பூகோள வாத்து என்று வந்தது. அதை அப்படியே போட்டுவிட்டேன். ஆமாம் பேஸ்புக், முக நூல் என்று மாற்றம் பெறும்போது, இதையும் அப்படியே மாற்றிடலாம்  தப்பில்லை.

அதிக விலையில் விற்பனையாகும் (கிலோ அமெரிக்க டாலர் 200) இந்த நீர்வாழ் உயிரனத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதன் இனப் பெருக்கத்திற்குப் பாடுபடும் வேளையில், இதனைக் கடத்தும் வேலைகளும்  பெரிய அளவில் நடந்துக்கொண்டிருப்பதாக தகவலும் செய்தியில் பரிமாறப்பட்டுள்ளது.


இதனின் ஆயுள் நூற்றுஐம்பது வருடங்களாம். கடல்கரையோறமாக தேங்கி நிற்கும் சேற்றில் ஊறி கழுத்தை மட்டும் வெளியே நீட்டி,  நெளிந்து ஊர்ந்து வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்குமாம் இந்த நீர்வாழ்.

இதைப் பிடித்து வருகிற வேலை பேராபத்து நிறைந்ததாகவும், இதில் போடப்படும் பணமும் பெரிய அளவில்  இருப்பதால், தற்போது சீனா மட்டுமே இதன் இனப்பெருக்கத்தில்  முன்னனி வகிக்கின்றதாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கடற்படை நீர்மூழ்கிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்வாழ் உயிரினம், இப்போது பலவித உணவுகளாக மாறி உலக முழுக்க பிரசித்திப்பெற்று வருகின்றது. இதனை உணவாக வைத்திருக்கும் உணவுக்கடைகள் பெருத்த லாபத்தில் சுழன்றுக்கொடிருக்கின்றதென்கிற தகவலும் சுவாரிஸ்யமே.!


  

திங்கள், ஜூலை 16, 2012

நான் செய்த வைரம்

காலநேரம்

சிரிக்கும் நிலையில்
நான் இல்லை
நாளை வா
நகைச்சுவை சொல்ல..

%%%%

திருடா

நான் உனக்குக்கொடுத்ததும்
நீ எனக்குக் கொடுத்ததும்
எல்லாமும் எழுத்துகள்தாம்
நான் அவைகளை கவிதையாக்கிக்கொண்டேன்
அதையும் நீ திருடிக்கொள்கிறாயே...

%%%%%

நடுத்தரவர்க்கம்

சேகரித்து வைத்த
பழைய காகிதங்களை
வியாபாரியிடம் கொடுத்து விட்டு
கிடைக்கப்பெற்ற பணத்தை
மீண்டும் எண்ணி
பையிற்குள் வைக்கும்போதுதான்
தெரிகிறது, நானும் நடுத்தரவர்க்கமே.!

%%%%%

வடை பாயாசம்

அப்பாவிற்கு திவசம்
பிள்ளைகள் நாங்கள் மறந்தே போனோம்
அம்மா கோவிலுக்குச்சென்றார்
உறவுகளுக்கு வருத்தம்
`எங்கண்ணனை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.’

%%%%%%

ஜேம்ஸ் பாண்ட்

எல்லோரும்
சாகும் போது
நாமும் பிணமாகிறோம்

%%%%%

நான் செய்த வைரம்

மேலே மாட்டியிருக்கும்
செடிகளில் ஊற்றிய நீர்,
கொஞ்ச நேரங்கழித்து,
தொங்கிக்கொண்டிருக்கும் இலைகளில் தேங்கி,
கீழே சொட்டுவதற்கு தயாராகும்,
அப்போது அதன் மேல் விழும்
காலை சூரியன் மின்னும்
அதுதான் இன்று
நான் செய்த வைரம்.

%%%%%%%


காலதாமதம்

விரைவாகச் செல்லவேண்டும்
சிவப்பு விளக்குகளைக் கடக்கவேண்டும்
குறுக்குப்பாதைகள் துணைபுரியலாம்..