திங்கள், நவம்பர் 28, 2011

அப்பாவின் மரணம்

இது தான் கதை (15/7/1992)

கடுமையான மழை அன்று. மருத்துவமனை வளாகத்தில் நாங்கள் எல்லோரும்.

சித்தப்பா திட்டினார். " போங்க எல்லோரும், விட்டிற்கு, படித்த பிள்ளைகள்தானே.! பத்து நாளாக ஓயாமல் மூக்கைச் சிந்திகொண்டு.., பாவம் அம்மா, நிம்மதியே இல்லாமல் இருக்கின்றார், நீங்கள்தானே ஆறுதல் சொல்லணும் ..!  அப்பா நிச்சயம் நாளை வந்துவிடுவார், டாக்டர்கள் உத்தரவாதம் கொடுத்துவிட்டார்கள். கிளம்புங்கள் வீட்டிற்கு". சித்தப்பாவின் ஆறுதலான ஆவேஷம். 

சரி என, மருத்துவமனையை விட்டு வீட்டிற்குக் கிளம்பினோம், செல்லும் வழியில் கடையினில் காரை நிறுத்தி,  முப்பது முட்டைகளை வாங்கினோம். இரவு உணவிற்காக. வீட்டிற்கு வந்தவுடன் அதை குழம்பு வைத்தோம்..எல்லோரும் சாப்பிட்டார்கள், அதான் நாளை அப்பா வந்திடுவாரே.என்கிற நம்பிக்கைக்கீற்றுகள் துளிர்த்தவண்ணமாக!

இரவு மணி, பதினொன்று முப்பது இருக்கும், ஒரு அழைப்பு வந்தது. ஒருவாரகால தூக்கமின்மையால் எல்லோரும் விரைவாகவே உறங்கச்சென்று விட்டார்கள். அப்பா வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில்.

தொலைப்பேசி அழைப்பினை நான் தான் எடுத்தேன். மறுமுனையில் சித்தப்பாவின் குரல்.  'அப்பா தவரிவிட்டார், நாளை காலை தான் கொண்டு வருவோம், ப்ளீஸ் இப்போது இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்..அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தூங்குவார்கள், அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். அமைதியாய் இரு. செய்யவேண்டியவைகளையெல்லாம் நாங்கள் இங்கிருந்தே கவனித்துக்கொள்கிறோம். கிளம்பும்போது நான் மீண்டும் அழைக்கிறேன். பார்த்து, கவனம்..சரியா..!” 'என்கிற குண்டைத்தூக்கிப்போட்டு தொலைப்பேசியை வைத்தார். 

அமைதியாய் இருந்தேன். எதிப்பார்த்த மரணமே என்றாலும், குடும்பத் தலைவனின் மரண செய்தி அஸ்வாரத்தை ஆட்டம் கொள்ளத்தான் செய்தது. அப்பாவிற்குப்பிறகு வாழ்க்கை எப்படியிருக்கப்போகிறது என்கிற கலக்கத்தில் நான். ஐம்பத்தைந்து வயதில் மரணமென்றால், எங்களின் வயது ஏறக்குறைய இருபத்தைந்திற்கும் குறைவே..! ஏழுபேர் கொண்ட பிள்ளைகள், சித்தப்பா அத்தை அம்மா தாத்தா என ஒரு குட்டுக்குடும்பமாகவே வாழ்ந்த குடும்பத்தில் அதன் தலைவன் இல்லையென்றால்..! என்னாகுமோ.. பீதியோடு படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன் அன்றிரவு.  

அம்மாவின் குரல் மெதுவாய்... “யாரு புள்ள போன்ல?” 

“அப்பாவின் நல விசாரிப்பு அழைப்பு’ம்மா,” என்று சொல்லி சமாளித்தேன். 

“ ஓ... சரி போய்ப்படு..” என்று சொல்லிய மறுநொடி மெள்ளியதாய் ஒரு குறட்டைச் சத்தம். தூங்குகிறார்போலிருக்கு. அசதிதான்.

எல்லோரும் தூங்கினார்கள். நான் மட்டும். தூங்கவில்லை ! எப்படித்தூக்கம் வரும்!?  மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. தம்பியை உடனே வரச்சொல், என. அப்போதெல்லாம் கைப்பேசி அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. ஒவ்வொரு அழைப்பும் மருத்துவமனை பொதுதொலைப்பேசியின் மூலமாகவே வந்துகொண்டிருந்தது.

தம்பியை எழுப்பினேன். தடாபுடாவென்று எழுந்தான். கடிகாரத்தைப் பார்த்தான். என்ன.. என்ன.. என்ன? என்கிற கூச்சலோடு. உஸ்ஸ்ஸ்ஸ்.. சத்தம்போடாதே. சித்தப்பா அழைத்தார் என்கிற விவரத்தைச்சொல்லி, அப்பா இறந்துவிட்டார் என்கிற உண்மையையும் சொன்னேன். அவன் கண்களைக் கசக்கிக்கொண்டு என்னையே உர்ர் என்று பார்த்தான். கடிகாரத்தைப் பார்த்தான். மணி பன்னிரண்டு. தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மௌனமானான். அவனின் திருமண ஏற்பாடுகள் கூடியவிரைவில் செய்யப்படுவதற்கான ஆயத்தவேலைகள் வேறு நடந்துகொண்டிருந்த தருணம் அது.

அவனின் கண்கள் பனித்தன. “அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா..!?”

“ஒண்ணும் வேண்டாம், நீ கிளம்பு, விடியும்போது சொல்கிறேன்.. என்னமோ அவரசம் போலிருக்கு.. சித்தப்பா உன்னை விரைவாக வரச்சொன்னார்.”

அவன் கிளம்புகிறபோது வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது, மீண்டும் அம்மாவின் குரல்.. “ஏய், யாரு.?”

“ யாருமில்லை’ம்மா.. தம்பி வெளியே கிளம்பறான்..” சொன்னேன். அம்மா எழுந்து வெளியே வந்தார். அம்மாவின் முகத்தைப் பார்க்க மனமில்லாமல் விரைவாகக் கிளம்பிப்போனான் தம்பி.

நான், தூக்கம் வருவதைப்போன்ற பாசாங்கான ஒரு கொட்டாவியை விட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தேன்.

அம்மாவிற்கு சந்தேகம். ஏன் இந்த நேரத்தில் அவன் வெளியே கிளம்பிப்போகிறான்.! என்ன நடக்கிறது இங்கே.!? யார் அழைத்தார் உனக்கு.? அப்பாவிற்கு எதாவது ஆகிவிட்டதா? என்கிற குழப்பங்கள் எழாமல் இல்லை. முகத்திலும் ஒரு வித கலவரம் கவ்விக்கொண்டிருந்தது.

“அட, ஒண்ணுமில்லைம்மா.. தம்பிக்கு ஆயிரம் நண்பர்கள் நேரங்கெட்ட நேரம் அழைப்பார்கள்.. உங்களுக்கு ஏன் குழப்பம்..? போயிப்படுங்க.” என்று தைரியம் சொல்லிவிட்டு, அறைக்குள் புகுந்துகொண்டு மௌனமாக அழுதேன். துக்கம் தொண்டையை அடைக்க, குமட்டிக்கொண்டு வந்தது. வாந்தி எடுத்தேன். வுவக் வுவக் என்கிற சத்தம் கேட்டவுன், மீண்டும் அம்மா எழுந்துவந்தார். பால் கலக்கிக்கொடுத்தார்.

விடியற்காலையை நெருங்கியது பொழுது. மணி மூன்று இருக்கும். நான் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன் போலிருக்கிறது..! தொலைப்பேசி மணி மீண்டும் ஒலித்தது. ஏதோ ஒரு கெட்டக்கனவில் சஞ்சரித்தவள் போல், எங்கோ ஒரு மூலையில் எதோ ஒரு சாவுமணி சத்தம் கேட்பதைப்போல் இருந்ததால்.. கொஞ்சம் தாமதமாக தொலைப்பேசியை எடுக்க நேர்ந்ததால், தங்கை எடுத்துவிட்டாள் அழைப்பை. அவளின் காதிற்கு தகவல் சென்றுவிட்டது.

தொலைவில் வசித்த அம்மாவின் தங்கையின் கணவருக்கு செய்தி சென்றிருப்பதால், அவர் விட்டிற்கு அழைத்து, பிணம் எத்தனை மணிக்கு வருமென்று கேட்டுவிட்டார். அதுவும் தூக்கக்கலக்கத்தில் இருக்கும் செய்தியறியா தங்கையிடம்.!

அவள் குழப்பமாகி.. “பிணமா? யாருடையது? யார் நீங்க? என்ன பிரச்சனை? என்று பதற்றத்துடன் கேட்க. அவர் உடனே, விஷயமே தெரியாதா உங்களுக்கு? என்ன அநியாயம் இது. எங்களுக்குத்தகவல் வந்துவிட்டதே, என்று சொல்லி, நான் இரவெல்லாம் காத்து வந்த ரகசியத்தை உடைத்துவிட்டார்.

பிறகு என்ன? ஒரே கூச்சல்தான். அய்யோ அப்பா தவரிட்டாராம், அம்மா அம்மா..அக்கா அக்கா.. என்று அலற ஆரம்பித்தாள். எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன். முடியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரக்கப்பறக்க ஓடிவர... கொஞ்சநேரத்தில் திபுதிபுவென கூட்டம் வீட்டுவாசலில்.அந்தக் காலைப்பொழுதிலேயே.

காலை மணி நான்கு இருக்கும்.. அப்பா வந்தார் பெட்டியில். பிணம் என்றார்கள் எல்லோரும். 

ஆம் பிணம்தான் வந்தது. 

எல்லாம் உனக்காக

முகர்ந்து பார்த்தது
மோதிப்பார்த்தது
சீண்டி பார்த்தது
சீறியும் பார்த்தது
கத்திப்பார்த்தது..

இரண்டு மூன்று முறையல்ல
பல முறை சுற்றி
வலம் வந்தும் 
செய்வதறியாது
அமைதியாக திரும்பிச் சென்றது
பூனை...

அசைபவரிடம் 
ஆசை கொள்வது தான் 
உயிர்களின் இயல்பு(போ)!?

சிலவேளையில்
உன் முன்னே, நான்
அசைந்து கொண்டே... 
செத்த எலியாக...

உன் அமைதியான
சீண்டல் வேண்டி....!!!

வலிகளில் உதிக்கின்ற
சில கிறுக்கல்களுக்காக

அதுவும் உனக்காக....!

தத்துவம்

சரியில்லாமல் வாழ்பவர்களுக்கு, ஏற்கனவே எழுதிவைத்த தத்துவங்கள் வழிகாட்டியாக துணைபுரியலாம். 
சரியாக வாழ்பவர்களுக்கு, வாழ்வே தத்துவமாகிறது. 
சரியாக வாழ்வது எப்படி? ஏற்கனவே அனுபவமாக எழுதப்பட்ட துணுக்குகளின் உள்ளடக்கமே அது. சரி, சரியில்லாத வாழ்வு என்பது..!!!!!! நான் சேகரித்து வைத்துள்ள தத்துவக்கூறுகளின் தொகுப்பைத்தான் மீள்பார்வை செய்தாக வேண்டும், பதிலாகக் கொடுப்பதற்கு.! அப்போ, நமது வாழ்வு தத்துவங்களின் அடிப்படையில் இயங்கப்பெற்றதா? எது தத்துவம்? மேலே நான் சொல்வதுக் கூட, தத்துவமாக இருக்கலாம்:-

குழந்தை மனது

எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும்..கைக் குழந்தைகள் அல்ல.. கொஞ்சம் பேசனும் தக்கா புக்கான்னு.. 

எங்க பக்கத்து வீட்டுப்பைய்யன் மூனு வயது.. அவ்வளவு காதல் என் மேல்.. என்னைப்பார்த்துட்டா போதும், போலாம் போலாம் என அடம்பிடிப்பான் அவங்க அம்மாவிடம்..

வந்துட்டா போக மாட்டான்.. நாட்காலியின் கீழ் ஒளிந்துக்கொண்டு அழுவான்.

இப்படித்தான் ஒரு நாள், நானும் அவனுடைய அம்மாவும் காத்தார வெளியே அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது அந்தப் பைய்யன் (கோகுல்) சைக்கில் விளையாட்க்கொண்டிருந்தான். நான் துணிகளைக் காயப் போடும் ட்ரொலியின் (trolley) கீழே புகுந்துப் புகுந்து..

திடீரென்று அதில் தொங்கிக்கொண்டிருந்த சில ஹெங்கர்களை (hangers) தூக்கி தூர எரிய ஆரம்பித்தான்.. அவனின் அம்மா..ஏய் என்ன பண்ற, அண்டி (நான்) அடிக்கப்போறாங்க, என்றார்.

அதற்கு அவன் சொன்னான் (ஆங்கிலத்தில் தான்).. இதோ பாரு அம்மா, இந்த ஹெங்கர் எல்லாம் அங்கும் இங்கும் உடைந்திருக்கு அது அண்டிக்குத்தேவைப் படாது, அதான் நான் உதவி செய்கிறேன் என்றான்..

மிகுந்த அற்வாளியாய் வருவான் கோகுல். ஏன்னா ஹெங்கர்கள் உடைந்திருப்பதை நானே கண்டுப்பிடிக்கவில்லை... வேலை முடிந்தால் போதும், அப்படித்தான் நாம்.

அதான் குழந்தை மனது என்பது....!

கலகம் செய்


சொன்ன வாக்கை உடனே 
காப்பாற்றிவிட்டால்..

எதற்கும் பயமில்லாதது போல்
காட்டிக்கொண்டால்...

எதுவும் நடவாததுபோல்
அமைதிக்காத்து வருவதால்...

கோபமே வராத புத்தர் போல்
நடித்துக்கொண்டால்..

எல்லாவற்றிற்கும் ஒரு புன்னகையையே
பரிசாக தந்துவிட்டால்..

யோசித்து உருப்படியாக எதாவது
செய்யலாம் என திட்டம் தீட்டிக்கொண்டால்..

மனதில் வ(டி)ருவதற்கு, வடிதட்டு
தேடிக்கொண்டால்..

சுற்றும் முற்றும் பார்த்துப் பேசும்
பழக்கம் வைத்துக்கொண்டால்..

சிந்தித்துச் சிந்தித்து நம்மை நாமே
சின்னாப்பின்னமாகிக்கிக் கொண்டால்..

அவர் போல், இவர் போல்
என ஒப்பிடுதல் செய்துக்கொண்டால்..

பழைய புத்தகங்களைப் புரட்டி
கருத்துப் பகிர்வதால்..

பிறர் சொல்கிற பேச்சுக்கெல்லாம்
செவி சாய்ப்பதால்..

சதா பிழைத்திருத்தம்
செய்தவண்ணமாக இருப்பதால்..

அன்பு என்கிற பெயரில் ஆட்டிவைக்கும்
சிலரின் கருவியாவதால்...

அடிமைப்படுத்த விட்டு
வேடிக்கைப் பார்த்துக்கொண்டேயிருப்பதால்..

நம் பதிவுகளுக்கு
கமெண்ட்ஸ்’களை எதிர்ப்பார்ப்பதால்

அழுது அடம்பிடிக்கும்
நம்மிடமுள்ள குழந்தையை
நாம் எப்போது வெளிக்கொணர்வது?

ஞாயிறு, நவம்பர் 27, 2011

கனவுகளின் மீள்பார்வை

எனக்கு பத்து வயது இருக்கும் போது, ஒரு பாழடைந்த வீட்டுப் பக்கத்தில் உள்ள் பூச்செடியில் சாமிக்குப் பூ பறிந்து வருவேன். 

இதில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் ஒரு நாள் (அப்போது) ஒரு கனவு வந்தது..:- 

எங்க இடத்தில் ஏற்கனவே அநாதையாக இருந்து, இறந்த ஒரு கிழவியின் ஆவி அந்த வீட்டில் இருந்துக்கொண்டு, நான் பூப்பறிக்கப்போகும்போதெல்லாம் என்னையே பார்த்துக்கொண்டும்.. கனகொடூரமான குரலில் “ ஏய் நீ என் பாதையில் நடக்காதே’’..என ஓலமிட்டது பிறகு ஒப்பாரியிட்டது. கனவிலேயே அலறினேனாம், அம்மா சொன்னார்..

அதன் பிறகு நான் அந்தப்பக்கம் பூபறிக்கபோவதை நிறுத்திவிட்டேன்.!

அந்த கனவு இன்னமும் மனதில், ஏன்னா சிறுமியான எனக்கு, அப்போது அச்சம்பவம் மனதை அதிகமாகவே பாதித்திருந்த்தது.

நேற்று ஒரு புத்தகம் படிக்கும் போது, இந்த நிகழ்வு அதில் இடம்பெற்றிருந்தது.. நிகழ்வு என்பதைவிட.. கனவில் வந்த அந்த வார்த்தை என்பது சரியான விளக்கமாகக்கொள்ளலாம். (என்னன்னு சொல்ல???)

சனி, நவம்பர் 26, 2011

உறவுகள்

குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும், ஒரு முக்கிய உறவினர் ஒருவருக்கும் ஒரு பிரச்சனையில் வாக்கு வாதம் (வைச்சுக்குங்களேன்). 

அப்போ, நீ ச்சீ, நான் ச்சீ’ன்னு சண்டை போட்டுக்கொள்கிறார்கள் (வைச்சுக்குங்களேன்). 

அந்த உறவிற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை (வைச்சுக்குங்களேன்)..

இந்த நிலையில், அந்த உறவுக்காரர், நம்மை அவரின் வீட்டு வீஷேசத்திற்கு அழைத்துள்ளார், சம்பந்தப்பட்ட எங்க வீட்டு உறுப்பினரையும், பிரச்சனைகளை மறந்து ஒரு மரியாதைக்காக அழைத்துள்ளார், வற்புறுத்தவில்லை (வைச்சுக்குங்களேன்).

அப்போது நம் வீட்டில் உள்ளவர்கள் நமக்குப் போன் போட்டு நீ அந்த விஷேசத்திற்குப்போக வேண்டாம், எங்களுக்கு (ஆண்கள்) மரியாதை இல்லாத இடத்தில் உனக்கு என்ன வேலை? இப்படிச்சொல்கிறார்கள் (வைச்சுக்குங்களேன்). அப்போது உங்களுக்குக் கோபம் வருமா வராதா?

இவர்களாய் வாய் கொழுத்துப்போய் வீன் சண்டை போடுவார்களாம். நாம், நமக்கு நம் குடும்ப கௌரவம்தான் முக்கியம், நானும் பகைத்துக்கொள்வேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?

இன்று விரோதியாக்கிகொண்டு, நான் ’உம்ம்’ ‘உஹும்’ என்றால், எங்க வீட்டுக் குஞ்சு குசுமாளங்கள் எங்கும் நகர மாட்டார்கள் என காண்பிப்பதற்காக, தற்காலிகமாக மீசையை முறுக்கிக்கொண்டு (மீசை இல்லை, ஒரு உதாரணம்) நாளையோ அல்லது நாளை மறு நாளோ எங்கேயாவது ‘தண்ணீ’ போட்டுக்கொண்டு பல்லைக்காட்டி உட்கார்ந்திருந்தால் என்ன பண்னுவது? இது நிச்சயம் நடக்கும் ஏன்னா, இங்கு யாருக்கும் கொள்கை என்பது கிடையாது.

அதனால நான் போவேன்.. காரணம் நான் ஒருவரோடு பகைத்தால், ஒரு நகைப்போடு நட்போடு ஒதுங்கிக்கொள்வேன்..... (இவனுங்க ஒரேடியா பிணைவார்கள் பின்னே சண்டை போட்டுக்கொள்வார்கள். அப்பறம் பார்த்தா, சேர்ந்துக்கிட்டு கும்மியடிப்பானுங்க.. தெரியாத பின்ன)

இது தேவையா?