வியாழன், டிசம்பர் 29, 2011

கருணை காட்டு

மக்கள் ஓசையில் வந்தது.. 2007

ஏய்
விவஸ்தைகெட்ட
வெயிலே..

என் கண் முன் வந்து நிற்காதே
உன் வருகைக்காகக் காத்திருக்கும்
மென்மையான மலர் அல்ல
நான்.!

காலையில்
கண்ணெதிரே தோன்றி
சாலையை இருளடையச் செய்து
என்னை அலைக்கழிக்க வைப்பதில்
உனக்கென்ன அப்பேர்பட்ட மகிழ்ச்சி!?

தங்கப்பல்லைக் காட்டி
இளித்து நிற்கும் உன்
பிரகாசத்தை
அவசர யுகத்தில்
அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் ரசிக்க முடியவில்லை..

ஒரு நொடி அசந்திருப்பின்
உன் ஒளிக் கதிர் தாக்குதலால்
ஓர் உயிரைக் கொன்று
எம பாதகியாயிருப்பேனே!

பழி பாவத்திற்கு அஞ்சி
கெஞ்சிக்கேட்கும்
எனக்குக் கருணைக் காட்டு..

கொஞ்ச நேரம் மேகத்திற்குள்
ஒளிந்துக்கொண்டு
வழிவிடு சூரிய பகவானே
நான் வேலைக்குப் போகணும்.

மனிதன் இல்லை-நோய் பயமுமில்லை

H1N1 பயங்கரம் பற்றிய அறிவிப்பு எங்கு பார்த்தாலும். எங்க ஆபிஸிலும் அறிக்கைகள், முக மஸ்ஃக் கள் வினியோகம் கட்டுக்கட்டாக. அரசாங்கமும் செய்தி வழி, அதன் பயங்கரத்தைப் போதித்த வண்ணமாக..

அப்போது எழுதிய எனது கிறுக்கல் இது - மக்கள் ஓசை 2008


நாலாப் பக்கமும் மரம்
நடுவில் நான்

வானம் தெரியவில்லை
வானவில் போல்
வர்ணக் கம்பளமாக
இலைகள்
கதிரவனையே மறைத்து..

கிளைகளை உரசவிட்டு
சேட்டைகள் செய்யும்
குரங்குகளும் அணில்களும்
ஒரு புறம்..

சல சல சத்தம்
மிக அருகில்
அது அருவியல்ல
எங்கிருந்தோ ஓடிவரும்
கால்வாயின் நீரோட்டம்

எதையோ வேண்டி
காகம் கரைவது கூட
குயிலின் கானமாக
காதுகளுக்கு இனிமை

நனைந்தும் நனையாத
மரங்களிலிருந்து
வடியும் நீர் கூட
இனம் புரியாத
இதம்..

முக கவசத்தை அகற்றி விட்டு
மூச்சை இழுத்து
சுதந்திரமாக
சுவாசித்துக் கொண்டிருந்தேன்
H1N1 பயமில்லாமல்

குண்டுசட்டி நிருபர்கள்

தென்றலில் வந்த எனது கட்டுரை (வாசகர் கடிதம்) -2008

நமது நிருபர்களின் நிலையை நினைக்கின்ற போது, பயங்கர நகைச்சுவைதான் போங்க. !

இங்கே உள்ள நிருபர்களில் பெரும்பாலானோருக்கு ஆராயும் திறன் அறவே இல்லை என்கிற உண்மையை எவ்வளவு நாள் தான் மனதிலேயே பூட்டி வைப்பது? இவர்களின் செய்திகள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது என்பதை நான் சொல்லித்தான் பிறருக்குத்தெரிய வேண்டுமா என்ன!

கண்ணால் கண்டதையும் காதால் கேட்பதையும் கொஞ்சம் மிகைப்படுத்தியோ அல்லது அதில் கண், காது, மூக்கு வைத்து ஜோடித்துச் சொல்வதையோதான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சொல்லப்படுகிற தகவல்களில் ஓர் ஆழமான ஆராய்ச்சியோ அல்லது விசாலமான பார்வையோ இருப்பதில்லை. சராசரி வாசகனின் பார்வையை விட, மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருப்பார்கள்.

அதைவிட அதிர்ச்சியூட்டும் விவரம் என்னவென்றால், ஒரு சில நிருபர்கள் (சிலர்தான்) உட்கார்ந்த இடத்திலேயே செய்திகளைச் சேகரித்து எழுதிவிடுகிறார்களாம். ஆச்சிரியமாக இருக்கின்றதல்லவா.! ஆனாலும் இது உண்மை.

சிலரின் செய்திகளால், தனி மனிதனின் தன்மான உணர்வு கூட பாதிக்கப்படுகிறதென்பதும், கேள்விப்பட்ட ஒன்று.

உதாரணத்திற்கு; தலையைச் சொரிந்தால் - பேண் தொல்லையால் திண்டாடுகிறார், என்றும், கொட்டாவி விட்டால் - கூட்டத்தில் குறட்டை விட்டு நன்கு தூங்கினார், என்றும், கண்களைத்துடைத்தால் - சோகம் தாளாமல் பொது நிகழ்வில் கண்ணீர் விட்டுக் கதறியழுதார், என்றும் பரபரப்பாக செய்திகள் எழுதிவிடுவார்களாம்.

பாருங்கள், எப்படியெல்லாம் ஒரு படி மேலே சென்று, அறிவுப்பூர்வமாக யோசித்து கதைகளைச் சேர்த்து செய்தி எழுதுகிறார்கள் என்று. !?

நிருபர்களின் கூர்மையான சமுதாயப்பார்வையையும் அக்கறையையும் கண்டு புல்லரித்த அனுபவமும் உண்டு.

‘புளிய மரத்தில் புள்ளையாருக்குப் பூஜை. அரசமரத்தில் ஆத்தாவிற்கு அருள் வந்தது. மாங்கா மரத்தில் மாரியம்மாளுக்கு மாலைகள் குவிகின்றன. ஆலமரத்தடி கணபதி பால் அருந்துகிறார். வேப்பமரத்தில் பேய், போன்ற விவரங்கள் அரசல்புரசலாக தெரியவந்தால் - பேனா என்கிற கூர் ஆயுதத்தையும், கேமரா என்கிற போர்வாளையும் தூக்கிக்கொண்டு தலைத்தெறிக்க அவ்விடம் நோக்கி ஓடி.. நான், நீ என முந்தி கொண்டு, அந்தச் செய்தியைப் பரபரப்பாக்கிப் பிரபலப்படுத்திவிடுவார்கள். அவர்களுக்கு அது அதிசயம் என்பதால் எழுதிப் பிரபலப்படுத்துகிறார்களா அல்லது உள்ளபடியே அவலம் என்கிற பார்வையில் பதியப்பட்டதா என்பது கூட நமக்குக் குழப்பமாக இருக்கும்.

இதைவிட இன்னொரு மிக மோசமானது - யாராவது ஒரு ஏழைப்பாட்டி, வயிற்றுப்பிழைப்புக்காக ‘கரிபஃப்’ செய்து பிழைப்பு நடத்துகையில், அவரின் செய்கிற வியாபார விளம்பரப் பலகையில் ‘கரிபஃப் விற்கப்படும்’ என்று எழுதிவிட்டால் போதுமே.. `தமிழ் கொலை செய்யும் வியாபாரிகள்’ என்கிற செய்தியோடு, பாட்டியின் புகைப்படமும், அந்த ஒட்டுக்கடையின் புகைப்படமும் ‘கரிபஃப்’பைத் தமிழில் எப்படிச்சொல்வார்கள் என்கிற விளக்கத்தோடு செய்தி ஒன்று வெளிவந்துவிடும். கேட்டால், சமூதாய அவலத்தைக் கண்டு வெகுண்டெழுகிறார்களாம்!

புகைப்பட கலைஞர்களின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் எல்லாப் புகைப்படங்களுமே, யாருக்காவது கூஜா தூக்குவதைப்போல் தான் இருக்கும். தமக்கு வேண்டப்பட்டவர்களென்றால், அவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து அழகாகக் காண்பிப்பார்கள். அரசியல் பிரமுகரென்றால், புகைப்படக் கலைஞருக்கு எல்லாமும் அவர்தான். மேலும் அந்தக் கேமரா கலைஞரை யாராவது ஓரிரு வரிகள் மேடையில் புகழ்ந்து பேசிவிட்டால் போதும். ஃக்ளோசப்பில் அவர்கள் தான், எல்லாக் கோணத்திலும் அவர்கள் இருப்பார்கள்.  அதிலேயே நமக்குத் தெரிந்துபோகும் அவர்களின் சீரிய சமுதாயப் பார்வையும் உள் நோக்கமும்.!

புதுமைச் செய்திகளால் கண்களை அகல விரியவைக்கும் ஆய்வுகள், புல்லரிக்கவைக்கும் புதிய தகவல்கள், உலகையே புரட்டிப்போடும் புகைப்படங்கள், மெய் சிலிர்க்கவைக்கும் கருத்துக்கணிப்புகள், அதிர்ச்சியும் ஆச்சிரியமும் நிறைந்த மர்ம புகைப்படங்கள், விசாலமான வித்தியாசமான பார்வை, அறிவியல் ஆராய்ச்சி, ஆதாரப்பூர்வமான உலகக் குறிப்புகள், விவேகமாக வேகமாக  சிந்திக்கும் திறன் என நித்தம் போராடிக்கொண்டிருக்கும் உலக நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் எங்கே! குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் நமது நிருபர்கள் எங்கே?

(இதையொட்டி, மிக மோசமாக  என்னைத்திட்டித்தீர்த்த கடிதங்களையும் சேகரித்துள்ளேன்.  (விடுவார்களா பின்ன!?) அது வேண்டாம்) ..




ஓஷோவின் தேன் துளிகள்

எனது தொகுப்பு- மக்கள் ஓசையில் வந்தது (2006)

1. உங்களைப் பற்றிய அதிக அக்கறையே, உங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்.

2. உண்மையை தரிசியுங்கள், விளக்கமளிக்கத்தேவையில்லை.

3. அழாமல், அஞ்சாமல், துணிவுடன், அன்பாகவும் ஆடியும் கொண்டாடியும் வாழ்பவர்களுக்கே மரணம் அழகானது.

4. அநியாயத்திற்குள் நுழையத் தயாராய் இருப்பவர்களால் மட்டுமே வாழ்வைப் புரிந்துக்கொள்ள முடியும்.

5. அறியாததிற்குத் தயாராக - அறிந்ததிற்கு இறந்தவராய் ஆகுங்கள்.

6. வாழ்வு சமயத் தன்மையோடு இருக்கவேண்டும். ஆனால் சமயம் வாழ்க் கூடாது. தெய்வத்தன்மையே அவசியம். தெய்வம் அவசியமில்லை.

7. தொண்டு செய்தல் கேவலமான சொல். என்னிடம் உள்ளதை பல வழிகளில் பகிரிந்துக் கொள்கிறேன் என்பதுவே சிறந்தச் சொல்.

8. குழந்தையாய் இருங்கள். சிறுபிள்ளைத்தனம் வேண்டாம்.

9. உண்மையாய் இருங்கள். அஞ்சாமையை ஊட்டும்.

10. பிராத்தனை ஒரு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு. கோவிலுக்குச் செல்பவர்கள் கடினமானவர்களாக மாற வேண்டிய அவசியமில்லை.

11. ஆழமாய் வாழுங்கள், முழுமையாய் வாழுங்கள். அனைத்தையும் அனுபவித்து வாழுங்கள். அப்போதுதான் விழத்தயாராய் இருக்கும் கனிந்த பழம்போல், மரணம் வந்து உங்களைத் தழுவும் போது, நீங்கள் தயாராக இருக்க முடியும்.

12. ஆதாரப்பூர்வமாக வாழுங்கள். முகமூடியை அகற்றுங்கள். அவை உங்களது இதயத்தை அழுத்தும் சுமை. பொய்மையானவற்றையெல்லாம் விடுங்கள். வெளிப்படையாக இருங்கள். அது சிரமம் கொடுக்கக் கூடியது என்ற போதிலும், அந்தச் சிரமம் அருகதை உள்ளதே. ஏனெனில் அந்தச் சிரமத்திற்குப்பிறகு நீங்கள் பக்குவப்பட்டிருப்பீர்கள். அதன் பிறகு ஒவ்வொரு கணமும் வாழ்வு அதன் புதுமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்.

13. புரிந்துக் கொள்ளக் கூடிய மனிதனே நல்ல மனிதன். ஒரு நல்ல மனிதன் என்பவன் எதையும் சிந்திக்கும் உணர்வோடு, விழிப்புடன் இருப்பவனே. விழிப்புணர்வு ஒன்றே மதிப்பிற்குகந்தது. மற்ற எல்லாம் அர்த்தமற்றவை.

14. நிர்வகிக்கக் கூடியதல்ல அன்பு, அது தானாகவே நடக்கும் ஒரு நிகழ்வு. அன்பை நிவகிக்க முயன்றால், அந்தக் கணத்திலேயே அது இல்லாமல் போய்விடும்.

நன்றி திரு. இராஜேந்திரன் ஞாயிறு பொறுப்பாசிரியர்.

புதன், டிசம்பர் 28, 2011

ஏன் பெற்றாய்?

ஏழெட்டு பிள்ளைகளை
ஏன் பெற்றாய்?

பரம ஏழை
இல்லை என்று தெரியும்
முடியாது என்று புரியும்
எந்த எதிர்காலத் திட்டமும் இல்லை
வருங்கால சேமிப்பும் இல்லை
ஓயாத கஷ்டமும்
பிச்சைக்கார புலம்பலும்..!!

ஏன் பெற்றாய்
வருடத்திற்கு ஒரு பிள்ளை?

பள்ளியில்
இலவச சத்துணவு உண்பதற்கும்
இலவச காலணிகளை வாங்குவதற்கும்
இலவச சீருடைகள் பெறுவதற்கும்
தீபாவளி பொங்கல்
இலவச பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதற்கும்
ஏழை மாணவர்களின் வரிசையில்
முதலில் நாங்களும்..!

ஏன் பெற்றாய்
நிறைய குழந்தைகளை?

ஆசைப்பட்டது நிறைவேறாது
பலகாரங்களும் பதார்த்தங்களும்
பாதி பாதியாய், திருப்தியில்லாமல்..
பானையில் சோறு காலியென்றால்
பசியோடு படுக்க வேண்டியது தான்
கோபம் பீறிடும்..
உங்களுக்கு வந்து பிறந்தோமே
எங்களுக்குத் தலையெழுத்தா..!?

ஏன் பெற்றாய்
இத்தனைக் குழந்தைகளை?

சிறுவயதிலேயே
கனமான வீட்டு வேலைகள்
கஷ்டமான காட்டுவேலைகள்
புகையைக் கக்கும்
கண்களைக் கலங்க வைக்கும்
முகத்தைக் கறுமையாக்கும்
விறகடுப்பில் நித்தம்
போராட்டமே..!

ஏன் பெற்றாய்
வதவத என பிள்ளைகளை?

பைப் அடியில்
வெயிலில் காய்ந்து
நெஞ்சு எலும்பு தெரிய
தோம்பு தோம்பாக
தண்ணீர் நிறைப்பது
அன்றாட கடமை..
படிக்கக்கூட நேரமில்லாமல்
ஓய்ந்து களைத்து...

ஏன் பெற்றாய்
எங்களை?

ஏக்கமாக இருக்கும்..
பொறாமையாக இருக்கும்
தனியாக, செல்லமாக, சுத்தமாக, சுதந்திரமா..
செல்வச் செழிப்பில் வளரும்
குடும்பத்தின் ஒரே பிள்ளையைப் பார்க்க..

ஏன் பெற்றாய்
இந்த கொடுமைகளை நாங்கள் அனுபவிக்க...
என் தாயே!!!

கோபம் வந்தது அன்று..!!!

ஆனால் இன்று!

பிரச்சனையென்றால்
நானிருக்கேன், கவலைப்படாதேன்னு
ஓடோடி வரும் தம்பிகள்..

அய்யோ என்ன வாழ்க்கை!?
என அலுத்துக்கொள்ளும் போது
ஆறுதலாய் வருடி அரவணைக்க அக்காள்..

படித்ததைப் பகிர்ந்துக் கொள்ள
தமிழைத்திருத்திக் கற்றுத்தர
கலகலப்பூட்டி மகிழ்வைத்தர
தரமான தங்கைகள்!

சோர்வின் போது
கும்மாளமடித்து
குதூகலிக்க வைக்கும்
கடைக்குட்டி..!

இப்போதைக்கு
வாழ்வின் சுவாரிஸ்யமே
தோள் கொடுத்துத் தூக்கி விடும்
உடன் பிறப்புகள் தான்.!

தாயே..
இப்போது உன் மேல் கோபமில்லை
எவ்வளவு போராட்டங்களை
நீ சந்தித்திருந்தாலும்..
நோய் நொடியில்லாமல்
கண்டிப்புடன்
கண்ணின் இமைபோல்
எங்களைக் காத்து வளர்த்து
கரை சேர்த்து விட்டாயே.. !

உன் பாதங்களை
முத்தமிடுகிறோம்

நன்றி அம்மா.!

(தமிழ் நேசன் 2007- அன்னையர் தின சிறப்பு இதழில் வந்தது)
நன்றி ப. சந்திரகாந்தம் - முன்னால் ஞாயிறு பொறுப்பாசிரியர்.






கொஞ்ச நேரம் நில்லு

(மார்ச் 2010) மக்கள் ஓசையில் பிரசுரமான குட்டிக்கதை
நன்றி மக்கள் ஓசை திரு. இராஜேந்திரன் -
ஞாயிறு பெறுப்பாசிரியர் - திரு. சின்னராசு


அலுவலகத்தில் - ஆங்கிலத்தில் ஓர் உரையை நிகழ்த்த எப்படியெல்லாம் வார்த்தைகளைக் கோர்க்கலாமென்கிற அகப்பக்கத்தை, குகூளில் (கணினியில்) ஆரய்ந்துகொண்டு, அதனின் குறிப்புகளை ஒரு ஏட்டில் குறித்துக்கொண்டிருந்தாள் ரேணு. பக்கத்திலலுள்ள தொலைப்பேசி அலறியது..

“ஹாலோ! ” மறுமுனையில் வனிதா.

“ஹாலோ ரேணு, நான் தான் வனிதா!”

அறிமுகம் செய்துகொண்டாலும், அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருவரும் நல்ல தோழிகள். ஹாலோ என்றவுடன், வனிதாதான் அழைப்பில் என கண்டுப்பிடிக்கும் அளவிற்கு, வனிதாவில் குரல் ரேணுவிற்குப் பரிச்சயம்.

வனிதா, அடிக்கடி ரேணுவுடன் தொலைப்பேசியில் பேசுபவள். குடுமபப் பிரச்சனைகள், வாழ்வின் குறை நிறைகள் என எதையாவது பகிர்ந்த வண்ணமாகவே இருப்பாள் வனிதா.

சில வேளைகளில், ரேணுவிடன் நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டாலும், இருவரும் இணைபிரியா தோழிகளே! பள்ளிப் பருவம் தொடங்கி இன்றுவரை நட்பு தொடர்வதால், உரிமையோடு கடித்துக்கொண்டாலும், ச்சீ என திட்டிக்கொண்டாலும் நட்பை முறித்துக்கொள்ளாமல் தொடர்ந்தார்கள் தோழிகள்.

“பிஸியா ரேணு?”

“ இல்லை வனிதா, போஸ் எல்லோரும் போர்ட் மீட்டிங்க் போயிட்டார்கள், கணினியில் கொஞ்ச........” என்று ரேணு சொல்லி முடிப்பதற்குள், வனிதாவின் அலுவலகத் தொலைப்பேசி ஒன்று அலறியது.

“நில்லு கொஞ்ச நேரம்..!”
என்று சொல்லி, வந்திருந்த அழைப்பை எடுத்துப்பேசலானாள். “ஆங்.. சொல்லுங்க..ம்....ம்.....ம்.....ம்ம் ஒகே  ஒகே” என்று கூறிவிட்டு, ரேணுவிடம் வந்தாள்..

“ ஒரே மயக்கமா இருக்குதுன்னு, டாக்டர்கிட்ட போனேன் ரேணு, அவர் முழுமெடிக்கல் செஃக் ஆஃப் செய்துவிட்டு, குண்டைத் தூக்கிப்போ.....” முடிப்பதற்குள், மீண்டும் தொலைப்பேசி அழைப்பு.

“நில்லு கொஞ்ச நேரம்..”

“ ஓ..சொல்லுங்கம்மா, இந்தச் சொந்தக்காரங்களே அப்படித்தான், சரிம்மா.. நான் மாமா கிட்டே பேசறேன், வருத்தப்படாதிங்க.., நான் அப்புறம் கூப்பிடறேன்..” என்று சொல்லி மீண்டும் ரேணுவிடம்..

“பாரு’லா, அம்மாவே கஷ்டப்ப்டறாங்க - அவங்க கிட்டப்போய், ‘மாமா செத்துட்டாரு, மச்சான் செத்துட்டாரு’, கருமாதி செய்யணும், முறை செய்யணும், பணம் சேர் பண்ணுன்னு தொல்லை பண்ணுகிறார்கள். சொந்தக்காறங்களே இப்படித்தான்.. சரி, நம்ம விஷயதிற்கு வருவோம், எனக்கு பிரஷர் அதிகமாயிடுச்சாம்! நூற்றுஎண்பதைக் காட்டுகிறதாம்.. சுகரும் எட்டு ஆயிடுச்சு’லா.... அதான் கொஞ்சம் நடந்தாலே இப்போதெல்லாம் அதிகமா மூச்சு...”

மீண்டும் ஒரு அழைப்பின் அலறல்...

“ கொஞ்ச நேரம் நில்லு..”

“ஹாலோ, ம்ம்ம்.. என்னது..இன்னும் போய் சேரலையா? போன வாரமே அனுப்பிய ஷிப்மெண்ட்!! லொஜிஸ்டிஃக்ல செஃக் பண்ணுங்க... ம்ம்ம்.. இருக்கும் இருக்கும், கஸ்டம்ஸ்ல ஏதும் பிரச்சனையோ? தொலைஞ்சோம்.. ம்ம்ம்.. ஐ வில் கால் யூ லெட்டர்..”

மீண்டும் ரேணுவிடம்.. “ஷிப்மெண்ட் பிரச்ச்னையெல்லாம் என் தலையில், கொடுப்பது ஒரு வேலை, தலையில் கட்டுவது பல வேலைகள்.. ஓயாது’லா இவனுங்களோட... ” என அலுத்துக்கொண்டு, “ஆமாம்,நான் எங்கு விட்டேன்?” தொடர்ந்தாள் வனிதா.

”ஆங்.. அதிகமா மூச்சு.. பிளட் செஃக் பண்ணி பார்த்துட்டு, கொலஸ்ட்ரோலும் 5.6 க்கு வந்திருச்சாம்.. சாப்பாடு கண்ட்ரோல் பண்ணச் சொன்னாரு டாக்டரு, முடிந்தால் இரவில் சாப்பிட வேண்டாம், ஓட்ஸ் மட்டும் எடுக்கச்சொன்னார். கண்ட்ரோலா இல்லேன்னா...” மீண்டும் அந்தப்பக்கம் தொலைப்பேசி அலறல்..

“நில்லு கொஞ்ச நேரம்..”

“என்ன கண்ட்ரி கோட் தவறா? ... 0043ன்னு தனே எழுதினேன். ம்ம். ம்ம். இல்லையா? ம்ம் ம்ம்.. ஓ அது ஆஸ்திரியாவுடையதா..!! அப்போ, அஸ்திரேலியா கண்ட்ரி கோட்..?  ம்ம்ம் ஒகே, 0..0..6..1 ஒகே நோட் பண்ணிக்கிட்டேன், மாத்தி எழுதிடறேன். தெங்க்ஸ்..”

மீண்டும் இந்தப்பக்கம் ரேணுவிடம் தொடர்கிறாள் வனிதா...

“கண்ட்ரோல் இல்லேன்னா ஸ்ட்ரோஃக் வந்திடுமாம்.. நம்ம இருவருக்கும் ஒரே வயது தானே, உனக்கு நிலவரம் எப்படி இருக்கு? மெடிக்கல் செஃக் ஆஃப் ஏதும் போனியா? போய்ப்ப் பார்ர்ரு’லா...” என்றவுடன் மறுமுனையில் மீண்டும் அழைப்பு... எதோ சொல்ல வந்த வனிதாவை இடைமறித்த ரேணு...

“அம்மா தாயே கருணை காட்டு, புண்ணியவதி..  நீ, கொஞ்ச நேரம் நில்லு.. கொஞ்ச நேரம் நில்லு’ன்னு அரை மணி நேரமா புலம்பறீயே, ஏதாச்சும் உருப்படியா பேசினாயா? ஒரே ஆள் கூட நின்னு நிதானமா அமைதியா பேசிப்பழகி, மனதை ஒரு நிலையில் வைச்சுக்கப்பாரு.. சுகரும் வராது, பிரஷரும் ஏறாது, எந்தக் கருமமும் வராது.

இங்கே கொஞ்ச நேரம், அங்கே கொஞ்ச நேரம் பேசி, என் தலை 360டிகிரி சுத்திப்போச்சு.! ஓய்வா இருக்கும் போது கூப்பிடு, பேசலாம், இப்போது போன வை.! எனக்கு பிரஷர் வந்து ஸ்ட்ரோஃக் வர மாதிரி இருக்கு..!” என்றுச் சொல்லி, வனிதாவின் தொலைப்பேசி அழைப்பைத்துண்டித்தாள் ரேணு. !









கோபம் இருக்கு

எனக்கும் கோபம் வரும்...

குதூகலித்து மகிழ்ச்சியாக
இருக்கும்
பக்கத்து வீட்டுக்காரர்
மீதும்..

என்னைப் பற்றி
இல்லாது பொல்லாதெல்லாம் பேசும்
மாமியார் நாத்தனார்
மீதும்..

புதுப்புடவை நகைகள்
வாங்கும்
கொழுந்தன் பொண்டாட்டி
மீதும்..

வைர மூக்குத்தி
வாங்கித்தர தாமதிக்கும்
கணவன் மீதும்..

சீரியலில் வரும்
கதாநாயகியைச் சூழ்ந்து
கொட்டமடிக்கும் வில்லிகளின்
மீதும்..

எனது அறிவுரைகளைக்
கேட்டுப் பின்பற்றாத
நண்பர்கள் மீதும்..

முகத்தைக் கருமையாக்கி
சுட்டெரிக்கும் சூரியன்
மீதும்..

ஷாப்பிங் செல்ல இயலாமல்
விடாது பெய்யும்
மழையின் மீதும்..

முகச் சுருக்கங்களையும்
நரைமுடியையும்
வெட்ட வெளிச்சமாகக் காட்டும்
என் கண்ணாடி
மீதும்..

என் வருகையின் போது
உடனே சிகப்பாகும்
சமிஃக்ஞை விளக்கின் (traffc lights)
மீதும்..

தெருவில் அசிங்கமாக
உலாவும் சொரிநாய்
மீதும்..

தலைக்கு மேல்
சதா கரையும் காகங்களின்
மீதும்..

போகிற போக்கில்
என் காலை மோதுகிற
மேஜை நாட்காலி
மீதும்..

தொலைப்பேசி அழைப்பில்
சொல்லப்படும் எண்களைக்
குறிந்து வைக்க
பேனா காகிதம் கிடைக்காத போது
உலகத்தின் மீதும்..

இயலாமையை மறைக்க
வார்த்தைகளைத் தேடி
தினறும் போது
தாய் மொழியின் மீதும்..

என்னை மட்டும்
வாழ்வைக்காமல்
சதா சோதிக்கும்
இறைவன் மீதும்..

உங்களின் ஆதரவு வேண்டி
நான் போடும் பதிவுகளை
கண்டுங்காணாமல் போகும்
உங்களின் மீதும்..

கடுங்கோபம் வரும்
எனக்கும்.....!!!!

நானும் எழுதலாம்..
படைப்பாளியாகலாம்..
எழுத்தாளர்களுக்குக் கோபம்
அவசியமென்கிறார் சுஜாதா.

(எழுதுவதற்குக் கோபம் வேண்டும், என்கிற சுஜாதவின் வரியைப் படித்தவுடன், நான் பட்டியலிட்ட எனது கோபங்கள் இவை..)