செவ்வாய், ஜூலை 31, 2012

கஸ்டமர்ஸ் ஆர் ஆல்வேயிஸ் ரைட்டு

தனிமனித ஒழுக்கம் என்பது குடும்ப சூழல் சார்ந்த விவகாரம். இந்த விஷயத்தில், குடும்பத்தில் அலட்சியப்போக்கு  தாண்டவமாடினால்,  தனிமனித ஒழுக்கக்கேடு வெளியே தலைவிரித்தாடும். இதில் அரசாங்கமே முழுமூச்சாக இறங்கி கெடுபிடிகளை கடுமையாக்கி, சட்டதிட்டகங்களை அமலுக்குக் கொண்டுவந்தாலும், தனி ஒரு மனிதனுக்கு ஒழுக்கமென்பது இல்லையென்றால், மாற்றமென்பது குதிரைக்கொம்புதான்.

அண்மையில், எங்க ஊரின் பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு ஆய்வு வந்திருந்தது. அதாவது மலேசியர்களின் அலட்சியப்போக்கினால் பேரங்காடி வணிகர்கள் லட்சக்கணக்கில் நஷ்டத்தைத் தழுவுகின்றார்கள்  என்பதனை, ஆதரத்தோடும், புகைப்படங்களோடும், புள்ளிவிவரத்தோடும் அப்பட்டமான உண்மைகளைச் சொல்லும் அரிய செய்தியாக வந்திருந்தது.

அச்செய்தி வந்த மறுநாள், அதையொட்டிய உரையாடல்களும் கருத்துப்பரிமாற்றங்களும் மலேசிய வானொலிகளை அலங்கரித்தன.

செய்தி என்னவென்றால்; பேரங்காடிகளுக்குச் செல்லும்போது, விஸ்தாரமான இடைவெளியில், நம்மிடமுள்ள தள்ளு வண்டியை (ட்ரோலி) தள்ளிக்கொண்டு, நமக்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து அந்த வண்டியில் வைத்துக்கொண்டு, பின் வண்டியை கேஷியர் கவுண்டருக்குக்கொண்டு சென்று, அதன்பின் பொருட்களுக்கான பணத்தை அதன் விலைகளுக்கேற்ப செலுத்துவோம்.

அப்படி தேர்ந்தெடுக்கின்ற சமையத்தில், பொருட்களைச் சேதமாக்குகின்ற பொறுப்பற்ற பயனீட்டாளர்களின் அருவருக்கத்தக்க செயல்களால் அந்த பேரங்காடி, பெருத்த நஷ்டத்தில் மூழ்குவதாக அந்த ஆய்வு காட்டுகிறது.

குழந்தைகளை அழைத்துச்செல்லுகிற போது, பாட்டல் பொருட்களை கீழே போட்டு உடைப்பது.! பருகும் பானங்களை, பருகி விட்டு காலியான பாட்டல்களை அந்த இடத்தில் வைப்பது. ! பிஸ்கட்களை பாதி சாப்பிட்டுவிட்டு, பாதியை, கேஷியர் கவுண்டர் வருவதற்குள் எங்கேயாவது பதுக்கி வைப்பது.! கடலை போன்ற பொருட்கள் வரிசைப் படுத்தியிருக்கும் இடங்களில், கடலைகளை அள்ளி இரைப்பது.! அரிசி பாக்கெட்டில்  ஓட்டை  இட்டு, அவைகளை கீழே சிதற விடுவது.! பட்டர், ஜேம் போன்றவற்றில் கைகளை விட்டு நோண்டுவது.! பழங்களைக் குத்திக்குத்திப் பார்ப்பது.! காய்கறிகளை பலங்கொண்டு அமுக்குவது. !!

எடுத்த பொருட்களை வேண்டாமென்றால் மீண்டும் அதே இடத்தில் அடுக்கிவைக்காமல் அதை வேறு ஒரு இடத்தில் கடாசி விடுவது. குறிப்பாக, ரொட்டியை எடுத்த இடத்தில் வைக்காமல், மீன் இறைச்சி போன்ற இடங்களின் அதைப் போட்டு விட்டு வருவது. பொருட்களை இஷ்டம்போல் ட்ரோலியில் அடுக்கிவிட்டு, அவைகள் வேண்டாம்ன்று அதை எதாவது ஒரு இடத்தில் அப்படியே விட்டு விட்டு சென்றுவிடுவது.!!

பேஃக்கரி போன்ற இடங்களில் கேக் பலகாரங்களை எடுத்துச் சாப்பிடுவது, துணிமணிகளை போட்டுப்பார்த்து விட்டு, அவைகளை போட்டுக்கொண்டே கிளம்பிவிடுவது. உள்ளாடைகளை போட்டுப்பார்ப்பது (ப்ரா, பென்ட்டிஸ்), காலணிகளை, பெரிய கால்களைக்கொண்டு அமுக்கி, அழுத்தி, உள்ளே நுழைத்துப் போட்டுப் பார்ப்பது  ... என இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். பட்டியல் நீண்டுதான் இருந்தது அங்கே.

பேரங்காடி என்றால் மூலை முடுக்கெல்லாம் கேமராக்களை பொருத்தியிருப்பார்கள். எல்லாப் பொருட்களின் வரிசைகளிலும் விற்பனை உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் மீறி, இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறதென்றால், நிலைமை கட்டுக்குள் இல்லாமல், பேரங்காடிகள் பெருத்த நஷ்டத்தில் உழன்றுக்கொண்டிருப்பதாக அச்செய்தியின் புள்ளி விபரம் பறை சாற்றுகிறது.

விற்பனை உதவியாளர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒரு சில விற்பனை உதவியாளர்கள் எப்பொழுதுமே வாய் பேசா மௌனியாகவே இருந்து விடுகிறார்கள்.  இதற்குக் காரணம்,  `கஸ்டமர்ஸ் ஆர் அல்வேயிஸ் ரைட்’ என்கிற உருப்படாத தாரகமந்திரத்தை பல பயனீட்டாளர்கள் தெரிந்து வைத்துக்கொண்டு, `ஆச்..பூச்’ என்றால், `நான் ஒரு கஸ்டமர், நான் புகார் செய்து, உன் வேலையை காலியாக்கிவிடுவேன், ஜாக்கிரதை!’ போன்ற வசனத்தை எல்லா நேரத்திலும் பயன்படுத்துவதால், பல விற்பனை உதவியாளர்கள் ஊமையாகவே இருந்து விடுகிறார்கள். `எதற்கு வம்பு, இது என்ன நமது பாட்டன் கடையா?’ என்பதைப்போல.

இங்கே ஒரு சம்பவம் நினைவிற்கு வருவதால், அதை உங்களிடமும் பகிர்கின்றேன். தமிழ்நாட்டிற்குச் சென்றிருக்கையில், எங்களின் மனதை உருக்கிய ஒரு சம்பவம் இது. படித்துப் பாருங்கள், நம்மவர்கள் செய்யும் கூத்துகளை. !

ஒரு ஸ்வீட் கடைக்குச் சென்றோம். அங்கே காலெஜ் மாணவர்கள் போல் சில சுட்டிப் பையன்கள்  துறுதுறுவென பணியில் மூழ்கியிருந்தார்கள். முதலாளி கல்லாவில் மீசையை முறுக்கிக்கொண்டு, முகத்தை உர்ரென்று வைத்த வண்ணம் பணத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டுக்கொண்டிருந்தார்.

நாங்கள் பத்து பேர்கள் அடங்கிய குழு, கடையின் உள்ளே நுழைந்தவுடன் கடையே நிறைந்து விட்டது. ஒருவருக்கு ஒரு பணியாளர் என எங்களை `அக்கா, அக்கா’ என்று மிக அன்பாக, மரியாதையாக அக்கறையெடுத்து கவனித்து, பொருட்களை பொட்டலம் கட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அங்கே வந்த ஒரு பருவமங்கை.. சுமாரான பெண்தான், பெரிய அழகியெல்லாம் ஒண்ணும் கிடையாது, ஒய்யாரமாக நுழைந்து, `எனக்கு அல்வா அரை கிலோ கொடு’, என, கடுமையான தொனியில் உத்தரவு இட்டாள். எல்லோரும் எங்களை கவனித்துக்கொண்டிருந்ததால், அதில் ஒருவன் அக்கறை எடுத்து, `அல்வாதானே? தோ தருகிறேன்.’ என்று சொல்லி சிரித்துள்ளான்.

வெளியே நின்றுக்கொண்டிருந்த அந்தப்பெண்ணின் அப்பா உள்ளே நுழைந்து, தாறுமாறாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, அந்த பையனை அவமானப்படுத்தினார்.

``எப்படி நீ, என் மகளைப் பார்த்து, உனக்கு அல்வா தறேன், என்று சொல்லிச் சிரிக்கலாம்? அதுக்கு என்ன அர்த்தம்?  என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்கடா, நீங்கள் எல்லோரும்?  நான் ஒருவன் வெளியே நிற்பதையே நீங்கள் யாரும் கவனிக்காமல், என் மகளைக் கிண்டல் செய்கிறீர்கள்?’’

டேய்.. வாடா.. போடா, அடா.. புடா, என ஒரே அமளி. அந்த பையன் வெளிறிப்போனான். முகமெல்லாம் வேர்த்து விருவிருத்தது. மீசையை முறுக்கிக்கொண்டிருந்தவர், எழுந்து வந்தார், அவனை பளார் என்று ஒரு அரை விட்டார். அந்த ஆள், அல்வாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாமென்று அமைதியாகச் சென்று விட்டார். நாங்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியில் உரைந்துப்போனோம்.  இந்த சம்பவத்தால் மனசங்கடம் அடைந்த  எங்களின் குழுவில் உள்ள ஒரு பெண்மணி,

``என்னங்க அய்யா, அவன் பாட்டுக்கு எங்களுக்குப் பொருட்களைக் கட்டிக்கொடுத்துக் கொண்டிருக்க, அவனைப் போய் அடிக்கின்றீர்களே.. !?’’ என்று கேட்க, `என்னம்மா செய்வது, அவன் இப்படி உள்ளே வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறானே, அவனை அமைதிப்படுத்த எனக்கு இந்த யுக்தியை விட்டால், வேறு வழி தெரியவில்லை. என் பிள்ளைகளைப் பற்றி எனக்குத்தெரியாதா? அந்த ஆள், இதை ஒரு விஷயமாக பெரிதாக்கி, வியாபாரத்தையே கெடுக்கப்பார்ப்பான்’ம்மா. சரி விடுங்க, உங்களுக்குத் தேவையில்லாத விஷயமிது. பொருட்களை வாங்கிக்கொண்டு கிளம்புங்கள்.’’ என்றார் அந்த மீசைக்காரர்.

அன்று இரவு முழுக்க, எங்களின் கண் முன் நிழலாடியது `கஸ்டமர் ஆல்வேயிஸ் ரைட்’, என்கிற இந்த சம்பவம்.

பயனீட்டாளர்களின் சுயநலப்போக்கினால் ஏற்படும் காயங்கள் நஷடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்கிற இது போன்ற நிகழ்வுகளை இன்னும்  நிறைய  அடுக்கிக்கொண்டே போகலாம்.

சாப்பாட்டுக்கடைகளில், ஆடர் செய்யப்பட்ட உணவு தாமதமாக வந்து விட்டது என்பதால், அந்த உணவே வேண்டாமென்று, முகத்தில் அரைந்தாட்போல சொல்லி ஆர்ப்பாட்டம் செய்பவர்களும் நிறைபேர் இங்கே.

பேரங்காடிக் கடைகளுக்குச் சென்றால், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துண்மணிகளைக் கலைத்துப்போட்டு விட்டு, தமக்கு வேண்டிய துணிகளைத் தேடுவதாக அக்கப்போர் செய்பவர்களைப் பார்க்கும் போதும், வேதனையாக இருக்கும்.

மனித நேயமற்ற மற்றொரு செய்கை. கழிவறைகளை சுத்தம் செய்கிற ஆட்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை. இது அவர்களுடைய வேலை, நாம் ஏன் தூய்மைப் படுத்த வேண்டுமென்று,  கழிவறைக்குச்சென்றால், பயன் படுத்திய பின், முறையாக சுத்தம் செய்யாமல் வந்து விடுவது சிலரின் வாடிக்கை. சிறுநீர் கழித்தாலும், குழாயில் வரும் நீரைத் திறந்து ஊற்றி சுத்தம் செல்வதில் என்ன குறை வந்து விடுமோ, தெரியவில்லை.!?

எங்களின் நிருவனத்தில், கிளீனிங் சர்வீஸ்’ற்கு, ஒப்பந்த அடிப்படையில் பல பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றார்கள். எல்லோரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். அவர்களைக் கண்காணிக்கும் வேலைக்கு மட்டும், ஒரு உள்ளூர்காரரை மேற்பார்வையாளராக நியமித்து இருப்பார்கள்.

இந்த பணியாளர்கள் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது.
அருவருக்கத்தக்க வேலைகளுக்கிடையே, பல மாதிரியான இன்னல்களையும் சந்தித்த வண்ணமாகத்தான் இருக்கின்றார்கள். துப்புறவு பணியாளர்கள் இந்தோனீசிய முஸ்லீம் ஊழியர்களாதலால், இந்த சூழலில், நோன்பு வேறு இருக்கின்றார்கள். உள்ளூரில் பணி புரிபவர்கள் பலரும், நோன்பு காலகங்களின் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, இந்த கிளீனிங் சர்வீஸ் ஆட்களை, தமது வேலைகளைச் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மேலே ஏறி பொருட்களை எடுப்பது, வந்திருக்கும் டாக்குமெண்ட்ஸ்களை எடுத்துச்செல்வது, இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வது, விளக்குக்ளை புதிதாகப் பொருத்துவது, கஸ்டமர்களின் கனமான பொருட்களைத் தூக்குவது, என, இப்படி இன்னும் பல எடுபிடி வேலைகளுக்கு அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களும் நிராகரிக்காமல் சொல்கிற வேலைகளையெல்லாம் செய்கிறார்கள். என்ன செய்வது, பிழைக்கவந்து விட்டால், தாங்கிக்கொள்ள வேண்டும்ன்கிற தர்மசங்கடமே. !?

கழிவறையைப் பயன் படுத்தி விட்டு, மலத்தைக்கூட தூய்மையாகக் கழுவாமல் அப்படியே விட்டு விட்டு வருகிறவர்களும் உண்டுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்களின் துப்புறவு பணியாளர் ஒருவர், காலையிலேயே கைத்தொலைப் பேசியின் மூலமாக ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்து வந்து என்னிடம் காண்பித்தாள். எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவு மோசமாக, அசிங்கமாக.. !

அவர்களின் மேற்பார்வையாளரான எங்கள் ஊர் ஆசாமியின் காதில் இச்செய்தியினைப் போட்டேன். அதற்கு அவர், `ஏன் அதிகமான புகார்களைக் கொடுக்கின்றார்கள்.!? இது அவர்களின் வேலையல்லவே..! செய்துதானே ஆக வெண்டும்.! அவர்களின் ஊரில் கலெக்ட்டர் வேலை காலியாக இருந்தால் போகவேண்டியதுதானே! இவர்களுக்கெல்லாம் முகங்கொடுத்தால், நம்மையே ஏய்த்துவிடுவார்கள்.’ என, கடுஞ்சொற்களை உதிர்த்தார். 

இப்படிப் பேசினால், நான் என்ன செய்ய முடியும்? என் பங்கிற்கு புகார் கொடுத்துப்பார்த்தேன். மனிதாபிமானம், மனிதநேயம் உள்ளவர்களாக இருந்தால், யோசிப்பார்கள். இல்லாதவர்களிடம், நாம் எதை எதிர்ப்பார்க்க முடியும்.!? அவர்களின் மனவேதனையை உள்வாங்கிக் கொண்டாலும், உதவி செய்கிற அளவிற்கு, எனக்கு அதிகாரமில்லையே.!?

தனிநபர் ஒழுக்கம் சார்த்த விஷயங்களில், நாம் என்ன குட்டிக்கர்ணம் போட்டாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. இது போன்ற நிகழ்வுகளில் சிக்கிக்கொள்ளும்போது,  மனிதர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லவே, கூசுகிறது.!

     




.   

ஞாயிறு, ஜூலை 29, 2012

பாறையும் கரையவேண்டுமே...

புள்ளி இல்லாமல், 
துணை கால் போடாமல்
இடைவெளி இல்லாமல்
பிழையோடு சொல்வதுபோல்
நடித்துவிட்டு
என் ஈகோவை சீண்டிச்செல்கிறது
உன் வாசகம்


%%%%%%


மண்ணில் விதைத்ததுதான் மரமாகுது
என மனமும் விளை நிலமோ
உன் நினைவுகளும் மரமாகுதே..!!


%%%%%%%


பேனா வாங்கினால் 
எழுதிப்பார்க்கின்றோம்
கத்தி வாங்கினால் 
வெட்டிப்பார்க்கின்றோம்
மொன்னையல்ல கூர்`மை’க்காக..!


%%%%%%


என்றோ ஒரு நாள் 
நடக்கவிருக்கும் அசம்பாவிதத்திற்காக, 
ஓயாமல் சிமிட்டிக்கொண்டே இருக்கின்றது; 
ரகசிய காமிரா..


%%%%%%%%


எனக்கு நேரமில்லை என்று சொல்லி 
பாராமுகமாக விலகிச் சொல்லலாம்.. 
என்ன செய்ய; நேரமிருக்கே.!


%%%%%%


எழுந்தவுடன் ஒரு சிக்கல்
சினத்தோடு சில வேலைகள்
படபடப்பு குறைந்தபோது
சமையல்
என் குழந்தைகளுக்கு (செடிகள்)
முடி,நகம் வெட்டுதல்
அவைகளோடு கொஞ்ச நேரம் 
கொஞ்சுதல்
தாழ்வாரத்தில் இறங்கிய 
சூரியனை துரத்திக்கொண்டே
மசாலா, துணிகள் உலரவைத்தல்
கவலை மறக்க ஒரு குட்டித்தூக்கம்
எழுந்து ஒரு கப் சூடான காப்பி
தனிமை மனதிற்கு சுகமளிக்கும் சில
கானங்கள்
ஷவரின் கீழ் அரை மணி நேரம்
வெளியூர் சென்றிருந்த கணவரின் வருகை
உல்லாச பொழுதாக்க
இரவு உலா செல்கிறோம்...
ஞாயிறும் சாய்கிறது..



%%%%%%%


நீ மெழுகாய்
உருகினாலும்
பாறை அது
கரையவேண்டுமே..!?



%%%%%%


புறக்கணிப்போம் 
என்கிற வாசகத்திலும் 
விளம்பரம் தெரிகிறது.


%%%%%%%


தோழியிடம்
தெரிந்த ஒன்றைப் பற்றி
கேள்வியாகக் கேட்பேன்
சொல்லிக்கொடுத்து
பூரித்துப்போவாள்
தோழமையில் நெருக்கம்
அவளைவிட அறிவில்
நான் குறைந்திருப்பது..



%%%%%%%


நன்றி 
பண்பின் வெளிப்பாடுதான்
எனக்கு அது வேண்டாம்
உன்னிடமிருந்து..
நன்றி


%%%%%



பற்றுதல்கள்

சிலர்
வாசனைப்பொருட்களின் மீது பைத்தியமாக இருப்பார்கள்
நமக்கு அருமையான மணம் இலவசமாகக் கிடைத்து விடுகிறது

சிலர்
செடிகளின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்
நமக்குப் பூக்கள் இலவசமாகக் கிடைத்து விடுகிறது.

சிலர்
சாமி பைத்தியமாக இருப்பார்கள்
கோவிலுக்குச்செல்லும் போதெல்லாம் நமக்கும் பிரசாதம் வீடு தேடி சுலபமாகக் கிடைத்து விடுகிறது.

சிலர்
உணவுப் பதார்த்தங்களின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்..
நமக்கு அதில் பாதி பலகாரங்கள் இலவசமாகக் கிடைத்து விடுகிறது

சிலர்
துணிமணி ஆடை அணிகலன்களின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்.
அவகளால்தான் ஏழைகளுக்கு இலவசமாக விலையுயர்ந்த ஆடைகள் கிடைக்கின்றன.

சிலர்
எழுத்துப்பைத்தியமாக இருப்பார்கள்
நமக்குக் கருத்துகள் எல்லாம் இலவசமாகக் உடனே கிடைத்து விடும்.

எதிலாவது பைத்தியமாக இருக்கனும், அப்போதுதான் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.

பைத்தியங்கள் தான் நல்லவர்கள்.
பற்றுப் பைத்தியங்களை கிண்டல் கேலி செய்யாதீர்கள் அவர்களால்தான் பலர் வாழ்கிறார்கள்.

இப்படிக்கு,
window shopper
விஜி.

சனி, ஜூலை 28, 2012

மூர்ச்சையானேன்


முன்பு நான் எழுதிய கதைகள்,கட்டுரைகள், கவிதைகள் என எல்லாவற்றையும் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்கிற நோக்கோடு, டைப் செய்கிற போது சில தவறுகள், கருத்துப்பிழைகள், எழுத்துப்பிழைகள் என கண்களுக்குத் தெரிந்தவண்ணமாகவே இருக்கிறது.

அதை திருத்திப்போடலாமா அல்லது பத்திரிகையில் வந்ததுபோலவே அப்படியே பதிவேற்றி விடலாமா, என்கிற யோசனையில் எல்லாமும் அப்படியே பையில் பத்திரமாக இருக்கின்றன. சோர்வாகவும் இருக்கின்றது, மீண்டும் வாசித்து தட்டச்சு செய்வதற்கு..! திரும்பியே பார்க்கவேண்டாம் என்று கூடத்தோன்றுகிறது. என்ன செய்ய, அன்றைய சிந்தனையோட்டம் அப்படி..! இப்போது சிந்தனையில் மாற்றம் உள்ளது போன்ற பிரமை. இன்னும் மாறலாம்..

எங்கள் ஊரின் நிலவரப்படி, பத்திரிகைகளில் பிரசுரமாவதை பெரும்பாலும் யாருமே அவ்வளவாக அக்கறை எடுத்து, ஈடுபாடு காட்டி வாசிப்பதில்லை. பல வருடங்களாக எழுதிவருகின்றோம் (மொக்கைகள்தான்),  அதில் அதிகமாக எழுதித்தள்ளிய, அதிகமான படைப்புகள் வெளியான ஒரு பத்திரிகையில், அங்கே வேறொரு பொறுப்பில் இருக்கும், பெரிய பதவி ஆசிரியருக்குக்கூட,  நாம் யார் என்றே தெரியவில்லை. அட, எழுத்தாளராக அடையாளங்காண வேண்டாம்’ங்க, ஒரு தீவிர வாசகியா!? ..ம்ம்ம்

முன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிக்கர்ணம் போட்டு சொல்லவேண்டியதாக உள்ளது, நான் தான்.. தெரியுதா? ஆடரா ராமா ஆடு என!.

எனக்குத்தெரிந்த ஒரு பிரபல எழுத்தாளர் - நிஜமாலும் எழுத்தாளர், பலவருடங்களாக எழுதுகிறார். அவரின் புகைப்படத்தோடு பல
சிறுகதைகள் படைப்புகள் பத்திரிகையில் வருகிறது, வந்தவண்ணமாகவும் இருக்கின்றது. ஆனாலும்  அவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகைகளில் எழுதுவார், என்கிற விஷயம் இன்னமும் தெரியாதாம்..! இத்தனைக்கும் அந்த அண்டைவீட்டுக்காரர்  தமிழ் பத்திரிகைகள்தான் வாங்குவாராம். ! அவரின் சோகக் கதை அப்படி.

அண்மையில் ஒரு பத்திரிகை ஆசிரியரை தொலைப்பேசியில் அழைத்து உரையாடினேன். உடையாடல் சென்றது இப்படி...  

“சார், நான் தான் விஜி, நிறைய எழுதுவேன், எனது பதிவுகளை உங்களுக்கு மெயிலில் அனுப்பலாமென்றிருக்கின்றேன். உங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?”

“ எனது மின்னஞ்சல் முகவரி உனக்கு எதற்கு? மின்னஞ்சல் பதிவுகளையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.! அது சரிப்பட்டு வராது’ம்மா. உங்களின் பதிவுகள் எங்களுக்கு எப்போதும் ரகசியமாகக் கிடைக்கவேண்டும். மிக மிக முக்கியமானவை அவை!. மின்னஞ்சலில் அனுப்பினால், பலர் பார்க்கக்கூடும், வாசிக்கக்கூடும். அது நல்லதல்லவே.! என்ன நாஞ்சொல்வது.? வரும் கடிதங்களையெல்லாம் நாங்கள் பிரித்துக்கூட பார்க்காமல், அப்படியே சம்பந்தப்பட்டவர்களின் மேஜையில் வைத்து விடுவோம். அதுதானே நியாயம்’ம்மா? நீ என்ன செய்.! எழுதியோ, டைப் செய்தோ, ஒரு என்வலஃப் வாங்கி, அதை அதனுள் போட்டு, பசை கொண்டு ஒட்டி, தபால்தலை வாங்கி, ஒட்டி, தபால் நிலையத்திற்குச்சென்று ரிஜிஸ்டர் செய்து விடு, அப்போது அவர்கள் உன்னிடம் ஒரு ஸ்லீப் கொடுப்பார்கள் அதை பத்திரமாக வைத்துக்கொள் - அத்தாட்சி அதுதான். புரியுதா?” என்றார்.

நான் மூர்ச்சையானேன்.




வெள்ளி, ஜூலை 27, 2012

தட்டலும் திட்டலும்

ஒட்டாத போது
ஓயாமல் வருகிறாய்
ஒட்டியவுடன்
ஓடிவிடுகிறாய்

சரி, எட்டிச்செல்லலாம்
என்றால்
இதயவாசலை
மீண்டும் தட்டிச்செல்கிறாய்

தட்டும் போதெல்லாம்
திறந்துக் கொ(ல்)ள்கிறது
பூட்டப்படாத என் வாசல்

சாவியை நான்
பூட்டும்வரை
உன் தட்டலுக்கு
திறக்கும் என் வாசல்

வியாழன், ஜூலை 26, 2012

யோசிக்காமல்..

உள்ளே நுழைவதைவிட, நுழைந்து விட்ட பின் எப்படி வெளியே வரவேண்டுமென்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அன்பு வலையாக இருந்தாலும் கூட.

பார்த்ததில் பிடித்தது




புதன், ஜூலை 25, 2012

இந்த இரவில் கூட

நான் இருக்கின்றேன்
பாடிக்கொண்டிருக்கின்றேன்
சாமான்களை உருட்டிக்கொண்டிருக்கின்றேன்
கதவை திறக்கின்றேன்
கிரிச் என்கிற சத்தத்துடன் மூடுகின்றேன்
கால்கள் தரையில் உரசுவதைப்போல்
நடக்கின்றேன்
நீரை கீழே விடுகின்றேன்
`ஸ்வீட்ச்’ஐ தட்டுகின்றேன்
மின் விசிரியை சுழல விடுகின்றேன்
மேஜையில் தாளம் போடுகின்றேன்
`ஹம்மிங்’ செய்கிறேன்
உட்கார்ந்திருக்கின்ற நாட்காலியை
முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டிருக்கின்றேன்
வானொலி தொலைக்காட்சியை
முடக்கிவிடுகின்றேன்
தும்முகின்றேன்
கொட்டாவி விடுகின்றேன்
கொசு அடிக்கின்றேன்
கை விரல்களை நெட்டி உடைக்கின்றேன் 
சொந்தமாகவும் பேசிக்கொள்கின்றேன்
இப்படியெல்லாம் அமைதியைக் குலைப்பதால்
நான் உயிரோடு இருக்கின்றேன்.!